சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 2023 ஆரம்பத்தில் நடைமுறைப்படுத்தப்படும். அதனையடுத்து இந்தியா, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளுடனும் இந்த ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்படும். 2023 அல்லது 2024 இல் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது நீண்ட கால இலக்காகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் எம்.பி.ஏ பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சவால்களை மீறி வாய்ப்புகளை எட்டுதல்’ எனும் 2023 வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னரான கருத்துக்களம், கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
தொழில்துறை மற்றும் உற்பத்தி போட்டித் தன்மைக்கு முகம்கொடுக்கும் வகையில் வர்த்தக சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டத்துடன் கூடியதாக சுங்கத் தீர்வை மற்றும் சுங்கமற்ற தீர்வை ஆகியவற்றை எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு நீக்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருக்கின்றது. அரசாங்கத் தரப்பு என்ற வகையில் உலக வங்கியுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்காக தனியார் துறை எவ்வாறான ஒத்துழைப்பை வழங்கப் போகிறது ? சிவப்புக் கொடியைக் காட்டி எதிர்ப்பு தெரிவிப்பதா அல்லது ஒத்துழைப்பு வழங்குவதா என்பது தொடர்பில் தனியார் துறையினர் தீர்மானிக்க வேண்டும். நடைமுறை சாத்தியமான பெறுபேறுகளை பாராமல் தவறான கொள்கைகளை பின்பற்றியமையே நாட்டின் நிதி நெருக்கடிக்கு காரணமாகும். நாட்டை இந்நிலையிலிருந்து மீட்பதாயின் அரசாங்கம் மட்டுமன்றி தனியார் துறையினரும் பொது மக்களும் பாரிய வகிபாகத்தை வகிக்க வேண்டும்.
தற்போது சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவு திட்டம் வழமையான வரவு செலவுத் திட்டத்திலும் பார்க்க முற்றிலும் வித்தியாசமானது. இங்கு முன்வைக்கப்பட்டிருக்கும் கொள்கைகளைப் பார்த்து சிகரட் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளனவா, வேறு ஏதேனும் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளனவா என்பதை தேட முடியாது. அதே கண்ணோட்டத்துடனேயே இந்த வரவு செலவுத் திட்டத்தையும் பார்ப்பீர்களேயானால் நீங்கள் தவறான பாதையில் பயணிக்கின்றீர்கள்.
துரதிஷ்டவசமாக பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் பலர் இந்த தவறை செய்கின்றார்கள். நாம் தற்போது முன்னொருபோதும் கண்டிராத பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இருக்கின்றோம். இது பல நாடுகளால் மற்றும் உலகமே சந்தித்திராத்தொரு நிலைமையாகும். தவறான கொள்கைகளை பின்பற்றியதன் விளைவாகவே எமக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. ‘கொள்கைகள்’ எனும்போது அவை நடைமுறை சாத்தியமானதாக இருக்க வேண்டும்.
நிதியமைச்சர் என்ற வகையில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதே எனது முதலாவது இலக்காகும். இதனை கடந்த ஆகஸ்ட் வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகம் செய்தோம். இதற்கான சட்டவாக்க நடவடிக்கைகளையும் ஆரம்பித்தோம். இதற்கு மேலதிகமாக நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டை எட்டியுள்ளோம். தற்போது பிரதான இருதரப்பு கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
இந்தியா மற்றும் சீனா என்பன பாரிஸ் கிளப்பில் இல்லை. அவற்றுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததும் நாம் தனியார் கடன் வழங்குனர்களிடம் சென்று பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம். அதன் பின்னர் எமக்கு எமது பாதையில் பயணிக்க முடியும். அதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக நாம் பல வேலைகளை முன்னெடுக்க வேண்டும். நாம் பொருளாதார மீட்சி தொடர்பில் ஆராய வேண்டும். அதற்கான திட்டம், கட்டமைப்பு என்பன தொடர்பில் நாம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். 2023 என்பது உறுதிப்பாட்டுக்கு மட்டுமன்றி மீட்சிக்குமானதொரு ஆண்டாகும். உறுதிப்பாட்டுச் செயன்முறைகள் 2026 வரை தொடரும். அப்போது எமது மொத்த தேசிய உற்பத்தி, 2019 ஆம் ஆண்டில் நாம் இருந்த நிலையை எட்டும் என நம்புகின்றேன். எனினும் என்ன நடக்கும் என்பது திட்டவட்டமாக தெரியாது.
எமது முதலாவது கொள்கை, ‘ஒன்றிணைந்த முதலீடு மற்றும் ஏற்றுமதி முகவர் அமைப்பு’ தொடர்பானது. இதற்காக சில சட்டங்களை அகற்றவும் பொருளாதாரத்தில் அடிப்படை மீள்கட்டமைப்பை முன்னெடுக்கவும் வேண்டும். இல்லையேல் அதுவும் இன்னுமொரு சொத்து விற்பனை முகவர் அமைப்பாகிவிடும். கொள்கைகள் இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவான கட்டமைப்பொன்று இருக்க வேண்டும்.
