தமிழ் மக்களை குழப்புவதற்காக ஒரு கட்சி பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது – மாவை சேனாதிராஜா

13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினை தராது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்.இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக நினைத்து, தமிழ் மக்களை குழப்புவதற்காக பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது

என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் ,இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில்,தெளிவுபடுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

சமஸ்டி கட்டமைப்பில்,சுயநிர்ணய தீர்வைத் தான் நாம் எதிர் பார்க்கின்றோம். நாங்கள் தெளிவாக சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளோம்.ஒரு நாளும் 13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினை தராது.அதிலும் நாம் தெளிவாக இருக்கின்றோம்.

இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக நினைத்து,தமிழ் மக்களை குழப்புவதற்காக பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது.நாம் இந்தியாவுக்கு சோரம் போகமாட்டோம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாம் அவர்களிடமிருந்து பெறவேண்டியதை பெறுவோம்.

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் கத்தி கத்தி களைத்து விட்டோம்.அதற்காக அப்படியே இதை விட்டு விட்டோம் என்று நினைக்க வேண்டாம்.தமிழர் இருப்புக்கு நாம் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும் என்றார்.

Posted in Uncategorized

இந்தியாவை நோக்கிய தமிழரின் ஒருமித்த கோரிக்கையை எதிர்க்கும் அரச கைக்கூலிகளுக்கு இடமளியாதீர்கள்

இந்தியாவை நோக்கிய தமிழரின் ஒருமித்த கோரிக்கையை எதிர்க்கும் அரச கைக்கூலிகளுக்கு இடமளியாதீர்கள்

தமிழ் மக்களிடம் ரெலோ கோரிக்கை

இந்தியாவை நோக்கிய கோரிக்கையின் வழியாக இலங்கை அரசின் இனவழிப்புக்கு எதிராக தந்திரோபாய நகர்வை தமிழர் தரப்பு ஒருமித்த பலத்துடன் மேற்கொண்டுள்ளது.

இதற்கு எதிராக போராட்டத்தை நடத்தி தமிழர் தரப்பை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடு படும் அரசின் கைக்கூலிகளின் நடவடிக்கைகளுக்கு இடம் அளிக்காதீர்கள்.

மாகாண சபை முறைமையை முற்றுமுழுதாக நீக்கி தமிழர்களை பலம் அற்றவர்களாக ஆக்குவோம் என்ற சபதத்தோடு அரசகட்டளை ஏறியவர் இன்றைய ஜனாதிபதி. புதிய அரசியல் யாப்பின் மூலம் அதை நிறைவேற்ற தயாராகி வருகிறார்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணியின் தலைவர் ஞானசார தேரர் மாகாணசபை முறையை அழித்து ஒழித்து தமிழர்களுக்கு இருக்கும் ஆகக்குறைந்த அதிகார முறைமையை நீக்குவோம் என்ற செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறார்.

அமைச்சரவை அந்தஸ்துடன் இந்தியாவிற்கான தூதுவராக சென்ற மிலிந்த மொரகொட தமிழர்கள் அரசியல் தீர்வை கோரவில்லை, அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளை தீர்க்க கோருகிறார்கள் என்று கூறி வருகிறார். மாகாண சபை முறைமை ஒரு வெள்ளை யானைக்கு ஒப்பானது என்று இந்தியாவிலே தெரிவித்து வருகிறார்.

வியாத்மக என்ற சிங்களப் புத்திஜீவிகள் அமைப்பு மாகாண சபை முறைமையை ஒழித்துக்கட்டி தமிழர்களை எமது தாயக பூமியிலேயே அரசியல் பலம் அற்றவர்களாக ஆக்க முயற்சி செய்கிறார்கள். மகா சங்க பவுத்த பிக்குகள் இதே திசையிலே பயணிக்கிறார்கள்.

13வது திருத்த சட்டம் எமது அரசியல் தீர்வு அல்ல என்பதை நாம் தெட்டத் தெளிவாக கூறியுள்ளோம். நிரந்தரமான அரசியல் தீர்வை நாம் எட்டும் வரையும் மாகாண சபை முறைமை அரசியல் யாப்பில் இருப்பது அவசியமாகும். இதை நீக்கிவிட்டாலோ அல்லது பலவீனமாக்கினாலோ தமிழர் இருப்பே இந்த நாட்டில் கேள்விக்குறியாகிவிடும்.
இதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

மாகாணசபையின் அடித்தளமாக இருக்கும் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதே இதற்கு ஒரே வழி என்ற வகையில் பேரினவாத தென்னிலங்கை சிங்கள அரசு பிரச்சாரத்தை முன்னெடுத்து வெற்றியும் கண்டு வருகிறார்கள்.

