ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம் : தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று மாலை சந்திப்பில் ஈடுபட்டனர்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் சி.வீ.கே.சிவஞானம், சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் குறித்த சந்திப்பில் பங்கேற்றனர்.

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இருக்கும் என தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சந்திப்பு தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் இட்ட பதிவில் “இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும். பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்களான இரா. சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவித்தேன், அவர்கள் இருவருமே தனிப்பட்ட ரீதியில் எனக்கு தெரிந்தவர்கள். அத்துடன், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இச்சந்திப்பின்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டது. எனது விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் அவர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும்” – என்றுள்ளது.

அரசு நியாயமாக செயற்படுமாக இருந்தால் வெலிக்கடை படு கொ லையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.!

அரசு நியாயமாக செயற்படுமாக இருந்தால் பட்டலந்த போன்று வெலிக்கடை படுகொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பட்டலந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது இவ்வளவு காலமும் தூசு தட்டாமல் இருந்து ஜே.வி.பி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. உண்மையில் அதனை நாம் வரவேற்கின்றோம். அதேநேரம் 1983 ஆம் கலவரம் ஏற்படுத்தப்பட்டது. வெலிக்கடை சிறைச்சாலையில், அங்கு படு கொலை செய்யப்பட்டதன் பின்னனியில் கலவரம் ஏற்பட்டு இயக்கங்களுக்கு தமிழ் இளைஞர்கள் சாரை சாரையாக சென்றனர்.

ஆகவே, ஒரு கேள்வியை இந்த அரசாங்கத்திடம் கேட்ட விரும்புகின்றேன். இதை நாடாளுன்றத்தில் கொண்டு வந்ததைப் போன்று ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் வெலிக்கடை சிறையில் காடையர்கள் வெளியில் இருந்து உள்ளே அழைக்கப்பட்டு படு கொலை செய்யப்பட்டார்கள். அவர்களுடைய உடல்கள் எங்கே புதைக்கப்பட்டது என்பது கூட தெரியாமல் இருக்கிறது. ஆகவே இந்த அரசு நியாயமாக செயற்படுமாக இருந்தால் வெலிக்கடை படு கொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பட்டலந்த பிரச்சனை எல்லாவற்றையும் விட 1983 கலவரம் கூடுதலான இழப்புக்களை சந்தித்தது. இது வரலாற்றில் முதன்மையான இடத்தில் உள்ள படு கொலை. இதை அரசாங்கம் விசாரணைக்கு கொண்டு வந்து, அதற்கான நீதி நியாயத்தை வெளிப்படுத்த வேண்டும் என மக்கள் சார்பாகவும், வெலிக்கடையில் படு கொலை செய்யப்பட்ட போராளிகள் சார்பாகவும் கோரிக்கையை முன் வைக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளுராட்சி விடயங்களை இராணுவமயப்படுத்துகின்றது ரெலோ முன்னாள் தவிசாளர் நிரோஷ்

அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நிர்வாக ஒழுங்குகளுக்குள்ளாக கடமைகளை திணைக்களங்களுக்கு அறிவுறுத்தி அவற்றின் வாயிலாக மக்களுக்கான சேவையைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமே தவிர இராணுவத்தினை பயன்படுத்தி சாதாரண சிவில் நிர்வாகத்தினை செயல்திறன் குன்றியதாக மாற்றக்கூடாது. இராணுவமயமாக்கத்தினை ஊக்குவிக்க கூடாது என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தினை பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையில், இராணுவ குழுக்கள் இணைந்து துய்மிப்புப் பணியில் ஈடுபட்டமை குறித்து தனது அதிருப்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மக்களையோ அல்லது கட்சித் தொண்டர்களையோ ஈடுபடுத்தி யாழ் மத்திய பேருந்து நிலையம் தூய்மிக்கப்பட்டிருக்குமாயின் நாம் அதனை வரவேற்றிருப்போம். மாறாக அரச அதிகாரத்தின் வாயிலாக, இராணுவத்தினை பெருமளவில் அழைத்து வந்து யாழ் மாநகர சபை ஆற்ற வேண்டிய தூய்மிப்புப் பணியை அரச எம்.பி இளங்குமரன் மேற்கொண்டுள்ளார்.

