இந்தியாவை நாடும் தமிழ் கட்சிகளின் முடிவு குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு !

இலங்கையின் மீது தேவையற்ற வகையில் ஆதிக்கம் செலுத்த எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு இந்திய அரசாங்கத்திடம் கோருவதற்கான எழுத்து மூலமான வரைவினை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில் இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சரிடம் கேள்வியெழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு சமூகத்திற்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்க உரிமை உள்ளது என்றும் போராட்டம் நடத்துவது என்பது ஜனநாயக உரிமை, அதை அரசாங்கம் மதிக்கிறது என கூறினார்.

அத்தோடு இலங்கை ஒரு சர்வாதிகார நாடு அல்ல என தெரிவித்த அவர் இறையாண்மையும் சுதந்திரமும் கொண்ட நாடு என்பதனால் வேறு நாடுகளினால் இங்கு ஆதிக்கம் செலுத்த முடியாது என அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்தியாவும் இலங்கையும் அண்டை நாடுகள் என்பதோடு பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையில் ஆரோக்கியமான உறவு காணப்படுவதாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

Posted in Uncategorized

வடக்கு கிழக்கு, மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளின் கூட்டம் கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது

வரலாற்றில் முதல் தடவையாக மிக முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு கிழக்கு, மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளின் கூட்டம் சம்பந்தன் தலைமையில் இன்று செவ்வாய் கிழமை(21/12/2021) காலை 11.00 மணிக்கு குளோபல் டவர் ஹோட்டலில் ரெலோவின் முன்னெடுப்பில் சிறப்புடன் ஆரம்பமாகியுள்ளது.

நவம்பர் 2 திண்ணையில் நடந்த சந்திப்பு மற்றும் கொழும்பில் குளோபல் டவர் ஹோட்டலில் நடந்த சந்திப்பின் தொடர்ச்சியாகவும் இக்கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

அரசியல் அமைப்பில் உள்ள 13 வது திருத்தத்தை முழுதாக நடைமுறைப்படுத்தி மாகாணசபை தேர்தல்கள் விரைவில் நடாத்தப்பட வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்த இந்திய அரசிடம் கோரிக்கை சமர்ப்பிக்கும் வரைபை இறுதி செய்யும் முயற்சியில் இக்கூட்டம் நடைபெறுகிறது.

நிபந்தனையின் அடிப்படையிலேயே 6.7 மில்லியன் டொலரை சீனாவுக்கு வழங்குகிறோம் – அரசாங்கம்

நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமையவே சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் டொலரை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு இலங்கைக்கு மீண்டும் உரிய தரத்திலான உரத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே குறித்த தொகையை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்ததாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

நாட்டில் பெரும் நெருக்கடிகளை மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் யாருடைய தவறின் காரணமாக சீன உரக்கப்பலுக்கு 6.7 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டி ஏற்பட்டது? என்று நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கேள்வியெழுப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமையவே சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் டொலரை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அமைய சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட தெளிவுபடுத்தல் மற்றும் வழிகாட்டலுக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் இரு தரப்பினரதும் நிலைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. இலங்கையின் தரத்திற்கு ஏற்ப மீண்டும் உரத்தை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே 6.7 மில்லியன் டொலரை செலுத்த தீர்மானிக்கப்பட்டது.

குறித்த உர நிறுவனத்தினால் ஏற்கனவே 5 மில்லியன் டொலர் பிணைமுறி வைப்பிடப்பட்டுள்ளது. அந்த பிணைமுறி விடுவிக்கப்படவில்லை.

இலங்கைக்கு மீண்டும் உரிய தரத்துடனான உரம் வழங்கப்பட்ட பின்னரே அந்த தொகை விடுவிக்கப்படும். சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கமையவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

எனவே எதிர்காலத்தில் உரிய தரத்துடனான உரம் கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கின்றோம். அதுவரையில் உர நிறுவனத்தினால் வைப்பிடப்பட்ட 5 மில்லியன் டொலர் வைப்பிலிருக்கும் என்று தெரிவித்தார்.

தமிழ்க்கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்துக்கு ரிஷாத்துக்கும் அழைப்பு

தமிழ்பேசும் தரப்புகளின் ஒற்றுமைப்பட்ட நிலைப்பாட்டிலான பொது ஆவணம் ஒன்றைத் தயாரித்து இந்தியப் பிரதமருக்கு அனுப்பும் நோக்கில் ரெலோ அமைப்பால் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடத்தப்படவிருக்கும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி கொழும்பிலும், அதற்கு முன்னர் யாழ்ப்பாணத்திலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டங்களில் முஸ்லிம்கள் தரப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்.

இப்போது ஆவணத்தை இறுதி செய்து ஒப்பமிடவிருக்கும் நிலையில் கடைசிச் சந்தர்ப்பத்தில் ரிஷாத்தும் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக ஜுலி சங் : அங்கீகரித்தது அமெரிக்க செனெட் சபை

இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவராக ஜுலி சங்கை நியமிப்பதற்கு ஜனாதிபதி ஜோபைடனால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை அமெரிக்க செனெட் சபை அங்கீகரித்துள்ளது.

