நாங்கள் இரண்டு பிரதான சவால்களை எதிர்நோக்கி இருக்கிறோம். முதலாவது அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது. இரண்டாவது அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் நாட்டைக் கட்டியெழுப்புவது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதிசார் ஒன்றியத்தின் கொழும்பு மாவட்ட மாநாடு கடந்த 25 ஆம் திகதி கொழும்பு சினமன் கிறேன்ட் ஹோட்டலில் இடம்பெற்றது. இங்கு கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அநுரகுமார திஸாநாயக்க மேலும் உரையாற்றுகையில்,
இது இரண்டு சவால்களாக விளங்கியபோதிலும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கின்ற பாதையிலேதான் நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பாதையும் உள்ளது. கடந்த காலங்களில் எமது நாட்டில் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மற்றுமொரு பாதையும் தெரிவுசெய்யப்பட்டது.
பொதுவாக எமது நாட்டின் அதிகாரம் கைமாறியது மற்றவருக்கு எதிராகவே. 2005 அரசாங்கம் வடக்கின் தமிழ் மக்களுக்கு எதிராகவே கட்டியெழுப்பப்பட்டது.
2010 இன் யுத்த வெற்றி மற்றவருக்கு எதிராகவும் 2019 முஸ்லீம் மக்களுக்கு எதிராகவும் கட்டியெழுப்பப்பட்டது. எனினும் அது வெற்றிகரமான பாதையல்ல. மக்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்துகின்ற பாதையில் இந்த நாட்டை மாற்றியமைத்திட வேண்டும்.
நாங்கள் மக்களை ஒழுங்கமைக்கையில் சவால்களை எதிர்நோக்குகின்ற இரண்டு இடங்கள் இருக்கின்றன. ஒன்றுதான் கிராமியரீதியாக அடிமட்டத்தில் வசிக்கின்ற கிராமிய மக்கள். ஏனையோரது கூட்டங்களில் அப்படிப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம் ஓரளவு அதிகமென்பது புலனாகின்றது.
அவர்களை நிர்க்கதிநிலைக்கு உள்ளாக்கி, பொருளாதாரீதியாக வீழ்ச்சியடையச் செய்வித்து, அவர்களின் பிள்ளைகளுக்கு புத்தகங்கள் அல்லது சுப்பர் மார்கெற்றில் இருந்து பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான கூப்பன் அட்டையைக் கொடுக்க வாக்குறுதியளித்து இந்த அழைப்பினை விடுக்கிறார்கள்.
இந்த அடிமட்டத்திலேயே இருக்கின்ற மக்களை இந்த பணிக்காக எவ்வாறு ஈடுபடுத்துவது எனும் சவால் எம்மெதிரில் இருக்கின்றது. சமூகத்தில் ஒருவிதமான உயர்ந்த அடுக்கில் இருப்பவர்கள் எம்முடன் நெருக்கமாக இல்லை. அவர்களால் எமது கதைகளை உணரமுடியாது. அதனால் அவர்கள் நூறு தடவைகளுக்கு மேல் பதிலளித்துள்ள கேள்விகள் மீண்டும் அவர்களின் கேள்விகளாக மாறியுள்ளன. எம்முடன் முட்டிமோதாத கவனத்திற்கு இலக்காகாத குழுவொன்று இருக்கின்றது.
இந்த குழுவினர் மத்தியில் எமது அபிப்பிராயத்தைக் கொண்டுசெல்வது எவ்வாறு என்பது தொடர்பில் எமது கவனஞ் செலுத்தப்பட வேண்டியுள்ளது. அது எமது இரண்டாவது சவாலாகும். அந்த குழுவினர்மீது எமது கவனத்தைச் செலுத்த நான் முயற்சி செய்கிறேன்.
நாங்கள் பொருளாதாரத்துறை, சட்டத்தின் ஆட்சி, வினைத்திறனற்ற அரச ஆளுகை, குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றமை என்றவகையில் அரசின் அனைத்து முறைமைகளும் சீரழிந்துள்ள ஒரு தேசமாகும். எம்முடன் நெருக்கமான துறைகளை நாங்கள் அதிகமாக உணர்கிறோம்.