இதற்கு வலுசேர்க்கும் விதமாக எமது தமிழ் இனத்திலேயே தேசியவாதிகள் என்ற போர்வையோடு இயங்கும் அரச கைக்கூலிகள் 13 எதிர்ப்பு என்று ஒரு போராட்டத்தை அரசின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு சாதகமாக செயற்படுகிறார்கள். இவர்களை தமிழ் மக்கள் அடையாளம் கண்டு நிராகரிக்க வேண்டும்.

தமது அரசியல் கொள்கைக்கான எந்தப் பாதையையும் வகுக்க முடியாதவர்கள் இதுவரையும் எந்த நகர்வையும் மேற்கொள்ளாதவர்கள் தமிழர்கள் ஒருமித்து முன்னெடுக்கும் செயற்பாடுகளை விமர்சிப்பதையே அரசியலாக கொண்டுள்ளார்கள்.

ஒற்றையாட்சியை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு அதன் கீழுள்ள பிரதேச சபைகளில் பதவிகளை பெற்றுக் கொண்டவர்கள். ஒற்றை ஆட்சியை ஏற்று சத்தியப் பிரமாணம் செய்து பாராளுமன்ற பதவிகளை அலங்கரித்துக் கொண்டவர்கள். எதிர்க்கிறோம் என கூறும் 13-இல் உள்ள மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருபவர்கள் . இரட்டைவேடம் போடும் இவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

இவர்களால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான தீர்வையோ விடிவையோ பெற்றுத்தர முடியாது. தமது அரசியல் கையாலாகாத நிலையை மக்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள் என்பதால் வெற்று கோசங்களின் மூலம் எம்மக்களை ஏமாற்ற முயலுகிறார்கள். போராட்டத்துக்காக ஒரு துளி வியர்வை கூட சிந்தாதவர்கள் உயிரிழந்த போராளிகளையும் மக்களையும் தமது ஈனச் செயல்களுக்கு பயன்படுத்துகிறார்கள். அந்த புனித ஆத்மாக்களின் தியாகங்களை தமது சுயலாப அரசியலுக்காக விலைபேசுகிறார்கள்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வேண்டி போராட வேண்டிய தேசியவாதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் தமிழர்களுக்கு எதிராகவே ஒரு போராட்டத்தை தாயக பூமியில் நடத்துவதற்கு தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

ஏற்கனவே அரசின் முகவர்கள் பலர் சிறு குழுக்களாக நின்று தேசியத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருவதை நீங்கள் அறிவீர்கள். அதே பாதையில் தேசியவாதிகள் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு தமிழின எதிர்ப்பு என்னும் அரசின் நிகழ்ச்சி நிரலை சிரமேற்கொண்டு அரசின் கனவுகளை நிறைவேற்றும் இந்த கைக்கூலிகளை நிராகரித்து தமிழரின் ஒற்றுமையை பேரினவாத அரசுக்கும் சர்வதேசத்துக்கு தெரிவிக்குமாறு தமிழ் மக்களை வேண்டிக் கொள்கிறோம்.

ஊடக வாரியம்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் -ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலகத்திற்குள் நுழைய முற்பட்டதால் பதற்றம்

வவுனியாவில் நீதி அமைச்சின் நடமாடும் சேவைக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை உள்ளடங்களாக நீதி அமைச்சின் நடமாடும் சேவை வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (26.01) காலை இடம்பெற்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், “ நீதி அமைச்சினால் நீதி கிடைப்பதில்லை, கால அவகாசம் வேண்டாம் நீதி தான் வேண்டும், செயல் திறன அற்ற ஓ எம் பி யை நம்பி காலத்தை கடத்தாது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்துங்கள்” என எழுதப்பட்ட பதாதைகளையும், காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்களையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது நீதி அமைச்சின் நடமாடும் சேவை நடைபெற்ற மாவட்ட செயலக வளாகத்திற்குள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நுழைய முற்பட்ட போது காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு பகுதியினருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதுடன், காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டது.

கொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம்

இந்தியாவின் 73 வது குடியரசு தினம் இன்று 2022.01.26 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகராலயத்தால் கொண்டாடப்பட்டது.

