இந்திய நிதியமைச்சருடன் பசில் ராஜபக்ஸ கலந்துரையாடல்

இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை புது டெல்லியில் சந்தித்த அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்த விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புகளில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

பொருளாதார ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டங்களினூடாக பல வழிகளிலும் இலங்கை வழங்கிய உதவிகளுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ நன்றி தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

உடன் அமுலுக்கு வரும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்

உடன் அமுலுக்கு வரும் வரை மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில காலங்களாக மட்டக்களப்பு மாநகரசபையில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு மத்தியில் இன்றைய தினம் புதிய ஆணையாளர் ஒருவர் கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில காலமாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளராகப் பதவி வகித்த மா.தயாபரனுக்கு பதிலாக புதிய ஆணையாளராக ந.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களுடன் பிரதமர் சந்திப்பு

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலில் நேற்றிரவு இந்த சந்திப்பு நடைபெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

COVID-19 தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட துரித செயற்பாட்டிற்கு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இதன்போது பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமிய நாடுகளுடனான இருதரப்பு உறவை தொடர்ந்து பேணுதல் மற்றும் பரஸ்பர செயற்பாடுகள், திட்டங்கள் ஊடாக இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிப்பு செய்தல் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பினை தொடர்ச்சியாக எதிர்பார்ப்பதாக இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் 15 தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஓமான், பாலஸ்தீனம், குவைத், சவுதி அரேபியா, மலேசியா, கட்டார், துருக்கி, ஈரான், லிபியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தோனேசியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள் மற்றும் மாலைத்தீவு, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாடுகளின் இலங்கை உயர்ஸ்தானிகர்கள் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

‘ஒமிக்ரோன்’ இந்நாட்டினுள் நுழைந்து விட்டதா?

ஒமிக்ரோன் பிறழ்வு இந்நாட்டிற்கு வந்துள்ளதாக உறுதியாக கூற முடியாது என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது நாட்டிற்கு குறித்த வைரஸ் தாமதமாக வரக்கூடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

“இது தொடர்பில் உறுதியாக கூற முடியாது. உறுதியான தகவல்கள் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை. எனினும், உலகின் ஏனைய நாடுகளுக்கு பரவியுள்ள விதத்தை பார்க்கும் போது நமது நாட்டிற்கு குறித்த பிறழ்வு வரவில்லை என எவராளும் கூற முடியாது. எனினும், இலங்கைக்கு தென்னாபிரிக்காவில் இருந்து நேரடியாக அதிகளவான மக்கள் வருவதில்லை. அதன் காரணமாக மற்றைய நாடுகளை விட நமது நாட்டுக்கு வருவது தாமதமாகக்கூடும். நாங்கள் ஒரு மாதிரியை எடுத்து மட்டுமே பகுப்பாய்வு செய்கிறோம். அந்த மாதிரிக்கு அகப்படும் வரையில் குறித்த வைரஸ் பிறழ்வு நாட்டில் பரவுவதற்கு வாய்ப்புள்ளது.”

Posted in Uncategorized

ஐ.நா.வுடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைக்கும் – பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் , ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகாட்டாவிடம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அடிமைத்தனத்தின் தற்கால வடிவங்கள் , அதன் காரணங்கள், விளைவுகள் உள்ளிட்டவை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகாட்டா வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

பாரம்பரிய அடிமைத்தனம், கடன் கொத்தடிமை, கட்டாய உழைப்பு, அடிமைத்தனம் மற்றும் அடிமைத்தனம் சார்ந்த நிலைமைகளில் உள்ள சிறுவர்கள் , பாலிய அடிமைத்தனம், கட்டாய மற்றும் இள வயது திருமணங்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள், வெளிநாட்டு தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் போன்றன விசேட அறிக்கையாளரின் ஆணையில் உள்ளடங்கும்.

இந்த சந்திப்பின் போது தொழிலாளர் நலன் தொடர்பான இலங்கையின் முன்னேற்றம் மற்றும் சிறுவர் தொழிலாளர் முறைமையை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கலந்துரையாடினார்.

