வாகன இறக்குமதி இல்லை – அரசு வேலை வாய்ப்பும் இல்லை!

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு வாகன இறக்குமதியை மேற்கொள்ளாமல் இருக்கவும் மற்றும் அரச சேவைக்கு புதிதாக ஊழியர்கள் இணைத்துக் கொள்ளாமல் இருக்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் நடைபெற்ற பால் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இதனை குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

இலங்கையிடம் $49.7 மில்லியன் கேட்கும் சீன நிறுவனம்

சீனாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த பசளை, பாதுகாப்பற்றது என்ற பின்னணியில் அதனை இலங்கை ஏற்க மறுத்துள்ளதுடன் 20,000 தொன் பசளை கொண்டு வந்த கப்பல் தற்போது கொழும்பிலிருந்து புறப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றில் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கை இவ்விவகாரத்தில் அநீதியாக நடந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கும் சீன நிறுவனமான Qingdao Seawin Biotech Group Co Ltd , இழப்பீடாக 49.7 மில்லியன் டொலர் கோரி சிங்கப்பூரிலும் இலங்கையிலும் சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

அபாயகரமான பக்டீரியாக்கள் கலந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டில் விவசாயிகளின் போராட்டடும் வெடித்திருந்த நிலையில் சீன நிறுவனத்தின் பசளையை இலங்கை ஏற்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கையேந்தும் நிலையில் முன்னாள் போராளிகள்! – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவர் செல்வம் எம்.பி. கவலை

“புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய வசதிகளை அரசு செய்துகொடுக்கவில்லை. இதனால் பலருக்கு கையேந்தி பிச்சையெடுக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது” என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சிறு கைத்தொழில் அல்லது வங்கிக் கடன் ஊவா தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.

இன்று வறுமையால் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். புனர்வாழ்வு பெற்ற சிலர் தற்கொலை செய்தும் கொண்டுள்ளனர். பலர் கையேந்தி பிச்சையெடுக்கும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்” – என்றார்.

புதுடில்லி பயணத்தை சம்பந்தன் ஏன் பிற்போட்டார் என தெரியாது; கைவிரிக்கிறார் மாவை சேனாதிராசா

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தியப் பயணத்தை பிற்போடுமாறு தலைவர் இரா.சம்பந்தனே நேரடியாக இந்தியத் தூதரகத்திடம் கோரியுள்ளார். அவர் ஏன் அவ்வாறு கோரினார் என்பது எனக்கு தெரியாது. எனது மகனின் திருமணத்தை முன்னிட்டு கூட்டமைப்பின் இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக வெளிவரும் செய்திகள் பொய்யானவை. நான் பங்கேற்காவிட்டாலும் இந்த சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம் என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களிடம் நானே கோரியிருந்தேன்.”

இவ்வாறு தெரிவித்திருக்கிறார் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா.

கூட்டமைப்பின் இந்தியப் பயணம் பிற்போடப்பட்டமைக்கு மாவை சேனாதிராசாவின் மகனது திருமணம்தான் காரணம் எனவும், மாவை சேனாதிராசாவே இந்தப் பயணத்தை பிற்போடுமாறு சம்பந்தனிடம் கூறினார் என்று வெளியாகிய செய்திகள் குறித்து விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

புதுடில்லி பயணத்தை சம்பந்தன் ஏன் பிற்போட்டார் என்பது தெரியாது என்பதுடன் அது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-
கூட்டமைப்பின் இந்தியப் பயணம் முன்னரே திட்டமிட்ட ஒன்று. எனது மகனின் திருமணமும் முன்னரே திட்டமிடப்பட்டது. எனது மகனின் திருமணத்துக்காக இந்தியப் பயணத்தை ஒத்திப்போடுமாறு கோர நான் விரும்பியிருந்தால் அதனை தலைவர் சம்பந்தனிடம் முன்னரே கூறியிருப்பேன். கடைசி நேரத்தில் அதனை ஒத்திப்போடுமாறு கோரும் தேவை எனக்கு இல்லை.

எனது மகனின் திருமணத்துக்காக தமிழர் நலன் சார்ந்த விடயத்தை தள்ளிப்போடுமாறு கோரும் அளவுக்கு நான் சுயநலன் கொண்டவன் அல்லன்.