எமக்கு ஒட்டுமொத்த முறைமையினதும் மாற்றமொன்று தேவை. கடந்த நூற்றாண்டு உலகிற்கு பாரிய வெற்றிகளைப் பெற்றுத்தந்த நூற்றாண்டாகும். உலகின் பெரும்பாலான நாடுகள் நிகழ்கால அபிவிருத்தி மட்டத்தை அடைவதற்கான அத்திவாரத்தை இருபதாம் நூற்றாண்டிலேயே அமைத்துக்கொண்டன.
நாங்கள் இருபதாம் நூற்றாண்டினை கைவிட்ட மனிதர்களாவோம். நாங்கள் ஏறக்குறைய 450 வருடங்களாக ஏதேனுமோர் ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டிருந்த நாடாவோம். 133 வருடங்கள் முழுமையாகவே வெள்ளைக்கார ஏகாதிபத்தியவாதிகளுக்கு கட்டுப்பட்டிருந்து 1948 இல் சுதந்திரம் அடைகிறோம்.
பல்வேறு மொழிகள், சாதிப் பிரிவினைகள், கிராமிய வறுமைநிலை பலவிதமாக பரந்துகாணப்பட்ட இந்தியா 1947 இல் சுதந்திரம் அடைகையில் நேரு, காந்தி, பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் இந்திய தேசியக் கொடியின்கீழ் அனைத்து மக்களையும் ஒருங்கிணைப்பதில் வெற்றிபெற்றார்கள். சுதந்திரம் பெறும்போது நிலவிய கருத்தியல் இன்று சந்திரனுக்குச் செல்கின்ற இந்தியாவை உருவாக்கி இருக்கின்றது.
இந்த கருத்தியல்தான் அப்துல் கலாம் போன்ற ஒருவரை சனாதிபதியாக்கியது. சீக்கியர் ஒருவரை பிரதமராக்கியது. தாழ்ந்த குலத்தை சேர்ந்தவரெனக் கருதப்பட்ட ஒரு பெண்ணை சனாதிபதியாக்கியது. அந்த நோக்குதான் இன்று பிரமாண்டமான அபிவிருத்திப் பாய்ச்சலை மேற்கொண்டுள்ளது. வியட்நாம், சீனா, தென் கொரியா போன்ற நாடுகளுக்கு அந்த நோக்கு இருந்தது.
133 வருடங்களாக வெள்ளைக்கார ஏகாதிபத்தியவாதிகளுக்கு அடிமைப்பட்டிருந்த எமக்கு 1948 இல் சுதந்திரம் கிடைத்தவேளையில் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான மாபெரும் புத்துணர்ச்சியைக் கட்டியெழுப்பவேண்டி இருந்தது. இன்று நாங்கள் சுதந்திரத்தைக் கொண்டாடுகையில் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டே தேசிய கொடியை ஏற்றிவைக்க வேண்டியுள்ளது.
நாம் பெற்றுக்கொள்கின்ற சுதந்திரமானது மக்களின் ஆன்மீகத்தை தட்டியெழுப்புகின்ற, நாட்டுக்கு தேசத்திற்குப் புதிய விழித்தெழலை ஏற்படுத்துதல்வரை கொண்டுசெல்கின்ற பயணமென்பதை எவருக்கும் உணர்த்தப்படவில்லை. நாங்கள் சுதந்திரம் அடைகையில் எமது நாட்டை இட்டுச்செல்லவேண்டிய திசைபற்றிய பொருளாதார நோக்கு, திட்டம் எமக்கு இருக்கவில்லை. எமது கொள்கை பிறரை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதாகும். இந்தியாவின் பயணப்பாதை ஒன்றுசேர்க்கின்ற வரலாற்றினைக் கட்டியெழுப்புகையில் எம்மவர்கள் அடிபட்டுக் கொண்டார்கள்.
எமது நாட்டின் திசை பற்றி வெளியில் தனிவேறான உரையாடலொன்று நிலவியது. அதில் பலம்பொருந்தியவராக விளங்கியவர் பொறியியலாளர் திரு. விமல சுரேந்திர. ஆங்கிலேய பொறியிலாளர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக திரு. விமல சுரேந்திர “இலங்கை மின்னியல்மயப்படுத்தலை நோக்கிச் செல்லவேண்டும்” எனக் கூறுகிறார்.
