தமிழ் மக்களின் கரிநாளான நாளைய தினம் வடக்கிலிருந்து கிழக்குக்கு எழுச்சிப் பேரணி ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
நேற்றைய தினம் யாழ். பல்கலைக் கழகத்தில் யாழ்ப்பாணம் – கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த அழைப்பை விடுத்தனர். அத்துடன், தமிழ் மக்களின் அபிலாசைகளான பொங்கு தமிழ் எழுச்சியனூடாக வலியுறுத்தப்பட்ட சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாய கம், தமிழ்த் தேசியம் என்ப வற்றை முன்னிறுத்தி முன்னெடுக்கும் இந்த எழுச்சிப் பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர். இதேநேரம் பேரணி ஆரம்பமாகி பயணிக்கும் இடங்களையும் வெளியிட்ட மாணவர்கள் அந்தப் பகுதிகளில் பெருந்திரளாக மக்கள் திரண்டு ஆதரவு அளிக்குமாறும் வேண்டுகோள் விடுத் தனர்.
பேரணி ஆரம்பமும் பயணமும் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகும். நாச்சிமார் கோயிலடி ஊடாக பிரதான தபால் அலுலகம் தமிழாராய்ச்சி மண்டபம், மணிக்கூட்டுக்கோபுரம், ஆஸ்பத்திரி வீதி வழியாக கச்சேரியடியை வந்தடைந்து பின்னர் செம்மணியை சென்றடையும்.
பின்னர் செம்மணியிலிருந்து வாகனங்கள் மூலம் நாவற்குழி, சாவகச்சேரி, கொடிகாமம், மிருசுவில், பளை, ஆனையிறவு, பரந்தன் ஊடாக கிளிநொச்சியை சென்றடைந்து இரணைடுவில் பேரணியின் முதல் நாள் நிறைவடையும். இரண்டாம் நாளான நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பரந்தனில் ஆரம்பமாகும்.
வவுனியா மன்னார் அணிகளை இணைத்துக் கொண்டு 10.30 மணிக்கு புறப்படும் பேரணி புளியம்பொக்கணை, தர்மபுரம், விசுவமடு, உடையார்கட்டு, மூங்கிலாறு ஊடாக புதுக்குடியிருப்பை அடைந்து அங்கிருந்து முள்ளிவாய்க் கால் சென்று உறுதியெடுத்துக் கொண்டு முல்லைத்தீவில் நிறைவடையும்.
மூன்றாம் நாளான திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு முல்லைத்தீவில் ஆரம்பமாகும் பேரணி தென்னமரவாடியூடாக திருகோணமலையை மதியம் 1.30 மணியளவில் சென்றடையும். பின்னர், திருகோணமலையின் எழுச்சி நிகழ்வுகளில் பேரணியினர் பங்கேற்பர். தொடர்ந்து பயணித்து வெருகலில் மூன்றாம் நாள் நிறைவடையும்.
நான்காம் நாளான செவ்வாய்க் கிழமை முற்பகல் 10 மணிக்கு பேரணி வெருகலிலிருந்து ஆரம்பமாகி வாகரை சென்று அங்கிருந்து மட்டு. நகரை சென்றடையும். இதேநேரம் அம்பாறை மாவட்டத்திலிருந்தும் பேரெழுச்சியாக மக்கள் வந்து இணைந்து மாபெரும் பொது கூட்டத்துடன் எழுச்சிப் பேரணி நிறைவு பெறும்.
இப்பேரணிகளில் மாணவர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள், சிவில் சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் தரப்பினர் அனைவரும் அலைஅலையாக இணைத்து தமிழ்த் தேசத்தின் நிலைப்பாட்டை முழு உலகத்துக்கும் வெளிப் படுத்த அணிதிரளுமாறு அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம் – என்று தெரிவித்தனர்.