சஜித் மாத்திரமே மக்கள் மத்தியில் செல்ல முடியும் – இம்ரான்

நமது நாட்டினுடைய நிலமையினையும் அரசினுடைய நிலமையினையும் பார்க்கின்ற போது திருகோணமலை வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணம் வழங்கும் நிகழ்வானது வரலாற்றில் இடம்பிடிக்கப்படவேண்டிய நிகழ்வு எனவும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவினால் மாத்திரமே இன்று மக்கள் மத்தியில் செல்ல முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

‘சுவாசம்’ வேலைத்திட்டத்தின் கீழ் 54 ஆவது கட்டமாக முப்பத்தொன்பது இலட்சம் (3,900,000) ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள்  திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களால் இன்று வியாழக்கிழமை (22)அன்பளிப்புச் செய்யும் நிகழ்வில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

நாட்டை சிங்கபூராக மாற்றுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று வெளியில் வரமுடியாமல் இருக்கிறார்கள். அவர்களால் தேர்தல் காலத்தில் பேசப்பட்ட பேச்சுக்களை பார்க்கின்ற போது நகைப்பாக இருப்பதாகவும் தற்போது எதுவும் செய்ய முடியாமல் ஐனாதிபதி, பிரதமர் பதவிகள் மாற்றி அமைச்சரவையிலும் தொடர்ச்சியான மாற்றம் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், தற்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் மத்தியில் சென்று அவர்களுடைய பிரச்சினைகளை அறிவது மட்டுமல்லாமல் தீர்வுகளையும் பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்த அவர் இலங்கை வரலாற்றில் எதிர்க்கட்சியாக இருந்து நாட்டின் பொருளாதார நெருக்கடியிலான சூழ்நிலையிலும் மக்களுக்கு ஆளும் கட்சியை விட அதிகமாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உதவுவதாக தெரிவித்தார்.

நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு,திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் இதுவரையில்  48 பாடசாலைகளுக்கு 1602 இலட்சம் ரூபா பெறுமதியான பேருந்துகள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும், 22 பாடசாலைகளுக்கு 178 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான தகவல் தொழிநுட்ப கருவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும், ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் இதுவரை 53 வைத்தியசாலைகளுக்கு 2292 இலட்சம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய வைத்தியசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக/நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.