சிறுவர் தொழிலாளர்கள் , புலம்பெயர் தொழிலாளர்கள் , கடன் கொத்தடிமைகள் உட்பட பல துறைகளில் சர்வதேசத்திற்கு ஏற்ப இலங்கையின் தொழிலாளர் சட்டங்களைக் கொண்டு வருவதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் விவரித்தார்.

இலங்கையை ‘சிறுவர் தொழிலாளர்கள் இல்லாத வலயமாக மாற்றுவது தொடர்பான இலங்கையின் முன்னேற்றத்தை விசேட அறிக்கையாளர் பாராட்டினார்.

பாதிக்கப்படக் கூடிய தொழிலாளர் குழுக்களை பாதுகாப்பதில் இலங்கை விழிப்புடன் இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் , ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என்று வலியுறுத்தினார்.

சம்பந்தப்பட்ட துறைகளில் இலங்கையின் அனுபவங்களை புரிந்து கொள்வதற்கும் , சர்வதேச அர்ப்பணிப்புக்களுக்கு இணங்க உள்நாட்டு செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும் விசேட நடைமுறைகள் ஆணை பெற்றவர்களின் விஜயங்கள் உதவியாக இருந்தததாக அவர் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

மன்னாரில் டெங்கு காய்ச்சல் அபாயம்

மன்னார் மாவட்டத்தில் நிலவும் பலத்த மழையுடனான வானிலையுடன் தற்போது டெங்கு காய்ச்சலும் தீவிரமாக பரவி வருவதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மாதத்தில் மாத்திரம் 25 பேர் டெங்கு காய்ச்சலுடன் அடையாளங்காணப்பட்டுள்ளதாக மன்னர் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர், வைத்தியர் ரி. விநோதன் தெரிவித்துள்ளார்.

இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

காய்ச்சல் ஏற்பட்டவுடன் பிற சிகிச்சைகளின்றி, உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மின்சாரத் தடை – விரைவில் மின்சாரம் வழங்கப்படும்…!

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொத்மலை மின் உற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு இதற்கு காரணம் எனவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாத்தறை, காலி, இரத்மலானை, குருநாகல், அதுருகிரிய, பியகம, ஹபரணை, பன்னிப்பிட்டிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் மின்சாரத் தடை இவ்வாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.

இந்நிலையில் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

கேஸ் வெடிப்புச் சம்பவங்கள்: மொறட்டுவை பல்கலைக்கழகத்திடமிருந்து பரிந்துரைகளை பெற நடவடிக்கை

சயைமல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை மொறட்டுவை பல்கலைக்கழகத்திடமிருந்து பெற்றுக் கொள்ளவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் வெளி மாவட்டங்களிலிருந்து 20 மாதிரிகள் நேற்று (28) பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைசச்ர் தெரிவித்தார்.

இதனிடையே நேற்றைய தினமும் (28) சில பிரதேசங்களில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைச் சாட்டாக வைத்து தமிழ் மக்களையும், ஊடகவியலாளர்களையும் அடக்கி ஆளுகின்றது அரசு – ரெலோ செயலாளர் நாயகம் ஜனா

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைச் சாட்டாக வைத்துக் கொண்டு இந்த அரசு தமிழ் மக்களையும், ஊடகவியலாளர்களையும் அடக்கி ஆண்டு கொடிருக்கின்றது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

வடகிழக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்தும், நீதி கோரியும் இன்றையதினம் மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தப் போராட்டமானது, முல்லைத்தீவில் இராணுவத்தினரால் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கும், திருகோணமலையில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கும் மேலாக தற்போதைய அரசாங்கத்தின் முன்னைய ஆட்சியின் போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் என அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி கோரும் ஒரு போராட்டமாகவே இதனைப் பார்க்கின்றோம்.

ஊடகவியலாளர்கள் உண்மையை வெளியில் கொண்டு வருபவர்கள். உண்மையை விரும்பாத இந்த அரசினால் கடந்த காலங்களிலே இவ்வாறு ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்யப்பட்டிருப்பது மாத்திரமல்லாமல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் காரணம் காட்டி இந்த நாட்டிலே ஒரு இராணுவ ஆட்சியை அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகின்றது.