தங்களிடத்தில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தினை துப்புரவு செய்ய வேண்டிய நன்நோக்குக் காணப்படுமாயின் தங்கள் கட்சி ஆட்சியில் உள்ள அரசாங்கம் என்பதன் அடிப்படையில் சாதாரணமாக அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தால் அவர்கள் சிவில் நிர்வாக ஒழுங்கு முறைகளுக்கு அமைவாக பொறுப்பு வாய்ந்த திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் மேற்படி நடவடிக்கையினை மேற்கொண்டிருக்க முடியும். யாழ் மாநகர சபையில் ஆளணி வளம் உள்ளது. யாழ் மாநகர சபை பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லையானால் ஆளுநர் மாகாண உள்ளுராட்சி திணைக்கள விடயங்களுக்கு அதிகாரம் பொருந்தியவராகவுள்ளார்.

அவர் ஊடாக ஏனும் நடவடிக்கை எடுத்திருக்கலாம். இவற்றுக்கு மேலதிகமாக பொதுமக்களைத் திரட்டி அல்லது கட்சித் தொண்டர்கள் ஊடாக சிரமதானத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாது பெருமளவான இராணுவத்தினரைப் பயன்படுத்தி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளீர்கள். இராணுவத்தினரை சிவில் நிர்வாகம் ஊடக மேற்கொள்ள வேண்டிய பணிகளில் தவிருங்கள். கடந்த கேட்டபய காலத்திலும் இராணுவத்தினை உள்ளுராட்சி விடயப்பரப்புகளுக்குள் நுழைப்பதற்கு பெரும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நான் உள்ளுராட்சி மன்றம் ஒன்றின் தலைவர் என்ற வகையில் அவற்றினை முற்றாக நிராகரித்திருந்தேன்.

நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களே இராணுத்தின் தயவில் இயங்கினால் தங்கள் கட்சி சார்ந்த எதிர்காலத்தில் தெரிவாகக் கூடிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சபைகளில் சிறிய வேலைகளைச் செய்வதற்கும் இராணுத்தினையே அழைக்க எத்தனிப்பர். எனவே இராணுவ ஒடுக்குமுறைகளுக்கு இனமாக ஆட்பட்டிருக்கும் எமது இனத்திற்கு இன்றுவரையில் தங்கள் கட்சி ஆரோக்கியமான பொறுப்புக்கூறலையோ தீர்வை முன்வைப்பதற்கோ முன்வரவில்லை. இவ்வாறிருக்க சாதாரண விடயங்களிலும் இராணுவ பிரசன்னத்தினையும் இராணுவமயமாக்கத்தினையும் மேற்கொள்வது எமது மக்களை மேலும் ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் செயற்பாடாகும் என வலி கிழக்கின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

DTNA உள்ளூராட்சி வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட வழக்குகள் ஏப்ரல் மாதம் முதலாம் தேதி மீளவும் விசாரணைக்கு

உள்ளூராட்சி வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட வழக்குகள்

இன்று 28 மார்ச் 2025 உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. எமது கட்சியின் வழக்குகள் சார்பாக சட்டத்தரணிகள் மூத்த சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தலமையில் உச்ச நீதிமன்றில் ஆஜராகி இருந்தனர்.

அத்தாட்சி படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்கப் படவில்லை என்று யாழ்ப்பாண தேர்தல் அத்தாட்சி அலுவலர்களால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட ஒன்பது வழக்குகளும் அதே காரணத்துக்காக கிளிநொச்சி மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட வழக்குமாக பத்து வழக்குகளும் மன்னார் மாவட்டத்திலே மாந்தை பிரதேச சபைக்கான மனுக்கள் நிராகரிக்கப்பட்ட வழக்கு உட்பட பதினொரு வழக்குகளோடு சேர்த்து வேறு காரணங்களுக்காகவும் நிராகரிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்த விசாரணையின் முடிவில் சட்டமா அதிபர் தலைமையில் ஆஜராகியிருந்த சட்டத்தரணியை வழக்கு தாக்கல் செய்த சட்டத்தரணிகளோடும் தேர்தல் ஆணையாகத்தின் முடிவெடுக்கக் கூடியவர்களோடும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தி சுமுகமான முறையில் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய விடயங்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் பணித்துள்ளது.

