இந்தியப் பிரதமரின் கடித முயற்சிக்கு மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பேராதரவுக்கு நன்றி கூறுகிறோம் சுரேந்திரன்

தமிழ் பேசும் மக்களின் கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்திய பிரதமருக்கு அரசியலமைப்பிலுள்ள 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தக் கோருவதன் மூலம் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை பகிர்ந்து மக்கள் முகம் கொடுத்திருக்கும் தற்போதைய பிரச்சினைகளில் இருந்து, மீட்கும் முயற்சியை மேற்கொண்டிருந்தோம்.

வடக்கு கிழக்கை மையப்படுத்திய கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில் அந்த முயற்சியை முன்னெடுத்திருந்த பொழுது, மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவையும் பலத்தையும் கோரி நின்றோம். எவ்வித தயக்கமும் இல்லாது எமது முயற்சிக்கு நலமும் பலமும் சேர்க்கும் வகையில் நம்மோடு தோளோடு தோள் நின்று பயணிக்க முன் வந்தமைக்கு நன்றி கூறுகிறோம். இதனால் எமக்கு உத்வேகம் தந்துள்ளீர்கள்.

அனைத்து தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளையும் பிரதிபலிக்கும் வகையான வரைபை தயாரிக்க முற்பட்ட போதும் எமது அடிப்படை கோரிக்கைகளான தாயகம், சுயநிர்ணய உரிமை, சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு என்பவற்றில் நம்மால் விட்டுக்கொடுக்க முடியாத சூழ்நிலையை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். அதேநேரம் அதில் உங்களால் கையொப்பமிட முடியாத இக்கட்டான நிலையையும் நாங்களும் விளங்கிக் கொண்டோம். இருப்பினும் உங்களால் முன்வைக்கப்பட்ட மலையக மக்களின் கரிசனைகளையும் பிரதிபலித்துள்ளோம் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

எமது மக்கள் எதிர்கொண்டிருக்கும் அரசியல் இக்கட்டிலிருந்து எம் மக்களை மீட்க நாம் முற்பட்ட பொழுது எமது தரப்பிலிருந்து எம்மை விமர்சித்தும், எதிர்ப்புகளை வெளியிட்டும், கருத்துக்களை பதிவிட்டும் தடுக்கும் முயற்சியிலும் சுயவிளம்பரங்களை தேடுவதிலும் ஈடுபட்டிருந்த வேளையில் உங்களது நாகரீகமான நடைமுறை அவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்று நம்புகிறோம்.

உங்களது அனைத்து முயற்சிகளிலும் எங்கள் ஆதரவு என்றும்போல் தொடர்ந்தும் இருக்கும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். அதே வேளை எம்மக்களின் விடிவிற்கான தொடர் பயணத்தில் நீங்கள் தொடர்ந்தும் எம்முடன் பயணிக்க விருப்புடன் கோரி நிற்கிறோம்.

சுரேந்திரன்
ஊடகப்பேச்சாளர்- ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர்

Posted in Uncategorized

செய்ய வேண்டிய பணிகளை விட்டுவிட்டு வேறு விடயங்களை ஆளுநர் வடக்கில் செய்கிறார்! ரெலோ யாழ். மாவட்ட அமைப்பாளர் நிரோஷ் குறற்ச்சாட்டு

நாட்டில் 13 ஆவது திருத்தத்தால் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது, அதை விட்டுவிட்டு ஆளுநர் அரசின் அழுத்தத்தால் பல்வேறு விடயங்களை வடக்கில் செய்கிறார் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தி.நிரோஷ் தெரிவித்தார்.

யாழ் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசு இப்போது என்ன செய்கிறது என்றால், மாகாண சபைகளுக்கு சில அதிகாரங்களை கிள்ளி எறிந்து அதையும் மத்தியின் கீழ் தந்திரமாக எவ்வாறு கையகப்படுத்தலாம் என்று செயற்பட்டு வருகிறது. அதற்கு அவர்கள் பயன்படுத்தி வரும் ஆயுதம் தான் உள்ளூராட்சி சபைகள்.

உள்ளூராட்சி சபைகளின் கீழ் உள்ள பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு கூட நாம் மத்தியில் தங்கி நிற்கும் நிலையில், வடக்கு மாகாணத்தில் ஆளுநரை பயன்படுத்தி இப்போது புதிய நாடகங்கள் இங்கு நடைபெறுகிறது.