ஜோ பைடனால் பரிந்துரை செய்யப்பட்ட இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

ஜுலி சங் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தில் மேற்கு ஹெமிஸ்பியர் விவகாரப் பணியகத்தின் பதில் உதவிச்செயலாளராகப் பணியாற்றியிருப்பதுடன் இராஜாங்கத்திணைக்களத்தில் ஜப்பானிய விவகார அலுவலகத்தின் பணிப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.

மேலும் கம்போடியாவின் ஃபோம் பென்னில் அமைந்துள்ள அமெரிக்கத்தூதரக விவகாரங்களுக்கான பிரதி தலைவராகவும் தாய்லாந்தின் பாங்கொக்கில் உள்ள அமெரிக்கத்தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் ஜுலி சங் செயற்பட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி கொலம்பியா, வியட்நாம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலுள்ள அமெரிக்கத்தூதரகங்களிலும் சீனாவிலுள்ள அமெரிக்க கொன்சியூலர் அலுவலகத்திலும் அவர் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

ஜுலி சாங் கலிபோர்னியா – சான்டியேகோ பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டத்தையும் சர்வதேச மற்றும் பொது விவகாரங்களுக்கான கொலம்பிய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

யாழ். காங்கேசன்துறை குமார கோவில் பிள்ளையார் சிலை மாயம்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை குமார கோவிலில் இருந்த பிள்ளையார் சிலையை காணவில்லை என காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆலய வளாகத்தினுள் விகாரை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

காங்கேசன்துறை குமார கோவில் பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காலப்பகுதியில் கோயில் வளாகத்தினுள் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பின்னர் அப்பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து , குமார கோவில் புனரமைக்கப்பட்டு , ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் கடந்த 09ஆம் திகதி இரவு ஆலயத்தில் இருந்த விநாயகர் சிலை இருப்பிடத்தில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க நகர்வுகளில் இலங்கையின் முயற்சிகள் குறித்து அமெரிக்கா கேள்வி

இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை இலக்காக கொண்டு இலங்கை அரசாங்கத்தினால் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் மற்றும் முன்னகர்வுகள் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதி அலுவலக சிரேஷ்ட உறுப்பினர் தூதுவர் மிட்செல் ஜி கொஷக் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் இரு தரப்பு நட்புறவு வேலைத்திட்டங்கள் குறித்தும் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க தெளிவுபடுத்தியுள்ளர்.

அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்கவிற்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதி அலுவலக சிரேஷ்ட உறுப்பினர் தூதுவர் மிட்செல் ஜி கொஷக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கடந்த வியாழக்கிழமை, இணையவழி கலந்துரையாடலாக இந்த உரையாடல் இடம்பெற்றிருந்த நிலையில், இலங்கையின் நல்லிணக்க பொறிமுறை, மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான முன்னகர்வுகள் குறித்து இலங்கையிடம் கேட்டறியப்பட்டுள்ளது.

யுத்தத்திற்கு பின்னரான இலங்கையின் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டங்கள், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் பொறிமுறையின் முன்னகர்வுகள் குறித்தும், நல்லிணக்கத்தை இலக்காக கொண்ட இலங்கையின் தற்போதைய நகர்வுகளின் முன்னேற்றம் மற்றும் அதற்கான முயற்சிகள் குறித்து உலகளாவிய குற்றவியல் நீதி அலுவலக சிரேஷ்ட உறுப்பினர் தூதுவர் மிட்செல் ஜி கொஷக் கேட்டறிந்துகொண்டுள்ளார்.

அதேபோல் நாட்டின் மனித உரிமைகளை பலப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது உலகளாவிய குற்றவியல் நீதி அலுவலக சிரேஷ்ட உறுப்பினர் தூதுவர் மிட்செல் ஜி கொஷக்கும் அவரது குழுவினரும் கவனம் செலுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டங்கள், தற்போதுள்ள கொவிட் நெருக்கடி நிலைமைகளில் அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நிதி நெருக்கடி நிலைமைகள் குறித்து இலங்கையின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ள அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க, நல்லிணக்கத்தையும் மனித உரிமைகளை பலப்படுத்தும் இலங்கையின் தற்போதைய முயற்சிகளின் முன்னேற்றகரமான சில வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், புதிய அரசியல் அமைப்பு உருவாக்க முயற்சிகள், பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான நெருக்கமான நட்புறவை முன்னெடுத்து செல்வது குறித்தும் அவர் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இராஜாங்க அமைச்சர் தவறிழைத்துள்ளார்! மாகாணசபை தேர்தல்களை பிற்போட முடியாது!

அமைச்சரவையின் தலையீட்டின் மூலம் மாகாணசபை தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது என தேர்தல் ஆணையாளர் நிமால் ஜி புஞ்சிவேவ தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தல்களை பிற்போடுமாறு அமைச்சரவை தேர்தல் ஆணையகத்தை கேட்டுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் எதுவும் சட்டத்தில் இல்லை எனவும் அவர் கூறினார்.

