13ஆம் திருத்தச் சட்டத்தின் அதிகார பகிர்வு அனைத்து மாகாணங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை – விக்டர் ஐவன்

13 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரப் பகிர்வு ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை என சிரேஷ்ட ஊடவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“13இன் மூலம் அதிகாரத்தினை பகிரும் போது நாம் இந்தியாவினை பின்பற்ற வேண்டும். ஏனெனில் இந்தியாவானது அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான அதிகாரங்களை வழங்கவில்லை.

சில இடங்களுக்கு அதிகமான அதிகாரங்களை வழங்கியுள்ளது. சில மாநிலங்களுக்கு குறைவான அதிகாரங்களே வழங்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் அதிகாரப் பகிர்வு ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை என்பது புலனாகின்றது.

வேண்டுமெனின் வடக்கிற்கு சில வருடங்கள் அதிகாரத்தை பகிர்ந்தளித்து அதனை அவர்கள் எவ்வாறு நிர்வகிக்கின்றனர் என்பதை அவதானிக்கலாம்.

சரியான முறையில் நிர்வாகம் நடைபெறுமெனின், தேவையான மற்றவர்களுக்கும் அவ்வாறே அதிகாரத்தினை பகிர்ந்தளிக்க முடியும்.

சில சந்தர்ப்பங்களில் எமது பக்கத்திலும் தளர்வு கொள்கையினை பின்பற்ற வேண்டும். நாம் இதனை புதிய கோணத்தில் பார்க்க வேண்டும்.

தற்போதுள்ள சூழ்நிலையினை அடிப்படையாகக் கொண்டு அதனை நாம் புதிய கோணத்தில் நோக்க வேண்டும்.

அவ்வாறு நோக்குவதால் நாட்டுக்கு நன்மை ஏற்படுமெனின், சிறுபான்மையினருக்கு நன்மை ஏற்படுமெனின் இந்தியா உட்பட ஏனைய நாடுகள் எமது நாட்டுக்குள் தலையிடாது.

அதிகாரப் பகிர்வு என்பது நாட்டினை பிரிப்பதல்ல. அது பொய்யான கூற்றாகும். ஏதேனுமொரு விடயத்தினை மாற்ற முற்படும் போது அது தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு இடையில் மாத்திரம் கலந்துரையாடி எவ்வித பலனுமில்லை.

அதில் பொதுமக்களை குறித்த விடயம் குறித்து அறிவுறுத்துவது மிக முக்கியமான விடயமாகும். அதற்கு சிறந்த உதாரணமாக இந்தியாவும், தென்னாபிரிக்காவும் திகழ்கின்றது.

இது அரசாங்கம் மாத்திரம் முகங்கொடுக்க வேண்டிய பிரச்சினையல்ல. ஏனைய அனைத்து கட்சிகளும் இந்த பிரச்சினை தொடர்பில் தமது பங்களிப்பினை செலுத்த வேண்டியிருந்தது. இதனை தவறவிட்டிருக்க கூடாது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.