80 பில்லியன் ரூபா கடன் ; வீதி புனரமைப்புக்கள் தற்போது சாத்தியமில்லை – பந்துல

நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்கனவே புனரமைக்கப்பட்ட வீதிகளுக்காக ஒப்பந்தக்காரர்களுக்கு நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சினால் 80 பில்லியனுக்கும் அதிக தொகை செலுத்தப்பட வேண்டியுள்ளது.

இதனை செலுத்தாமல் அவர்களால் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட மாட்டாது. தற்போது வீதி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கக் கூடிய சாத்தியமும் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (டிச.06) நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது அரச ஊடகமொன்று புனரமைக்கப்படாத வீதிகள் தொடர்பில் தினமும் செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.

நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் தனிப்பட்ட ரீதியில் என்னால் அந்த வீதிகளை புனரமைக்க முடியாது. அரசாங்கம் அமைச்சிற்கு நிதியை வழங்கினால் மாத்திரமே வீதிகளை புனரமைக்க முடியும்.

ஏற்கனவே அமைக்கப்பட்ட வீதிகளுக்காக ஒப்பந்தக்காரர்களுக்கு 80 பில்லியனுக்கும் அதிக தொகையை செலுத்த வேண்டியுள்ளது.

இந்தத் தொகையை தொகுதிகளாக மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே செலுத்திக் கொண்டிருக்கின்றோம். செலுத்த வேண்டிய பணத்தை வழங்காவிட்டால் , ஒப்பந்தக்காரர்கள் வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பிக்கமாட்டார்கள்.

மக்களின் வரிப்பணத்தில் கிடைக்கப் பெறும் வருமானம் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்திற்கும் அபிவிருத்தி பணிகளை பேணுவதற்கும் செலவிடப்படுகிறது.

இதனால் எஞ்சிய தொகை எதுவும் இல்லை. முன்னர் பணம் அச்சிடப்பட்டு இந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டன. எனினும் தற்போது அவ்வாறு செய்ய முடியாது. எனவே இது முறையாக முகாமைத்துவம் செய்யப்பட வேண்டிய பிரச்சினையாகும். நிதி முகாமைத்துவம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும் என்றார்.