பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும்: G.L.பீரிஸ்

தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் என வௌிவிவகார அமைச்சர் G.L.பீரிஸ் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் தற்போது துரித திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும் இரண்டு பகுதிகளாக பிரித்து, முழுமையாக ஆராய்ந்து புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் G.L.பீரிஸ் குறிப்பிட்டார்.

அதற்காக குழுவொன்றை நியமித்து, பொறுப்புகளை ஒப்படைத்துள்ளதாகவும் 1979 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Posted in Uncategorized

அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளுக்கு பல விடயங்களை வௌிப்படுத்தினார் ஆஸாத் சாலி!

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், முன்னாள் ஆளுநருமான ஆஸாத் சாலி மற்றும் அமெரிக்கத் தூதரக உயர் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று (26) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, தான் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டமை மற்றும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் பல புத்திஜீவிகள் கைது செய்யப்பட்டு இன்னும் சிறையில் உள்ளமை குறித்து ஆஸாத் சாலி அமெரிக்கத் தூதரக உயர் அதிகாரிகளிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 800 வருடங்களாக முஸ்லிம் மக்களால் பாதுகாக்கப்பட்டு வந்த கூரஹல ஜெய்லானி கட்டிடங்கள் தகர்க்கப்பட்டமை மற்றும் பல விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

குறித்த சந்திப்பில் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளான மாட்டின் கெலி, ரூபி வூட் சேட், அரசியல் பொறுப்பாளர் நஸ்ரின் மரைக்கார் ஆகியோர் கலந்து கொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களையும் புலம் பெயர்ந்தோரையும் ஏமாற்ற முடியாது- ஸ்ரீகாந்தா தெரிவிப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ன தான் புரண்டாலும், தமிழ் மக்களையும் புலம் பெயர்ந்தோரையும் ஏமாற்ற முடியாது என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் ,இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில்,தெளிவு படுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாம் இப்போது என்ன செய்தோம் என்று தெளிவாக கூற வேண்டிய பொறுப்பு உள்ளது.புதிய அரசியல் அமைப்பு வருமா வரதா என்று உறுதியாக கூற முடியாது.அப்படி வந்தாலும் அதில் சிங்கள, பெளத்த மேலாதிக்கம் மட்டுமே அதில் இருக்கும்.

இது மட்டும் உறுதி. ஏனென்றால் இது தான் நடந்தது.எமது கடந்த கால அனுபவம் இது. இந்திய இலங்கை ஒப்பந்தம் ராஜீவ் காந்தி காலத்தில் எழுத்தப்பட்ட போது தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் அன்று வாக்குறுதி எமக்கு வழங்கப்பட்டது.அதன் உரித்து இந்தியாவுக்கு இருக்கிறது என்பதன் அடிப்படையிலேயே நாம் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் முழுமையான பிரச்சினைக்கு தீர்வு தரும் என்று ஒரு நாளும் கூறவில்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

ஒன்றுமே இல்லாமல் இருக்கும் இடத்தில் ,சட்ட ரீதியாக அமுல் படுத்துமாறு கூறிய 13 ஆவது திருத்தத்தை முதலில் அமுல் படுத்தினால், அதில் உள்ள சிறிய விடயங்களை என்றாலும் நாம் பெறுவதற்கு முயற்சிக்கலாம்.ஒன்றுமே இல்லாமல் இருக்கும் இடத்தில் இருக்கிறதை என்றாலும் நாம் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

ஏனென்றால் எமது தமிழ் மக்களின் இருப்பு தற்போது அழிந்து வருகிறது. அழிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிங்கள குடியேற்றம் இடம்பெற்று வருகிறது. ஆகவே இருக்கிறதை முதலில் அமுல் படுத்துங்கள் என்று தான் கூறுகின்றோம் என்றார்.

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்படுகின்றார்கள் – சுரேஷ்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் நினைக்கும் விடயங்களை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள் என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 13வது திருத்தச் சட்டத்தினை நாம் தமிழரின் தீர்வாக ஒரு போதும் ஏற்க வில்லை அதனை ஏற்க போவதும் இல்லை.

ஆனால் தற்போதுள்ள பூகோள அரசியல் நிலையில் தமிழ் மக்களை பாதுகாக்க அதாவது வடக்கில் இராணுவ மயமாக்கல், சிங்கள குடியேற்றங்களைத் தடுத்து தமிழ் மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக ஏற்கனவே இந்தியாவின் தலையீட்டில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரியே 6 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றின் மூலம் அனுப்பி வைத்துள்ளோம்.

