வசந்த கரன்னாகொடவிற்கு அமெரிக்காவில் நுழைய தடை

வடமேல் மாகாண ஆளுநரான அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொடவிற்கு தமது நாட்டிற்குள் நுழைய அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் வசந்த கரன்னாகொடவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

வசந்த கரன்னாகொட மற்றும் அவரது மனைவி அசோகா கரன்னாகொட ஆகியோருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி ஜே. பிலின்கன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த மோதல்களின் போது கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய போது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில் வசந்த கர்ன்னாகொடவிற்கு இந்த தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

சவேந்திரவுக்கு எதிராக விமல் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு: மறுக்கும் பாதுகாப்பு அமைச்சு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, பாதுகாப்புத் தலைமை அதிகாரி சவேந்திர சில்வாவுக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டை, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா, அரகலய போராட்டத்தின்போது இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கும் சதித்திட்டத்திற்கு ஆதரவளித்ததாக விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார்.

2022ஆம் ஆண்டு மே 09ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர்களின் முதல் திட்டமாக, அப்போதைய நிறைவேற்று ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தலைவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்த நிலையில் கொலை செய்வதாகும் என்று குறிப்பிட்டிருந்த விமல் வீரவன்ச, அந்த நேரத்தில் ஜெனரல் சவேந்திர சில்வா இந்திய விஜயத்தை மேற்கொண்டமை இந்த சந்தேகத்தை எழுப்பியதாகவும் தெரிவித்திருந்தார்.

Posted in Uncategorized

தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிக்கை!

தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்து மீண்டும் புத்துயிர் பெறுவதாகவும் அதனை முன்னோக்கி கொண்டு செல்ல முழு நாட்டின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த நியாயமான சமூக வர்த்தக, பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றை உருவாக்குவதற்கு தான் பாடுபட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டு வரிகளை குறைத்ததன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் கொரோனா தொற்றுநோய் போன்ற பிரச்சினைகளால் ரூபாயின் மதிப்பு கடந்த வருடத்தின் மூன்று மாதங்களுக்குள் 40% குறைந்துள்ளது.

இந்த பின்னணியில் தான் ஜனாதிபதி பதவியை ஏற்றதாகவும் இல்லையெனில் இந்த நாடு அழிவை சந்தித்திருக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க சரத்வத்தேச நாணய நித்தியத்திற்கு செல்வதைத்தவிர மாற்று வழி கிடையாது என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் ஒளிபரப்பு சேவையினை ஆரம்பித்தது ஆதவன் தொலைக்காட்சி

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் தலைமையின் கீழ் பிரித்தானியாவை தலைமையகமாகக் கொண்டு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பு சேவையினை செய்துவரும் ஆதவன் தொலைக்காட்சி இன்று(புதன்கிழமை) முதல் இலங்கையிலும் தனது ஒளிபரப்பினை ஆரம்பித்துள்ளது.

கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பா, பிரித்தானியா, கனடா என புலம்பெயர்ந்து வாழும் உலக தமிழ் மக்களுக்கோர் உறவுப்பாலமாக ஆதவன் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பு சேவையினை முன்னெடுத்து வருகின்றது.

இவ்வாறான பின்னணியைக் கொண்ட ஆதவன் தொலைக்காட்சி இன்று முதல் இலங்கையிலும் தனது ஒளிபரப்பினை ஆரம்பித்துள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் லைக்கா குழுமத்தின் பிரதித்தலைவர் பிரேம் சிவசாமி உள்ளிட்ட லைக்கா குழுமத்தின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

மூன்று நேர பிரதான செய்திகளையும், மணித்தியால செய்திகளையும், தமிழர் தாயகத்தில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளையும், புலம்பெயர் நாடுகளில் இடம்பெறும் தமிழர்களின் முக்கிய நிகழ்வுகளையும், திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் என 24 மணித்தியாலங்களும் மக்களை மகிழ்ச்சிப்படுத்த ஆதவன் தொலைக்காட்சி தொடர்ந்தும் சேவையாற்றவுள்ளது.

Posted in Uncategorized

கச்சத்தீவு புத்தர் சிலை விவகாரம்: ஆயர் இல்லம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

கச்சதீவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

சிலை அகற்றப்பட்ட விடயத்தை கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளார்கள்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு வெளியே கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

இவ்விடயத்தை அமைதியான முறையில் தீர்த்துவைக்க ஒத்துழைத்த கடற்படை உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட குரல் கொடுத்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் என ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

அத்துடன் , அது தொடர்பில் யாழ்.மாவட்ட செயலருக்கு கடிதம் மூலம் ஆயர் இல்லம் சார்பில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் நன்றி தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

விமலின் கருத்துக்கு அமெரிக்க தூதுவர் மறுப்பு

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான 75 ஆண்டுகால ஜனநாயக மற்றும் இறையான்மை உறுதிப்பாடுகள் அவ்வாறே தொடர்ந்தும் பகிரப்படும் எனத் தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ள கருத்துக்களை மறுத்துள்ளார்.

