ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு எம்.பிக்களுடன் அடுத்தவாரம் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியல் தீர்வு சம்பந்தமாக பேச்சுக்களை முன்னெடுப்பதற்காக விடுக்கப்பட்ட அழைப்பு நடைமுறையில் சாத்தியப்பட வேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இனப்பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் அபிலாஷைகள் சம்பந்தமான பேச்சுகள் முன்னெடுக்கின்றபோது கிழக்கு மாகாணத்தைப் புறக்கணிக்க முடியாது. ஆகவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு உறுப்பினர்களுடன் சந்திக்கும் அதேநேரம் கிழக்கு உறுப்பினர்களின் பிரசன்னம் அவசியமாகின்றது. வடக்கை தனியாகவும் கிழக்கைத் தனியாகவும் பார்க்கமுடியாது.
அதேநேரம், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதாக இருந்தால் அது இணைந்த வடக்கு கிழக்கிலேயே அமைய வேண்டும் என்பது எமது நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது. அவ்வாறான நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு உறுப்பினர்களுடனான பேச்சுகளின் போது கிழக்கு உறுப்பினர்களையும் உள்ளீர்க்க வேண்டியது அவசியமாகின்றது. இதனால் ஜனாதிபதியைச் சந்தித்து நேரில் கோரிக்கை விடுப்பதென தீர்மானித்துள்ளோம். பெரும்பாலும் இந்தச் சந்திப்பு அடுத்தவார நாடாளுமன்ற அமர்வில் இடைப்பட்ட நேரத்தில் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.