அந்த முடிவிற்கு பின்னராக வரும் ஏப்ரல் மாதம் முதலாம் தேதி காலை 10 மணி அளவில் இந்த வழக்குகள் மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இளையோரின் வயதை உறுதிப்படுத்த வேட்பு மனுக்களோடு சமாதான நீதிவானாலோ அல்லது வேறு ஏற்றுக்கொள்ளப் படக்கூடிய ஒருவராலோ அத்தாட்சி படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களின் பிரதிகள் எம்மால் சமர்ப்பிக்கப் பட்டிருந்தன. எமது கட்சியின் வேட்பு மனுக்கள், பிறப்புச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்ற காரணத்தோடு யாழ்ப்பாண தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரால் நிராகரிக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் இந்த நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நீதிமன்றின் வழிப்படுத்தலில் ஏற்றுக் கொள்ளப்படலாம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

சட்டத்தில் உள்ள படி அத்தாச்சி படுத்தப்பட்ட பிரதி என்பது யாரால் அத்தாட்சி படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படாத வரையில், வழக்கத்தில் உள்ளபடி அத்தாச்சி படுத்தப்பட்டவை ஏற்றுக்கொள்ளப்படலாம் என்ற நிலைப்பாடு பரவலாக நிலவுகிறது. இந்த வழக்கங்கள், சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற பொழுது ஏற்றுக்கொள்ளப் படமுடியாது எனில் சட்டத்துக்கான வியாக்கியானங்களை நிலை நிறுத்துவதற்கான வாதப் பிரதிவாதங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இதனால் தேர்தலுக்கான தடை உத்தரவை பெற்றுக்கொண்டு வழக்குகளை தொடர்ந்து நடாத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம்.

கு சுரேந்திரன்
துணைத் தேசிய அமைப்பாளர்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர்

Posted in Uncategorized

இந்திய மீனவ அமைப்புகளின் தலைவர்களுக்கும் ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு

இந்திய மீனவ அமைப்புகளின் தலைவர்களுக்கும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவர் கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் 27/3/2025 வியாழக்கிழமை மன்னார் மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ காரியாலயத்தில் இடம்பெற்றது.

மேற்படி சந்திப்பு நிகழ்வில் இந்திய மீனவ அமைப்புகளின் தலைவர்கள் கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்திருந்தனர். மேலும் வடபகுதி மீனவர்கள் குறிப்பாக மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி இந்திய மீனவர்கள் மற்றும் வடபகுதி மீனவர்களுக்கு மத்தியில் நடைபெறும் பிரச்சனைகளையும் இரு தரப்பு விவாதங்களையும் ஒரே மேடையில் வைத்து பேசி தீர்க்கவும் ,இரு தரப்பினருக்குமான ஒரு இணக்கப்பாட்டை உருவாக்குவதற்கான ஆரம்ப செயற்பாடாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களை இந்திய மீனவ பிரதிநிகளின் இன்றைய சந்திப்பு அமைந்ததுடன் நேற்றைய தினம் வவுனியாவில் இவ்வாறானதொரு கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட இவ் சந்திப்பில் மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டு மீனவர்களின் பல்வேறுபட்ட பிரச்சனைகள் பற்றி ஆராய்ந்து கலந்தாலோசிக்கப்பட்டது.

Posted in Uncategorized

தண்டணைகளில் படையினர் பாதுகாக்கப்பட்டதன் துணிவே நாட்டில் முன்னாள் படைத்தரப்பின் குற்றங்கள் அதிகரிக்க வழிவகுத்தது. – ரெலோ முன்னாள் தவிசாளர் நிரோஷ்

நாட்டில் முன்னாள் படையினரால் பாரிய குற்றச் செயல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு, நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக அரச இயந்திரமும் இராணுவமும் மேற்கொண்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு எவ்வித பொறுப்புக்கூறலும் இடம்பெறாது சட்டத்தில் இருந்து படையினரை அரசு பாதுகாத்துவரும் துணிவுதான் இந் நிலைமைக்குக் காரணம் என்பதை ஒட்டுமொத்த நாடும் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இன்று நாட்டின் நீதிமன்றத்தின் உள்ளே படுகொலை நடக்கின்றது. வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் வைத்தியர் அரச வளாகத்தினுள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக நேர்கின்றது. சாதாரணமான துப்பாக்கிப் பிரயோகங்கள் எங்கும் நடக்கின்றன. இவற்றிற்குப் பின்னால் முன்னாள் இராணுவத்தினர் உள்ளனர். நாட்டின் பொலிஸ் மா அதிபராக பதவி வகித்தவர் நிPமன்ற கட்டளைக்கு மதிப்பளிக்காமல் மறைந்துள்ளார். அவருக்கு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை நாட்டின் பாதுகாப்புத் தரப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிஸ் தரப்பின் தொழில்சார் ஒழுக்கத்தை பகிரங்கப்படுத்தி நிற்கின்றன. படைகளின் தொழில் முகப்படுத்தலில் ஒழுக்கம் இன்மைகளை வெளிக்காட்டுகின்றன.