பொருளாதார அபிவிருத்தியில் மூலோபாய அமைவிடமும் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த வகையில் எம்மிடம் மூன்று முக்கிய துறைமுகங்களும் சிறியதான காங்கேசந்துறை துறைமுகமும் உள்ளது. ஆனால் நாம் அவை பற்றி பேசுவதேயில்லை. சிந்திப்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள்கின்றோம்.
கடந்த முறை நான் பிரதமராக இருந்தபோது இது பற்றி தூரநோக்குடன் சிந்தித்ததுடன் கிழக்கு முனையம் தொடர்பில் ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் ஒப்பந்தங்களையும் மேற்கொண்டிருந்தோம். நீங்கள் அதை ரத்துச் செய்தீர்கள். இது இன்னும் அப்படியே உள்ளது. துறைமுகத்தால் செயற்பட முடியாதுள்ளது. எம்மிடமும் பணம் இருக்கவில்லை. எனவே நாம் கிழக்கு முனையம் தொடர்பான திட்டத்தை நிறைவு செய்வதற்கு ஊக்குவிப்பதுடன் அதனை ஒரு சிறந்த மையமாகவும் உருவாக்குவோம்.
எம்மிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளது. ‘பெல்ட் என்ட் ரோட்’ திட்டம் நிறைவடைந்ததும், சீன கம்பனிகள் ஆபிரிக்காவில் பல துறைமுகங்களை உருவாக்கியது போல அம்பாந்தோட்டையுடன் இணைந்ததாகவும் பல துறைமுகங்களை உருவாக்க முடியும். திருகோணமலை துறைமுகம் வங்காள விரிகுடாவுக்கான சேவையை வழங்கக்கூடியதாகவுள்ளது. எனவே எமக்குள்ள வாய்ப்புக்களை நாம் உணர வேண்டும். இந்த துறைமுகங்களே, எம்மிடமுள்ள மிகச் சிறந்த சொத்துக்கள். அதனை தவிர காலி , கொழும்பு துறைமுகங்களும் எம்மிடமுள்ளன. நாம் எம்மிடமுள்ள அனைத்து துறைமுகங்களையும் மறந்து விட்டோம்.
அடுத்ததாக எமது விவசாயத்தை முழுமையாக நவீனமயப்படுத்த வேண்டும். இதற்காக காணியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்காக மக்கள் வழங்கியுள்ள காணிகளுக்கு நாம் சட்டவாக்கத்தை உருவாக்குவோம். அரசாங்கத்தின் நிலத்தை கையகப்படுத்தும் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். அனைவருக்கும் இலவசமான காணி வழங்கும் வேலைத்திட்டத்தையும் நாம் நடைமுறைப்படுத்துவோம்.
சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக ஆகக்கூடியது 02 மில்லியன் சுற்றாலாத்துறையினரை இலக்கு வைத்து புதிய நிகழ்ச்சித் திட்டமொன்றை நாம் அறிமுகம் செய்யவுள்ளோம். கொவிட் தொற்றுக்கு பின்னர் மீள்வதற்கான முயற்சிகளை கல்வியமைச்சு இதுவரையில் முன்னெடுத்து வருகின்ற போதிலும் , அதிக நிதி வழங்கப்பட்டாலும் கூட அவர்களால் அதனை திறம்பட பயன்படுத்த முடியாத நிலைமையே காணப்படுகிறது. எனவே திட்டமிட்டு அடுத்த வருடம் முதல் அதிக நிதியை ஒதுக்க வேண்டும்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சுகாதார சேவைகளுக்கான பிராந்திய மையம், துறைமுக நகரை கரையோர மையமாக அபிவிருத்தி செய்தல் போன்ற பல விடயங்கள் தொடர்பில் உலக வங்கி , ஆசிய அபிவிருத்தி வங்கி, அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.
2023 தொடக்கத்தில் சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். அடுத்து, இந்தியா, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளுடனும் இந்த ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்படும் . அடுத்த ஆண்டில் அல்லது அதற்கு அடுத்த ஆண்டில் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது நீண்ட கால இலக்காகும்.
மக்களைப் பலப்படுத்துவதா? அல்லது மக்களின் பணத்தைக் கொண்டு காப்புறுதிக் கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கன் எயாலைன்ஸ் மற்றும் டெலிகொம் நிறுவனங்களை வலுப்படுத்துவதா? என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். மக்களை பாதுகாப்பதற்கே தவிர இந்த நிறுவனங்களையும் கட்டடங்களையும் பாதுகாப்பது எனது முன்னுரிமையல்ல. இந்நிறுவனங்களை விற்பதால் கிடைக்கும் பணத்தை அந்நியச் செலாவணி கையிருப்பில் சேர்த்து, ரூபாயை வலுப்படுத்த தீர்மானித்துள்ளோம் என்றார்.