‘ஒன்பது – மறைக்கப்பட்ட கதை’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ‘அரகலய’ ஆர்ப்பாட்டத்தின் பின்னணியுடன் அமெரிக்க தூதுவரை தொடர்புபடுத்தி அவரை விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்துள்ள டுவிட்டர் பதிவிலேயே தூதுவர் தனது மறுப்பினை தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில் , ‘புனைகதை’ என்று முத்திரை குத்தப்பட வேண்டிய புத்தகத்தில் ஒரு எம்.பி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி அப்பட்டமான பொய்களை பரப்பியிருக்கின்றார்.

75 ஆண்டுகளாக அமெரிக்காவும் இலங்கையும் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் செழிப்புக்கான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொண்டிருக்கின்றன. அதேபோன்று தொடர்ந்தும் கூட்டாண்மையுடன் எதிர்காலத்தை நாம் உருவாக்குவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

25 ஏப்ரல் 2023 செவ்வாய்கிழமை அன்று சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் பொது வேலைநிறுத்தத்திற்கு புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்கள் ஆதரவு

சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தில் 25 ஏப்ரல் 2023 செவ்வாய்க்கிழமை அன்று இடம்பெறவுள்ள பொது வேலைநிறுத்தத்திற்கு (ஹர்த்தாலுக்கு) புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களான நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் கருத்து வேறுபாடுகளைக் களைந்து பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்க அனைத்து புலம்பெயர் அமைப்புகளையும் அன்புடன் அழைக்கிறோம்.

பொது வேலைநிறுத்தத்தின் நோக்கங்கள்:

•சிறிலங்கா பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது. ஏனெனில் இது தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட மோசமானது.
•ஒரு திட்டமிட்ட கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலையை செய்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலிக்கும் பின் வரும் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்காக:
o நில அபகரிப்பு
o தமிழர் தாயகத்தில் தெற்கிலிருந்து சிங்கள மக்களை குடியேற்றம் செய்வதன் மூலம் தீவின் வடக்கு-கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் குடித்தொகையை சிதைத்தல்
o தமிழ் மரபுச் சான்றுகளை அழித்தல்
o வரலாற்றுச் சிறப்புமிக்க இந்துக் கோவில்களை இடித்து, அதற்குப் பதிலாக புத்த விகாரைகள் அமைத்தல்.
இவை யாவும் தீவின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் நீண்ட வரலாற்றை திரித்து மறுப்பதை நோக்கமாக கொண்டது.

இந்த பொது வேலைநிறுத்தத்தினை ஆரம்பித்து நடாத்தும் அனைத்து அரசியல் கட்சிகள், மத நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஏனைய சிவில் சமூக அமைப்புக்களுக்கு எமது மனமார்ந்த நன்றியையும் நேசத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் எதிர்காலத்திலும் இது போன்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைத் தொடர ஊக்குவிக்கிறோம்.

இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் மக்களையும் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைந்து இந்த பொது வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டு சிங்கள பௌத்த அரசிற்கும் பெரும்பாண்மை சிங்கள மக்களுக்கும் சர்வதேச சமூகத்தினருக்கும் எமது ஒற்றுமையின் பலத்தை வெளிப்படுத்துமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

On behalf of:
• Australian Tamil Congress (ATC): +61300660629, mano_manics@hotmail.com
• British Tamils Forum (BTF): +447814486087, info@britishtamilsforum.org
• Center for the Protection for the rights of Tamil People (CPTR – France): 0033652100400, Selvan.cptr@gmail.com
• Irish Tamils Forum (ITF): 0035389959270, irishtamilsforum@gmail.com
• Solidarity Group for Peace and Justice (SGPJ – South Africa): padayacheepregasen@gmail.com
• Swiss Tamil Action Group (STAG): +41764450642, swisstamilag@gmail.com
• United States Tamil Action Group (USTAG): +12025953123, info@theustag.org

Posted in Uncategorized

பிரித்தானியாவில் முக்கியமான அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படும் தமிழ் அமைப்புகள் ஹர்த்தாலுக்கு ஆதரவு

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இராணுவ மயமாக்கலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் கோரி முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கத்தை ஏற்பாடு செய்துள்ள ஏற்பாட்டாளர்களுக்கு, பிரித்தானியாவில் முக்கியமான அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படும் தமிழ் அமைப்புகள் பூரண ஆதரவை வழங்கியுள்ளன.

தமிழ் அமைப்புகள் ஆதரவு

பிரித்தானிய தமிழ் கன்சர்வேடிவ் அமைப்பு,லிபரல் ஜனநாயக கட்சியின் தமிழ் நண்பர்கள் அமைப்பு மற்றும் தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பு என்பன நாளை(25.04.2023) நடைபெறவுள்ள பொது முடக்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கில் நிர்வாக முடக்கல்

அறிக்கை ஒன்றின் ஊடாக குறித்த தமிழ் அமைப்புகள் தமது ஆதரவை தெரிவித்துள்ளன.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,சர்வதேச சமூகத்தினால் தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் என்பவற்றிற்கு எதிராக இலங்கை செயற்பட்டு வருகின்றது.