அவர் 1919 இல் லக்ஷபான மின்நிலையத்தை முன்மொழிகிறார். “லக்ஷபான மின்நிலையத்திலிருந்து பிறப்பிக்கப்படுகின்ற மிகையான மின்சாரத்தைக்கொண்டு மின்சார ரயில் இயக்கப்பட வேண்டும்” என அவர் கூறுகிறார். 2030 அளவில் தமது புகையிரதங்கள் அனைத்தும் மின்சாரத்தில் இயங்குபவையாக மாற்றப்படவேண்டுமென இந்தியா ஒரு தேசிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது. நாங்கள் என்ன செய்கிறோம்.
இந்தியா ஒதுக்குகின்ற ரயில் பெட்டிகளை இங்கே கொண்டுவருகிறோம். பேராசிரியர் சேனக்க பிபிலே எமது ஓளடதக் கொள்கை எவ்வாறானதாக அமையவேண்டுமென கொள்கையொன்றை முன்வைத்தார். அவுஸ்திரேலிய விஞ்ஞானியொருவர் ” இலங்கை என்பது சமவெளயில் அமைந்துள்ள ஒரு மலையுச்சியாகும்.
அந்த மலையுச்சியில் ஒளிர்கின்ற தீபம் சேனக்க பிபிலே ஆவார்” என்று கூறினார். பெரும்பாலான நாடுகளில் ஓளடதக் கொள்கை பற்றிய அளவுகோல்களுக்கு வழிகாட்டியவர் சேனக்க பிபிலே ஆவார். அவரை இழுத்து வெளியில் போட்டார்கள். மார்ட்டின் விக்கிரமசிங்க, சரத்சந்திராக்களின் உரையாடலொன்று வெளியில் நிலவியது.
அவையனைத்தையும் கீழடக்கிய அரசியல் அதிகாரம் கட்டியெழுப்பப்பட்டது. அரசியல் அதிகாரசபை உலகில் இடம்பெறுகின்ற புதிய மாற்றங்கள் பற்றி சிந்திக்கவில்லை. அவர்கள் வரலாற்றில் நிலவிய மகிமையை திரும்பத்திரும்ப உச்சரித்துக்கொண்டு எம்மை அதற்குள்ளே சிறைப்படுத்தி அதன்மீது அவர்களின் அரசியல் கருத்திட்டதை விரித்தார்கள்.
இந்த ஆட்சியாளர்கள் எமது கருத்தியலை வரலாற்று மோகத்தில் சிறைப்படுத்தி வைத்தார்கள். முற்காலத்தில் நிலவிய தொழில்நுட்பம், கட்டிடக்கலை, சமூக அமைப்புகள் பற்றி நாங்கள் ஆய்வுசெய்ய வேண்டும். எதிர்காலப் பயணத்திற்கு அவற்றை ஆதாரமாகக்கொள்ள வேண்டும்.
இறந்தகால கருத்தியலுக்குள் சிறைப்பட்டுள்ள எமது அரசியல்வாதியின் பிரதான உடையாக “கபடமான சூற்” அமைந்துள்ளது. அது முற்கால கருத்தியல்மீது விரிக்கப்பட்டுள்ள கருத்திட்டத்தின் ஒரு கட்டமாகும். இந்த கருத்திட்டத்திற்குள் எமது நாடு இறுகிப்போனது. அதனாலேயே உலகில் இடம்பெற்ற பாரிய மாற்றங்களை உறிஞ்சிக்கொள்ளக்கூடிய நாடாக, தேசமாக எமது நாடு மாறவில்லை. இந்தியா கலாசாரத்தை பலப்படுத்திக் கொள்வதைப்போன்றே உலகிற்கு மாபெரும் பொருளாதாரத்தை நிர்மாணித்து வருகின்றது. அதன் காரணமாகவே ஐ.ரீ. தொழில்நுட்பத்தில் மிகவும் பலம்பொருந்திய நாடாக இந்தியா மாறியுள்ளது.
