நிகழ்நிலைக் காப்புச் சட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விளக்கமளித்துள்ளார்.
இந்தியாவின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட இராஜதந்திரியான ஸ்ரீ சந்தோஷ் ஜா (Santosh Jha) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவிவரும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்களுடன் தொடர்பான பல்வேறு விடயங்களை இருவரும் பரிமாறிக்கொண்டனர்.
தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்துள்ள சட்டவிரோத மற்றும் நியாயமற்ற வரிக் கொள்கை குறித்த விடயங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்திய உயர்ஸ்தானிகருக்கு தெரியப்படுத்தினார்.
நியாயமற்ற முறையில் அரசாங்கம் விதித்த பெறுமதி சேர் வரியினால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பில் உழைக்கும் மக்களின் ஊழியர் சேம நிதியங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாதகமான விளைவுகளின் தாக்கம் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது உயர்ஸ்தானிகரை தெளிவுபடுத்தினார்.
அவ்வாறே,தற்போதைய அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளில் ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்து விடயங்களையும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
திட்டமிட்ட திகதிகளில் நடத்தப்பட வேண்டிய தேர்தல்கள் வேண்டுமென்றே ஒத்திவைக்கப்பட்டு வருவதான விடயங்கள் குறித்தும் இங்கு எதிர்க்கட்சித் தலைவரால் தெளிவுபடுத்தப்பட்டது.
இதுதவிர இந்த வருடம் தேர்தல் வருடமாக அமைந்திருந்தாலும் தற்போதைய அரசாங்கம் “நிகழ்நிலை காப்பு” என்ற சட்டத்தை நிறைவேற்றி,மக்களின் கருத்துகளை தெரிவிக்கும் உரிமை,தகவல் அறியும் உரிமை என்பவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும்,சமூக ஊடக வலையமைப்புகளை முடக்க மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்த இச்சட்டத்தினால் முடியும்.
தேர்தல் வருடத்தில் இவ்வாறான சட்டமூலத்தை கொண்டு வருவதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகளில் தேவையற்ற தலையீடுகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன் போது மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில், இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார,பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன,ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டு பிரதானி சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க,எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.