ரிஷாட் வௌிநாட்டு செல்ல அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் இந்த அனுமதியை 3 மாத காலத்திற்கு வழங்கியுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமகி ஜன பலவேகே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றிலும், தனது வீட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த வழக்கு தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றமும் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிணை வழங்கியிருந்தது.

Posted in Uncategorized

13 ஆவது திருத்தத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்குவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சம்பந்தன்

“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வோர் தமிழ் மக்களின் நன்மை கருதிச் செயற்பட வேண்டும்.

தமது சுயலாப அரசியலுக்காகத் தமிழ் மக்களை நட்டாற்றில் விடும் வகையில் அவர்கள் செயற்படக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

13 ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது படுமுட்டாள்தனமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“அரசமைப்பில் முதன்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதைத் தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக ஏற்க முடியாது. இதைத் தீர்வுக்கான முதல் படியாக வைத்துக்கொண்டு நாங்கள் முன்னோக்கி நகர்ந்து வருகின்றோம்.

இந்நிலையில், 13ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது படுமுட்டாள்தனமானது.

இப்படியான செயற்பாடு, இருப்பதையும் இழப்பதற்குச் சமமானது. அதனால் தான் 13ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரி வருகின்றோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

47 உறுப்பு நாடுகளிற்கான கடிதத்தில் 13ஐ கோராமை சம்பந்தனின் பெருந்தவறு என்கின்றார் ஜயதிலக்க

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அதில் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தாது பெருந்தவறிழைத்து விட்டார் என்று கலாநிதி.தயான் ஜயத்திலக்க வீரகேசரியிடம் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

13 ஆவது திருத்தச்சட்டத்தினை மையப்படுத்தி பிரதமர் மோடிக்கு ஆறு தமிழ்க் கட்சிகளின் ஏழு தலைவர்கள் இணைந்து கடிதம் அனுப்பி சொற்ப நாட்களில் இவ்விதமாக சம்பந்தன் செயற்பட்டுள்ளமையானது முரண்நகையாக உள்ளதாக சுட்டிக்காட்டியதோடு இதனால் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை அரசாங்கம் புதிய அரசியலமைப்பினை பயன்படுத்தி ஒழிக்கும்போது தடுக்க முடியாத நிலைமைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது போகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், தோற்கடிக்கப்பட்டாலும் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியதோடு அவ்விதமான விடயத்தினை குறிப்பிடாது கடிதமொன்றை அனுப்புவது பயனற்றதாகும் என்றும் கூறியுள்ளார்.

துமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் அனுப்பியமை தொடர்பில் தாயன் ஜயத்திலக்க மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் கடிதமொன்றை அனுப்புவதை நான் தவறு என்று கூறவில்லை. அந்தச் செயற்பாட்டினை தமிழ் மக்களின் தலைவராக அவர் செய்வது மிகவும் பொருத்தமானதொரு விடயமாகும்.

ஆனால், அவர் யதார்த்தமானதொரு விடயத்தினை தவிர்த்து விட்டிருக்கின்றார். 2009ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானம் வெற்றி பெற்றது. அப்போதும் தீர்மானத்தில் 13ஆவது திருத்தச்சட்டம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பின்னர் 2012, 2013, 2014, 2015 (இலங்கைஇணைஅனுசரனை வழங்கியது), 2021 ஆகிய ஆண்டுகளில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் போதும் 13ஆவது திருத்தச்சட்டம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு 13 ஆவது திருத்தச்சட்டம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஆறு தீர்மானங்களில் காணப்படுகின்றது. அந்த ஆறுதீர்மானங்களில் ஒன்று மட்டும் இலங்கைக்கு ஆதரவானது. ஏனையவை எதிரானவை. ஆனால் தொடர்ச்சியாக தீர்மானங்கள் ஆதரவாக வந்தாலும் சரி எதிராக இருந்தாலும் சரி 13ஆவது திருத்தச்சட்ட விடயம் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது.

அவ்விதமானதொரு விடயத்தினை கவனத்தில் கொள்ளாது விடுவது பொருத்தமற்றது. அதேநேரம், சம்பந்தன் இம்முறை அனுப்பிய கடிதத்திலாவது 13ஆவது திருத்த விடயத்தினை கவனமாக கையாண்டிருக்க வேண்டும். ஏனென்றால் அவர் உள்ளிட்ட ஏழு தமிழ்த் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு 13 ஆவது திருத்தச்சட்டத்தினை வலியுறுத்தி கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்கள்.