சாதாரணமாக இவற்றை படைகளில் இருந்து விலயோர் என்று கைவிரித்து விட முடியாது. படைகளில் பணியாற்றிய மனிதர்கள் உயர் ஒழுக்கம் மற்றும் கட்டளைகளை நிறைவேற்றும் தகுதியை அவர்களது சேவைக்கால பயிற்சி மற்றும் சத்தியப்பிரமாணங்களின் வாயிலாகப் பெற்றிருக்க வேண்டும். இது இலங்கையில் நடைபெறவில்லை.
காரணம் தமிழ் மக்கள் மீது படைகளில் இருந்தவர்கள் மேற்கொண்ட அத்தனை பாலியல் வல்லுறவுகள், மிலேச்சத்தனமான படுகொலைகள், சிறார் படுகொலைகள் மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களை படைத்தரப்புச் செய்த போதும், அவற்றுக்கு அரச பாதுகாப்பு அளிக்கப்பட்டதன் விளைவே இலங்கையில் இராணுவ ஒழுக்கம் மற்றும் பொலிசாரின் ஒழுக்கம் புகட்டப்படாத குற்றக் கலாச்சாரத்திற்கான அடிப்படை என்பதை அரச இயந்திரம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பல சந்தர்ப்பங்களில் நாட்டின் ஜனாதிபதிகள், பொதுமன்னிப்பு அதிகாரத்தினைப் பயன்படுத்திக் கூட தமிழ் மக்கள் மீது மிலேச்சத்தனமான கொலைகளை புரிந்த படைத்தரப்பினரை குற்றத்திற்கான தண்டனையில் இருந்து பாதுகாத்துள்ளனர்.
இவ்வாறான மனித நாகரிகமற்ற சட்டத்திற்கும் நீதிக்கும் ஏற்புடையதல்லாத கலாச்சாரம் தமிழர்களுக்கு எதிரான சிங்கள் பேரினவாதத்தின் வெற்றியாக அரசும் மாறி மாறி ஆட்சியேறிய அரசாங்கங்களும் கட்டிவளர்த்த கலாச்சாரம் தான் இன்று நாடே குற்றங்களுக்குள் முழ்கக் காரணமாகவுள்ளது.

இந் நிலையில் துரிதமாக மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ் மக்களுக்கு எதிரான விடயங்களை படையினரை பாதுகாக்கின்றோம் என அரசாங்கம் பாதுகாக்கக்கூடாது. குற்றங்களுக்கு பொறுப்புச் சொல்லாத கலாச்சாரம் ஒருபோதும் குற்றங்கள் மீள நிகழாமையினை உறுதிப்படுத்தாது. இவ்வாறு முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையை மீள திறக்குமாறு ரெலோ தலைவர் செல்வம் கோரிக்கை

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையை மீணடும் திறக்குமாறு ரெலோவின் தலைவரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை 06.03.2025 நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

குறித்த ஓட்டுத்தொழிற்சாலையானது இடப்பெயர்வு, போர் காரணமாக பல வருடங்களாக மூடப்பட்டிருக்கின்றதாக சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில் அதனை மீண்டும் திறப்பதன் ஊடாக பல பொருளாதார ரீதியான முன்னேற்றங்களைக் காண முடியும் என தெரிவித்தார்.

அதைவிட பலருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதன் மூலமாக அவர்களின் பொருளாதாரப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டார்.

எனவே இந்த ஓட்டுத் தொழிற்சாலையை திறப்பதற்கான முயற்சிகளை அமைச்சர் கவனத்தில் எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மன்னார் மாவட்டத்தின் பொது வைத்தியசாலையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன ரெலோ தலைவர் செல்வம்

சுகாதார அமைச்சர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு சென்று அங்கு காணப்படும் குறைப்பாடுகளை ஆராய வேண்டும். வைத்தியசாலையில் காணப்படும் வசதி குறைபாட்டால் மன்னார் மாவட்ட மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்கிறார்கள். ஆகவே நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்குமாறு சுகாதார அமைச்சிடம் வலியுறுத்துகிறேன் என்று ரெலோவின் தலைவரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் சுகாதாரத்துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

மன்னார் மாவட்டத்தின் பொது வைத்தியசாலையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. சுகாதார அமைச்சர் அல்லது பிரதி அமைச்சரை அந்த வைத்தியசாலைக்கு சென்று கள ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன்.