ஆரியகுளத்தில் மத நல்லிணக்கத்தை இல்லாமல் செய்வது, அரசியலமைப்பை மீறுகிறது என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆகவே ஆரிய குளம் யாருடைய சொத்து உள்ளிட்ட பல கேள்விகளை ஆளுநர் இப்போது முன்வைத்துள்ளார்.

நாங்கள் இங்கு கேட்கின்றோம் இலங்கை போன்ற நாட்டிலே மத நல்லிணக்க பிரச்சினை காணப்படுகிறது. ஆகவே அதனை பகுத்தாராய வேண்டிய தேவை உள்ளது. அந்த வகையில் மத ரீதியான ஆக்கிரமிப்புக்கள் குருந்தூர் மலையில் இடம்பெற்றுள்ளது. அதே போன்று நாவற்குழியில் விகாரை அமைக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் ஆரிய குளத்தில் மத ரீதியான குழப்பங்களை அரசு ஏற்படுத்துவதை நாங்கள் நிராகரிக்கின்றோம்.

வடக்கு மாகாண ஆளுநருக்கு அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே இது நடக்கிறது. முன்னரும் கூட குளத்தின் நடுவில் மத நல்லிணக்க மண்டபத்தை கட்டுவதற்கு தேரர் ஒருவர் மாநகர சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அரசியல் அமைப்பில் உள்ளதை இதற்கு மட்டுமே பயன்படுத்து நோக்கில் ஆளுநர் செயற்பட்டு வருகின்றார்.

வேண்டும் என்றால் பகிரங்க வாக்கெடுப்பை எடுக்கட்டும்.இங்கு என்ன செய்வது இப்படி ஒரு மத நல்லிணக்கம் வேண்டுமா என்று.

பொது மக்களுக்கு தேவை நிம்மதி. அவர்களுக்கு சிங்கள பௌத்த மயமாக்கல் தேவை இல்லை என்றார்.

பயத்தினால் நாய் போல மாறியுள்ள வீரவன்ச, கம்மன்பிலவின் ஆடையும் அவிழ்ந்து போயுள்ளதாக தகவல்

சுசில் பிரேமஜயந்தவின் வாயை அடைத்த பின்னர், அரசாங்கத்திற்குள் சிங்கம் போல் இருந்த மேலும் சிலர் நாய் குட்டிகளின் நிலைமைக்கு சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Chaminda Wijesri) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சுசில் பிரேமஜயந்தவின் வாய் அடைக்கப்பட்ட பின்னர் விமல் வீரவங்ச போன்றவர்கள், அரசாங்கத்தின் அனுமதியுடனேயே பேசுகின்றனர். அண்மையில் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் காதருகே சென்று நான் எதாவது கூறினால் சிக்கலாகுமா என்று வீரவங்ச கேட்டதை பார்க்க முடிந்தது.

சிங்கம் போல் இருந்து விமல் வீரவங்ச போன்றவர்கள் நாய் குட்டிகள் போல் மாறியுள்ளனர். நாட்டில் இனவாதம், தேசப்பற்று பற்றி பேசிய வீரவங்ச போன்றவர்கள் அமைச்சு பதவி பறிப்போய்விடும் என்ற அச்சத்தில் நாய் போல் மாறியுள்ளனர்.

அரசாங்கத்தின் கொள்கை, மோசடிகளை கூற முடியாது இவர்கள் தவிக்கும் போது அருவருப்பாக உள்ளது. அத்துடன் நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட வெளிநாட்டவர்களுக்கு வழங்க போவதில்லை என உதய கம்மன்பில கூறினார்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை 50 வருடங்களுக்கு இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கும் தீர்மானத்துடன் அமைச்சர் உதய கம்மன்பிலவின் தேசப்பற்றாளர் என்ற ஆடை அவிழ்ந்து போயுள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் டொலருக்கான அரசாங்கம் நாட்டின் வளங்களை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார்.

‘இந்திய பிரதமருக்கான ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம்’-செல்வம் அடைக்கலநாதன்

இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம் இட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனுடன் தாமும் ஆவணத்தில் கையொப்பமிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் வௌியில் இருந்து இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்குவதாக கூறியதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா நாளைய தினம் (07) ஆவணத்தில் கையொப்பமிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஆவணம் தொடர்பில் நாளை இறுதி முடிவு

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பவுள்ள பொது ஆவணம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு, நாளை அரசியல் குழுவை கூட்டி இது தொடர்பில் இறுதி முடிவை எடுப்பது என தீர்மானித்தது.