அந்த கடிதத்தின் தொடர்ச்சியாக நாம் டெல்லி சென்று இந்திய பிரதமரை சந்தித்து அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மக்கள் மத்தியில் போலிப் பிரசாரத்தினை மேற்கொள்வது போல நாங்கள் 13 வது திருத்தச்சட்டத்தை தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் எதை செய்ய நினைக்கிறார்களோ அதனை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள் அதாவது தற்போது அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு வடக்கின் முகவர்களாக செயற்படுகின்றார்கள் என்றுதான் கூற வேண்டும்.

குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய போட்டியிடும் போது வடக்கு மக்களின் வாக்களிப்பு எனக்கு தேவையில்லை ஆனால் தேர்தலை புறக்கணியுங்கள் என்று கூறியிருந்தார் அதனையே அந்த தேர்தலின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செய்திருந்தார்கள்.

அதாவது அந்த தேர்தலை புறக்கணிக்குமாறு கூறியிருந்தார்கள் தற்போது கோட்டாபய கூறுகின்றார் 13வது திருத்தம் தேவையில்லை அபிவிருத்தி மட்டும் போதும் என அதேபோல் அரசாங்கத்தில் உள்ளவர்களும் அதனை கூறுகின்றார்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் வடக்கில் அந்தக் கோரிக்கையினையே செயற்படுத்துகின்றார்கள்.

கட்சியிலிருந்து மணிவண்ணன் பிரிந்து சென்றுவிட்டதால் தமது கட்சியை மணிவண்ணன் கொண்டு சென்று விடுவார் என்பதற்காக கட்சியில் உள்ளோருக்கு ஏதாவது ஒரு வேலையை கொடுக்க வேண்டும்தானே அதற்காகத்தான் 13வது திருத்தச் சட்டத்தினை சவப்பெட்டியில் வைத்து மக்கள் மத்தியில் ஊர்வலமாக கொண்டு செல்கிறார்கள். அவர்கள் தமது கட்சியை காப்பாற்றுவதற்காக இவ்வாறு போலி பிரச்சாரத்தினை மேற்கொள்கிறார்கள்.

மக்களை ஏமாற்றி கோட்டாபய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்படுகின்றார்கள் எனவே மக்கள் போலிப் பிரச்சாரங்களை நம்ப கூடாது” என தெரிவித்தார்.

Posted in Uncategorized

13 ஆவது திருத்ததில் தமிழர்களுக்கு தீர்வில்லை; சமஷ்டியே தீர்வு! பொய்யுரைக்காதீர்கள் முண்ணணியிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை

13 ஆவது திருத்தம் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது.ஆனால் சிறிய சிறிய அலுவல்களை பார்த்துக்கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் ,இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில்,தெளிவு படுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,
எம்மிடம் ஒரு முனை மடிந்த மண் வெட்டி உள்ளது.புது மண்வெட்டி வருவதற்கு காலம் எடுக்கும்.

இந்த நிலையில், இந்த பழைய மண் வெட்டியை பயன்படுத்தி என்றாலும் சிறிய வேலையை செய்ய வேண்டும்.புதிய மண் வெட்டி வரும் வரும் என்று இருப்பதில் அர்த்தம் இல்லை.

இதை போல தான் 13 ஆவது ,திருத்தம்.தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதன் மூலம் தீர்க்கப்படாது.ஆனால் சிறிய சிறிய அலுவல்களை பார்த்துக்கொள்ள முடியும் என்று தான் கூறுகின்றோம்.

நாம் இப்போது இருக்கும் நிலையில் இராணுவ ஆட்சி வடக்கு கிழக்கில் அதிகரிக்கிறது.சிங்கள குடியேற்றம் நடைபெறுகிறது.

நாம் ஒன்றுமே செய்ய முடியாமால் நிற்கிறோம்.இதற்கு இருக்கும் சட்டம் ஒன்றை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

Posted in Uncategorized

காங்கிரஸ் யாப்பில் ஒற்றையாட்சியை வலியுறுத்திக் கொண்டு வெளியில் இருதேசம் ஒரு நாடு என மக்களை ஏமாற்றுகிறார் கஜேந்திரகுமார்! சித்தார்த்தன் குற்றச்சாட்டு

கயேந்திர குமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் கட்சியின் யாப்பு ஒற்றையாட்சியை வலியுறுத்துகின்ற நிலையில் தமிழ் மக்களை திசைதிருப்ப தமிழ் மக்கள் முன்னணி என்ற குழுவை அமைத்து 13 க்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள் என புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 13வது திருத்தச் சட்டத்தினை எதிர்க்கும் தமிழ் தேசிய முன்னணியினர் தமிழ் மக்களின் தீர்வாக எதனை முன் வைக்கப் போகிறார்கள் அல்லது அவர்கள் தீர்வு தொடர்பில் எடுக்கும் முயற்சி என்னவென கேட்க விரும்புகின்றேன்.