அவ்விதமாக கடிதம் அனுப்பிய பின்னரும் ஐ.நா.வுக்கு அனுப்பிய கடிதத்தில் 13ஐ குறிப்பிடாது விடுவது பொருத்தமற்றது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் இந்தியாவின் முயற்சியால் தான் 13ஆவது திருத்தச்சட்டம் உட்புகுத்தப்பட்டுள்ளது என்பதை சம்பந்தன் அறியாதவர் அல்லர். ஆகவே அந்த விடயத்தினை அவர் குறிப்பிடாது விடுகின்றமையானது பாரதூரமான விடயமாகும்.

இதனைவிடவும், தற்போது இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு பொருளாதார நிதி உதவிகளை வழங்கியுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் மேலும் ஏற்படுகின்றபோது இந்தியாவின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கப்போகின்றது. இது இலங்கை இந்திய இருதரப்பு உறவுகள் சார்ந்த விடயம்.

ஆனால், இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட போன்றவர்கள் இந்திய அரசாங்கம் கோரும் முதலீட்டு மற்றும் அபிவிருத்தி திட்டங்களை வழங்குவதன் ஊடாக 13ஆவது திருத்தம், அரசியல் தீர்வு உள்ளிட்ட இந்தியாவின் கோரிக்கைகளை நீர்த்துப்போகச் செய்யலாம் என்று கணக்குப்போட்டிருக்கின்றார்கள்.

அதேநேரம், ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமைகளை நீக்கியுள்ளதாக தெரியவருகின்றது. அவ்வாறான நிலையில் புதிய அரசியலமைப்பில் 13 ஒழிக்கப்பட்டிருக்குமாக இருந்தால் அதன் பின்னர் தமிழர்களுக்கு கிடைக்கப்போவது என்ன ? ஐ.நா.தீர்மானத்தில் 13 குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதனை தமிழ்த் தரப்புக்களே கோராதபோது இலங்கை அரசாங்கம் அதுபற்றி கரிசனை கொள்ளும் என்று கூறவும் முடியாது.

ஆகவே 13 ஆவது திருத்தச்சட்ட விடயத்தினை சம்பந்தன் தனது கடிதத்தில் குறிப்பிடாது பெருந்தவறு இழைத்துவிட்டார். இது சந்தர்ப்பங்களை வலுவிழக்கச் செய்துள்ளது என்றார்.

கறுப்புச் சந்தை மூலம் ஆயுதம் கொண்டு வந்ததை மறுக்காத பசில் : செய்தியாளர் சந்திப்பில் திக்குமுக்காடினார்

இலங்கையில் இறுதி யுத்தம் நடந்த போது கறுப்புச் சந்தையைப் பயன்படுத்தி வடகொரியாவில் இருந்து ஆயுதங்கள் கொண்டுவந்ததாக நிதியமைச்சர் தெரிவித்த கருத்து தற்போது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இன்று (02) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

சிக்கலான கேள்விகளை தவிர்ப்பது நல்லது என்று இதற்கு நிதியமைச்சர் பதிலளிக்க, நீங்கள் சொன்ன கருத்தினால் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று ஊடகவியலாளர் மீண்டும் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பசில் ராஜபக்ச, இதற்குப் பதிலளித்தால் இன்னும் நிலைமை சிக்கலாகிவிடும் என்று கூறி முடித்தார். ஆனால் இந்தக் கருத்தை விளக்கப்படுத்துவதற்கான நல்ல சந்தர்ப்பம் இது என்று ஊடகவியலாளர் மீண்டும் குறிப்பிட, அப்படியொன்று நடக்கவில்லை என்று சொன்னால் கதை முடிந்துவிடும் என்று நழுவல் போக்கில் பதிலளித்தார்.

கறுப்புச் சந்தையின் மூலம் டொலர்களைப் பயன்படுத்தி வடகொரியாவில் இருந்து ஆயுதங்களைக் கொண்டுவந்ததாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, சிங்கள நாளிதழுக்கு சொன்ன கருத்து சர்ச்சையாகியுள்ளது.