இந்தியப் பயணம் அறிவிக்கப்பட்டவுடன் அதில் என்னால் பங்கேற்கமுடியாது என்பதால் அங்கு நடக்கும் சந்திப்புக்களில் என்னென்ன விடயங்களை எடுத்துரைக்க வேண்டும் என்பது குறித்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் நான் பேசுவதற்கும் ஆயத்தம் செய்திருந்தேன்.

எனது மகனின் திருமணம் என்ற ஒன்றுக்காக தமிழ் மக்களின் நலன் சார்ந்த இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்றும் நான் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கு கூறியிருந்தேன்.

இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பு 7ஆம், 8ஆம் திகதிகளில்தான் நடைபெறவிருந்தது. எனது மகனின் திருமணம் 9ஆம் திகதியே நடைபெறுகின்றது. இந்த சந்திப்பில் நான் கட்டாயம் பங்கேற்கவேண்டும் என்று நினைத்திருந்தால் 7ஆம், 8ஆம் திகதிகளில் சந்திப்புகளில் பங்கேற்றுவிட்டு கூப்பிடு தூரத்தில் உள்ள இந்தியாவில் இருந்து உடனடியாக நாடு திரும்பி மகனின் திருமணத்திலும் பங்கேற்றிருப்பேன். ஆயினும் இந்த சந்திப்பில் நான் கட்டாயமாக பங்கேற்கவேண்டும் என்று நினைக்கவில்லை. அதனால்தான் அவர்களை சந்திப்பில் பங்கேற்கச் செல்லுமாறு கூறியிருந்தேன்.

இந்தியப் பயணத்தை ஒத்திப்போடுமாறு இரா. சம்பந்தனே இந்தியத் தூதரகத்துடன் தொடர்புகொண்டு கோரினார். அவர் ஏன் அப்படி கோரினார் என்பது எனக்கு தெரியாது.

நான் தான் இந்தப் பயணத்தை பிற்போடுமாறு கோரினேன் என வெளியாகும் தகவல்கள் பொய்யானவை” என்றார்.

Posted in Uncategorized

பிபின் ராவத்: இந்தியாவின் முப்படை தலைமை தளபதி மரணம் – இந்திய விமானப்படை

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் இன்று பலியானார்.

அவர் பயணித்த ஹெலிகாப்டர் தமிழகத்தின் நீலகிரியில் இன்று வீழ்ந்து நொறுங்கியதில் அதிலிருந்த ஜெனரல் பிபின் ராவத், அவரது பாரியார் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்திய பிரமுகர்கள் பயணிக்கும் ஹெலிகாப்டர் அணியை சேர்ந்த Mi-17V5 ரக ஹெலிகாப்டர் இன்று நண்பகல் 12.20 அளவில் விபத்திற்குள்ளானது.

புது டெல்லியில் உள்ள இந்திய இராணுவ தலைமையகத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த விமானம் தமிழகத்தின் நீலகிரி பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது தீப்பிடித்து எரிந்து வீழ்ந்துள்ளது.

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது பாரியார் , பணிக்குழு உறுப்பினர்கள் சிலர், 5 விமானப் பணியாளர்கள் உள்ளிட்ட 14 பேர் விமானத்தில் இருந்தமை தெரியவந்துள்ளது.

நீலகிரி மலையிலுள்ள வெலிங்டன் பதுகாப்பு சேவைகள் கல்லூரியில் உரையாற்றுவதற்காகவே பிபின் ராவத் சென்றுகொண்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தரையிறக்கப்படுவதற்கு 10 நிமிடங்கள் இருந்தபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் வெலிங்டன் இராணுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இவர் ஹெலிகாப்டரை செலுத்தியவராக இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதியாக பதவியேற்ற ஜெனரல் பிபின் ராவத், இராணுவ உறவுகள் திணைக்களத்தின் தலைவராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

இன்று விபத்துக்குள்ளான MI-17 V5 ரக ஹெலிகாப்டர் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டதாகும். இது அதிநவீன வசதிகளைக் கொண்ட ஹெலிகாப்டராக கருதப்படுகிறது.

