உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடும் அழுத்தம் பிரயோகித்துள்ளது.
தேர்தலை பிற்போட முடியாது. வேண்டுமாயின் பாராளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு ஆணைக்குழு அரசாங்கத்திடம் அறிவித்து விட்டது. தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் வியாழக்கிழமை (டிச. 22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கடன் பெற்று பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணலாம் என்பது ஜனாதிபதியின் பிரதான பொருளாதார கொள்கையாக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்துவதால் சமூக கட்டமைப்பு எதிர்கொள்ளும் மிக மோசமான பாதிப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி உட்பட அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு அரசாங்கம் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடும் அழுத்தம் பிரயோகித்து வருவதாக அறிய முடிகிறது. தற்போதைய நிலைமைக்கு அமைய தேர்தலை பிற்போட முடியாது. நடைமுறை சட்டத்திற்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை பிற்போட வேண்டுமாயின் பாராளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேர்தலை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்கும்,பொதுஜன பெரமுனவிற்கும் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை உள்ளது,ஏனெனில் இரு தரப்பினரும் மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். தேர்தல் விடயத்தில் நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும்.
நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்ற ஐக்கிய தேசியக் கட்சியினரும்,பொதுஜன பெரமுனவினரும் தற்போது ஒன்றிணைந்துள்ளார்கள். ஆகவே இவ்விரு தரப்பினரும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடுவது சிறந்தது, பொருளாதார படுகொலையாளிகளுக்கு ஜனநாயக ரீதியில் சரியான பாடம் கற்பிக்க முடியும்.
2020ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேர்ந்த கதியே தமக்கும் ஏற்படும் என்பதால் பொதுஜன பெரமுன உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன் பிற்போட பாரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நாட்டு மக்கள் அரசியல் ரீதியான தமது நிலைப்பாட்டை தேர்தல் ஊடாக மாத்திரமே வெளிப்படுத்த முடியும்.மக்களின் அடிப்படை உரிமையை நிச்சயம் பாதுகாப்போம். தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்கமாட்டாது என்றார்.