இந்தக் கருத்தை மறுக்காத பசில் ராஜபக்ச, ஊடகவிலாளரின் அந்தக் கேள்வியால் திக்குமுக்காடிப் போனார்.

அத்துடன், யுத்த காலத்தில் நடந்த ஏராளமான விடயங்களைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றும் அவற்றை பேசாமல் இருப்பது நல்லது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அதனை மூடிமறைக்க முயற்சித்தாலும், வடகொரியாவுடன் கொடுக்கல் வாங்கல் செய்துகொண்டார் என்ற கருத்து தற்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், பணச் சலவையில் ஈடுபட்டதாக இதற்கு முன்னர் ராஜபக்ச குடும்பத்தில் சிலர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. பண்டோரா ஆவணங்களின் மூலம் இந்த தகவல்கள் வெளிவந்திருந்தன. இதுகுறித்து விசாரணைகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டாலும், அதுகுறித்து முழுமையான விசாரணைகள் நடத்தப்படுவதைக் காண முடியவில்லை என குற்றச்சாட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பணச் சலவை மற்றும் கறுப்புப் பயணத்தைப் பயன்படுத்தி, பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தத் தகவல்கள் அல்லது நடந்த சம்பவங்கள் குறித்து ஜெனீவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் சர்ச்சைகள் வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது.

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக மேலும் புதிய பிரச்சினைகளை இந்த அரசாங்கம் உருவாக்கி வருவதாக பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.

அனைவரும் அரசியல் கடந்து அணிதிரள அழைப்பு!

இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள்’ எனும் தொனிப்பொருளில் நாளை 4 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் மாபெரும் போராட்டத்துக்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

கரிநாள் போராட்டத்தில் அனைவரையும் பங்குகொள்ளுமாறு யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஏற்பாட்டாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது எமக்கான சுதந்திர தினம் அல்ல எமக்கான நீதி கிடைக்கப் பெறாத இடத்தில் எவ்வாறு சுதந்திரம் கிடைக்கும். பொதுமக்கள் இந்த விடயத்தில் அலட்சியமாக இருக்காது ஒன்று கூடி இந்த கருப்பு நாளை அனுஸ்டிக்க வேண்டும் என வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது.

சிறீலங்காவின் சுதந்திர தினம் என்பதை காலம் காலமாக தமிழர்கள் கரிநாளாக அனுஸ்டித்து வந்துள்ளனர். எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு இன அழிப்பு நடந்த முள்ளிவாய்க்கால் மண்ணிலே எவ்வித அரசியல் பின்னணியும் இன்றி அரசியல் நோக்கங்கள் இல்லாமல் ஒன்றிணைய வேண்டும். எமது இயக்கமும் இதற்கு பூரண ஆதரவை வழங்குகிறது என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்க இணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்திருந்தார்.

ஒரே நாட்டிலேயே ஒருபுறம் ஆரவாரம் வெற்றிக்கொண்டாட்டம் மகிழ்ச்சி என்பன காணப்படும் போது இன்னொரு புறத்தில் கவலை வறுமை பொருளாதார பின்னடைவு போன்றன காணப்படுகின்றதெவும் இதனை நாங்கள் இரண்டு நாளாக அனுஸ்டிக்கிறோமென மெதடிஸ்த திருச்சபையின் அருட்திரு றொபேர்ட் சசிகரன் அடிகளார் தெரிவித்தார்.

சிறீலங்கா அரசுக்கு தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக கொடுக்கப்பட்ட அனுமதிப்பத்திரமே சுதந்திர தினமாகும். 1956 சுதந்திர தினத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய திருமலை நடராஜன் படுகொலையோடு உயிர்ப்பலி என்பது ஆரம்பித்துவிட்டது. தமிழ் இன ஒடுக்குமுறைக்கு நூறு வருடங்கள் கடந்துவிட்டது. சுதந்திரத்திற்கு முன்னர் அனுமதிப்பத்திரம் இல்லாமல் எம்மை ஒடுக்கினார்கள் சுதந்திரத்துக்குப் பின்னர் அனுமதிப் பத்திரத்துடன் நம்மை ஒடுக்குகிறார்கள் என சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இணைப்பாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்திருந்தார்;.

