தேசிய மக்கள் சக்தியினருக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம்(16) யாழ்ப்பாணம் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது சமகால தேசிய பிராந்திய சர்வதேச அரசியல் நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, இலங்கையில் தமிழ் மக்கள் தற்போது அனுபவித்து வருகின்ற அத்துமீறிய நில ஆக்கிரமிப்பு, எல்லை தாண்டிய மீன்பிடி, தமிழர் நில, கடல் வளங்கள் அந்தந்த பிரதேச மக்களின் எதிர்ப்பினையும் தாண்டி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்படுதல் போன்ற விடயங்களில் தேசிய மக்கள் சக்தியினர் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் குரல் கொடுக்க வேண்டுமென ஜனநாயக போராளிகள் கட்சியின் பிரதிநிதிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும், இலங்கையி்ல் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தியினர் முன்வைக்கப்போகும் தீர்வு திட்டம் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்திப்பில், தேசிய மக்கள் சக்தியின் வடமாகாண அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன், யாழ் இணைப்பாளர் k.இளங்குமரன், ஜனநாயகபோராளிகள் சார்பில் தலைவர் சி.வேந்தன் மற்றும் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.