உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் வவுனியா மாநகரசபையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ மேயரை நியமித்து ஆட்சி அமைக்கும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது மற்றும் வட்டாரங்களில் வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பங்காளி கட்சிகளுக்கிடையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது வவுனியா மாநகரசபை மற்றும் 3 பிரதேச சபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி போட்டியிடுகின்றது.
இதன்போது வவுனியா மாநகரசபையில் குறித்த கூட்டணி வெற்றிபெறும் பட்சத்தில் மாநகர மேயரை நியமித்து ஆட்சி அமைக்கும் பொறுப்பு தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோவும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் ஈ. பி. ஆர். எல். எப் கட்சியும் செட்டிகுளம் பிரதேச சபையில் புளொட்டும் வவுனியா வடக்கு பிரதேச சபையில் ஜனநாயக போராளிகள் கட்சியும் ஆட்சி அமைக்கும் பெறுப்பை குறித்த கூட்டணி பகிர்ந்துள்ளது.
இந் நிலையில் குறித்த உள்ளூராட்சி மன்றங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பிலும் பங்காளி கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு எட்டியுள்ளதாகவும் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.