மக்கள் மத்தியில் பொய் சொல்வதற்கு தகுதி வேண்டும் 13வது திருத்தச் சட்டத்தினை நாங்கள் தீர்வாக ஏற்றுக் கொண்டோம் ஏற்றுக் கொண்டுள்ளோம் என கஜேந்திரகுமார் அணியினர் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.

13 வேண்டாம் என்றால் 13பதிலாக என்ன தீர்வினை முன் வைக்கப் போகிறீர்கள்? அல்லது தீர்வு விடயத்தில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீகள் எனக் கூறமுடியுமா.

கயேந்திரகுமார் அணியினர் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் யாரை முதலமைச்சராக முட்படுத்துவது என போட்டி நிலவுகிறது.

கஜேந்திரகுமாரின் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தேர்தல் விஞ்ஞாபனத்தை 75ரூபாய் முத்திரைக் காசு வழங்கி பார்த்தேன் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒற்றையாட்சியை வலியுறுத்துகிறது.

காங்கிரஸ் என்ற பெயரில் போராட்டம் நடத்தினால் தமது கபடத்தனம் தெரிந்து விடும் என்பதற்காக முன்னணி என்ற ஒரு குழுவை ஆரம்பித்து 13ஐ தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்றிவிட்டார்கள் அதற்கு எதிராக போராட வாருங்கள் என மக்களை குழப்பி வருகிறார்கள்.

தமிழ் தேசியத்திற்காக ஒன்றிணைந்த தலைவர்கள் நாங்கள் ஒருபோதும் 13வது திருத்தச்சட்டத்தை தமிழ் மக்களின் தீர்வாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம் .

தமிழ் மக்களை குழப்புவதற்காக ஒரு கட்சி பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது – மாவை சேனாதிராஜா

13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினை தராது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்.இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக நினைத்து, தமிழ் மக்களை குழப்புவதற்காக பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது

என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் ,இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில்,தெளிவுபடுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

சமஸ்டி கட்டமைப்பில்,சுயநிர்ணய தீர்வைத் தான் நாம் எதிர் பார்க்கின்றோம். நாங்கள் தெளிவாக சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளோம்.ஒரு நாளும் 13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினை தராது.அதிலும் நாம் தெளிவாக இருக்கின்றோம்.

இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக நினைத்து,தமிழ் மக்களை குழப்புவதற்காக பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது.நாம் இந்தியாவுக்கு சோரம் போகமாட்டோம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாம் அவர்களிடமிருந்து பெறவேண்டியதை பெறுவோம்.

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் கத்தி கத்தி களைத்து விட்டோம்.அதற்காக அப்படியே இதை விட்டு விட்டோம் என்று நினைக்க வேண்டாம்.தமிழர் இருப்புக்கு நாம் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும் என்றார்.

Posted in Uncategorized

இந்தியாவை நோக்கிய தமிழரின் ஒருமித்த கோரிக்கையை எதிர்க்கும் அரச கைக்கூலிகளுக்கு இடமளியாதீர்கள்

இந்தியாவை நோக்கிய தமிழரின் ஒருமித்த கோரிக்கையை எதிர்க்கும் அரச கைக்கூலிகளுக்கு இடமளியாதீர்கள்

தமிழ் மக்களிடம் ரெலோ கோரிக்கை

இந்தியாவை நோக்கிய கோரிக்கையின் வழியாக இலங்கை அரசின் இனவழிப்புக்கு எதிராக தந்திரோபாய நகர்வை தமிழர் தரப்பு ஒருமித்த பலத்துடன் மேற்கொண்டுள்ளது.

இதற்கு எதிராக போராட்டத்தை நடத்தி தமிழர் தரப்பை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடு படும் அரசின் கைக்கூலிகளின் நடவடிக்கைகளுக்கு இடம் அளிக்காதீர்கள்.

மாகாண சபை முறைமையை முற்றுமுழுதாக நீக்கி தமிழர்களை பலம் அற்றவர்களாக ஆக்குவோம் என்ற சபதத்தோடு அரசகட்டளை ஏறியவர் இன்றைய ஜனாதிபதி. புதிய அரசியல் யாப்பின் மூலம் அதை நிறைவேற்ற தயாராகி வருகிறார்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணியின் தலைவர் ஞானசார தேரர் மாகாணசபை முறையை அழித்து ஒழித்து தமிழர்களுக்கு இருக்கும் ஆகக்குறைந்த அதிகார முறைமையை நீக்குவோம் என்ற செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறார்.