எனினும் உள்ளுராட்சி தேர்தல்களை பிற்போடலாம் எனவும் அவர் கூறினார். மாகாணசபைகளிற்கான தேர்தல்களை மேலும் ஒருவருட காலத்திற்கு பிற்போடுவதற்கான அனுமதியை கோரும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் தேர்தல் ஆணையாளர் இதனை கூறினார்.

தேர்தலை பிற்போடுவது தொடர்பான அமைச்சரவையின் முடிவை தேர்தல் ஆணையகத்திற்கு அறிவிக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மாகாணசபை தேர்தல்களை ஒத்திப்போடுவது தொடர்பாக அமைச்சரவை தீர்மானித்துள்ளது என தெரிவித்துள்ளதன் மூலம் இராஜாங்க அமைச்சர் தவறிழைத்துள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி வழக்கில் ரெலோ செயலாளர் நாயகம் ஜனா பா.உ நீதிமன்றத்தினால் பிணை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் ஜனா மற்றும் கலையரசன் உள்ளிட்டோர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரணியில் பொலிஸாரினால் பெறப்பட்ட நீதிமன்றத் தடையுத்தரவை மீறி கலந்து கொண்டமை தொடர்பில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா மற்றும் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் உள்ளிட்டோர் மீது திருக்கோவில் மற்றும் பொத்துவில் பொலிஸ் நிலையங்களினால் மேற்கொள்ளப்பட்ட வழக்கின் விசாரணை இன்றைய தினம் பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்றைய வழக்கு விசாரணையில் நீதிமன்ற அழைப்பாணையின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா, பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க அம்பாறை மாவட்டத் தலைவி செல்வராணி, சமூக செயற்பாட்டாளர் பிரதீபன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் சயனொளிபவன் உள்ளிட்டோர் ஆஜராகியிருந்த நிலையில் வழக்கு விசாரணை எதிர்வரும் 2022 மார்ச் மாதம் 02ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அவர்கள் பிணையில் செல்லவும் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது முடிவு மாத்திரமல்ல, ஆரம்பமும் தான் – மன்னாரில் சீன தூதுவர் தெரிவிப்பு

இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong வட மாகாணத்திற்கான பயணத்தை நிறைவு செய்யும் வகையில், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இராமர் பாலத்தை இன்று (17) கண்காணித்தார்.

அங்கு நியூஸ்ஃபெஸ்டிற்கு கருத்து தெரிவித்த அவர், இந்த விஜயம் முடிவாக மாத்திரமன்றி ஆரம்பமாகவும் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

மூன்று நாட்களாக வட மாகாணத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்ட இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong மன்னார் – தாழ்வுபாடு கடற்படை முகாமை இன்று முற்பகல் சென்றடைந்தார்.

அங்கிருந்து தமது தூதரக பிரதிநிதிகளுடன் கடற்படை படகுகளில் இராமர் பாலத்தை நோக்கி புறப்பட்டார்.

இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு தலைமை அதிகாரி கேர்ணல் காஓ பின், தலைமை அரசியல் அதிகாரி லூஓ ச்சொங் உள்ளிட்டவர்களும் தூதுவருடன் இந்த பயணத்தில் இணைந்திருந்தனர்.

கடற்படை முகாமிலிருந்து புறப்பட்டவர்கள் சுமார் ஒரு மணித்தியாலம் பயணித்து இராமர் பாலத்திற்கு அருகே சிறு படகொன்றில் ஏறினர்.

17 கடல் மைல் தொலைவிலுள்ள இராமர் பாலம் மணற்திட்டை சீன தூதுவர் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டனர்.

சுமார் 20 நிமிடங்களாக இராமர் பாலத்தில் இருந்த இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட் இராஜதந்திரிகள் பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர்.

மன்னார் – தாழ்வுபாடு பகுதியிலுள்ள கடற்படை முகாமிற்கு திரும்பிய சீனத் தூதுவரிடம் இந்த பயணம் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோது, ”இதுவே முடிவு, ஆனால் ஆரம்பமும் கூட” என பதிலளித்தார்.

தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை 32 கிலோமீட்டருக்குள் உள்ள 16 மணல் திட்டுக்களை கொண்ட பகுதி இராமர் பாலம் எனவும் ஶ்ரீ ராம்சேது என வணக்கத்திற்குரிய புனித பகுதியாகவும் பாரத மக்களால் போற்றப்படுகின்றது.

இந்த 16 மணல் திட்டுக்களில் 8 மணல் திட்டுக்கள் இலங்கைக்கும் எஞ்சிய 8 இந்தியாவிற்கும் உரியவையாகும்.

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக பிரகடனப்படுத்துவதில் பாரத பிரதமருக்கு உள்ள தடைகள் என்னவென ட்விட்டர் பதிவொன்றில் வினவியிருந்தார்.

இதனிடையே, மன்னாரிலுள்ள இராமர் சேது பகுதிக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் கடந்த மார்ச் மாதம் விஜயம் செய்திருந்தனர்.

இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.

இதனிடையே, இலங்கைக்கான சீனத் தூதுவர் மன்னார் – தாழ்வுபாடு பகுதியில் அமைந்துள்ள ரின் மீன் தயாரிப்பு தொழிற்சாலையையும் இன்று முற்பகல் பார்வையிட்டிருந்தார்.