Posted in Uncategorized

10 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் ஒருவரை அமைச்சு ஏன் தொடர்ந்தும் வைத்திருக்கின்றது – ரெலோ செயலாளர் நாயகம் ஜனா

புவி சரிதவியல் திணைக்களத்தின் முகாமையாளராக மட்டக்களப்பு மாவட்டத்திலே 10 வருடங்களுக்கும் மேலாக ஒருவர் கடமையாற்றிக்கொண்டிருக்கின்றார். 10 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் ஒருவரை அமைச்சு ஏன் தொடர்ந்தும் வைத்திருக்கின்றது என்பது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சுற்றாடல் அமைச்சு தொடர்பில் கேள்வி ஒன்றை முன்வைத்தபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

மணல் அகழ்வு என்பது இந்த நாட்டில் பாரிய கொள்ளைச் சம்பவமாகவே இடம்பெறுகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஒரு நாளைக்கு 500க்கும் மேற்பட்ட லொறிகளில் மணல் மாவட்டத்தை விட்டு வெளியேறுவது மாத்திரமல்லாது ரயில் மூலமாகவும் மணல் மாவட்டத்தை விட்டு வெளியேறுகின்றது.

புவி சரிதவியல் திணைக்களத்தின் முகாமையாளராக மட்டக்களப்பு மாவட்டத்திலே 10 வருடங்களுக்கும் மேலாக ஒருவர் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார். அரச திணைக்களங்களிலே உயர் அதிகாரிகள் கடமையாற்றும் போது 5 வருடங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் அந்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது இந்த நாட்டின் வழமையாக இருக்கின்றது.

இந்த புவி சரிதவியல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எப்படி 10 வருடங்களுக்கும் மேலாக ஒரு மாவட்டத்திலே கடமையாற்றுகின்றார்? அரசியல் செல்வாக்குடன் அவர் கடமையாற்றுகின்றார் என்றால் அந்த அரசியல் செல்வாக்கை செலுத்துபவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட அனுமதிப் பத்திரங்களை வைத்திருக்கின்றனர்.

அந்த வகையில் புவி சரிதவியல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளராக 10 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் ஒருவரை நீங்கள் ஏன் தொடர்ந்தும் வைத்திருக்கின்றீர்கள் என்பது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் நான் ஏற்கனவே உங்களிடம் கூறிய போது நீங்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தீர்கள். ஆனால் இதுவரை இதுதொடர்பில் அங்கு எந்த வித முன்னேற்றமான நடவடிக்கையும் இடம்பெறவில்லை. எனவே இது தொடர்பில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

வவுனியா வடக்கில் பாதீடு தோல்வி: நல்லூரில் நிறைவேறியது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு இரண்டாவது தடவையாகவும் இன்று (7) தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு கடந்த மாதம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அது மீள் திருத்தம்செய்யப்பட்டு இன்றைய தினம் சபை தவிசாளர் எஸ்.தணிகாசலத்தால் சபையில் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து பாதீடு தொடர்பான வாதங்கள் இடம்பெற்றதுடன், பாதீடு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேட்சைக் குழு உள்ளடங்கிய 17 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினருமாக 9 பேர் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதன்படி 9 மேலதிக வாக்குகளால் வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகத் தோற்கடிக்கப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆளுகைக்கு உட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரனால் அடுத்த வருடத்திற்கான பாதீடு இன்று சபையில் முன்வைக்கப்பட்டது.

இதன்போது குறித்த பாதீட்டுக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 4 உறுப்பினர்களும், சுயேச்சை குழுவின் 2 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என 12 பேர் பாதீட்டுக்கு ஆதரவளித்திருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்களுமாக 8 பேர் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியத்தை இணங்கச்செய்யுமா சிறிலங்கா? தப்பிக்க வழி கூறும் நிசாந்த டி மெல்

சர்வதேச நாணய நிதியத்தை இணங்கச்செய்யும் பொருளாதார திட்டத்தை சிறிலங்கா வகுக்க வேண்டும் என்கிறார் வெரைட்டே ஆய்வகத்தின் தலைவர் நிசாந்த டி மெல்(Nishantha de Mel).

கொழும்பைத் தளமாக கொண்டு இயங்கும் புத்திஜீவிகள் அமைப்பான, வெரைட்டே ஆய்வகத்தின் தலைவரான இவர், சிறிலங்கா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “ஒருவர் வங்கியில் கடன் பெறச் செல்லும் போது, அவரது வணிகத்துக்கான திட்டத்தை அவரே தயாரிக்க வேண்டும் எனும் தன்மையே உள்ளது.