அமைச்சரவை அந்தஸ்துடன் இந்தியாவிற்கான தூதுவராக சென்ற மிலிந்த மொரகொட தமிழர்கள் அரசியல் தீர்வை கோரவில்லை, அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளை தீர்க்க கோருகிறார்கள் என்று கூறி வருகிறார். மாகாண சபை முறைமை ஒரு வெள்ளை யானைக்கு ஒப்பானது என்று இந்தியாவிலே தெரிவித்து வருகிறார்.

வியாத்மக என்ற சிங்களப் புத்திஜீவிகள் அமைப்பு மாகாண சபை முறைமையை ஒழித்துக்கட்டி தமிழர்களை எமது தாயக பூமியிலேயே அரசியல் பலம் அற்றவர்களாக ஆக்க முயற்சி செய்கிறார்கள். மகா சங்க பவுத்த பிக்குகள் இதே திசையிலே பயணிக்கிறார்கள்.

13வது திருத்த சட்டம் எமது அரசியல் தீர்வு அல்ல என்பதை நாம் தெட்டத் தெளிவாக கூறியுள்ளோம். நிரந்தரமான அரசியல் தீர்வை நாம் எட்டும் வரையும் மாகாண சபை முறைமை அரசியல் யாப்பில் இருப்பது அவசியமாகும். இதை நீக்கிவிட்டாலோ அல்லது பலவீனமாக்கினாலோ தமிழர் இருப்பே இந்த நாட்டில் கேள்விக்குறியாகிவிடும்.
இதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

மாகாணசபையின் அடித்தளமாக இருக்கும் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதே இதற்கு ஒரே வழி என்ற வகையில் பேரினவாத தென்னிலங்கை சிங்கள அரசு பிரச்சாரத்தை முன்னெடுத்து வெற்றியும் கண்டு வருகிறார்கள்.

இதற்கு வலுசேர்க்கும் விதமாக எமது தமிழ் இனத்திலேயே தேசியவாதிகள் என்ற போர்வையோடு இயங்கும் அரச கைக்கூலிகள் 13 எதிர்ப்பு என்று ஒரு போராட்டத்தை அரசின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு சாதகமாக செயற்படுகிறார்கள். இவர்களை தமிழ் மக்கள் அடையாளம் கண்டு நிராகரிக்க வேண்டும்.

தமது அரசியல் கொள்கைக்கான எந்தப் பாதையையும் வகுக்க முடியாதவர்கள் இதுவரையும் எந்த நகர்வையும் மேற்கொள்ளாதவர்கள் தமிழர்கள் ஒருமித்து முன்னெடுக்கும் செயற்பாடுகளை விமர்சிப்பதையே அரசியலாக கொண்டுள்ளார்கள்.

ஒற்றையாட்சியை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு அதன் கீழுள்ள பிரதேச சபைகளில் பதவிகளை பெற்றுக் கொண்டவர்கள். ஒற்றை ஆட்சியை ஏற்று சத்தியப் பிரமாணம் செய்து பாராளுமன்ற பதவிகளை அலங்கரித்துக் கொண்டவர்கள். எதிர்க்கிறோம் என கூறும் 13-இல் உள்ள மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருபவர்கள் . இரட்டைவேடம் போடும் இவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

இவர்களால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான தீர்வையோ விடிவையோ பெற்றுத்தர முடியாது. தமது அரசியல் கையாலாகாத நிலையை மக்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள் என்பதால் வெற்று கோசங்களின் மூலம் எம்மக்களை ஏமாற்ற முயலுகிறார்கள். போராட்டத்துக்காக ஒரு துளி வியர்வை கூட சிந்தாதவர்கள் உயிரிழந்த போராளிகளையும் மக்களையும் தமது ஈனச் செயல்களுக்கு பயன்படுத்துகிறார்கள். அந்த புனித ஆத்மாக்களின் தியாகங்களை தமது சுயலாப அரசியலுக்காக விலைபேசுகிறார்கள்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வேண்டி போராட வேண்டிய தேசியவாதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் தமிழர்களுக்கு எதிராகவே ஒரு போராட்டத்தை தாயக பூமியில் நடத்துவதற்கு தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

ஏற்கனவே அரசின் முகவர்கள் பலர் சிறு குழுக்களாக நின்று தேசியத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருவதை நீங்கள் அறிவீர்கள். அதே பாதையில் தேசியவாதிகள் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு தமிழின எதிர்ப்பு என்னும் அரசின் நிகழ்ச்சி நிரலை சிரமேற்கொண்டு அரசின் கனவுகளை நிறைவேற்றும் இந்த கைக்கூலிகளை நிராகரித்து தமிழரின் ஒற்றுமையை பேரினவாத அரசுக்கும் சர்வதேசத்துக்கு தெரிவிக்குமாறு தமிழ் மக்களை வேண்டிக் கொள்கிறோம்.

