நீதிமன்றம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் அதில் தலையீடுகளை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும், உள்ளூராட்சிமன்றத்தேர்தல்கள் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத்தடையுத்தரவுக்கு மதிப்பளிக்குமாறும் சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் 83 பேர் ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பில் பவானி பொன்சேகா, ஒஸ்டின் பெர்னாண்டோ, ரணிதா ஞானராஜா, ஜயம்பதி விக்ரமரத்ன, லயனல் போபகே, பாக்கியசோதி சரவணமுத்து, ஜெஹான் பெரேரா, தீபிகா உடகம உள்ளடங்கலாக 83 சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
உயர்நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறிவிட்டது என்ற பொய்யான காரணியின் அடிப்படையில் நீதிமன்றக்கட்டமைப்பை அச்சுறுத்துவதற்கு ஜனாதிபதியினாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலராலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் நாம் மிகுந்த அதிருப்தியடைகின்றோம்.
உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களுக்கான நிதியை விடுவிக்காமல் இருக்கும் செயற்பாட்டைத் தடுக்கும் வகையில் சட்டமா அதிபர் மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோருக்கு எதிராக உயர்நீதிமன்ற நீதியரசர்களால் இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்தே இத்தகைய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
எமது நாட்டின் ஜனநாயக செயன்முறையைப் புறந்தள்ளும் வகையிலான அரசாங்கத்தின் செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அதேபோன்று இவ்விடயம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றோம்.
நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையில் தலையீடு செய்யும் வகையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் சட்டத்தின் ஆட்சியிலும், நாட்டுமக்களின் உரிமையிலும், ஜனநாயகத்திலும் ஏற்படுத்தப்படும் இடையூறாகவே அமையும் என்று சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
அதேவேளை ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் இத்தகைய செயற்பாடுகள், சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்ட உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் உரிய தினத்தில் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
உள்ளூராட்சிமன்றத்தேர்தலை நடத்தும் திட்டத்தைக் குழப்பும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின்மீது பிரயோகிக்கப்பட்ட தொடர் அழுத்தங்கள் தோல்வியடைந்ததை அடுத்து, தற்போது அரசாங்கம் அதன் ‘தாக்குதல்களுக்காக’ நீதிமன்றத்தைத் தெரிவுசெய்திருக்கின்றது.
இது ஆபத்தான போக்கிலான அரசாங்கத்தின் செயற்பாட்டைக் காண்பிக்கின்றது. எந்தவொரு ஜனநாயக சூழலிலும் தமது அரசியல் நிலைப்பாடு மற்றும் தெரிவை மிகவும் அமைதியானதும், செயற்திறனானதுமான முறையில் வெளிப்படுத்துவதற்கு மக்கள் கொண்டிருக்கும் வாய்ப்பான தேர்தலின் ஊடாக அவர்களது குரல் ஒலிப்பதை எவ்வகையிலேனும் தடுக்கவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது.
இவையனைத்தும் ஜனாதிபதி மற்றும் ஆளுங்கட்சியின்கீழ் இலங்கையின் ஜனநாயகம் மிகமோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதையே காண்பிக்கின்றது. எனவே நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது மீண்டும் மிகமுக்கியமான விடயமாக மாறியிருக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் எவ்வித தாமதமுமின்றி உள்ளூராட்சிமன்றத்தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடமும், தேர்தலை நடாத்துவதற்குப் பொறுப்பான அனைத்துத்தரப்புக்களிடமும் வலியுறுத்துகின்றோம் என்று அக்கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.