அங்கே ஆளணி பற்றாக்குறையுடனும், தளபாட பற்றாக்குறையும் காணப்படுகின்றன. வளங்களை கொண்ட வைத்தியசாலையாக இது இல்லை என்பதனையும் கூறுகின்றேன். அங்கே அனுமதிக்கப்பட்ட ஆளணி வைத்தியர்களின் எண்ணிக்கை 24 ஆக இருந்தாலும் ஒரு நிரந்தர வைத்திய நிபுணர்களும் இல்லை. தற்காலிக வைத்திய நிபுணர்களே உள்ளன. இதனால் தொடர்ச்சியாக தரமான சிகிச்சையை வழங்க முடியாமல் உள்ளது.

அத்துடன் ‘சீடி ஸ்கேன்’ இயந்திரம் மன்னார் மாவட்டத்தில் இல்லை. வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நோயாளர்கள் அனுப்பப்படுகின்றனர். அதற்கான கட்டிடங்கள் இருந்தாலும் அந்த இயந்திரம் இல்லை. இதனால் அதை மன்னாருக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சரிடம் முன்வைக்கின்றேன்.

இதேவேளை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவும் அங்கு இல்லை. அத்துடன் அங்கு குழந்தைகள் வைத்திய நிபுணர் ஒரு மாதமாக இல்லை. வவுனியா அல்லது யாழ்ப்பாணத்திற்கு குழந்தைகள் அனுப்பப்படுகின்றனர். பிறந்த குழந்தைகள் மற்றும் தாய்மாரின் துன்பங்கள் வேதனைக்குரியதே. இது தொடர்பில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். ஆளணி பற்றாக்குறை அங்கே இருப்பதால் அந்த வைத்தியசாலை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றது என்றார்.

இன நலத்திற்காக விட்டுக்கொடுப்போடு பயணிப்பதற்கு ரெலோ எப்பொழுதும் தயாராக இருக்கிறோம்

மதிப்பிற்குரிய சீ.வீ.கே. சிவஞானம்
தலைவர்
தமிழ் அரசுக் கட்சி
05-03-2025

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் சம்பந்தமான தங்களுடைய கடிதம் கிடைக்கப்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மீண்டும் இணைந்து செயலாற்றுவது சம்பந்தமாக தங்களுடைய விருப்பத்தை அதில் வெளிப்படுத்தியிருந்தீர்கள்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒன்றான எமது கட்சி பல்வேறு விதமான சவால்கள் விமர்சனங்கள் இடையூறுகள் எல்லாவற்றையும் தாண்டி எமது மக்களின் இன நலன் சார்ந்து ஒற்றுமையாகவும் பலமாகவும் அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என்பதில் பல விட்டுக் கொடுப்புக்களோடும் சகிப்புத்தன்மையோடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தொடர்ந்தும் பயணித்து வருகிறது.

2023இல் அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக தங்களுடைய மத்திய குழு, வவுனியாவிலும் பின்னர் இறுதியாக மட்டக்களப்பிலும் எடுத்த ஏகோபித்த முடிவிற்கமைய தமிழ் அரசுக் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது.

எமது கட்சியும், புளட் அமைப்பும் அந்த நேரத்தில், தேர்தல் நலன்கள், வெற்றி தோல்விகள், அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்ளல் என்பவற்றைத் தாண்டி இன நலன் சார்ந்து ஒருமித்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தை தங்கள் கட்சித் தலைமையிடம் வலியுறுத்திய போதும் தங்களது கட்சி மத்தியகுழுவின் முடிவே இறுதியானது, என உறுதியாக தனித்துப் போட்டியிடுவதென்ற முடிவை அறிவித்தீர்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நலிவடையாமல் தொடர்ந்தும் பாதுகாப்பதன் நோக்கத்தோடு தமிழ் தேசிய பரப்பில் இருந்த கட்சிகளோடு ஒன்றிணைந்து கூட்டணியாக நாம் பயணித்துக் கொண்டிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள்.

இனப்பிரச்சினை தீர்வுக்கு முகம் கொடுத்திருக்கும் நமது இனம் தேர்தல் நலன்களை மாத்திரம் முக்கியப் படுத்தும் இந்தப் பிரிவின் மூலம் எதிர்காலத்தில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை தீர்க்கமாக நாம் எதிர்வு கூறி இருந்தோம். இன்று அந்த நிலைக்கு எங்களுடைய இனம் தள்ளப்பட்டிருப்பதை நன்கு உணர்ந்து, இணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்தி தாங்கள் முன் வைத்துள்ள அழைப்பை நாங்கள் வரவேற்கிறோம். இன நலத்திற்காக விட்டுக்கொடுப்போடு பயணிப்பதற்கு நாம் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம்.