அரசியல் கைதிகள் பிரச்சினை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர்பில் சரியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் அடுத்த வருடங்களில் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிக்க வேண்டிய தேவை இருக்காது. நாளைய தினத்தில் தனித்தனித் போராட்டங்களை முன்னெடுக்காமல் முள்ளிவாய்க்காலில் அணிதிரண்டு வலுச்சேர்க்க வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்திருந்தார்.

துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கறுப்பு உடையணிந்து அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதுடன் வாகன ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

இவ் ஊடக சந்திப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க யாழ் மாவட்ட தலைவி சிவபாதம் இளங்கோதை, உபதலைவி நிர்மலநாதன் மேரி ரஞ்சினி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்க இணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல்வருமான தவத்திரு வேலன் சுவாமிகள்,மெதடிஸ்த திருச்சபையின் அருட்திரு றொபேர்ட் சசிகரன்,சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இணைப்பாளர் சி.அ.யோதிலிங்கம்,

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் ஆகியோர் பங்கேற்றனர்.

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியத்திடம் ஒத்துழைப்பு கோரும் அரசாங்கம்

நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ நேற்று (02) தெரிவித்த கருத்திற்கு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று பதிலளித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நேற்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், இன்று காலை ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டிருந்தார்.

நிதி அமைச்சுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெறுவது வழமையான ஒன்றென அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நிதி அமைச்சர் வௌியிட்ட கருத்து தொடர்பிலானது. இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பிலான சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்வதென்பது நிதி அமைச்சின் நிதி பிரிவின் மேம்பாட்டிற்காக தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் வழமையான செயற்பாடாகும். அதனை விட வேறு ஒன்றும் இல்லை

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் நிதி அமைச்சரும் மத்திய வங்கியின் ஆளுநரும் இவ்வாறு கருத்துத் தெரிவிக்கும் போது, இலங்கை சீமெந்து மற்றும் அரிசி கொள்வனவிற்காக பாகிஸ்தானிடம் கோரியுள்ள 200 மில்லியன் டொலர் கடன் வசதியை அந்நாட்டிற்கு IMF மூலம் கிடைக்கவுள்ள கடனிலிருந்து வழங்குவதற்கு பாகிஸ்தான் தயாராகின்றது.

தேவையற்ற செலவுகளை குறைத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு பாகிஸ்தான் காட்டும் சிறந்த ஆர்வத்தை கருத்திற்கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு பாகிஸ்தானுக்கு இந்த கடனை வழங்க தயாராகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியம் ஒரு பில்லியன் டொலர் கடனை வழங்கிய பின்னர், இலங்கைக்கு சீமெந்து மற்றும் அரிசி கொள்வனவிற்கு தேவையான 200 மில்லியன் டொலரை வழங்குவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

சுதந்திர தின விழாவை புறக்கணிக்கவுள்ளதாக கொழும்பு பேராயர் தெரிவிப்பு!

சுதந்திர தின விழாவை நாளை புறக்கணிக்கவுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பொரளை தேவாலய கைக்குண்டு வழக்கு மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் உள்ள குறைபாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்படவுள்ளதாக கொழும்பு பேராயர் தொடர்பு பிரிவு உறுப்பினர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த அவர், சுதந்திர தினத்தன்று வழமையாக மேற்கொள்ளும் சேவையை இரத்து செய்ய கர்தினால் ரஞ்சித் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரத்தில் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ஆதாரம் இருந்தும், தேவாலயத்தின் பாதுகாவலர் ஏன் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து தாங்கள் கலக்கமடைந்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவாலயத்தின் பராமரிப்பாளருக்காக எதிர்பார்க்கப்பட்ட ஏனைய சந்தேகநபர்கள் அனைவரும் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மீனவர் பிரச்சினை – மத்திய அரசுக்கு அழுத்தம் அளித்து நிரந்தரத் தீர்வு காணுங்கள்: முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள், 2 விசைப்படகுகளையும் மீட்க மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தை கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்கெனவே சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படவிருக்கும் சூழ்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் சிறைபிடித்துள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 29-01-2022 அன்று மதியம் அமிர்தலிங்கத்திற்கு சொந்தமான விசைப்படகில் பன்னிரெண்டு பேர் மீன்பிடிக்கச் சென்றதாகவும், 31-01-2022 அன்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பன்னிரெண்டு தமிழக மீனவர்களையும், விசைப்படகையும் இலங்கை மீனவர்கள் சுற்றிவளைத்து தகராறு செய்ததாகவும், இதற்கிடையே அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 12 பேரையும், விசைப்படகையும் சிறைபிடித்து மயிலட்டி துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