13ஆம் திருத்தம் என அறியப்படும், இலங்கை அரசியலமைப்பில் இடம் பெற்றுள்ள ஒரேயொரு அதிகார பரவலாக்கல் சட்டத்தை முழுமையாக அமுலாக்க உரிய அறிவுறுத்தல்களை, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரதான தரப்பு என்ற முறையில், இலங்கை அரசாங்கத்துக்கு கொடுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் சார்பாக எழுதப்பட உள்ள பொது ஆவணக்கடிதம் தொடர்பிலேயே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக மனோ எம்.பியின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது ஆவணக்கடிதம் தொடர்பாக, நவம்பர் 2ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “திண்ணை கலந்துரையாடல்” முதல் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற கலந்துரையாடல்களில் முன்வைக்கப்பட்ட பல்வேறு வரைவுகளின் உள்ளடக்கங்கள் தொடர்பாகவும், அவை தொடர்பில் முன்வைக்கப்பட்ட வாதபிரதிவாதங்கள் தொடர்பாகவும், இன்று மாலை மெய்நிகர் கலந்துரையாடல் மூலம் ஆலோசிக்கப்பட்டதாக தெரியவருகிறது.

இன்றைய மெய்நிகர் கலந்துரையாடலில் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராத கிருஷ்ணன் ஆகியோர் உள்ளிட்ட தலைமைக்குழு
உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

கொரோனா அச்சம் காரணமாக வல்வை பட்டத்திருவிழா இடைநிறுத்தம்!

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா கொரோனா காரணமாக இடைநிறுத்தப்படுவதாக, ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் வருடாந்திரம் தைப்பொங்கல் தினத்தன்று மாபெரும் பட்டத்திருவிழா இடம்பெறுவது வழமையாகும்.

அந்த வகையில் இம்முறையில் பட்டத்திருவிழாவை நடாத்த ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்திருந்தனர்.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்காத நிலையில், பட்டத்திருவிழாவை நடாத்தும் போது, கொரோனா தொற்று அபாயம் அதிகரிக்கும் என பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்தமையால், பட்டத்திருவிழாவை இடை நிறுத்துவதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

அதேவேளை இம்முறை பட்டத்திருவிழாவிற்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது முழுமையான ஆதரவை தெரிவித்திருந்தமையும், அதனால், பல்வேறு தரப்பினரும் ஏற்பாட்டு குழுவிற்கு தமது கண்டனங்களை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பரந்த கூட்டணி தேவைப்படும் சந்தர்ப்பத்தில் இருப்பவர்களை ஒதுக்கக்கூடாது: விமல் வீரவன்ச தெரிவிப்பு

பரந்த கூட்டணியொன்று தேவைப்படுகின்ற சந்தர்ப்பத்தில், இருப்பவர்களை ஒதுக்கக்கூடாது என அமைச்சர் விமல் வீரவன்ச இன்று மாலபேயில் தெரிவித்தார்.

மாலபே ஆண்கள் கல்லூரியின் தொழில்நுட்ப கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஜகத் குமார மற்றும் பிரதீப் உதுகொட ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வு நிறைவு பெற்றதன் பின்னர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் வினவுவதற்கு ஊடகவியலாளர்கள் முயன்றனர்.

இதன்போது ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்த விமல் வீரவன்ச, முடிந்தால் எதிர்க்கட்சியில் உள்ளவர்களையும் இணைத்துக் கொண்டு தேசிய இணக்கப்பாட்டுடன் நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பரந்த கூட்டணியொன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தருணமே இதுவென குறிப்பிட்டார்.

அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில், இருப்பவர்களையும் அகற்றிவிடக்கூடாது என சுட்டிக்காட்டினார்.

Posted in Uncategorized

யாராவது பின்வாங்க விரும்பினால் அல்லது கையொப்பம் இடமறுத்தால்அவர்களை விலத்தி வரைபை கையொப்பமிட்டு அனுப்புவோம்; வினோ எம்பி!

இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்புவதற்காக ரெலோ எடுத்த முயற்சியில் இருந்து யாராவது பின்வாங்க விரும்பினால் அல்லது கையொப்பம் இடமறுத்தால் அது யாராக இருந்தாலும் அவர்களை விலத்திவைத்துவிட்டு அந்தவரைபை கையொப்பம் இட்டு அனுப்புவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.

வவுனியாவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

அனைத்து கட்சிகளும் இணைந்து தயாரித்த வரைபை தமிழரசுக்கட்சி முற்றாக நிராகரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

எனினும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா இன்னும் ஓரிருநாட்கள் பிந்தினாலும் கூட இறுதிவரைபை தயாரித்து அனைவரும் கையொப்பம் இட்டு இந்தியப்பிரதமருக்கு அனுப்புவதாக உறுதிமொழி அளித்துள்ளார்.

எனவே இந்த விடயத்தில் யார் கையொப்பம் இடுவது, யாரை தவிர்ப்பது, யார் விலகிக்கொள்வார்கள் என்பது இன்னும் ஓரிருநாட்களில் தெரியவரும்.
ஆயினும் தமிழீழ விடுதலை இயக்கம் எடுத்த முயற்சியினை ஒருபோதும் கைவிடப்போவதில்லை.

இந்த முயற்சியில் இருந்து யாராவது பின்வாங்க விரும்பினால் அல்லது கையொப்பம் இடமறுத்தால் அது யாராக இருந்தாலும் அவர்களை விலத்தி வைத்துவிட்டு இந்த வரைபை கையொப்பம் இட்டு அனுப்புவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வோம்.

வார்த்தை பிரயோகங்களை சாட்டாகவைத்துக்கொண்டு தமிழரசுக்கட்சி ரெலோ எடுத்த முடிவிற்குப்பின்னால் நாங்கள் செல்வதா என்ற சிறுபிள்ளைத்தனமான அல்லது தமிழ்மக்களை ஏமாற்ற நினைக்கின்ற இந்த செயற்பாட்டினை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் விளைவுதான் 13 வது திருத்தம். ஆகவே ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட்டு அதுவேறு இதுவேறு, தலைப்பு வேறு, வார்த்தை பிரயோகங்கள் வேறு என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமானது.

இந்தியாவின் பங்களிப்பில்லாமல் எமது அரசியல் ரீதியான பிரச்சனைக்கு நிச்சயமாக நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கப்போவதில்லை. அதை உணர்ந்து அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளும் செயற்பட வேண்டும்.
அந்த வகையிலேயே இந்த முயற்சியினை எடுத்துள்ளோம் இது நிச்சயம் வெற்றிபெறும்.

இந்த விடயத்தில் எந்தவொரு ஆலோசனையும் இந்தியாவிடமிருந்து நாம் பெறவில்லை. இந்தியா எமக்கு எந்தவித அழுத்தங்களையும் வழங்கவில்லை.

ஆனால் நாம் பாதிக்கப்பட்ட இனம் என்றவகையில் கடந்தகாலங்களில் அரசியல் ரீதியாகவோ அல்லது வேறு வழியிலோ எமக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள் என்ற ரீதியில், அவர்களால் கொண்டுவரப்பட்ட சர்வதேச ஒப்பந்தம் என்ற ரீதியில் அழுத்தங்கள் என்பதற்கு அப்பால் தமிழ்மக்களின் விடுதலைக்காக செய்கின்ற பெரிய கைங்கரியமாக இதனை பார்ப்பதாக தெரிவித்தார்.

“உணவின் விலை ஏற்றத்தை தடுக்க தற்சார்பு பொருளாதாரமே சிறந்த வழி” ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

உணவின் விலை ஏற்றத்தைத் தடுக்க தற்சார்பு பொருளாதாரமே சிறந்த வழி என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித்தலைவரும் (ரெலோ) வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

இலங்கைத் தீவின் ஏற்றுமதி, இறக்குமதி பொருளாதாரக் கட்டமைப்பு டொலர் இல்லாமை காரணமாக முற்றாக முடங்கி வருகின்ற அபாய சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஏற்கனவே இறக்குமதிகளில் ஆயிரத்திற்கு அதிகமான பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலங்கள் ஆயிரக்கணக்கில் துறைமுகத்தில் காத்துக் கிடக்கின்றன.

அத்துடன் இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் தேயிலை, இறப்பர் , மற்றும் ஏனைய பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல் கட்டணங்களை டொலரில் செலுத்த வேண்டிய கட்டாய நிலைமையால் இந்த ஏற்றுமதிகளும் டொலர் இன்மையால் தடைப்பட்டுள்ளன.