உலகின் பாரிய எழுதப்பட்ட அரசியலமைப்பு 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி இன்று நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில். கொவிட்-19 சுகாதார நெறிமுறைகளை மிகவும் இறுக்கமாக கடைப்பிடித்த நிலையில் உயர் ஸ்தானிகராலயத்தால் பல்வேறு நிகழ்வுகள்ஒழுங்கமைக்கப்பட்டிருந்தனஃ

இதன்போது உயிர் தியாகம் செய்த இந்திய அமைதிகாக்கும் படையினருக்கு இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்திய பின்னர் இந்திய உயர் ஸ்தானிகர் வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் உயர் ஸ்தானிகர் பால் பாக்லே இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையையும் பார்வையிட்டார்.

இந்திய ஜனாதிபதியின் செய்தியின் முக்கிய குறிப்புக்களும் உயர் ஸ்தானிகரால், இச்சந்தர்ப்பத்தில் வாசிக்கப்பட்டது. மேலும், வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரின் விசேட காணொளி செய்தி ஒன்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சபையோர் மத்தியில் திரையிடப்பட்டது.

தொடர்ந்து, இலங்கை கடற்படையினரின் இசை குழுவினரால் பாடல்கள் இசைக்கப்பட்டதுடன் உயர் ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் ஒழுங்கமைத்திருந்த கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தன.

கிட்டத்தட்ட 10 இந்திய மாணவர்கள் கல்வி கற்றுவரும் இரத்மலானை பரம தம்ம சைத்திய பிரிவேனாவில் நடைபெறவிருக்கும் குடியரசு தின நிகழ்வுகளிலும் இந்நாளில் உயர் ஸ்தானிகர் கலந்துகொள்ளவுள்ளார். அந்நிகழ்வுகளின்போது புத்த பெருமானின் அருளாசிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சங்கைக்குரிய மகா சங்கத்தினரால் விசேட பிரார்த்தனைகளும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் நண்பர்களுக்காக மாலை விசேட வரவேற்பு உபசாரம் ஒன்றும் இந்திய இல்லத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

உலகளவில், இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் அசாதி கா ஆம்ரித் மஹோற்சவ் கொண்டாட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் 73வது குடியரசு தின நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.

அசாதி கா ஆம்ரித் மஹோற்சவ்வை முன்னிட்டு இன்று முதல் 2022 பெப்ரவரி 4ஆம் திகதி வரையில் உயர் ஸ்தானிகராலயத்தால் பல்வேறு விசேட நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

பாரிய கலாசார நிகழ்வு, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பாளி வளாகத்தில் இரவீந்திரநாத் தாகூரின் சிலையினை திறந்து வைத்தல், வர்த்தக ஊக்குவிப்பு செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இத்தருணத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள கொன்சுலேட் ஜெனரல் அலுவலகங்களும் கண்டியிலுள்ள துணை உயர் ஸ்தானிகராலயமும் பல்வேறு விசேட நிகழ்வுகளை ஒழுங்கமைத்து இந்தியாவின் 73வது குடியரசு தினத்தை அனுஷ்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சவேந்திர சில்வா மீதான அமெரிக்கத் தடை; பிரித்தானியாவின் நிலைப்பாட்டை கோரும் தொழிற்கட்சி உறுப்பினர்

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ள நிலையில் தடை குறித்து பிரித்தானியாவும் பரிசீலிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொழிற் கட்சியின் உறுப்பினர் சியோபைன் மெக்டொனாக் நேற்று அமெரிக்காவின் பயணத் தடை குறித்து பிரித்தானியாவின் நிலைப்பாட்டை கோரியுள்ளார்.

இந்த தடைகளின் தாக்கங்கள் குறித்து என்ன மதிப்பீடு செய்தீர்கள் என பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளரிடம் அவர் வினவியுள்ளார்.

கடந்த ஆண்டு பெப்ரவரியில், போர்க்குற்றங்களை மேற்கோளிட்டு ஜெனரல் சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமெரிக்கா பயணக் கட்டுப்பாடுகளை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

13வது திருத்தத்தை எதிர்த்து முதலமைச்சர் பதவிக்கு குறிவைக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

13வது திருத்தம் தமிழ் மக்களுக்கு ஏற்புடையது அல்ல என கூறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்கு அடித்துக் கொள்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

சுகாஷ் மற்றும் காண்டீபன் ஆகியோருக்கிடையில் இந்தப் போட்டி நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக மையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“13வது திருத்தச் சட்டம் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வு கிடையாது அதில் நாம் வெளிப்படையாகவே இருக்கிறோம்.

ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளினால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி இருக்கிறோம்.