மோட்டார் வாகன உற்பத்தி, விதையினங்களின் உற்பத்தி, ஓளடதங்கள் உற்பத்தி, பால் உற்பத்தி ஆகிய உற்பத்திகளில் முன்னணியில் நிற்கின்ற நாடாக இந்தியா மாறியுள்ளது. அதன் காரணமாகவே சந்திரனுக்குச் செல்கின்ற தேசமாக உலகில் பிரவேசித்துள்ளது. மரபுவழியான, ஆண்டான் அடிமை, பழங்குடி மரபு நிறைந்த கும்பலொன்றின் கைகளில் எமது நாடு சிக்கியது.
மனிதத் தேவைகள் என்பது ஐம்புலன்களை திருப்திப்படுத்துவதாகும். இந்த தேவைகளை நிவர்த்திசெய்கின்ற பாணி முற்காலத்தில் இருந்ததைப் பார்க்கிலும் வித்தியாசமானது. இந்த பாணிதான் புதிய சந்தையை உருவாக்குகின்றது. உதாரணமாக மேனிவனப்பக் கலையை எடுத்துக்கொள்வோம். முற்காலத்தில் உடல் வனப்பிற்காக மஞ்சள், வெள்ளைச் சந்தனம், சிவப்புச் சந்தனம் என்பவை மார்க்கெற்றில் இருந்தன. தற்போது மேனிவனப்பு மார்க்கெற் கொஸ்மெட்டிக் கைத்தொழிலாக மாறிவிட்டது.
அந்த சந்தைக்கு அவசியமான பண்டங்களை உற்பத்தி செய்வதில் ஆட்சியாளன் வெற்றியடையவேண்டும். இன்று உலகின் கொஸ்மெட்டிக் கைத்தொழிலில் உயர்வான இடத்தை வகிப்பது தென்கொரியாவாகும். ஸ்மார்ற் போன் உற்பத்தியிலும் முன்னணி வகிப்பது தென் கொரியாவாகும்.
நாங்கள் ஏன் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மக்களை அழைக்கிறோம்? தற்போது பயணித்துக் கொண்டிருக்கின்ற திசைக்குப் பதிலாக புதிய திசையை நோக்கி பெறுமதிமிக்க கருத்தியலை நோக்கி எமது நாட்டை வழிப்படுத்தவேண்டும். அதுவே நவீன உலகத்துடனான எமது உறவுகளை கட்டியெழுப்பும்.
இது ஒரு தேசிய இயக்கமாகும். இந்த நாட்டைக் கட்டியெழுப்ப ஒரு தேசிய புத்துணர்ச்சி அவசியமாகும். எதிர்வரும் தேர்தலில் 76 வருடங்களாக ஆட்சிசெய்த ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதே மக்கள் மத்தியில் பாரிய மலர்ச்சியை, எழுச்சியை, எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துமென நாங்கள் நம்புகிறோம்.
வெளிநாடுகளிலுள்ள எமது ஆராய்ச்சியாளர்கள், ஆதன உரிமையாளர்கள், கல்வியாற்றல்களும் அனுபவமும் வாய்ந்த இலங்கையர்கள் திரும்பிவரத் தயாராக இருக்கிறார்கள். அந்த நம்பிக்கை எம்மிடம் இருக்கின்றது. மக்களைத் தட்டியெழுப்புவதே இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான அத்திவாரமாகும். பொருளாதாரப் பக்கத்தில் மாத்திரமன்றி நாங்கள் பொறுப்புவாய்ந்த பிரஜைகளைக்கொண்ட சமூகமொன்றை உருவாக்க வேண்டும்.
அரசியல்வாதி பொறுப்புக்கூறலுக்கு கட்டுப்படல் வேண்டும். எமக்கு ஒரு புதிய நாகரிகம் அவசியமாகும். அரசியலில், பொருளாதாரத்தில், சமூகத்தில் ஒரு புதிய மாற்றத்தையே நாங்கள் முன்மொழிகின்றோம். ஒட்டுமொத்த முறைமையினதும் மாற்றமாகும். அதன்போது அரசியல்வாதிக்கும் ஒரு பங்கு இருக்கின்றது. நாங்கள் அரசியல்வாதியின் பங்கினை யதார்த்தத்தில் நிரூபித்துக் காட்டுகின்றவர்கள் என்பதை உங்களிடம் உறுதியாகக் கூறுகிறோம்.