மொத்தத்தில் ஏற்றுமதி இறக்குமதி தடைப்படுவதால் வருமானம் இன்றி நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்குள் சென்று கொண்டு இருக்கின்றது.

பொருளாதாரச் சரிவும் பொருட்களுக்கான நிர்ணய விலை நீக்கமும் மக்களை வாழ்வாதார ரீதியாக பாரிய அளவில் பாதித்துள்ளது இதனால் மரக்கறி வகைகள் உள்ளடங்கலாக அடிப்படை உணவுப் பொருட்கள் நாளுக்கு நாள் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த பொருளாதார அச்சுறுத்தலிலிருந்து மக்கள் ஓரளவு விடுதலை பெற ஒரே வழி தற்சார்புப் பொருளாதாரத்தை ஒவ்வொரு குடும்பங்களும் கூட்டாகக் கையில் எடுக்க வேண்டும் நமது நாட்டிலே அதற்குப் போதியளவு சாதகமான சூழல் காணப்படுகிறது.

உதாரணமாக யுத்த காலத்தில் வன்னியில் போக்குவரத்து பாதைகள் முடக்கப்பட்டு கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளிலிருந்து பொருட்கள் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் காணப்பட்ட போது அந்த மக்கள் தற்சார்பு பொருளாதாரம் மூலமாக மரக்கறிகள், அரிசி, பால் முட்டை, பழங்கள், இறைச்சி வகைகள், மீன், மூலிகை மருந்துகள், கைத்தறி நெசவு, மட்பாண்ட கைத் தொழில், ஏனைய சுய தொழில்கள் எல்லாம் வன்னி மக்களின் சிறப்பான வாழ்க்கைத்தரத்தையும் சேமிப்பையும் உருவாக்கியது.

ஆகவே எல்லோரும் சிந்தித்து நீங்களும் வாழும் இடத்திலே சிறந்த தற்சார்புப் பொருளாதாரத்தை உருவாக்கி அதீத விலை ஏற்றத்தை தடுப்பதுடன் நாட்டின் உள்ளக பொருளாதாரத்தையும் குடும்பப் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம் என அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர் அரசியல் ? யதீந்திரா

நாலடியாரில் ஒரு கூற்றுண்டு. அதாவது, கழிந்து செல்லும் நாட்கள் அனைத்தும் உனது வாழ்நாளாகும். நமது அரசியலுக்கும் இது பொருந்துமா? ஏனெனில் ஒரு அரசியல் போராட்டத்தில் – ஆண்டுகள் கழிகின்ற போது, நத ஆண்டுக்கான அடைவுகளை மக்கள் காணவேண்டும். ஆனால் ஈழத் தமிழ் தேசிய அரசியலை பொறுத்தவரையில், அடைவுகள் எப்போதுமே எட்டாக் கனியாகவே இருக்கின்றது. வரலாம் – நடக்கலாம் – நடக்கூடும் – இப்படியான சொற்களோடு, பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்படி ஒவ்வொரு ஆண்டும் கழிந்து செல்கின்ற போது, தமிழர் அரசியலில் எவ்வித முன்னேற்றங்களும் பதிவாகவில்லை ஆனால் பல்வேறு விடயங்கள் நடக்கின்றன – நடப்பதாக காண்பிக்கப்படுகின்றன. இந்த அடிப்படையில் சிந்தித்தால், கழிந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டும், ஈழத் தமிழர் அரசியலின் வீழ்ச்சியை விரைவுபடுத்தும் ஆண்டுகளா?

இலங்கையின் மீதான சர்வதேச அழுத்தங்களுக்கான பிள்ளையார் சுழியிடப்பட்டு, இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் பத்து வருடங்கள் பூர்த்தியடைகின்றது. 2012இல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் மீதான முதலாவது பிரேரணை, அமெரிக்க ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இது அப்போது அமெரிக்க பிரேரணை என்றே பரவலாக அழைக்கப்பட்டது. அப்படி பார்த்தால் அமெரிக்கா, இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்து பத்துவருடங்களாகின்றது.

