தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியலமைப்பு பேரவை ஊடாக அதிகார பகிர்வை அணுகுவார்கள் என்பதனால் கூட்டமைப்பினரது பெயர் பரிந்துரையை எதிர்த்தோம்.
கூட்டமைப்பினர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரு மாதங்கள் நிறைவுப் பெற்றுள்ள நிலையில் அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் இன்றும் இழுபறி நிலையில் உள்ளது.உறுப்பினர் நியமனத்தில் அரசியல் கட்சிகளுக்கிடையில் கருத்தொற்றுமை கிடையாது.
பெரும்பான்மையினவாதத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், சிறுபான்மையினத்தவர்களுக்கு இடமளிக்க கூடாது என்பதற்காகவும் அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் பெயர் பரிந்துரையை பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் எதிர்தரப்பினர் எதிர்த்ததாக கூட்டமைப்பினர் குறிப்பிடுவது அடிப்படையற்றது.
அரசியலமைப்பு பேரவைக்கு சுயாதீன தரப்பினர் ஒருவரின் பெயரை பரிந்துரைக்க நாங்கள் ஆரம்பத்தில் தீர்மானிக்கவில்லை.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாட்டு மக்களுக்கு எவ்வித நிவாரணத்தையும் வழங்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வரவு செலவுத் திட்ட மீதான விவாதத்தில் சுட்டிக்காட்டி,அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளை விமர்சித்தார்கள்.
75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் அரசியல் தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டதை தொடர்ந்து கூட்டமைப்பினர் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை.
தமது நோக்கங்களுக்காக மாத்திரம் செயற்படும் கூட்டமைப்பினரை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்களாக நியமிப்பது சாத்தியமற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியலமைப்பு பேரவை ஊடாக அதிகார பகிர்வை அணுகுவார்கள் என்ற காரணத்தால் அவர்களின் பெயர் பரிந்துரையை நாங்கள் எதிர்த்தோம்.
இது தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடு அல்ல,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களுக்கு உண்மையான அபிவிருத்திகளை வழங்க வேண்டும் என பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். அதிகார பகிர்வு அபிவிருத்திக்கான வழியாக அமையாது என்றார்.