எதிர்வரும் 4ஆம் திகதி பல்கலைக் கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள, சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு கறுப்பு தினம் என்ற பிரகடன போராட்டம் மற்றும் பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவு வழங்குவதோடு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் சுதந்திர தினத்திற்கெதிராகக் கிளர்ந்தெழ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
இன்றைய தினம் (31) மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் 75வது சுதந்திரதினம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் கொண்டாடப்படவுள்ளது. வருடா வருடம் இதனை அரசு கொண்டாடிக் கொண்டு வருகிறது. ஆனால் இந்தச் சுதந்திம் அடைந்த நாளில் இருந்து இன்று வரைக்கும் தமிழ மக்கள் அடக்கியொடுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.
இந்த நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்திருந்தாலும் தமிழ் மக்களைப் பொருத்தமட்டில் இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை. இந்த நாட்டில் தமிழ் மக்கள் சுதந்திரம் அடைந்த காலம் தொட்டே அடக்கியொடுக்கப்பட்டு வருகின்றதுடன், தமிழர்களின் நிலங்ககள், பிரதேசங்கள் கூட ஒடுக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. இலங்கையின் முதலாது பிரதமர் டி.எஸ் சேனநாயக்கா அவர்கள் கிழக்கு மாகாணத்தைத் தமிழ் மக்களின் மாகாணம் என்ற நிலையில் இருந்து மாற்றுவதற்காக 1949ம் ஆண்டே கல்லோயக் குடியேற்றத் திட்டத்தைக் கொண்டு ஆரம்பித்திருந்தார்.
அன்று தொடக்கம் மாறி மாறி இந்த நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் பல இனக்கலவரங்களை உஐவாக்கி தமிழ் மக்களைக் கொன்றொழித்தது மாத்திரமல்லாமல் தமிழர்களின் சொத்துக்கள் கூட சூரையாடப்பட்டிருந்தது. 1983ம் ஆண்டு நடைபெற்ற பாரியதொரு இனக்கலவரம் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை வீறு கொண்டு எழ வைத்தது. அன்று தொடக்கம் தமிழர்களின் சுயாட்சிக்காக இந்த நாட்டில் சேர்ந்து வாழ முடியாது என்ற ரீதியில் தனிநாடு கோரி போராடியிருந்தார்கள். 2009 மே 18 அந்தப் போராட்டம் மௌனிக்கப்பட்டது.
ஆனாலும் இன்றவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு ஜனநாயக ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் போராடிக் கொண்டு வருகின்றது.
இந்த வேளையிலே எதிர்வரும் 4ம் திகதி 75வது ஆண்டு சுதந்திர தினத்திற்கு முன்னர் இலங்கையில் புறையேடிப் போயுள்ள இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வைத் தருவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் தெரிவித்து சர்வகட்சி மாநாடுகளை நடத்தி தமிழ்க் கட்சிகளுடனும் அவ்வப்போது பேசிக் கொண்டு வருகின்றார்.
1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைத் தேர்தல் கூட கிழக்கில் ஐந்து வருடங்களாகவும் வடக்கில் நான்கு வருடங்களாகவும் நடைபெறாமல் இருக்கின்றது. தற்போதைய அரசியற், பொருளாதாரச் சூழ்நிலையில் இலங்கை அரசிற்கு ஏற்பட்டிருக்கும் அழுத்தங்கள் 13வது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக அமுல்ப்படுத்தி அச்சட்டத்தில் உள்ளடங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் அனைத்தும் முறையாகப் பகிரப்பட்டு மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பாக இந்தியா முழுமையான அழுத்தம் கொடுத்து வருகின்றது. அண்மையில் இலங்கை வந்த வெளிவிவகார அமைச்சரும் அதனை வலியுறுத்தியிருக்கின்றார்.
இன்று சிங்களப் பேரினவாத சில சக்திகள் குறிப்பாக விமல் வீரவன்ச, சரத் வீரசேகர போன்ற முன்னாள் அமைச்சர்கள் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்தினால் நாடு பிழவுபடும் என்கிற ரீதியில் கருத்துக்களைக் கூறுகின்றார்கள்.
1994ம் ஆண்டு முதல் 10 வருடங்கள் ஆட்சி செய்த சந்திரிக்கா அம்மையார் தலைமையிலான அரசாங்கத்தின் காலத்தில் பிராந்தியங்களின் ஒன்றியம் என ஜி.எல்.பீரிஸ், நீலன் திருச்செல்வம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட சட்ட மூலத்தை எதிர்க்காதவர்கள் இன்று 13வது திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றார்கள். ஆக மொத்தத்தில் இந்த நாடு பொருளாதாரப் பிரச்சினையிலே பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது இலங்கையில் புறையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வை இவர்கள் தராவிட்டால் இந்த நாடு உருப்படுவதற்கான எவ்வித சந்தர்ப்பமும் கிடையாது.
எனவே எதிர்வரும் சுதந்திர தினம் இந்த நாட்டில் கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் சுதந்திரம் இல்லாத நாட்டிலே தமிழர்களாகிய எமக்கு கிடைக்காத சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டிய தேவை இல்லை. அந்த வகையில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் 4ம் திகதி வடக்கிலிருந்து கிழக்கிற்கு யாழ்ப்பாணத்தில இருந்து மட்டக்களப்பிற்கு ஒரு கண்டனப் பேரணியை நடாத்துவதற்குள்ளார்கள்.
அந்தவகையில் தமிழ்ஈழ விடுதலை இயக்கம், தமிழ்ஈழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகிய நாங்கள் அந்தப் பேரணிக்கு முழு ஆதரவையும் கொடுப்பது மாத்திரமல்லாமல், அவர்களுக்குப் பக்க துணையாக இருந்து இந்தச் சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அனுஸ்டிப்பதுடன், வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இந்தச் சுதந்தர தினத்திற்கு எதராகக் கிளர்ந்தெழ வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.