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறல், என்னுமடிப்படையில்தான், இந்த ஆழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. இப்போதும் தொடர்கின்றன. ஆனால் பத்துவருடங்களாகியும் இன்னும் இலங்கை அரசு பொறுப்புக் கூறவில்லை. சர்வதேச அழுத்தங்களின் மூலம் இலங்கை அரசை அடிபணியச் செய்யலாம் என்பது நமது நம்பிக்கையாக இருக்கும் போது, மறுபுறம், பொறுப்புக் கூறலை தொடர்ந்தும் வெற்றிகரமாக தட்டிக்கழிக்கலாம் என்னும் நம்பிக்கையுடன் சிங்கள ஆளும் வர்க்கம் செயற்பட்டுவருகின்றது. இந்த அடிப்படையில் சிந்தித்தால் யுத்தத்தில் விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட சிங்கள ஆளும் வர்க்கமானது, யுத்தத்திற்கு பின்னரான கடந்த பன்னிரெண்டு வருடங்களிலும், தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை தோற்கடிப்பதிலும் வெற்றிகண்டிருக்கின்றது. இந்த அனுபவங்களுக்கு சாட்சியாகவே, 2021ஆம் ஆண்டு, தோல்வியை தந்து, நம்மை சாதாரணமாக கடந்துசெல்கின்றது. முன்னைய ஆண்டுகள் போல்!

2010இல், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதிலிருந்து, தமிழ் தேசிய தரப்புகளுக்கிடையிலான ஒற்றுமை தொடர்பில், ஏராளமாகவே பேசப்பட்டிருக்கின்றது. ஒற்றுமைப்படுத்துவதற்கான ஏராளமான முயற்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் எதுவும் வெற்றியளிக்கவில்லை. இந்த அனுபவங்களுக்கும் 2021 விதிவிலக்காக இருக்கவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு ஒரு கடிதத்தை அனுப்புவதில் கூட, தமிழ்-தேசிய கட்சிகளால் ஒற்றுமையுடன் செயற்பட முடியவில்லை. 2021இல் இடம்பெற்ற, ஆக்கபூர்வமான விடயமென்றால் – ஒன்றைத்தான் குறிப்பிட முடியும். அதாவது, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ் பேசும் கட்சிகளுக்கிடையிலான சந்திப்புக்களைத்தான் குறிப்பிட முடியும். இந்தியாவை நோக்கி செல்லும் நோக்கிலேயே இந்த சந்திப்புக்கள் இடம்பெற்றன. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவை நோக்கிச் செல்லும் அணுகுமுறை முற்றிலும் சரியானது. இந்தக் கட்டுரை எழுதப்படும் வரையில் குறித்த சந்திப்புக்களின் மூலமான இணக்கப்பாடு, ஒரு ஆவணமாக வெளியில் வந்திருக்கவில்லை. நாடு கடும்போக்கு ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற நிலையில் – தமிழ் மக்களுக்கு ஓரளவாவது பாதுகாப்பாக இருக்கும் மாகாண சபை முறைமையும் கூட, இல்லாதொழிக்கப்படலாம் என்னும் ஆபத்தான சூழலில்தான், மேற்படி முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அரசியலில் எதிர்வுகூறல்கள் எப்போதுமே சிக்கலானது ஏனெனில் உலக அரசியலில் மாற்றங்களை எதிர்வு கூறமுடியாது. பேராசிரியர் நோம் சொம்ஸ்கி கூறுவது போன்று, நாளைய காலநிலையை இன்று எதிர்வுகூற முடியாது. நிலைமைகள் எப்படியும் மாற்றமுறலாம் ஆனால் அந்த மாற்றங்களின் தன்மையை ஒரளவு அனுமானிக்கலாம். இந்த அனுமானங்களின் அடிப்படையில்தான் அரசியல் ஆய்வுகள் முன்வைக்கப்படுகின்றன. எனவே எந்தவொரு ஆய்வும் முடிந்த முடிவல்ல.

இந்த அடிப்படையில் சிந்தித்தால் 2022இல் இடம்பெறப் போகும் நிகழ்வுகளில் முக்கியமானதாக இருக்கப் போவது இரண்டு விடயங்கள்தான். ஒன்று, தமிழ் பேசும் கட்சிகள் என்னுமடிப்படையில் இந்தியாவை நோக்கி முன்வைக்கப்படவுள்ள கூட்டுக் கோரிக்கை முக்கியமானதொரு விடயமாக இருக்கும். இது நடந்தால், 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னரான சூழலில், புதுடில்லியை நோக்கி முன்வைக்கப்பட்ட கோரிக்கையாக இருக்கும். இந்தியா, தொடர்ந்தும் 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் வலியுறுத்திவருகின்ற நிலையில், மேற்படி கோரிக்கைக்கு, ஒரு முதன்மையான அரசியல் முக்கியத்துவமுண்டு.