தமிழர்களின் தாயக பூமியில் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கம் கடுமையான இராணுவ பிரசன்னத்தை பேணி வருகின்றது.

இராணுவத் தலையீடு

சிவில் விவகாரங்களில் அடிக்கடி இராணுவத் தலையீடு மேற்கொள்ளப்படுவதுடன், தீவில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தவும், அடி பணியச் செய்யவும் தொடர்ச்சியாக பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.

இந்நிலையில் வடக்கு-கிழக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது முடக்கத்திற்கு பூரண ஆதரவு வழங்குகின்றோம் என்பதுடன் அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள், வடக்கு கிழக்கு வாழ் மக்கள் அனைவரும் இந்த பொது முடக்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கோருகின்றோம்.

இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு வலுவான செய்தியை வெளிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிற்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்குமான சந்திப்பு இலண்டனில் நடைபெற்றது

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிற்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்குமான (ரெலோ) சந்திப்பு இன்று மாலை 13-4-2023 இலண்டனில் உள்ள வெளிவிவகார அமைச்சு காரியாலயத்தில் நடைபெற்றது.

இதில் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த ரெலோ செயலாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் (ஜனா) மற்றும் பிரித்தானிய கிளையின் தலைவர் சாம் சம்பந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பில் எதிர்வரும் புரட்டாதி மாதம் நடைபெற இருக்கும் மனித உரிமைகள் கூட்டத்தில் உள்வாங்க வேண்டிய பல முக்கிய விடயங்கள், பயங்கரவாத தடைசட்டம், தொடர்ச்சியான நில அபகரிப்பு தொல்பொருள்,வன இலாகா, பாதுகாப்பு அமைச்சு ஊடாக வட கிழக்கில் தமிழ் இனத்தின் இனபரம்பலை குறிவைத்து மேற்கொள்ளப்படும் அரசின் திட்டமிட்ட செயற்பாடுகள், கடந்த நாலு வருடங்களாக திட்டமிட்டு இழுத்தடிப்பு செய்யபடும் மாகாண சபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், தனது அரசியல் அமைப்பையே மீறி செயற்படும் அரசின் செயற்பாடுகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் 72 வருடங்களாக இழுத்தடிப்பு செய்யப்படும் தமிழ் இனப்பிரச்சினை, 12 வருடங்களாக எதையுமே அமுல் படுத்தாத UNHRC தீர்மானங்கள், 16 தடவைகள் IMF பரிந்துரைகள் எதையுமே நடைமுறை படுத்தாமல் மீண்டும் 17 வது தடவையாக IMF கையேந்தும் நிலைக்கு சென்ற அரசின் தவறான கொள்கைகளை சுட்டிக்காட்டி இவ்வாறான ஒரு அரசுடன் மூன்றாவது தரப்பு மத்தியஸ்தம் இன்றி அரசியல் தீர்வுக்கான சாத்தியமான அறிகுறிகள் இல்லையெனவும் பிரித்தானியாவை இந்தியாவுடன் இணைந்து இலங்கையில் தமிழ் இனத்திற்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்விற்கான அழுத்தம் கொடுக்க படவேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டது.

மேலும் அரசியல் கொந்தளிப்பான நாட்டில் பொருளாதார வளர்ச்சி அடையமுடியாது என்றும், நாட்டின் வளர்ச்சிக்கு பதிலாக கிளர்ச்சியை அடக்கவே சர்வதேச நிதிகளை அரசு இயந்திரம் பாவிக்கும் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கனடாவில் ரெலோ யாழ் மாவட்ட தலைவர் தவிசாளர் நிரோஷ் உடன் கிராம அமைப்புக்கள் சந்திக்கவுள்ளன

ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளருமான (உள்ளுராட்சி மன்றத் தலைவர் ) தியாகராஜா நிரோஷிற்கும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைக்குட்பட்ட அயல் கிராமங்களின் புலம் பெயர் தமிழ் உறவுகளுக்குமான கலந்துரையாடலை கனடா நவக்கிரி மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கலந்துரையாடல் scarborugh Event center, 5637 finch Ave East, Scarborough ON, M1B 5R1 என்னும் முகவரியில் மாலை 3 மணி தொடக்கம் 5 மணி வரையில் நடைபெறவுள்ளதாக நவக்கிரி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

மேலதிக தொடர்புகளுக்கு 416- 319 – 3139, 647-818-6750, 647-717-6977 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இக் கலந்துரையாடலுக்கு வலிகாமம் கிழக்குப் பிரதேசத்திற்கு உட்பட்ட அயல் கிராமத்தவர்களும் கலந்து கொள்ள முடியும் என வரவேற்கப்பட்டுள்ளதுடன் ஏனைய கிராமங்களைச் சேர்ந்த அமைப்புக்களும் தவிசாளர் தியாகராஜா நிரோசுடன் பிரத்தியே சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் கனடாவில் தங்கியிருக்கும் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உடன் வட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்வதாயின் 0094776569959 என்னும் ஏற்கனவே அவரது பாவனையில் உள்ள தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized