திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்கவில்லை : உரிமத்தை வசமாக்கிக்கொண்டுள்ளோம் என்கிறார் கம்மன்பில

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்கியுள்ளதாகக் கூறுவது முற்றிலும் தவறாகும். மாறாக 51 சதவீத பங்குகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வசமாக்கி உரிமத்தினை உறுதிப்படுத்தியுள்ளோம் என்று அமைச்சரவை இணைபேச்சாளரும் வலுசக்தி அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்கிழமை (4) நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்வரும் வாரத்திற்குள் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் குறித்த ஒப்பந்தத்தை கையெழுத்திட எதிர்பார்த்துள்ளோம்.

80 இலட்சம் எண்ணெய் தாங்கிகளை ஒரே சந்தர்ப்பத்தில் களஞ்சியப்படுத்தக் கூடிய திருகோணமலை எண்ணெய்த் தாங்கி தொகுதியை அமைத்து நூறு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையிலும் , அவற்றில் பலவற்றை இன்னமும் பயன்படுத்தாத நிலைமையே காணப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட மூன்று ஒப்பந்தங்களின் காரணமாக கொலன்னாவை, முத்துராஜவெல ஆகிய இடங்களில் பல பில்லியன் செலவிட்டு பாரிய தாங்கிகளை அமைத்துள்ளோம்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறாகும். 1987 , 2003 ஆம் ஆண்டுகளில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் ஊடாக திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டன.

2017 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் ஊடாகவே மேலும் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது. எனினும் நாம் 14 எண்ணெய் தாங்கிகள் தவிர்ந்த ஏனைய 85 தாங்கிகளையும் இலங்கையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்துள்ளோம்.

எவ்வாறிருப்பினும் 16 மாதங்களுக்குள் பயன்படுத்தாமல் காணப்பட்ட தாங்கிகளை பயன்படுத்தக் கூடியவையாக மாற்றுவதற்கு எம்மால் முடிந்துள்ளது. அதற்கமைய கிடைக்கப்பெற்ற அமைச்சரவை அனுமதியின் ஊடாக அனைத்து தாங்கிகளும் மீள இலங்கைக்கு கிடைக்கப் பெறுகிறது.

அதன் பின்னர் 3 ஒப்பந்தங்களின் ஊடாக 24 தாங்கிகளை இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்திற்கும் , 14 எண்ணெய் தாங்கிகளை இந்திய பெற்றோலிய கூட்டு தாபனத்திற்கும், 61 தாங்கிகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனம் என்பவற்றை இணைத்து ஸ்தாபிக்கப்பட்டுள்ள கூட்டு நிறுவனத்திற்கு 50 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 14 தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்கியுள்ள போதிலும், 85 தாங்கிகளை இலங்கை வசப்படுத்தியுள்ளோம்.

இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்த ஒப்பந்ததத்தை கையெழுத்திட அனுமதி வழங்கப்பட்டது. எனவே மீண்டும் இது தொடர்பில் கலந்துரையாடி ஒப்பந்தத்தினை கையெழுத்திடும் தினம் தொடர்பில் தீர்மானிக்கப்படும். எவ்வாறிருப்பினும் அடுத்த வாரமளவில் ஒப்பந்தத்தை கையெழுத்திட முடியும்.

99 எண்ணெய் தாங்கிகளில் 14 தாங்கிகள் இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 24 தாங்கிகளும், எஞ்சியுள்ள 61 தாங்கிகளும் ட்ரிங்கோ பெற்றோலியம் டேர்மினல் லிமிடட் என்ற நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளதாகும். இது நூறு வீதம் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உரித்துடைய நிறுவனமாகும்.

இந்த 61 எண்ணெய் தாங்கிகளில் 49 வீதம் இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும், 51 சதவீதம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வசமும் காணப்படுகிறது. அதற்கமைய இந்நிறுவனத்தின் பெரும்பான்மை நிர்வாகம் இலங்கை வசமே காணப்படுகிறது.

பணிப்பாளர் சபையின் 7 உறுப்பினர்களில் நால்வரை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமே நியமிக்கிறது. அது மாத்திரமின்றி நூற்றுக்கு 50 வீதத்திற்கும் அதிக பங்கு இலங்கை வசமாவதன் ஊடாக அது அரசாங்கத்தின் நிர்வாகத்திற்கு உரியதாகிறது.

அரச நிறுவனமாகும் போது கணக்காய்வாளர் நாயகத்தினால் கண்காணிப்பிற்கு உட்படுத்தவும், போக் குழுவிற்கு பணிப்பாளர் சபையை அழைத்து கேள்வியெழுப்பவும், பாராளுமன்றத்தில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கேள்வியெழுப்பவும் முடியும்.

அதனடிப்படையில் முழுமையாக அரச பொறிமுறையின் கீழ் இயங்கும் ஒன்றாகவே இந்நிறுவனம் அமைந்துள்ளது. மாறாக இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உரித்துடைய நிறுவனமாக அல்ல என்றார்.

Posted in Uncategorized

மீண்டும் 202 பில்லியன் ரூபாய்களை அச்சிட்டது இலங்கை

மிகப்பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசு, வாங்கிய கடன்களுக்கான மீள் செலுத்தும் தொகையை செலுத்தவும், உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யவும் கடந்த டிசம்பர் மாதம் 29 நாள் மீண்டும் 202 பில்லியன் ரூபாய்களை அச்சிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் இலங்கை அரசு கடந்த வருட இறுதியில் பெருந்தொகை பணத்தை அச்சிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 130 பில்லியன் ரூபாய்களும், ஜுலை மாதம் 213 பில்லியன் ரூபாய்களும் அச்சடிக்கப்பட்டிருந்தன. கடந்த வருடம் இலங்கை அரசு மொத்தமாக 825 பில்லியன் ரூபாய்களை (ஏறத்தாழ 4 பில்லியன் டொலர்கள்) அச்சிட்டுள்ளது.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கை அதன் பொருளாதாரத்தில் நீண்டகால பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதுடன், இலங்கை அரசு முழுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் நிலையும் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஒழுக்காற்று காரணிகளின் அடிப்படையிலேயே சுசில் பதவி நீக்கம் – நாமல்

ஒழுக்காற்று காரணிகளை கருத்திற் கொண்டே பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன் மர்சித்துள்ள ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள் குறித்து எதிர்வரும் நாட்களில் உரிய தீர்மானம் எடுக்கப்படும். ரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களில் குறைப்பாடுகள் காணப்படலாம். றைகளை சுட்டிக்காட்டும் பொறுப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு.

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்ட முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.பொது இடங்களில் கருத்துரைக்கும் போது தவறான நிலைப்பாடுகள் தோற்றம் பெறும்.அமைச்சரவை உறுப்பினர்கள் மாத்திரமல்ல ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் அனைவரும் கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை இல்லை – உதய கம்மன்பில

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இல்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில இன்று (04) தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தலை நடத்துமாறு எந்தவொரு வௌிநாட்டின் அழுத்தமும் நாட்டிற்கு இல்லை என அமைச்சர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

எனது பதவி நீக்கம் பெரும் அரசியல் திருப்பு முனைக்கு வழிவகுக்கும் – சுசில் பிரேமஜயந்த

இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டமை எதிர்கால அரசியலுக்கு சிறந்த ஆசிர்வாதமாக அமையும். மக்கள் ஆதரவுடன் பாராளுமன்றிற்கு தெரிவானேன். ஒருமுறை கூட தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லவில்லை.

மூன்று ஜனாதிபதிகளின் நிர்வாகத்தின் கீழ் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளேன். இராஜாங்க அமைச்சு பதவி நீக்கப்பட்டமை பெரியதொரு விடயமல்ல என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமயந்த குறிப்பிட்டார்.

மேலும் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக பிரதமரை நீக்கும் அதிகாரம் கூட ஜனாதிபதிக்கு உள்ளது.

எனவே அந்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்த முடியாது என்றாலும் பெரும் அரசியல் திருப்பு முனைக்கு வழிவகுக்கும் என்பதில் ஜயமில்லை என்றும் குறிப்பிட்டார்.

தொலைநோக்கு கல்வி இராஜாங்க அமைச்சுக்கு நேற்று காலை வருகை தந்து வெளியேறுகையில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விக்கு அவர் வழங்கிய பதில் வருமாறு

கேள்வி ; பதவி நீக்கத்திற்கான காரணம் என்ன ?

பதில் ; தொலைநோக்கு கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கபபட்டுள்ளேன் என்பதை அறிந்துக் கொண்டேன்.இது பெரியதொரு விடயமல்ல.2000ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவுடன் அமைச்சு பதவி கிடைக்கப் பெற்றது.

3 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளின் நிர்வாகத்தின் கீழ் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளேன்.நான் சட்டத்தரணி நாளை முதல் தொழிற்துறை நடவடிக்கையில் ஈடுப்படுவேன்.

கேள்வி ; பதவி நீக்கம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதா ?

பதில் ; இல்லை பதவி நீக்கப்பட்டதாக காலையில் ( நேற்று) ஊடகங்கள் வாயிலாக அறிந்துக் கொண்டேன்.நிறைவேற்று துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி விரும்பிய ஒருவரை பதவிக்க நியமிக்கவும்,பதவி நீக்கவும் முடியும்.பதவி நீக்கத்திற்கான காரணம் கூற வேண்டிய அவசியம் தேவையில்லை.

கேள்வி ; பதவி நீக்கத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என கருதுகிறீர்கள்?

பதில் ; கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தைக்கு சென்றிருந்த வேளை ஊடகவியலாளர்கள் என்னிடம் மரக்கறிகளின் விலை வாழ்க்கை செலவு உயர்வு குறித்து வினவினார்கள்.பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 1200 ரூபாவிற்கு விற்கப்படுகிறது அதற்கான காரணம் என்ன என்று வினவினார்கள்.விவசாயத்துறை அமைச்சு தோல்வி,விவசாயத்துறை தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை தோல்வி என மக்களின் தரப்பில் இருந்து கருத்துரைத்தேன்.

கேள்வி ; அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அமைச்சர்கள் அரசாங்கத்தை விமர்சிக்கிறார்கள் .அவர்கள் ஏன் பதவி நீக்கப்படவில்லை ?

பதில் ; நான் சந்தையில் குறிப்பிட்ட விடயம் அமைச்சரவையில் பேசப்பட்டுள்ளது என்று கருதுகிறேன்.கல்வி தகைமைக்கு அமைய நலன்புரி தொழிலாளராக முடியாதவர்களுக்கு கல்வியின் பெறுமதி பற்றி தெரியாது.

கேள்வி ; உங்களை பதவி விலக்கி அரசாங்கம் எதனை செய்ய போகிறது ?

பதில் ; அரசாங்கத்திற்கு நான் சிரேஷ்ட அரசியல்வாதியாக இல்லாமலிருக்கலாம் ஆனால் நான் மக்களுக்கு சிரேஷ்ட அரசியல்வாதி.அரசியலில் எனக்கான கடமையினை முறையாக நிறைவேற்றியுள்ளேன்.பதவி நீக்கம் எதிர்கால அரசியலுக்கான ஆசிர்வாதமாக அமையும்.

கேள்வி ; ஜனாதிபதி இவ்வாறான தீர்மானத்தை எடுப்பார் என எதிர்பார்த்தீர்களா ?

பதில் ; அவ்வாறு தீர்மானம் எடுக்காமலிருந்தால் தான் பிரச்சினை.தற்போதைய பொருளாதார முகாமைத்துவத்திற்கமைய நாடு எதனை நோக்கி செல்கிறது என்பதை அறிய முடிகிறது.அது தொடர்பிலும், மக்கள் தொடர்பிலும் கருத்துரைப்பது அவசியமாகும்.மக்கள் எதிர்க்கொள்ளும் அடிப்படை பிரச்சினை குறித்து கவனம் செலுத்தவே மக்கள் எம்மை தெரிவு செய்கிறார்கள்.மக்களுக்காகவே கருத்துரைத்தேன்.

கேள்வி ; எதிர்கால அரசியல் எவ்வாறு அமையும்.

பதில் ; அரசியலில் இருந்து நான் புறக்கணிக்கப்படவில்லை.1991ஆம் ஆண்டு கோட்டை நகரசபையில் இருந்து சுதந்திர கட்சி ஊடாக எனது அரசியல் பயணம் ஆரம்பமானது.கூட்டணியின் செயலாளராக 11 வருடகாலம் பதவி வகித்துள்ளேன்.மூன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளின் நிர்வாகத்தில் கூட்டணியை ஒழுங்குப்படுத்தியுள்ளேன்.தேர்தலில் போட்டியிட்டு மக்கள் ஆதரவுடன் பாராளுமன்றிற்கு தெரிவானேன்.ஒரு முறை கூட தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லவில்லை.என்றார்.

Posted in Uncategorized

பொது இணக்க ஆவணம் தயாரிக்க தமிழ்ப் பேசும் கட்சிகள் உடன்பாடு!

இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள், எதிர்பார்ப்புகளை ஒன்றுபட்டுப் பிரதிபலிக்கும் பொது ஆவணம் ஒன்றை மேலும் காலம் தாழ்த்தாமல் விரைந்து தயாரித்து முடிப்பது என்ற இணக்கப்பாட்டுக்கு தமிழ்ப் பேசும் மக்களின் கட்சித் தலைவர்கள் வந்துள்ளனர்.

தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் அவரின் இல்லத்தில் நேற்று (31) மாலை 6 மணி முதல் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்குபற்றிய ரவூப் ஹக்கீம் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்), மனோ கணேசன் (தமிழ் முற்போக்குக்குக் கூட்டணி), எம்.ஏ.சுமந்திரன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ),தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சார்பில் இச்செயற்பாட்டின் ஒருங்கிணைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்) ஆகியோர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தின் தீர்மானங்கள் குறித்து சுமந்திரன் வெளியிட்ட தகவல்கள் வருமாறு,

“ஐக்கியமாக நாங்கள் தொடர்ந்து செயற்பட வேண்டும் என்பதில் நம் அனைவருக்கும் இடையில் ஒத்த நிலைப்பாடு இருந்தது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. நாம் ஒன்றுபட்டு செயற்படுவது முக்கியம் என எல்லோரும் வலியுறுத்தினர்.

எல்லாத் தரப்பினருக்கும் இருக்கும் கரிசனைகளைக் கருத்தில் எடுத்து, இந்த ஆவணத் தயாரிப்பை வெகுவிரைவில் ஓர் இணக்கப்பாட்டுடன் நாம் முடிவுக்குக் கொண்டு வந்து, அதை வெளிப்படுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பில் காலம் கடந்தாமல் துரிதமாகப் செயற்படுவதற்காக இன்று (1) முற்பகல் 11 மணிக்கு சுமந்திரன் இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் சிலர் திரும்பவும் கூடி இந்த ஆவணத்தை இறுதி செய்யும் செயற்பாட்டை முன்னெடுக்கத் தீர்மானித்து உள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனவரியில் மீண்டும் இந்தியா செல்கிறார் பசில்

விடுமுறைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

பூகோள மாநாட்டிற்காக இந்தியா செல்லும் நிதியமைச்சர் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக உரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது டிசம்பர் முதலாம் திகதி பசில் ராஜபக்ஸ இந்தியா சென்றிருந்தார்.

இந்த விஜயத்தின்போது திருகோணமலை எரிபொருள் களஞ்சியசாலையின் நவீனமயமாக்கல் , எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள நான்கு நிவாரணங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

Posted in Uncategorized

நல்லூர் ஆலயத்தில் இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை

நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை இன்று ஆலய நிர்வாக அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு ஆலய முகப்பில் சால்வை வழங்கப்படும் நடைமுறையே இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆலயத்துக்கு சால்வையை அணிந்து சென்று வழிபாடுகள் நிறைவடைந்த பின்னர் அதனை பை ஒன்றிலிட்டு வழங்கப்பட்ட இடத்திலுள்ள பெட்டியில் மீள வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.

ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடைமுறை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இளஞ்செழியன் வடக்கிற்கு இடமாற்றம்!

அடுத்தாண்டுக்கான வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் அமுலுக்கு வரவுள்ளது.

தலைமை நீதியரசரினால் வழங்கப்படும் இந்த இடம்மாற்றம் எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

பஷில் பிரதமரானால் ஆளும் கூட்டணிக்குள் பாரிய பிளவு ஏற்படும் – வாசுதேவ நாணயக்கார

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இவ்வருடம் முதல் முறையாக செயற்படுத்த எதிர்பார்த்துள்ளோம். நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்கவுள்ளார் என வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும். அவ்வாறு நிகழ்ந்தால் அது கூட்டணிக்குள் பாரிய பிளவினை ஏற்படுத்தும் என நீர்வழங்கல்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கடந்த 2 வருடகாலமாக நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தியுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இரண்டு வருடங்களும் கொவிட் தாக்கத்துடன் நிறைவடைந்தன.

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை கொவிட் தாக்க சவாலுக்கு மத்தியில் நிறைவேற்றியுள்ளோம்.இவ்வருடம் முதல் வாக்குறுதிகள் அனைத்தையும் பூரணப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்கவுள்ளார் என வெளியாகியுள்ள செய்தி பொய்யானது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நலமாகவுள்ளார். அவர் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறுவதற்கு அவசியமில்லை. நாட்டு மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தே 2019ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றால் அது கூட்டணிக்குள் பாரிய பிளவினை ஏற்படுத்தும்.யுகதனவி மின்நிலைய ஒப்பந்தம் தொடர்பில் அவருக்கும் பங்காளி கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சுமூகமான தன்மை கிடையாது.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளுக்கும், பிரதான ஆளும் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்கு இக்காலப்பகுதியிலாவது தீர்வு பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம் என்றார்.