அடுத்தது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா மீளவும் இணையவுள்ளது. 2024 வரையில் அமெரிக்கா இந்த பொறுப்பில் இருக்கப் போகின்றது. டொனால்ட் ரம் தலைமையிலான குடியரசு கட்சி ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து, 2018இல், அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறியது. இதனைத்தான் ஜனவரியில் அமெரிக்கா, இலங்கை தொடர்பில் சில விடயங்களை அறிவிக்கவுள்ளதாக சிலர் கூறிவருகின்றனர். ஒபாமா தலைமையிலான, ஜனநாயக கட்சியின் நிர்வாகம்தான் 2012இல், இலங்கையின் மீதான முதலாவது பிரேரணையை நிறைவேற்றியிருந்தது. இந்த நிலையில் மீளவும் ஜனநாயக கட்சியின் நிர்வாகம், மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்படவுள்ள நிலையில், இலங்கையின் மனித உரிமை விடயங்கள், மீது சில அழுத்தங்களை பிரயோகிக்க வாய்ப்புண்டு. இந்த இரண்டு விடயங்கள்தான், ஈழத் தமிழர் அரசியலில் செல்வாக்குச் செலுத்தவுள்ள பிரதான விடயங்களாக இருக்கப் போகின்றன. இதற்கப்பால் பலரும் பல விடயங்கள் தொடர்பில் பேசலாம் ஆனால் அவைகள் எவையும் பிரதான விடயங்களாக இருக்க முடியாது. ஏனெனில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் இந்தியாவின் உறுதியான தலையீடுகள் இல்லாவிட்டால், இந்த விடயத்தில் முன்னேற்றங்களை காண முடியாது.

நான் மேலே குறிப்பிட்ட இரண்டு பிரதான விடயங்களின் அடிப்படையில்தான் 2022இற்கான தமிழர் அரசியல் நகரப் போகின்றது. ஆனால் இந்த விடயத்திலும் அளவுக்கதிகமான கற்பனைகள் கூடாது. இதனை விளங்கிக் கொள்வதற்கு, இந்துசமுத்திர பிராந்தியத்தில் இடம்பெறும் புவிசார் அரசியல் அதிகாரப் போட்டிகளை உற்றுநோக்க வேண்டும். புவிசார் அரசியலை கையாளுவதன் ஊhடாக, தமிழர்கள் வெற்றிகளை குவிக்க முடியுமென்று கூறுவதில் எப்போதுமே இந்தக் கட்டுரையாளர் உடன்படுவதில்லை. ஏனெனில் புவிசார் அரசியலில் தமிழர்கள் ஒரு தரப்பல்ல. ஒரு தரப்பாக இருப்பதற்கான பலமும் தமிழர்களிடம் இல்லை.

இலங்கையை மையப்படுத்தியிருக்கும் புவிசார் அரசியல் என்பது, அடிப்படையில் இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்களுடன்தான் தொடர்புறுகின்றது. இந்த அடிப்படையில் சிந்தித்தால், இலங்கைத் தீவின் மீதான வெறுப்பும் காதலும், சிங்கள ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் வெளிவிவகார முடிவுகளில்தான் தங்கியிருக்கின்றது. சிங்கள ஆட்சியாளர்கள் இந்திய-அமெரிக்க அதிகார சக்திகளுடன் ஒத்துப் போகும் போது, அது காதலாகவும், முரண்படும் போது – அது வெறுப்பாகவும் வெளிப்படுகின்றது. அன்று, ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் வெளிவிவகார அணுமுறையினால்தான், இந்திரா காந்தி-இந்தியா, சிங்கள ஆட்சியாளர்கள் மீது வெறுப்புற்றது. அந்த வெறுப்பின் விளைவாக வந்ததுதான், இந்திய-இலங்கை ஒப்பந்தம். எனவே, அதிகார சக்திகளின் காதலுக்கும் வெறுப்புக்கும் இடையில்தான் தமிழர்களின் அரசியல் சிக்கியிருக்கின்றது. இதனை விளங்கிக்கொள்ளாமல் புவிசார் அரசியல் தொடர்பில் சிந்தித்தால், அது ஒரு நல்ல பகல் கனவாகவே இருக்க முடியும்.