இதேபோன்று, புதுச்சேரியைச் சேர்ந்த காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கோட்டுச்சேரி மேட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 31-01-2022 அன்று அதிகாலை ஒன்பது பேர் கோடியக்கரைக்கு தெற்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கும் ஏழுக்கு மேற்பட்ட இலங்கை மீனவர்கள் வந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை சுற்றி வளைத்த நிலையில் அங்கு வந்த இலங்கைப் படையினர் 9 இந்திய மீனவர்களையும் அவர்கள் வந்த விசைப்படகினையும் சிறைபிடித்து காங்கேசன் துறைமுகத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இலங்கை கடற்படையினரின் மேற்படி செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது.

மேற்படி சம்பவங்களில் மட்டும் 21 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் இரண்டு விசைப் படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டதையடுத்து, அனைவரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை வருகிற 7ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருந்தாலும், தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும், படகுகள் கைப்பற்றப்படுவதும் மீனவர்கள் மத்தியில் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, அவர்களுடைய வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு விடுமோ என்ற மிகப் பெரிய கவலையும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடரக்கூடாது என்பதோடு, மத்திய அரசின் உதவியோடு இதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் கலந்து பேசி இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மீனவ மக்களிடையே தற்போது நிலவுகிறது.

எனவே, முதல்வர் இது குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசித்து, தேவையான அழுத்தத்தை அளித்து, இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 21 இந்திய மீனவர்களையும், இரண்டு விசைப்படகுகளையும் விரைந்து விடுவிக்கவும் நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதற்கு சிங்கள மக்கள் முன்வரவேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதற்கு சிங்கள் மக்கள் முன்வரவேண்டும் என வவுனியாவில் கடந்த 1812 வது நாளாக தொடர்போராட்டம் மேற்கொண்டுவரும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் இன்று(வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்கள், “பயங்கரவாதச் சட்டத்தை நீக்குவதற்கு ஜிஎஸ்பி பிளஸைப் பயன்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தி ஒரு கடிதம் அனுப்பியுள்ளோம். எமது பிள்ளைகள் இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டதற்கு தற்போதைய பயங்கரவாதச் சட்டமே பிரதான காரணமாகும்.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளின் தாய்மார்களாகிய நாங்கள் பணத்தையோ இறப்புச் சான்றிதழையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதை நீதி அமைச்சரிடம் கூற விரும்புகிறோம். எங்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதி வேண்டும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மட்டுமே நீதி மற்றும் பொறுப்புக்கூறலை எமக்கு வழங்க முடியும்.

இதேவேளை சிங்களமக்களின் சுதந்திர தினத்தை நாம் எதிர்க்க விரும்பவில்லை. தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதற்கு சிங்களமக்கள் முன்வரவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

ஒடுக்குமுறையில் இருந்து சுதந்திரத்தை அனுபவிக்கும் விடயத்தை அவர்கள் தமிழர்களுக்கும் வழங்கவேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளும் தமது உறவுகளுடன் மகிழ்வுடன் வாழ்வதை அவர்கள் அங்கிகரிக்கவேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்க வேண்டும் – ஞானசார

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக ஒரே நாடு-ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வெலிகட சிறைச்சாலையில் இருந்த வேளையில் விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சிறைக்கைதிகள் என்னுடன் சுமுகமான முறையில் பழகினார்கள். அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த துயரங்களை பரிமாற்றிக் கொண்டார்கள்.

யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் யுத்த சூழலை தொடர்ந்து மீட்டுவது நடைமுறைக்கு பொருத்தமற்றதாக அமையாது. ஆகவே சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளேன்.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது சிறையில் உள்ளவர்களின் உறவினர்கள் அவர்களை விடுவிக்குமாறு தாழ்மையுடன் வலியுறுத்தினார்கள்.

விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தியபோது அவர் ‘அதனை செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டார்.

74 ஆவது தேசிய சுதந்திர தினத்தின்போது விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் கூறினார்.