அரசியலமைப்பின் பிரகாரம் 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு மக்களாணை இல்லை என குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எதிர்க்கட்சிகளுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்குமாயின் பாராளுமன்றத்தை கலைக்கும் பிரேரணையை அவர்கள் தாராளமாக கொண்டு வரலாம்.
எந்நிலையிலும் பாராளுமன்ற ஐனநாயகத்திற்கு மதிப்பளித்து செயல்படுவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (நவ. 23) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாடு பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொருளாதார பாதிப்பை முகாமைத்துவம் செய்துக் கொள்வதற்கு அரச செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு,அரச செலவுகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் கடந்த காலங்களில் சமூக கட்டமைப்பில் காணப்பட்ட எரிபொருள்,எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான வரிசை யுகத்தை மறக்க முடியாது.
ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டங்கள் அரச கட்டமைப்பிற்கு சவால் விடுத்தது. இவ்வாறான கடினமான சூழ்நிலைகளை ஒருபோதும் மறக்க முடியாது.
ஜனாதிபதி மாளிகை,ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் சுற்றிவளைக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகளின் வீடுகள் மற்றும் சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இதுவா ஜனநாயகம், எதிர்க்கட்சிகள் இதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. ஆனால் தற்போது இவர்கள் ஜனநாயக உரிமைகள் தொடர்பில் கருத்துரைக்கிறார்கள்.
நாட்டு மக்களின் சர்வஜன வாககுரிமையை பாதுகாக்க அரசாங்கம் பெர்றுப்புடன் செயற்படுகிறது. நாட்டு மக்களின் வாக்குரிமையினால் தோற்றம் பெற்ற ஸ்தாபனங்களை பாதுகாக்க எதிர்க்கட்சியினர் ஒருமித்து செயற்படாமல் இருந்தமை கவலைக்குரியது. ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டங்கள் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
பாதுகாப்பு தரப்பினரினால் பாராளுமன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கவும், பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பலப்படுத்தவும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் தேர்தல்களை பிற்போட்டவர்கள் தற்போது தேர்தல் உரிமை தொடர்பில் குரல் எழுப்புகிறார்கள்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவை குற்றஞ்சாட்ட முடியாது,ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படுகிறது,இருப்பினும் தேர்தல் முறைமை மற்றும் தேர்தல் தொடர்பான அதிகாரங்கள் பாராளுமன்றத்திற்கு உண்டு என்றார்.