விடுதலைப் போராட்ட காலத்தில் இருந்தே அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பது எமது இனத்துக்கு நலன் பயக்கும் என்ற கொள்கையோடு ரெலோ, ஈபி ஆர் எல் எப், ஈரோஸ் ஆகியோருடன் விடுதலைப் புலிகளையும் இணைத்து ஈழத் தேசிய விடுதலை முன்னணி (ஈ. என். எல். எப் ) என்ற அமைப்பை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர்கள் நாங்கள்.

மேலும் கடந்த 2024 இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் நாம் மக்கள் நலன் சார்ந்து ஒன்றிணைந்து விட்டுக் கொடுப்போடு வெற்றி தோல்விகளை கருத்தில் கொள்ளாது பயணித்தமையையும், அம்பாறை மாவட்டத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாடு தங்கள் கட்சியின் நிலைப்பாட்டால் தொடரமுடியாமல் போன துரதிர்ஷ்டமான சூழலையும் கவலையுடன் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

தங்கள் அழைப்பை ஏற்று எமது கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளோடும் கலந்தாலோசித்து ஒன்றிணைந்து பயணிப்பது சம்பந்தமான தீர்க்கமான ஒரு முடிவை நாம் எட்ட நாம் தயாராக உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்

செல்வம் அடைக்கலநாதன் பா.உ
தலைவர், தமிழ் ஈழ விடுதலை இயக்கம்- ரெலோ

எமது தாயகத்தில் முப்படைகள் குவிக்கப்பட்டு ,அவர்களுக்கான நிதி எதற்காக கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது

எதற்காக எமது தாயகத்தில் முப்படைகள் குவிக்கப்பட்டு ,அவர்களுக்கான நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் 28/2/2025 வெள்ளிக்கிழமை இன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை.

இன்றைக்கு பாதுகாப்பு சம்மந்தமான விவாதத்திலே பல விடையங்களை எடுத்துச்சொல்லாம் என நினைக்கிறேன்.
உண்மையிலேயே ஒவ்வொரு அரசாங்கமும் வருகின்றபோது இந்த முப்படைகளுக்கும் கூடுதலான நிதியை ஒதுக்குவது வழமையானதொன்றாகிவிட்டது. இப்பொழுது இருக்கின்ற புதிய அரசாங்கம் கூட இந்த இராணுவத்திற்கும், முப்படைகளுக்கும் கூடுதலான நிதியை ஒதுக்கியிருக்கிறார்கள் என்றால் அது தேசியப்பாதுகாப்பு சம்மந்தமான விடையங்களை கையாளுவதற்காக ஒதுக்கப்பட்டதா? என்ற கேள்வியை நான் கேட்கவிரும்புகிறேன்.

உண்மையிலே போர் காலங்களிலே இராணூவங்கள் வடக்கு, கிழக்கிலே இந்த முப்படைகளும் குவிக்கப்பட்டார்கள். ஆனால் இந்த முப்படைகளும் இந்த போர் இல்லாத சூழலிலே, துப்பாக்கி சத்தங்கள் இல்லை, இன்றைக்கு இந்த முப்படைகளும் என்ன செய்கிறார்கள் எனறால் எங்களுடைய பொது மக்களுடைய காணிகளை அபகரித்து நான் நினைக்கின்றேன் உலக நாடுகளிலே எங்கேயும் இல்லாத ஒரு விடயத்தை அவர்கள் பொது மக்களுடைய காணிகளில் விவசாயம் செய்கிறார்கள். பொது மக்களுடைய கால்நடைகளில் பால் கறக்கிறார்கள். அதன் பொருட்களை வெளியிலே விற்கிறார்கள்., இங்கே A 9 பாதையால் போகின்றபோது அல்லது வடக்கு கிழக்கிலே எங்கு போனாலும் இராணுவத்தினுடைய உணவு அந்த Canteen இல்லாத இடங்கள் இல்லை என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

எங்களுடைய தேசத்திலே, எங்களுடைய பிரதேசத்திலே ஏன் இராணுவம் , முப்படைகளும் குவிக்கப்பட்டிருக்கிறது. ஏன் அந்த இராணூவமும் முப்படைகளும் எங்களுடைய காணிகளை ,பொது மக்களுடைய காணிகளை, பிடித்திருக்கிறார்கள் என்ற கேள்வியை இந்த அரசாங்கம் கேட்க வேண்டும். ஜனாதிபதி அவர்கள் சொன்னார்கள் இந்த இராணுவம் பிடித்திருக்கிற காணிகளை, பொது மக்களுடைய காணிகளை விடுதலை செய்வதாக சொன்னார்கள். ஆனால் இற்றவரைக்கும் அது நடைபெறவில்லை.