13 நாம் இந்தியாவிடம் கேட்பதற்கு காரணங்கள் இருக்கின்றது. தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் எமக்கு இருக்கின்ற குறைந்த பட்ச அதிகாரமாக 13வது திருத்தமே காணப்படுகிறது.

இதை இந்தியாவுக்கு நாம் வலியுறுத்தியுள்ளோம். இந்தியா இலங்கை அரசை எவ்வாறு கையாளப் போகின்றது என்பதைப் 13 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வரும் போதே அறிந்து கொள்ளலாம்.

சிலர் 13வது திருத்தம் தமிழ் மக்களுக்கு தேவை அல்ல என போராட்டம் நடத்துவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களிடம் நான் ஒன்றைக் கேட்கிறேன் 13வது திருத்தச் சட்டம் வேண்டாம் என கூறுகின்றவர்கள் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப்போவது எதற்கு?

அதுமட்டுமல்லாது அவர்களின் கட்சிக்குள் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற போட்டி மேலோங்கி இருக்கின்ற நிலையில் இவர்களின் நோக்கம் என்ன.

வடக்கு மாகாண சபையை கைப்பற்ற 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யப் போகிறார்களா அல்லது மாகாணசபையினால் வழங்கப்படுகின்ற சுகபோகங்களை அனுபவிக்க போகிறார்களா ?என்பதை பகிரங்கமாக கூற வேண்டும்.

முன்னணியினர் 13ஆம் திருத்தம் தேவையில்லை அதை அமுல்படுத்துமாறு கூறுபவர்களை எதிர்க்க வேண்டும் என வீதிகளில் கூறுவதை விடுத்து சமஷ்டியை எவ்வாறு ஏற்படுத்தப் போகிறோம் என்பதை மக்களுக்கு கூற வேண்டும்.

சீனா ஆதிக்கம் வடக்கில் மேல் ஆகியுள்ள நிலையில்13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதுவதை உறுதி செய்யவேண்டிய தேவை இந்தியாவுக்கே அதிகம் உள்ளது .

தமிழ் மக்களின் காணிகளை அரசாங்கம் பறித்து வருகின்ற நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தும் அவற்றையும் சாதிக்க முடியவில்லை.

13 இன் மூலம் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை செயற்படுத்துவதற்கு மாகாண சபை ஒன்று நடைமுறையில் இருக்கும் போதே ஓரளவேனும் கட்டுப்படுத்தலாம்.

ஆகவே 13 வேண்டாம் என மக்களை குழப்புவதை விடுத்து சமஷ்டியை எவ்வாறு பெறலாம் என்பதை கூறுங்கள் நாமும் இணைந்து பயணிக்க தயாராக இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

திரைமறைவு அரசியல் நிகழ்ச்சி நிரலில்!! தமிழ்தேசிய முண்ணனி!! வினோ எம்பி குற்றச்சாட்டு!!

திரைமறைவு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் இருந்து கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.

ஊடகவியலாளர் சுகிர்தராஜன் உண்மையை ஆதாரத்துடன் உலகத்துக்கும் நாட்டுக்கும் தெரியப்படுத்தியமையால் படுகொலை செய்யப்பட்டமை யாவரும் அறிந்ததே. தமிழ்தேசத்தின்பால் பற்றுக்கொண்டு, ஊடகவியலாளர்கள் உழைத்துக்கொண்டிருந்த சமயம் அது தங்களது அரசியல் நடவடிக்கைக்கு சர்வதேச ரீதியாக குந்தகத்தை ஏற்படுத்தும் என்பதற்காக ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட தொடர்ச்சியான வரலாற்றை நாங்கள் பார்க்கின்றோம்.

அரசாங்கம் தமிழ் மக்களையும் தமிழ் கட்சிகளையும் மீண்டும் மீண்டும் ஏமாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில் நாங்கள் சர்வதேச ரீதியான ஆதரவை பெற்றால் மாத்திரமே புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கான நியாயமான, நீடித்து நிற்க கூடிய தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும். நாங்கள் பிளவு பட்டிருந்தால் எமக்கான தீர்வு எட்டாக்கனியாகவே அமைவதுடன் வாழ்நாள் முழுவதும் போராடும் நிலையே ஏற்படும்.

நாங்கள் பிளவுபட்டுக்கொண்டிருப்பது தமிழ் மக்களின் சாபக்கேடாகவே இருக்கிறது.