அதனை விடுத்து கடன் தருநரை வணிகத் திட்டத்தை தயாரிக்கச் செய்து, அந்தத் திட்டம் தமக்கு பொருந்தாது என்று புலம்பக் கூடாது.

அவ்வாறே சிறிலங்காவும் தமது பொருளாதாரத் திட்டத்தை நிபுணர்களைக் கொண்டு தயாரித்து, அதற்கு சர்வதேச நாணய நிதியத்தை இணங்கச் செய்ய வேண்டும்.

மாறாக சிறிலங்காவின் பொருளாதார விடயங்கள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தை தீர்மானிக்க, ஒருபோதும் விடக் கூடாது” என்றார்.

முல்லைத்தீவு காணிகளை வனவள திணைக்களம் கையகப்படுத்த நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் 23,803 ஏக்கர் காணியை வனவள திணைக்களம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நேற்றைய (05) வீரகேசரி வார வௌியீட்டில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கான கடிதம் முல்லைத்தீவு மாவட்ட வனவள அலுவலரான எஸ்.ஜி. சுனில் ரஞ்சித், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் விமலநாதனுக்கு அனுப்பியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் காடு ​பேணல் சட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக ஒதுக்க காடுகளான பகுதிகளின் விபரங்களை பொது மக்களுக்கு வழங்குவதுடன் மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரப்படுவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 15,688 ஏக்கர்களும் நட்டாங்கண்டல் பகுதியில் 678 ஏக்கரும் கையகப்படுத்தப்படவுள்ளதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் கல்விளான் பகுதியில் 5,006 ஏக்கர் காணியும் அமைதிபுரத்தில் 2,431 ஏக்கர் காணியும் வனவள திணைக்களத்தால் கையகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கடிதத்தின் பிரதி முல்லைத்தீவு, ஒலுமடு வட்டார வன அதிகாரிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சிகளின் சுயநலத்தின் அடிப்படையில் தான் உள்ளூராட்சி சபைகள் தோற்கடிக்கப்படுகின்றன – சுரேஷ்

கட்சிகளின் சுயநலத்தின் அடிப்படையில் தான் அவை தோற்கடிக்கப்படுகிறது. தங்களின் கட்சி சார்ந்த தேவைகளுக்காக தோற்கடிக்கின்றார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், ”உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்களின் செயற்பாடுகளில் பிழைகளை கண்டு இருக்கலாம் அல்லது அவர்கள் நன்றாக செயற்படுகிறார்கள் என மக்கள் மத்தியில் அபிப்பிராயங்கள் ஏற்பட்டு இருக்கலாம். இவற்றை உடைக்க வேண்டும் ஆயின் அவர்களை தோற்கடிக்க வேண்டும்.

கட்சிகளின் சுயநலத்தின் அடிப்படையில் தான் அவை தோற்கடிக்கப்படுகிறது. தங்களின் கட்சி சார்ந்த தேவைகளுக்காக தோற்கடிக்கின்றார்கள்.

உள்ளூராட்சி சபைகளின் காலம் வருகின்ற ஏப்ரல் மாதமளவில் முடிவடையவுள்ள நிலையில், அதனை 6 மாத காலப்பகுதிக்கோ , ஒரு வருட கால பகுதிக்கோ அந்த சபைகளை நீடிக்க கூடும் என நிச்சயமாக நம்புகிறேன். ஏனெனில் இன்றைய கள சூழலில் அரசாங்கம் புதிய தேர்தலை நடத்தும் நிலைக்கு போக மாட்டாது.

ஆகவே அவ்வாறான சூழலில் உள்ளூராட்சி சபைகளை தோற்கடித்து ஆங்காங்கு ஆணையாளரின் கீழ் சபைகள் கொண்டுவரப்படுமாயின் , அதைப்போல ஒரு மோசமான நிலை இருக்காது. எனவே மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் இருப்பது.

வடக்கு மாகாண சபை இல்லாததால் , ஆளுநர்கள் வந்து என்ன செய்கிறார்கள் என கண்களால் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அதேபோல உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டு இந்த கதி ஏற்படுமாயின் , ஒட்டுமொத்தமாக அரசாங்கம் தான் விரும்பியதை செய்யும். அதற்கு நாங்கள் களம் அமைத்து கொடுத்தவர்களாக இருப்போம். ஆகவே இதொரு சரியான நடவடிக்கை இல்லை” என தெரிவித்தார்.