நிறுவனங்களை வகைப்படுத்தும்போது மக்களுக்கு சேவைகளை வழங்குகின்ற நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குகையில் குறைவான முக்கியத்துவம் வகிக்கின்ற நிறுவனங்கள் என்றவகையிலேயே வகைப்படுத்தப்பட வேண்டும். ஒருசில அவசியப்பாடுகள் அரசாங்கத்தினால் கட்டாயமாக நிறைவுசெய்யப்படல் வேண்டும்.
பொருளாதாரத்தில் முன்நோக்கிய பாய்ச்சலை எடுக்கக்கூடிய ஐ.ரீ. கைத்தொழில் பற்றிய திட்டமொன்றை நாங்கள் வகுத்துள்ளோம். ரெலிகொம்தான் ஐ.ரீ. கைத்தொழிலுக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கிவருகின்றது. ரெலிகொம்மை வளர்த்தெடுக்காவிட்டால் ஐ.ரீ. தொழில்நுட்பத்திற்கு முன்நோக்கி நகரமுடியாது.
அதனை எமது வருங்கால அபிவிருத்தியுடன் தொடர்புபடுத்தியே ரெலிகொம் நிறுவனத்தை நோக்கவேண்டும். ரெலிகொம் நிறுவனம் அரசாங்கத்திற்குச் சொந்தமானதாக இருக்கவேண்டும். அம்பாந்தோட்டை துறைமுகத்தை கொள்வனவுசெய்து ஏழு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. 1.1 பில்லியன் டொலரைச் செலுத்தியே கொள்வனவு செய்தார்கள். எனினும் ஒரு கப்பல்கூட வருவதற்கான கருத்திட்டத்தை வகுக்கவில்லை. துறைமுகத்துடன் கட்டியெழுப்பப்படுகின்ற பொருளாதாரம் எங்கே?
1977 இற்கு முன்னர் நாங்கள் பாலுக்கான எமது தேவையில் 50% ஐ உற்பத்தி செய்தோம். தற்போது உற்பத்தி செய்யப்படுவது 35% ஆகும். ஒரு வருடத்திற்காக பால் மா இறக்குமதி செய்வதற்காக 225 மில்லியன் டொலர் செலவாகின்றது. பாலில் தன்னிறைவு காண்பதற்காக அவசியமான சுற்றாடல் நிலைமைகளும் இருக்கின்றன.
கிராமிய வறுமைநிலையை ஒழித்துக்கட்டுவதுடன் இணைந்து பாலில் தன்னிறைவு காண முடியும். பிரதானமான ஐந்து அரிசியாலை உரிமையாளர்களே எமது அரிசி விலையைத் தீர்மானிக்கிறார்கள். இந்த தனியுரிமையை தகர்த்திட வேண்டும். டயில்களில் தனியுரிமையொன்று தோன்றிவருவதை நாங்கள் கண்டோம்.
டயில் (Tile) இறக்குமதி செய்கையில் எமது நாட்டில் மூன்று டயில் கம்பெனிகளே இருந்தன. டயில் தடை செய்யப்பட்டது. தனியுரிமை உருவாகியது. அரச மற்றும் தனியார் சந்தையை ஒழுங்குறுத்துவது எவ்வாறு என்பது பற்றிய தெளிவான நோக்குடன் செயலாற்றுவோம்.
இந்த பொருளாதர நெருக்கடிக்குள் இருப்பது பொது திறைசேரியிடம் ரூபா இல்லாமை, நாட்டுக்கு டொலர் இல்லாமையாகும். மக்களின் நெருக்கடியை மூன்று விடயங்களாக எடுத்துக்காட்டலாம். தாங்கிக்கொள்ள முடியாத வரிச்சுமை, எண்ணெய் – மின்சாரத்தை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளின் மிகையான விலை, புதிதாக உருவாகி வருகின்ற இளைய தலைமுறையினருக்கு தொழில்கள் இல்லாமை என்பவையாகும்.