தற்போதைய சூழலில் சாத்தியமான யதார்த்தபூர்வமான தமிழ் மக்களின் தற்போதைய தேவையை நிலை நிறுத்தி தற்காலிகமாகவேனும் ஒரு தீர்வினை எட்டவேண்டும் என்பதற்காக 13 ஆம் திருத்த சட்டத்தை அமுல்படுத்தக் கோரி அனைத்துக்கட்சிகளும் கையெழுத்திட்டு ஒரு விடயத்தை அனுப்புயிருக்கின்றோம்.

அதனை குழப்புவதற்காக ஏதோ ஒரு திரைமறைவு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் இருந்து கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதை நாம் பார்க்கின்றோம். அதற்கு கூட்டமைப்பில் இருக்கின்ற, ஒற்றுமைப்பட்ட இந்தகட்சிகளில் இருக்கின்ற ஒரு பிரிவினரும் மறைமுகமாக ஆதரவு வழங்கும் நிலை இருக்கிறது.

குறிப்பாக தமிழரசுக்கட்சியில் இருக்கின்ற ஒருபகுதியினர் குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக பிரச்சாரத்தினை முன்னெடுக்கின்றனர். எதற்காக, அங்கே ஒருமுகம்! இங்கே ஒருமுகம்! சம்பந்தன் ஐயா மாவைசேனாதிராஜா ஆகியோர் குறித்த வரைபில் கையொப்பம் இட்டே உள்ளனர். அதற்கு எதிராக அதேகட்சியை சேர்ந்த ஒரு பிரிவினர் முண்னணியின் நிலைப்பாட்டினை ஒத்து இப்படியான விந்தையான நடவடிக்கையில் இறங்கியுள்ளதை அவதானிக்க முடியும். இது தான் தமிழ்மக்களின் சாபக்கேடு.

நாம் எப்போதுதான் ஒன்றுபடப்போகின்றோம். ஆயினும் மிகப்பெரிய பலமான ஒரு கூட்டை உருவாக்குவதற்கான முயற்சியினை நாங்கள் எடுத்திருக்கின்றோம். அந்த ஒற்றுமை முயற்சிக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் தடைகள் வருகின்றன. அவற்றை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அந்த ஒற்றுமையை குழப்பி இதனை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்ற முயற்சிகளை ஆரம்பத்திலேயே எடுத்தார்கள். ஆனால் அனைத்தையும் தகர்த்தெறிந்து முதலாவது முயற்சியில் நாங்கள் வெற்றிகண்டிருக்கின்றோம். எத்தனை தடைகள் வந்தாலும் அனைத்தையும் உடைத்தெறிந்து எமது மக்களின் உண்மையான விடுதலைக்காக உழைப்போம்.என்றார்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீள திறப்பதில் தாமதம் ஏற்படலாம் – எரிசக்தி அமைச்சு

எரிபொருள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் பணி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தாமதமடையலாம் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத்தின் 12 வருட பூர்த்தியையிட்டு அவரது மனைவி மொட்டையடித்து வழிபாடு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டு 12 வருடங்களாகியும் நீதி மறுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், அவரது மனைவி சந்தியா எக்னலிகொட இன்று முகத்துவாரம் காளி கோவிலில் தனது தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

தனது கணவனுக்காக கொழும்பு முகத்துவாரம் கடற்கரையில் இந்து ஆகம முறைப்படி முடி இறக்கி வேண்டுதலில் ஈடுப்பட்டார்.

தனது கணவர் காணாமலாக்கப்பட்டமைக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு கோரி அவர் காளி கோவிலில் முடி காணிக்கை செலுத்தியுள்ளார்.இதே வேளை ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டு நேற்று திங்கட்கிழமையுடன் 12 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தயாமாஸ்டருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்ப்பட்ட தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்தார். இந்த நிலையில் தயா மாஸ்டருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.

குறிப்பாக கடந்த 2009ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் 2009 மே 18ஆம் திகதிக்கு உள்பட்ட காலப்பகுதிக்குள் தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பாக குறித்த வழக்கு தொடரபட்டது.

2006ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க பயங்கரவாதம் மற்றும் குறித்துரைக்கப்பட்ட பயங்கரவாதச் செயற்பாடுகளைத் தடுத்தல் விதிகளின் கீழ் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றத்தைப் புரிந்துள்ளதாக வவுனியா மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

வழக்கில் தயா மாஸ்டர் சார்பாக சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

குறித்த வழக்கில் தயா மாஸ்டருக்கு கட்டாய சிறைத்தண்டனை வழங்க வேண்டிய பிரிவுகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. அந்த குற்றப்பத்திரிகை திருத்தப்பட்டு குறைந்த குற்றச்சாட்டுக்கள் மாத்திரம் அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தது.

அதன்படி அவர் தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.