மக்கள் இன்றைக்கு உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தமட்டிலே இந்த வரவு செலவு திட்டத்திற்கு நான் ஆதரித்து வாக்களித்ததன் நோக்கம் என்னவென்றால் எங்களுடைய வன்னி மாவட்டத்திலே இன்றைக்கும் வடுக்களை மனதில் சுமந்து திரிகின்ற எங்களுடைய மக்களுடைய வாழ்வாதாரத்தை, எங்களுடைய மக்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற அந்த குடும்பங்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய வகையிலே நிதி ஒதுக்கப்பட்டுள்ள அந்த அடிப்படையிலேதான் வாக்களித்தேன்.

ஆனால் என்னைப்பொறுத்தமட்டிலே பாதுகாப்பு விடயத்திலே என்னுடைய வாக்கு எதிராகத்தான் இருக்கும் என்று சொல்லிக்கொள்ள விருமகபுகின்றேன். இன்றைக்கு எத்தனை காணிகளை இந்த முப்படைகளும் அபகரித்திருக்கிறார்கள். வன்னியிலே வவுனியாவை எடுத்துக்கொண்டால் ஈச்சங்குளம் இராணுவ முகாம் அது பொதுமக்களுடைய காணி. தேயடி கூழாங்குளம் இராணுவ முகாம் அது பொதுமக்களுடைய காணி.வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்ஸசகர் இருக்கின்ற காணி உட்பட சுமார் 200 ஏக்கர் காணியை A9 வீதியிலே பிடித்துள்ளார்கள் அதுவும் பொதுமக்களுடைய காணி.

அதைவிட தலைவர் அவர்களே மன்னாரை எடுத்துக்கொண்டு பார்த்தீர்கள் என்றால் தேவாலயங்கள், கோவில்கள் இவை அனைத்தும் இராணுவத்தினதும்,முப்படைகளினதும் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பொது மக்கள் வழிபடுவதற்காக நேரங்களை ஒதுக்கி அவர்கள், பரிசோதனை செய்யப்பட்டுத்தான் வழிபட அனுப்பப்படுகிறார்கள். உதாரணமாக நான் சொல்வது மன்னார் பியர் கிராமத்தில் இருக்கிற ஒரு தேவாலயம் அது கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மக்கள் வழிபடுவதற்கு அந்த திருவிழா காலங்களில் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

முள்ளிக்குளம் அது ஏற்கனவே விவசாய நிலங்கள் உட்பட அது விடுவிக்கப்பட்டதாக நிலங்களாக சொல்லப்பட்டாலும் அது இன்றைக்கும் விடுவிக்கப்படவில்லை. அது கடற்படையின் கண்காணிப்பிலே இருக்கிறது. இப்படி மன்னாரிலே சன்னார் கிராமம் போன்ற இடங்களிலே பல ஏக்கர் கணக்கிலே இராணுவம் பயிற்சி முகாம் என்று பிடித்திருக்கிறார்கள். இவை அனைத்தம் பொதுமக்களுடைய காணிகள்.

முல்லைத்தீவை எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட படையினரும், பொலிசாரும் பிடித்திருக்கிற காணியின் அளவு 1494 ஏக்கர் நிலப்பரப்பை அபகரித்திருக்கிறார்கள். ஆகவே ஜனாதிபதி அவர்கள் தேர்தல் காலத்திலும் அதன் பின்பும் இந்த இராணுவம்,முப்படைளும் பிடித்திருக்கிற காணிகளை விடுவிப்பதாக சொன்னதை நடைமறைப்படுத்த வேண்டும் என்பதை நான் இந்த சபையிலே கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

ஏன் வடக்கிலே கூடுதலான முப்படைகளும், இராணுவமும் போடப்பட்டிருக்கிறார்கள். எனக்கு முன் பேசிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரவிகரன் அவர்கள் சொன்னது போல இந்த குவிக்கப்பட்ட இராணுவம், இந்த குவிக்கப்பட்ட முப்படைகளும் இருந்துகொண்டு போதைவஸ்துக்கான வழிகளை, அந்த எங்களுடைய வடக்கிலே திறந்திருக்கப்படாடிருக்கிறது என்றால் அது என்ன காரணம்? என்று நான் கேட்டுக்கொள்ள விரூம்புகிறேன்.