இதன் காரணமாக இறந்தவர்களைக் கூட நினைவு கூர முடியாமல் நாங்கள் நிற்கின்றோம். தெற்கிலே இறந்தவர்களைத் தாராளமாக நினைவுகூரக்கூடிய நிலை இருக்கும் போது வடக்கு கிழக்கிலே தமிழ் மக்களாகிய நாம் எமக்காக இறந்த ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத ஒரு நிலையில் இருக்கின்றோம். பயங்கரவாதத் தடைச் சட்டத்தைச் சாட்டாக வைத்துக் கொண்டு இந்த அரசு தமிழ் மக்களையும், ஊடகவியலாளர்களையும் அடக்கி ஆண்டு கொடிருக்கின்றது.

இந்த அரசிற்குச் சர்வதேசத்தினால் பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறிக் கொண்டிருக்கின்றது. அதன் நிமித்தம் அச்சட்டத்தை மாற்றியமைக்கவுள்ளதாக அரசு தெரிவித்திருக்கின்றது. தமிழர்களாகிய நாங்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றுமுழுதாக நீக்கி அரசியற் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றோம்.

இந்த நாட்டிலே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி ஞானசார தேரர் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. பல குற்றச் செயல்களைச் தமிழினத்திற்கு எதிராக கடந்த காலங்களில் செயற்படுத்தி வந்த அந்தத் தேரரை ஒரே நாடு ஒரே சட்டம் செயலணிக்கு நியமித்திருக்கின்றார்கள். புதிய அரசியலமைப்பினைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்தப் புதிய அரசியலமைப்பிலே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற போர்வையிலே சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் தமிழர்களுக்கு ஒரு சட்டம் என்றே அது உருவாகும் என அறிய முடிகின்றது.

13வது திருத்தச் சட்டம் வடகிழக்கிற்கு மாத்திரம் தேவையானது அல்ல. 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்தி அதனூடாக மாகாணங்களுக்குரிய பொலிஸ் அதிகாரம் உட்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் பட்சத்தில் தான் வடகிழக்கு மாத்திரம் அல்ல தெற்கில் கூட பொலிஸ் அதகாரங்களை அந்தந்த மாகாணங்கள் பயன்படுத்தி அவர்களின் பாதுகாப்பை அவர்களே உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.

எனவே சர்வதேசம் இந்த நாட்டில் நடப்பதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றது. நேற்றைய நிகழ்விற்கான தடைவிதிப்பினைக் கூட சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. எனவே சர்வதேசம் இந்த நாட்டின் மீது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி இந்த நாட்டிலே அனைத்து மக்களும் சமமாக வாழ்வதற்கு ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.

இந்த அடக்குமுறை தொடருமாக இருந்தால் எமது போராட்டம் தொடர்ச்சியாக இருக்கும். நாங்கள் எப்போதும் ஊடகவியலாளார்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்தார்.

மலையக மக்கள் ஒரு ” தேசிய இனம்” என்ற வகையில் அங்கீகரிக்கப்படவேண்டும்- தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைத்தலைவர் செல்வம் எம்.பி

இலங்கையில் பெருந்தோட்ட மக்கள் ஒரு தேசிய இனமாக அடையாளப்படுத்தப்படவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைத்தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

எனினும் பெருந்தோட்ட தேசிய இனத்தின் தொழில்சார் உாிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில் அவர்களுக்கான காணி பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் என்றும் செல்வம் அடைக்கநாதன் கோரிக்கை விடுத்தார்.

மலையக மக்களுக்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நன்மை தரக்கூடிய அனைத்து செயற்திட்டங்களுக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமது ஆதரவை வழங்கும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இதற்கிடையில் பெருந்தோட்டங்களில் தரிசு நிலங்கள் பகிரப்படும் போது தொழிலாளர்கள் மத்தியில் அது பகிரப்படவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம் ராமேஸ்வரன் அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்தார்.