13 ஐ முழுமையாகத் தர முடியாது; தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

13ஆவது திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தின் அனுமதியின்றி முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது. மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்க முடியாது. அத்துடன், சில விடயங்களில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே இருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசிய கட்சிகளிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு நாளை வியாழக்கிழமை உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தப் பயணத்துக்கு முன்னதாக தமிழ்த் தேசிய கட்சிகளை பேச்சுக்கு அழைத்தார். நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற கட்டட வளாகத்தில் இந்தப் பேச்சு நடந்தது. பேச்சின் ஆரம்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் கொண்டு வந்த சில தயார்படுத்தல்களான மனித உரிமைகள் விவகாரம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான விடயங்களை விவரித்தார்.

சம்பந்தனின் எதிர்ப்பை தொடர்ந்து அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயத் துக்கு கலந்துரையாடல் மாறியது. இந்தப் பேச்சின்போது, 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது. அதற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அனைத்துக் கட்சிகளின் தலை வர்களின் ஆதரவும் தேவை என்று ஜனா திபதி கூறினார். அத்துடன், பொலிஸ் அதிகாரம் இல்லாத 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடி யும். அத்துடன், சில விடயங்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள் ளும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே இருக்கும் – இந்த விடயங்கள் தொடர்பில் சட்டரீதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தரப்பு தெரிவித்தது.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்னைகளை தீர்க்கவே நான் விரும்புகிறேன். அவர்களால் அரசியல் ஆதாயங்களைப் பெறுவது எனது நோக்கமல்ல. வடக்கு, கிழக்கு மக்களுக்கு நான் ஒருபோதும் அநீதி இழைக்கப் போவதில்லை. அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டுமாயின் கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டின் மூலம் பாராளுமன்றத்தின் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும்- என்றும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதனிடையே, 13ஆம் திருத்தம் குறித்த ஜனாதிபதியின் இந்த முடிவை தாம் ஏற்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்த சந்திப்பில் இரா. சம்பந்தன், எம். ஏ. சுமந்திரன், சி. வி. விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சி. சிறீதரன், த. சித்தார்த்தன், சாணக்கியன் இராச மாணிக்கம், தவராசா கலையரசன், கோவிந்தன் கருணாகரன் ஆகியோருடன் சிறீ லங்கா சுதந்திர கட்சியின் அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டார்.

ஜனாதிபதி தரப்பில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, பிரசன்ன ரணதுங்க, விஜயதாஸ ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான சுரேன் ராகவன், ச. வியாழேந்திரன், சி. சந்திரகாந்தன் மற்றும் கே. திலீபன் எம். பி. ஆகியோர் பங்கேற்றனர்.