வெளிநாட்டு கடன்களை செலுத்தாமல் எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது – அநுரகுமார

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பார் என நகைச்சுவை கருத்தை சபையில் குறிப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

வெளிநாட்டு கடன்களை செலுத்தாமல் தான் தற்போது எரிபொருள், எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது.

இதுவே நாட்டின் பொருளாதார உண்மை நிலை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிச.08) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது புதிய விடயமல்ல. பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் பேச்சளவில் குறிப்பிடுகிறதே தவிர நடைமுறையில் எந்த திட்டங்களும்  இதுவரை செயற்படுத்தப்படவில்லை. உண்மை காரணிகளை மறைத்ததால் நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டது என்பதை அரசாங்கம் மறந்து விட கூடாது.

எரிபொருள்,எரிவாயு ஆகியவற்றுக்கான வரிசை இல்லை. அத்தியாவசிய பொருள் இறக்குமதி தடையில்லாமல் இடம்பெறுகிறது ஆகவே பொருளாதார பாதிப்பை முகாமைத்துவம் செய்துக் கொண்டோம் என அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாது,நாங்கள் வங்குரோத்து நிலை அடைந்து விட்டோம் என அரசாங்கம் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி அறிவித்தது. செலுத்தாத கடன் தொகையை கொண்டு எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யப்படுகின்றது.

கடந்த மார்ச் மாதம் அரசமுறை கடன்களை செலுத்திய நிலையில் தான் எரிபொருள்,எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருள் இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டது,ஆனால் தற்போது வெளிநாட்டு கடன்களை செலுத்தாமல் எரிவாயு,எரிபொருள் கிடைப்பனவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே நாட்டின் இன்றைய பொருளாதார உண்மை நிலை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பார் என நகைச்சுவை கருத்தை சபையில் குறிப்பிட வேண்டாம்.

பொருளாதார பாதிப்பு மூடி மறைக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். வரி அதிகரிப்பினால் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது பொருளாதார பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும். அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.