கரைதுறைப்பற்று பிதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் நிறைவேற்றியது!

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேறியது.

கரைதுறைபற்று பிரதேச சபை மண்டபத்தில் குறித்த நிகழ்வு தவிசாளர் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது.

முன்னதாக ரெலோ மத்திய குழு உறுப்பினர் தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் வரவு – செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றினார்.

அதன் பின்னர் வாக்கெடுப்பு நடைபெற்றது.

உறுப்பினர்கள் 24 பேர் அங்கம் பெறும் குறித்த சபையின் இன்றைய அமர்வில் உறுப்பினர்கள் 04 பேர் சமூகமளிக்கவில்லை.

நடைபெற்ற வாக்கெடுப்பின் போது உறுப்பினர்கள் 29 பேர் சமூகமளித்திருந்த நிலையில் அனைவரும் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

இதனால் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேறியது.

Posted in Uncategorized

அடுத்த பாய்ச்சல் பற்றி மைத்திரிபாலவிடமிருந்து ஒரு குறிப்பு!

இந்த நாட்டின் அரசியலில் நேர்மையான, ஊழல் செய்யாத, மோசடி செய்யாத மற்றும் தேசபக்தியுள்ள மக்களை ஒன்றிணைப்பதன் மூலம் பரந்த வலிமைமிக்க படையொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அந்த சக்தியினூடாக நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (8) நடைபெற்ற ரணவிரு பிரதிபா பிரணாம விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அனைவரினதும் கூட்டமைப்பினால் 28வது முறையாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி, உரம், எரிவாயு மற்றும் பொருட்களின் விலைகள் தொடர்பில் ஒருவர் மீது ஒருவர் சுட்டிக் காட்டாமல் அரசாங்கம் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் விவசாயிகள் உரம் இன்றி மிகவும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, எங்கும் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

தற்போதுள்ள பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட்டு துன்பப்படும் நாட்டு மக்களுக்கான பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் எனவும், இது தொடர்பில் அரசாங்கத்திற்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கு தமது கட்சி நடவடிக்கை எடுக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

புத்தளம் உடப்பு பிரதேசத்தில் தமிழ் பிரதேச சபை ஒன்றினை உருவாக்கித் தருமாறு டக்ளஸிடம் கோரிக்கை!

புத்தளம் உடப்பு பிரதேசத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களை இணைத்து புதிய பிரதேச சபை ஒன்றினை உருவாக்கித் தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சிக் கட்டு பிதேச சபைத் தலைவர் தட்சணாமூர்த்தி தலைமையில் உடப்பு பிரதேச சமூக பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நேற்று (புதன்கிழமை) சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினர்.

இதன்போது, உடப்பை சூழவுள்ள பிரதேசத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், தமிழ் பிரதேச சபை ஒன்றினை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அத்துடன் உடப்பு கிராமத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் கடலரிப்பினை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மீனவர் இறங்குதுறை ஒன்றிற்கான தேவை இருப்பதனால் அதனை அமைத்துத் தருமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி தமிழ் பிரதேச சபையை உருவாக்குவதற்கான சாத்தியங்கள் பற்றி ஆராய்வதாக தெரிவித்ததுடன், கடலரிப்பு மற்றும் இறங்குதுறை போன்ற விடயங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொட நியமனம்

வடமேல் மாகாண ஆளுநராக Admiral of the Fleet வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த ராஜா கொல்லுரே உயிரிழந்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

Posted in Uncategorized

வாகன இறக்குமதி இல்லை – அரசு வேலை வாய்ப்பும் இல்லை!

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு வாகன இறக்குமதியை மேற்கொள்ளாமல் இருக்கவும் மற்றும் அரச சேவைக்கு புதிதாக ஊழியர்கள் இணைத்துக் கொள்ளாமல் இருக்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் நடைபெற்ற பால் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இதனை குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

இலங்கையிடம் $49.7 மில்லியன் கேட்கும் சீன நிறுவனம்

சீனாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த பசளை, பாதுகாப்பற்றது என்ற பின்னணியில் அதனை இலங்கை ஏற்க மறுத்துள்ளதுடன் 20,000 தொன் பசளை கொண்டு வந்த கப்பல் தற்போது கொழும்பிலிருந்து புறப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றில் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கை இவ்விவகாரத்தில் அநீதியாக நடந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கும் சீன நிறுவனமான Qingdao Seawin Biotech Group Co Ltd , இழப்பீடாக 49.7 மில்லியன் டொலர் கோரி சிங்கப்பூரிலும் இலங்கையிலும் சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

அபாயகரமான பக்டீரியாக்கள் கலந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டில் விவசாயிகளின் போராட்டடும் வெடித்திருந்த நிலையில் சீன நிறுவனத்தின் பசளையை இலங்கை ஏற்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கையேந்தும் நிலையில் முன்னாள் போராளிகள்! – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவர் செல்வம் எம்.பி. கவலை

“புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய வசதிகளை அரசு செய்துகொடுக்கவில்லை. இதனால் பலருக்கு கையேந்தி பிச்சையெடுக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது” என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சிறு கைத்தொழில் அல்லது வங்கிக் கடன் ஊவா தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.

