பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கிய அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வர அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான அனுமதியை மறுத்துள்ள அரசாங்கம், எந்தவொரு பிற நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கும் இனி இலங்கை கடல் பரப்புக்குள் வருவதற்கு அனுமதியளிக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்கா, அத்தியாவசிய தேவைகளின் நிமித்தமே கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரியதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை கடல் பரப்புக்குள் வருவதற்கு அனுமதி மறுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த அமெரிக்க ஆய்வுக்கப்பலில் பல்கலைக்கழக மாணவர்கள் இருப்பதாகவே இராஜாங்க தினைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் எந்தவொரு ஆய்வு கப்பலையும் இலங்கை கடற்பரப்பிற்குள் இனி அனுமதிக்கப் போவதில்லை என்ற கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு அமையவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் பதிலளித்துள்ளது.
இலங்கை கடல் பரப்புக்குள் ஆய்வு நடத்துவதற்காக அமெரிக்க கப்பல் வரவில்லை. மாறாக எரிபொருள், உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய காரணிகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரப்பட்டிருந்தது. எனினும் குறித்த தேவைகளை சர்வதேச கடல்பரப்பிற்கு சென்று குறித்த கப்பலின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதே வேளை குறித்த அமெரிக்க ஆய்வுக் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு செல்ல அனுமதி கோரப்பட்டுள்ள போதிலும் அங்கும் இதுவரையில் அனுமதி அளிக்கப்படவில்லை. எவ்வாறாயினும் சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கும் இலங்கை தடை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அரசாங்கம் எந்தவொரு நாட்டின் ஆய்வுகளுக்கும் இலங்கைக்குள் வர இனி அனுமதி கிடையாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.