32 ஆண்டுகளுக்கு பின்னர் பேரறிவாளனுக்கு பிணை!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு இந்திய உயர்நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இவர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் பேரறிவாளன் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

கடந்த ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி அவருக்குச் சிறை விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையிலும் குறித்த விடுமுறை 10 தடவைகள் நீடிக்கப்பட்டிருந்தன.

அத்துடன், தற்காலிக விடுப்பிலிருந்தாலும் தனக்கு வெளியே செல்ல முடியாத காரணத்தினால் பிணை வழங்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.

பேரறிவாளனின், உடல் நிலை மற்றும் கல்வித் தகுதியைக் கருத்திற்கொண்டு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் தங்கள் தண்டனையை அனுபவித்து வந்தனர்.

இவர்களில் பேரறிவாளன் 32 ஆண்டுகளாக இந்த வழக்கில் சிறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவை அடங்கிய அமர்வு, அவருக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டது.
பேரறிவாளனின் 32 ஆண்டுக்கால சிறைவாசத்தில் இப்போது தான் முதன்முதலாகப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

“இவருக்குப் பிணை வழங்க மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்தாலும், மனுதாரர் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு அவருக்குப் பிணை வழங்குகிறோம்” என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

விசாரணை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர் பிணையில் விடுவிக்கப்படுவார் என்றும் ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்திலும் அவர் ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இக் கொலை வழக்கில் தற்போது தண்டனை அனுபவித்துவரும் 7 பேரில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

அந்தத் தூக்குத் தண்டனை 2014ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ் ஆஜரானார்.

அடுத்ததாக, இந்த வழக்கில் தண்டனைக் குறைப்புச் செய்யும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பதை விவாதிக்கும்போது, மத்திய அரசால் செயல்படுத்தப்படும் சட்டங்களின் கீழ் அவர் தண்டிக்கப்பட்டிருப்பதால், அவருக்குத் தண்டனை குறைப்பு செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது என நடராஜ் வாதிட்டார்.

அவர் எந்தெந்தச் சட்டங்களின் கீழ் தண்டிக்கப்பட்டிருக்கிறார் என நீதிமன்றம் கேள்வியெழுப்பியதும், “பேரறிவாளன் இந்தியத் தண்டனைச் சட்டம், ஆயுதச் சட்டம், வெளிநாட்டவருக்கான சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டிக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்” என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார். இந்த விவகாரங்கள் பிறகு விவாதிக்கலாம். அவர் 32 ஆண்டுகளாகச் சிறையில் இருப்பதால், அவருக்கு ஏன் பிணை வழங்கக்கூடாது என நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

“302ஆவது பிரிவின் கீழ் செய்யப்படும் குற்றம் பொது ஒழுங்கு தொடர்பானது. இது மாநில அரசின் கீழ் வரக்கூடிய சட்டம்” எனத் தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் த்விவேதி வாதிட்டார்.

பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், “302ஆவது பிரிவின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக ஆளுநர்கள் பல முறை முடிவெடுத்திருக்கிறார்கள்” என்பதைச் சுட்டிக்காட்டினார்.
பேரறிவாளனுக்கு மூன்று முறை சிறை விடுப்பு அளிக்கப்பட்டிருந்தும் அவர் எவ்வித தவறுகளும் செய்யவில்லை என்பதையும் சங்கரநாராயணன் சுட்டிக்காட்டினார்.

மேலும் தண்டனைக் காலத்தில் அவருடைய நடத்தை சிறப்பாக இருந்ததையும் அவர் தனது கல்வித் தகுதியை வளர்த்துக் கொண்டது குறித்தும் சிறையில் உள்ள நூலகத்தில் உதவிசெய்தது குறித்தும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

மகாத்மா காந்தி கொலைவழக்கைச் சுட்டிக்காட்டிய ராகேஷ் த்விவேதி, அந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே தண்டனை குறைப்புப் பெற்று 14 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால், பேரறிவாளன் 32 ஆண்டுகளைச் சிறையில் கழித்திருக்கிறார் என்று குறிப்பிட்டார். முடிவில், பேரறிவாளனுக்குப் பிணை வழங்கி உத்தரவிடுவதாக நீதிபதிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.