அப்படியானால் எமது பொருளாதார திட்டம் எவ்வாறு வகுக்கப்படல் வேண்டும்? திறைசேரியின் வருமானத்தை எவ்வாறு அதிகரித்துக்கொள்வது? நான்கு பிரதான வருமானத் தோற்றுவாய்கள் இருக்கின்றன. உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம், மதுவரித் திணைக்களம் மற்றும் குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம் அவையாகும். இந்த நிறுவனங்களை முகாமைசெய்து வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடியுமென்ற நம்பிக்கை எம்மிடம் நிலவுகின்றது.
டொலர் ஈட்டிக்கொள்வதற்காக வெளிநாட்டுப் பணமனுப்பல்களை பெற்றுக்கொள்வதற்காக பாடுபடுதலும் சுற்றுலாக் கைத்தொழிலை முன்னேற்றுதலும், நீண்டகால ரீதியாக உலகச்சந்தையின் பங்கினை கையகப்படுத்திக்கொள்ளல், இறக்குமதிசெய்கின்ற ஒருசில பண்டங்களை எமது நாட்டுக்குள் உற்பத்தி செய்தல் போன்ற துறைகளில் இருந்து எம்மால் டொலர்களை சேமித்துக்கொள்ள முடியும்.
எமது நாட்டின் வரி விதித்தலால் எமது பொருளாதாரம் சிறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பொருளாதாரம் விரிவடைவதில்லை. தளர்வான ஒரு வரிக்கொள்கையே எமக்குத் தேவை. எமது மத்திய வங்கி ஆளுனர் பொருளாதாரத்தை சுருக்கி வைத்துள்ளார். வட்டி வீதத்தை அதிகரித்தல், பாரியளவில் வரி விதித்தல், இறக்குமதியைக் கட்டுப்படுத்துதல் முதலியவற்றைச் செய்தார். எட்டு எனும் எதிர்க்கணியப் பெறுமதியால் பொருளாதாரத்தைச் சுருக்கினார்.
எமது திட்டம் பொருளாதாரத்தை விரிவாக்குவதாகும். பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும். எம்மிடம் இருப்பது கொழும்பினை மையப்படுத்திய பொருளாதாரமாகும். நாங்கள் அதனை கிராமிய மக்களுக்கு விரிவுபடுத்த வேண்டும். புதிய பொருளாதார தோற்றுவாய்களை கிராமத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும். அதற்கான வரிக் கொள்கையொன்று அவசியமாகும். பிரஜைகள்மீது சுமத்தப்பட்டுள்ள உழைக்கும்போதே செலுத்துகின்ற வரி பொருளாதாரத்தை சுருக்குகின்ற உபாயமார்க்கமாகும்.
பண்ட உற்பத்திகளை அதிகரித்து பணவீக்கத்தைக் குறைத்திட வேண்டும். உற்பத்தியை வீழ்ச்சியடைச் செய்விப்பதன் மூலமாகவும் உற்பத்தியை வீழ்ச்சியடையச் செய்விப்பதைப் பார்க்கிலும் அதிகமான வேகத்தில் கொள்வனவு செய்வதற்கான ஆற்றலை வீழ்ச்சியடையச் செய்விப்பதன் மூலமாகவும் பணவீக்கத்தைக் குறைத்துக்கொள்ள முடியும்.
பண்டங்களைக் கொள்வனவு செய்வதற்கான ஆற்றல் பலவீனமடைந்தால் பண்டங்களைக் கொள்வனவு செய்வதற்கான அழுத்தம் குறைவடையும். அதன்போது பணவீக்கம் குறைவடையும். மனிதர்களை பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபடுத்தியே பொருளாதாரத்தை மேலோங்கச் செய்விக்கவேண்டும்.
பொருளாதாரத்தை சுழற்றவேண்டும். அதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வரிக்கொள்கையில் மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டும். விலங்கிடப்பட்டுள்ள பொருளாதாரத்தை சுதந்திரமான அசைவிற்கு, பொருளாதார மாற்றநிலைக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.