13ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கே உள்ளது – ஐக்கிய மக்கள் சக்தி

நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கே உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரன்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கே உள்ளது. தவிர எதிர்க்கட்சிகளுக்கு கிடையாது.

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஜனாதிபதிக்கு எந்தவொரு சிக்கலும் இல்லை.

ஏனெனில், 13 பிளஸ் தருவதாக அன்று உறுதியளித்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களே இன்று ஜனாதிபதிக்கும் ஆதரவினை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மாகாணசபைத் தேர்தல் 6 வருடங்களாக இடம்பெறவில்லை. இந்தத் தேர்தலை பழைய முறையில் நடத்துமாறு நாம் நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளோம். இதற்கான பிரேரணைக் கொண்டுவரப்பட்டால் நாம் ஆதரவு வழங்கத் தயாராகவே உள்ளோம்.

ஜனாதிபதி, உண்மையிலுமே அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றா அல்லது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சில பிரதேசங்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்றா நினைக்கிறார் என்பது புரியவில்லை.

13 ஆவது திருத்தச்சட்டம் என்பது ஏற்கனவே பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள ஒன்றாகும்.

எனவே, இதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு தான் உள்ளதே ஒழிய, எதிர்க்கட்சிகளுக்கு கிடையாது.

முதலில், ஜனாதிபதி அரசாங்கத்தின் யோசனைகளை முன்வைக்க வேண்டும். அதைவிடுத்து, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கக்கூடாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.