இன்று வறுமையால் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். புனர்வாழ்வு பெற்ற சிலர் தற்கொலை செய்தும் கொண்டுள்ளனர். பலர் கையேந்தி பிச்சையெடுக்கும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்” – என்றார்.

Posted in Uncategorized

புதுடில்லி பயணத்தை சம்பந்தன் ஏன் பிற்போட்டார் என தெரியாது; கைவிரிக்கிறார் மாவை சேனாதிராசா

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தியப் பயணத்தை பிற்போடுமாறு தலைவர் இரா.சம்பந்தனே நேரடியாக இந்தியத் தூதரகத்திடம் கோரியுள்ளார். அவர் ஏன் அவ்வாறு கோரினார் என்பது எனக்கு தெரியாது. எனது மகனின் திருமணத்தை முன்னிட்டு கூட்டமைப்பின் இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக வெளிவரும் செய்திகள் பொய்யானவை. நான் பங்கேற்காவிட்டாலும் இந்த சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம் என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களிடம் நானே கோரியிருந்தேன்.”

இவ்வாறு தெரிவித்திருக்கிறார் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா.

கூட்டமைப்பின் இந்தியப் பயணம் பிற்போடப்பட்டமைக்கு மாவை சேனாதிராசாவின் மகனது திருமணம்தான் காரணம் எனவும், மாவை சேனாதிராசாவே இந்தப் பயணத்தை பிற்போடுமாறு சம்பந்தனிடம் கூறினார் என்று வெளியாகிய செய்திகள் குறித்து விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

புதுடில்லி பயணத்தை சம்பந்தன் ஏன் பிற்போட்டார் என்பது தெரியாது என்பதுடன் அது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-
கூட்டமைப்பின் இந்தியப் பயணம் முன்னரே திட்டமிட்ட ஒன்று. எனது மகனின் திருமணமும் முன்னரே திட்டமிடப்பட்டது. எனது மகனின் திருமணத்துக்காக இந்தியப் பயணத்தை ஒத்திப்போடுமாறு கோர நான் விரும்பியிருந்தால் அதனை தலைவர் சம்பந்தனிடம் முன்னரே கூறியிருப்பேன். கடைசி நேரத்தில் அதனை ஒத்திப்போடுமாறு கோரும் தேவை எனக்கு இல்லை.

எனது மகனின் திருமணத்துக்காக தமிழர் நலன் சார்ந்த விடயத்தை தள்ளிப்போடுமாறு கோரும் அளவுக்கு நான் சுயநலன் கொண்டவன் அல்லன்.

இந்தியப் பயணம் அறிவிக்கப்பட்டவுடன் அதில் என்னால் பங்கேற்கமுடியாது என்பதால் அங்கு நடக்கும் சந்திப்புக்களில் என்னென்ன விடயங்களை எடுத்துரைக்க வேண்டும் என்பது குறித்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் நான் பேசுவதற்கும் ஆயத்தம் செய்திருந்தேன்.

எனது மகனின் திருமணம் என்ற ஒன்றுக்காக தமிழ் மக்களின் நலன் சார்ந்த இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்றும் நான் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கு கூறியிருந்தேன்.

இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பு 7ஆம், 8ஆம் திகதிகளில்தான் நடைபெறவிருந்தது. எனது மகனின் திருமணம் 9ஆம் திகதியே நடைபெறுகின்றது. இந்த சந்திப்பில் நான் கட்டாயம் பங்கேற்கவேண்டும் என்று நினைத்திருந்தால் 7ஆம், 8ஆம் திகதிகளில் சந்திப்புகளில் பங்கேற்றுவிட்டு கூப்பிடு தூரத்தில் உள்ள இந்தியாவில் இருந்து உடனடியாக நாடு திரும்பி மகனின் திருமணத்திலும் பங்கேற்றிருப்பேன். ஆயினும் இந்த சந்திப்பில் நான் கட்டாயமாக பங்கேற்கவேண்டும் என்று நினைக்கவில்லை. அதனால்தான் அவர்களை சந்திப்பில் பங்கேற்கச் செல்லுமாறு கூறியிருந்தேன்.

இந்தியப் பயணத்தை ஒத்திப்போடுமாறு இரா. சம்பந்தனே இந்தியத் தூதரகத்துடன் தொடர்புகொண்டு கோரினார். அவர் ஏன் அப்படி கோரினார் என்பது எனக்கு தெரியாது.

