இந்தியாவினால் இலங்கையர்கள் மீது பலவந்தமாக திணிக்கப்பட்டதே 13ம் திருத்தச்சட்டம் – சரத் வீரசேகர

“தமிழ் நாட்டின் ஆதரவைப் பெறுவதற்காகத்தான் இந்திய அரசு, அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை வடக்குக்குக் கொடுப்பதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.13 ஆவது திருத்தச் சட்டம் இந்தியாவால் இலங்கைக்குப் பலவந்தமாகத் திணிக்கப்பட்டது.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“13ஆவது திருத்தச் சட்டம் முற்றாக அகற்றப்பட வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு. 13 ஐ நடைமுறைப்படுத்தினால் ஒற்றையாட்சியின் கீழ் இருக்கின்ற நாடு சமஷ்டி ஆட்சிக்கு உட்படும்.

ஒற்றையாட்சியின் கீழ் நாடு முழுவதும் ஒரே நீதி. சமஷ்டி ஆட்சியின் கீழ் மாகாணத்துக்கு மாகாணம் நீதி வேறுபடும். இதனால் நாடு துண்டு துண்டாகப் பிரியும்.

வடக்குத் தமிழர்களின் துன்பத்தைப் போக்குவதற்குத்தான் சமஷ்டி தேவை என்று தமிழ் அரசியல்வாதிகள் கேட்கின்றார்கள்.

அப்படியென்றால் 52 வீதமான தமிழர்கள் வாழ்வது தெற்கில். வடக்குக்குத் சமஷ்டியைக் கொடுத்தால் தெற்குத் தமிழர்களின் பிரச்சினைகளை அது எப்படித் தீர்க்கும்?

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் சமஷ்டியைக் கேட்கவில்லை. பிரிவினையை விரும்பும் தமிழ் அரசியல்வாதிகளும் புலம்பெயர் தமிழர்களுமே சமஷ்டியைக் கேட்கின்றனர். சில சிங்கள அரசியல்வாதிகளும் இதற்கு உதவுகின்றனர்.

தமிழ் நாட்டின் ஆதரவைப் பெறுவதற்காகத்தான் இந்திய அரசு 13ஐ வடக்குக்குக் கொடுப்பதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.13 ஆவது திருத்தச் சட்டம் இந்தியாவால் இலங்கைக்குப் பலவந்தமாகத் திணிக்கப்பட்டதுதான்.

இதில் இருக்கின்ற பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் பிரதிப் பொலிஸ்மா அதிபர் முதலமைச்சரின் கீழ் வருவார். அப்போது பொலிஸ் அரசியல்மயமாகிவிடும்.

அநேகமாக 13 இல் இருக்கின்ற பல விடயங்கள் கொடுக்கப்பட்டுவிட்டன. காணி மற்றும் பொலிஸ் அதிகாரம்தான் கொடுக்கப்பட வேண்டியுள்ளது.

உதாரணத்துக்குப் பொலிஸ் அதிகாரத்தைக் கொடுத்தால் வடக்கின் கடல் பாதுகாப்புக்கு என்று தனியான பொலிஸ் – இராணுவப் பிரிவை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னால் மத்திய அரசு அதை எதிர்க்கும். அப்போது இரு தரப்புக்கும் பிரச்சினை ஏற்படும்.

அரசு மாகாண சபையின் தீர்மானத்துக்கு இடம் கொடுப்பதில்லை என்று கூறி பிரிந்து செல்வதற்கு வாய்ப்புண்டு. – என்றார்.