ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், பெற்றோலியக் கூட்டுத்தாபன போனஸ் கொடுப்பனவுகள் தொடர்பில் அறிக்கை கோரியுள்ள ஜனாதிபதி

நட்டத்தில் இயங்கும் அரச கூட்டுத்தாபனம் மற்றும் அரச நிறுவன சேவையாளர்களுக்கு உபகார கொடுப்பனவை வழங்க வேண்டாம் என நிதியமைச்சு அறிவித்துள்ள நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானம் மற்றும் ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் ஆகிய அரச நிறுவனங்களுக்கு உபகார கொடுப்பனவு (போனஸ்) வழங்கப்பட்டுள்ளமைக்கான காரணத்தை; ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நிறுவனங்களின் தலைவர்களிடம் வினவியுள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன சேவையாளர்களுக்கு இருமாத சம்பளம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் சேவையாளர்களுக்கு ஒரு இலட்சம் அடிப்படையில் உபகார கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பெற்றோலிய கூட்டுத்தாபனம் இலாபமடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் சேவையாளர்களுக்கு உபகார கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது என நிதியமைச்சு சுற்றறிக்கை ஊடாக குறிப்பிட்டுள்ளது.இதற்காக 120 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மாத்திரம் 4200 சேவையாளர்கள் உள்ளார்கள்.இவர்களுக்கு இரு மாத சம்பளம் உபகார கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளது.மாதம் 5 இலட்சம் சம்பளம் பெறும் உயர் அதிகாரிகளுக்கு 10 இலட்சம் ரூபா அடிப்படையில் உபகார கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தில் 5800 சேவையாளர்கள் உள்ளார்கள் இவர்களுக்கு ஒரு இலட்சம் அடிப்படையில் உபகார கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இதற்காக 58 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது என ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச சேவையாளர்களுக்கான உபகார கொடுப்பனவு தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு முரணாக நட்டமடையும் நிறுவனங்களுக்கு உபகார கொடுப்பனவு வழங்கப்பட்டமைக்கான காரணத்தை உரிய நிறுவனங்களிடம்; ஜனாதிபதி கோரியுள்ளதாக அறிய முடிகிறது.

அரச சேவையாளர்களுக்கு வருடாந்தம் வழங்கப்படும் உபகார கொடுப்பனவு தொடர்பில் நிதியமைச்சு கடந்த மாதம் விசேட சுற்றறிக்கையை சகல அமைச்சின் செயலாளர்களுக்கும் நிதியமைச்சு கடந்த மாதம் அனுப்பி வைத்தது.

அரச சேவையாளர்களுக்கு வழங்கப்படும் உபகார கொடுப்பனவை 25 ஆயிரம் ரூபாவாக மட்டுப்படுத்துமாறும்,நட்டமடையும் அரச நிறுவனங்க சேவையாளர்களுக்கு உபகார கொடுப்பனவை வழங்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டிருந்தது.