நான் தான் இந்தப் பயணத்தை பிற்போடுமாறு கோரினேன் என வெளியாகும் தகவல்கள் பொய்யானவை” என்றார்.

பிபின் ராவத்: இந்தியாவின் முப்படை தலைமை தளபதி மரணம் – இந்திய விமானப்படை

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் இன்று பலியானார்.

அவர் பயணித்த ஹெலிகாப்டர் தமிழகத்தின் நீலகிரியில் இன்று வீழ்ந்து நொறுங்கியதில் அதிலிருந்த ஜெனரல் பிபின் ராவத், அவரது பாரியார் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்திய பிரமுகர்கள் பயணிக்கும் ஹெலிகாப்டர் அணியை சேர்ந்த Mi-17V5 ரக ஹெலிகாப்டர் இன்று நண்பகல் 12.20 அளவில் விபத்திற்குள்ளானது.

புது டெல்லியில் உள்ள இந்திய இராணுவ தலைமையகத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த விமானம் தமிழகத்தின் நீலகிரி பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது தீப்பிடித்து எரிந்து வீழ்ந்துள்ளது.

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது பாரியார் , பணிக்குழு உறுப்பினர்கள் சிலர், 5 விமானப் பணியாளர்கள் உள்ளிட்ட 14 பேர் விமானத்தில் இருந்தமை தெரியவந்துள்ளது.

நீலகிரி மலையிலுள்ள வெலிங்டன் பதுகாப்பு சேவைகள் கல்லூரியில் உரையாற்றுவதற்காகவே பிபின் ராவத் சென்றுகொண்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தரையிறக்கப்படுவதற்கு 10 நிமிடங்கள் இருந்தபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் வெலிங்டன் இராணுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இவர் ஹெலிகாப்டரை செலுத்தியவராக இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதியாக பதவியேற்ற ஜெனரல் பிபின் ராவத், இராணுவ உறவுகள் திணைக்களத்தின் தலைவராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

இன்று விபத்துக்குள்ளான MI-17 V5 ரக ஹெலிகாப்டர் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டதாகும். இது அதிநவீன வசதிகளைக் கொண்ட ஹெலிகாப்டராக கருதப்படுகிறது.

10 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் ஒருவரை அமைச்சு ஏன் தொடர்ந்தும் வைத்திருக்கின்றது – ரெலோ செயலாளர் நாயகம் ஜனா

புவி சரிதவியல் திணைக்களத்தின் முகாமையாளராக மட்டக்களப்பு மாவட்டத்திலே 10 வருடங்களுக்கும் மேலாக ஒருவர் கடமையாற்றிக்கொண்டிருக்கின்றார். 10 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் ஒருவரை அமைச்சு ஏன் தொடர்ந்தும் வைத்திருக்கின்றது என்பது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சுற்றாடல் அமைச்சு தொடர்பில் கேள்வி ஒன்றை முன்வைத்தபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

மணல் அகழ்வு என்பது இந்த நாட்டில் பாரிய கொள்ளைச் சம்பவமாகவே இடம்பெறுகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஒரு நாளைக்கு 500க்கும் மேற்பட்ட லொறிகளில் மணல் மாவட்டத்தை விட்டு வெளியேறுவது மாத்திரமல்லாது ரயில் மூலமாகவும் மணல் மாவட்டத்தை விட்டு வெளியேறுகின்றது.

புவி சரிதவியல் திணைக்களத்தின் முகாமையாளராக மட்டக்களப்பு மாவட்டத்திலே 10 வருடங்களுக்கும் மேலாக ஒருவர் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார். அரச திணைக்களங்களிலே உயர் அதிகாரிகள் கடமையாற்றும் போது 5 வருடங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் அந்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது இந்த நாட்டின் வழமையாக இருக்கின்றது.

இந்த புவி சரிதவியல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எப்படி 10 வருடங்களுக்கும் மேலாக ஒரு மாவட்டத்திலே கடமையாற்றுகின்றார்? அரசியல் செல்வாக்குடன் அவர் கடமையாற்றுகின்றார் என்றால் அந்த அரசியல் செல்வாக்கை செலுத்துபவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட அனுமதிப் பத்திரங்களை வைத்திருக்கின்றனர்.

அந்த வகையில் புவி சரிதவியல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளராக 10 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் ஒருவரை நீங்கள் ஏன் தொடர்ந்தும் வைத்திருக்கின்றீர்கள் என்பது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் நான் ஏற்கனவே உங்களிடம் கூறிய போது நீங்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தீர்கள். ஆனால் இதுவரை இதுதொடர்பில் அங்கு எந்த வித முன்னேற்றமான நடவடிக்கையும் இடம்பெறவில்லை. எனவே இது தொடர்பில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.