இந்தியாவால் திணிக்கப்பட்ட 13ஐ முழுமையாக அமுல்படுத்தாதீர்கள்; ஜனாதிபதி, பிரதமர், எம்.பிக்களுக்கு பெளத்த தேரர்கள் கடிதம்

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டாம் என கோரி எல்லே குணவன்ச தேரர் மற்றும் பெங்கமுவே நாலக தேரர் ஆகியோர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உள்ளிட்ட சில அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுமாயின் அது நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவால் திணிக்கப்பட்ட 13வது திருத்தம் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மூலோபாயத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையின் நாடாளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே 13 ஆவது திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்பின்றி முழுமையாக அமுல்படுத்த வேண்டாம் எனவும் உள்நாட்டு வளங்கள் மற்றும் சொத்துக்கள் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதை உடனடியாக தடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் நாட்டுக்கு இழந்த செல்வம் மற்றும் வளங்களை மீட்டெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைப் போக்குவதற்கு ஏற்றுமதியை அதிகரிப்பது, அரச செலவீனங்களைக் குறைப்பது அவசியம் என்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களை வலுப்படுத்த எந்தவொரு மூலோபாயத் திட்டங்களை முன்வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளனர்.