இலங்கைத் தீவின் இன்றைய அரசியலை ஒரு ஆட்சி மாற்ற தோல்விக்கு பின்னரான அரசியலாகவே நாம் நோக்க வேண்டும். 2015 ஆட்சி மாற்றத்திற்கு பின்னால் இந்திய – அமெரிக்க பின்னணி இருந்ததாக பரவலாக நம்மப்பட்டது. தனது தோல்விக்கான காரணமாக, இந்திய உளவுத்துறையின் மீதே மகிந்த முதலில் குற்றம் சாட்டியிருந்தார். இதே 2015, இல்தான், நீண்டகாலமாக இராணுவ ஆட்சியின் பிடியிலிருந்த மியன்மாரிலும் ஆட்சிமாற்றமொன்று ஏற்பட்டது. அமெரிக்கா அதனை ஆதரித்திருந்தது. ஆனால் இந்த இரண்டு ஆட்சி மாற்றங்களுமே தோல்வியில் முடிந்திருக்கின்றன. தோற்கடிக்கப்பட்ட ராஜபக்ச கொம்பனி மீளவும் ஆட்சியிலிருக்கின்றது. மியன்மாரில் மீளவும் இராணுவ ஆட்சி ஏற்பட்டிருக்கின்றது. ஆங்சான் சூகி மீண்டும் சிறையிலடைக்கப்பட்டிருக்கின்றார். இவ்வாறானதொரு சூழலில், இலங்கையின் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகிப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்குமா?

ஏனெனில் இலங்கையின் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகித்தால், கடும்போக்கு ராஜபக்ச தரப்பு, சீனாவை நோக்கி அதிகம் சாய்ந்துவிடுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. இலங்கையின் மீதான சீனாவின் பிடி மேலும் இறுகுவதை தடுக்கும் அதே வேளை, ஆட்சியாளர்களும் அதிகம் சீனாவை நோக்கி சாய்ந்துவிடாத வகையிலும்தான் அமெரிக்க அழுத்தங்கள் பிரயோகிப்படலாம். இந்த அழுத்தங்களின் இறுதி இலக்கு மீண்டுமொரு ஆட்சி மாற்றமாகவும் அல்லது ராஜபக்ச முகாமிற்குள்ளேயே ஒரு அரசியல் சீரமைப்பாகவும் இருக்கலாம். இதற்கிடையில் பிறிதொரு விடயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, 2024இல் இடம்பெறவுள்ள தேர்தலில், மீளவும் அமெரிக்காவில் குடியரசு கட்சி அதிகாரத்தை கைப்பற்றினால், அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறிவிடும்.

இந்த விடயங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டுதான், 2022இல் இடம்பெறப் போகும் அரசியல் நகர்வுகளை நாம் அனுமானிக்க வேண்டும். ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, நிலைமைகள் எவ்வேளையிலும் நமக்கு பாதகமாக மாறலாம். எனவே நிலைமைகள் சாதகமாக இருக்கின்ற சூழலை கணித்து, அதற்கேற்ப செயற்படுவதன் மூலம்தான், பெறக் கூடியதை நாம் பெற முடியும். ஒரு தனி பாய்சலில் விடயங்களை தமிழர்களால் ஒரு போதுமே வெற்றிகொள்ள முடியாது. ஏனெனில் அதற்கான பலமோ, வாய்ப்புக்களோ, வெளியாரின் ஆதரவோ ஈழத்-தமிழர்களுக்கில்லை. இந்த பன்னிரெண்டு வருடகால அரசியல் அனுபவங்கள் இதனை தெளிவாக நிரூபித்திருக்கின்றன.

எனவே 2022ம் அண்டு, இதுவரை கற்றுக் கொண்டதைக் கொண்டு செயற்படுவதற்கான முக்கியமான காலமாக இருக்கப் போகின்றது. ஆனால் தொடர்ந்தும் கற்றுக்கொள்ள மறுத்து அல்லது, கற்றுக்கொண்டதாக கற்பனையில் மிதந்து, காலத்தை விரயம் செய்தால் – இந்த ஆண்டும் முன்னைய ஆண்டுகள் போன்றே தோல்வியை தந்து, நம்மை சாதாரணமாக கடந்து செல்லும். கழிந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டும், நமது அரசியலின் வீழ்ச்சியை மேலும் உறுதிப்படுத்தும். இறுதியில் தமிழர்கள் இருப்பார்கள் ஆனால் தமிழருக்கான தனித்துவமான அரசியல் இருக்காது.