ஆகவே இவர்களும் உடந்தையா?என்ற கேள்வியை நான் எழுப்பிக்கொள்ள விரும்புகிறேன். இந்த விடயத்திலே அரசாங்கம் இந்த சரியான ஒரு கவனத்தை எடுக்கவேண்டும். கடல் மார்க்கமாக கடற்படை இருக்கிறது. இராணுவம் பல ஏக்கர்களை பிடித்திருக்கிறார்கள். பரிசோதனை சாவடிகள், முகாங்கள் இருக்கின்றது. எப்படி இந்த மாற்றத்திற்கான நிலை உண்டுபண்ணப்பட்டிருக்கிறது. இந்த போதைவஸ்துகள் எப்படி கடத்தப்படுகின்றன? கடற்படை அதில் கவனத்தை செலுத்தவில்லையா? ஆகவே இந்த முப்படைகளும் வடக்கிலே கூடுதலாக ஏன் அவர்கள் காணிகளை பிடித்து கூடுதலாக அங்கே முகாமிட்டிருப்பது இந்தியாவிற்கு எதிராக இலங்கை போர் தொடுக்கும் என்ற அச்சமா? அல்லது மீள் உருவாக்கம் என்று செல்லுகின்ற வகையிலே உங்களுடைய சிந்தனையிலே இருக்கின்ற அந்த மீள் உருவாக்கம் என்பது என்னைப்பொறுத்த மட்டிலே அந்த விடயங்களில் எங்களுடைய மக்கள் நிதானமாக இருக்கிறார்கள்.

ஆகவே அதை வைத்துக்கொண்டு இந்த முப்படைகளையும் நீங்கள் குவித்திருப்பது தவறு என்று நான் செல்லுகின்றேன். இங்கே பார்த்தோம் என்றால் தென்னிலங்கையிலே பல துப்பாக்கி சூடுகள் நடக்கின்றது. ஆகவே அவர்களை நீங்கள் ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டு நான் முழுமையாக இராணுவத்தையோ முப்படைகளையோ எடுக்கவேண்டும் என்று சொல்ல வரவில்லை .ஆனால் தென்னிலங்கையிலே பல பிரட்சனைகள் நடக்கின்றது. அங்கே இருக்கின்ற படைகளை குறையுங்கள்.உங்களால் முடியவில்லை என்றால் இந்த போதைவஸ்துகளை தடுக்க முடியவில்லை என்றால் ஏன் அங்கே குவிக்கப்பட்ட இராணுவம் இருக்கிறது.பயங்கரவாத தடைச்சட்டத்திலே நீங்கள் செய்வது என்னவென்றால் அப்பாவி பத்திரிகையாளர்களை கைது செய்வதும், விடுதலை போராட்டத்திலே படங்களை கைபேசிகளிலும், கணணிகளிலும் வைத்திருக்கும் போது அவர்களை கைதுசெய்கிறீர்கள்.

ஆனால் இன்றைக்கு துப்பாக்கி பிரயோகம் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆகவே இந்த தேசிய பாதுகாப்பு என்பது அப்பாவி தமிழ் மக்களையும், போராட்ட வீரர்களை தங்களுடைய மனங்களில் சுமந்திருக்கிற அதை தங்களுடைய கைகளில் வைத்திருக்கிறவர்களிடம் தான் உங்களுக்கு எதிரியாக தெரிகிறார்களா?. இதற்காகத்தான் நீங்கள் வடக்கிலே கூடுதலான முப்படைகளையும் போட்டிருக்கிறீர்களா?இதற்காகத்தான் கூடுதலான நிதியை நீங்கள் ஒதுக்கியிருக்கிறீர்களா? என்ற கேள்வியை நான் கேட்கின்றேன்.

எங்களுடைய மக்கள் அச்சப்பட்டிருக்கிறார்கள். இன்றைக்கு உங்களை நம்பி வாக்களித்திருக்கிற்ர்கள். வடக்கிலே கூடுதலான வாக்குகள் NPPக்கு அளிக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களும் சில நேரங்களில் தவறாக அந்த உணர்வுகளை மறந்து பேசுகின்ற வாய்ப்பை இந்த அரசாங்கத்திற்கு பயத்திலேயோ தெரியவில்லை. ஆனால் எங்களை பொறுத்த மட்டிலே இந்த இராணுவத்தினுடைய, முப்படைகளுடைய அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது நிதி குறைக்கப்பட வேண்டும்.

அவர்களுடைய நிதி குறைக்கப்படும்போதுதான் உண்மையான ஒரு நல்லிணக்கத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும். இந்த பாதுகாப்பு என்ற போர்வையிலே எங்களுடைய பத்திரிகையாளர்கள், இளைஞர்களை கைதுசெய்வது மட்டும் தேசிய பாதுகாப்பாக இருக்காது என்பதை இந்த சந்தர்ப்பத்திலே கூறிக்கொள்ள விரும்புகிறேன்.