தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என தாம் நம்புவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமத்துவம், நீதி மற்றும் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காக மறுசீரமைப்பு செயன்முறையை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் என எதிர்பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என நம்புகிறோம். சமத்துவம், நீதி மற்றும் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காக கொழும்பு மறுசீரமைப்பு செயல்முறையை முன்னெடுத்துச் செல்லும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கும் மாகாணத் தேர்தல்களை நடத்துவதற்கும் இலங்கை தனது உறுதிமொழியை நிறைவேற்றும் என நம்புகிறோம்” என்று பிரதமர் மோடி தனது கருத்துக்களை தெரிவித்தார்.
மூன்று தசாப்தங்கள் பழமையான 13வது திருத்தம் ஒன்பது மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வை கொடுத்த போதும் அது இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் திருத்தத்தை அமுல்படுத்துவதாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை தமிழ் தேசிய கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துள்ளது.
அத்தோடு இந்த நடவடிக்கையை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மற்றொரு வெற்று வாக்குறுதி என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.