ஊடக வாரியம்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் -ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலகத்திற்குள் நுழைய முற்பட்டதால் பதற்றம்

வவுனியாவில் நீதி அமைச்சின் நடமாடும் சேவைக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை உள்ளடங்களாக நீதி அமைச்சின் நடமாடும் சேவை வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (26.01) காலை இடம்பெற்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், “ நீதி அமைச்சினால் நீதி கிடைப்பதில்லை, கால அவகாசம் வேண்டாம் நீதி தான் வேண்டும், செயல் திறன அற்ற ஓ எம் பி யை நம்பி காலத்தை கடத்தாது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்துங்கள்” என எழுதப்பட்ட பதாதைகளையும், காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்களையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது நீதி அமைச்சின் நடமாடும் சேவை நடைபெற்ற மாவட்ட செயலக வளாகத்திற்குள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நுழைய முற்பட்ட போது காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு பகுதியினருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதுடன், காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டது.

கொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம்

இந்தியாவின் 73 வது குடியரசு தினம் இன்று 2022.01.26 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகராலயத்தால் கொண்டாடப்பட்டது.

உலகின் பாரிய எழுதப்பட்ட அரசியலமைப்பு 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி இன்று நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில். கொவிட்-19 சுகாதார நெறிமுறைகளை மிகவும் இறுக்கமாக கடைப்பிடித்த நிலையில் உயர் ஸ்தானிகராலயத்தால் பல்வேறு நிகழ்வுகள்ஒழுங்கமைக்கப்பட்டிருந்தனஃ

இதன்போது உயிர் தியாகம் செய்த இந்திய அமைதிகாக்கும் படையினருக்கு இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்திய பின்னர் இந்திய உயர் ஸ்தானிகர் வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் உயர் ஸ்தானிகர் பால் பாக்லே இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையையும் பார்வையிட்டார்.

இந்திய ஜனாதிபதியின் செய்தியின் முக்கிய குறிப்புக்களும் உயர் ஸ்தானிகரால், இச்சந்தர்ப்பத்தில் வாசிக்கப்பட்டது. மேலும், வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரின் விசேட காணொளி செய்தி ஒன்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சபையோர் மத்தியில் திரையிடப்பட்டது.

தொடர்ந்து, இலங்கை கடற்படையினரின் இசை குழுவினரால் பாடல்கள் இசைக்கப்பட்டதுடன் உயர் ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் ஒழுங்கமைத்திருந்த கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தன.

கிட்டத்தட்ட 10 இந்திய மாணவர்கள் கல்வி கற்றுவரும் இரத்மலானை பரம தம்ம சைத்திய பிரிவேனாவில் நடைபெறவிருக்கும் குடியரசு தின நிகழ்வுகளிலும் இந்நாளில் உயர் ஸ்தானிகர் கலந்துகொள்ளவுள்ளார். அந்நிகழ்வுகளின்போது புத்த பெருமானின் அருளாசிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சங்கைக்குரிய மகா சங்கத்தினரால் விசேட பிரார்த்தனைகளும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் நண்பர்களுக்காக மாலை விசேட வரவேற்பு உபசாரம் ஒன்றும் இந்திய இல்லத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

உலகளவில், இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் அசாதி கா ஆம்ரித் மஹோற்சவ் கொண்டாட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் 73வது குடியரசு தின நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.

அசாதி கா ஆம்ரித் மஹோற்சவ்வை முன்னிட்டு இன்று முதல் 2022 பெப்ரவரி 4ஆம் திகதி வரையில் உயர் ஸ்தானிகராலயத்தால் பல்வேறு விசேட நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

பாரிய கலாசார நிகழ்வு, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பாளி வளாகத்தில் இரவீந்திரநாத் தாகூரின் சிலையினை திறந்து வைத்தல், வர்த்தக ஊக்குவிப்பு செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இத்தருணத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள கொன்சுலேட் ஜெனரல் அலுவலகங்களும் கண்டியிலுள்ள துணை உயர் ஸ்தானிகராலயமும் பல்வேறு விசேட நிகழ்வுகளை ஒழுங்கமைத்து இந்தியாவின் 73வது குடியரசு தினத்தை அனுஷ்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.