ஏப்ரல் 21 தாக்குதல் வழக்கு: 25 பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை தமிழில் வழங்குமாறு கோரிக்கை

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நௌபர் மௌலவி, ராஜித் மௌலவி உள்ளிட்ட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவிட்டது.

தமித் தொடவத்த, அமில ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பலத்த பாதுகாப்புடன் பிரதிவாதிகள் அனைவரும் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரத்தை தமிழ் மொழியில் வழங்குமாறு பிரதிவாதிகள் இதன்போது கோரிக்கை விடுத்ததுடன், அதனை தயார் செய்வதற்காக கால அவகாசம் அவசியம் என்பதால், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனினும், இன்றைய வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகள் 10 பேர் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராகவில்லை.

அதற்கமைய, தமிழ் மொழி தெரிந்த சட்டத்தரணிகளை முன்வைக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு அறிவித்தல் அனுப்புமாறும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய பிரதமரை சந்திக்க டில்லி விரைகிறார் பஸில்

இந்திய பிரதமரை சந்திக்க டில்லி விரைகிறார் பஸில். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்க்ஷ அடுத்த சில நாட்களில் பதுடில்லி சென்று சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்தச் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறினார்.

இச்சந்திப்பு எதிர்வரும் சில தினங்களில் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்விஜயத்தின்போது இந்தியாவில் உள்ள சில சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனும் நிதியமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அவர் கூறினார்.

இந்தியாவுடனான இலங்கை உறவு வலுவான நிலையில் உள்ளது. இலங்கைக்கு தேவை ஏற்படும் போது இந்தியா எப்போதும் உதவிகளை வழங்கி வருவதாக பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சாதகமாக்கிக் கொள்ளவேண்டிய புதிய அரசியலமைப்பு
எனினும் இந்த விஜயத்தின் போது நிதியமைச்சர் இந்தியாவிடமிருந்து கடன்களைப் பெற உத்தேசிக்கவில்லை எனவும் பீரிஸ் குறிப்பிட்டார். பதிலாக, இந்தியாவிடமிருந்து அதிக முதலீடுகளை நிதியமைச்சர் நாடுவார். அத்துடன், அதிக சுற்றுலாப் பயணிகளை ஈா்ப்பது குறித்தும் அவா் பேசுவார் எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்

கட்சியின் தீர்மானத்திற்கெதிராக வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான முதலாவது வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் கௌரவ. றிஷாத் பதியுத்தீன், கௌரவ. இஷ்ஹாக் றஹ்மான், கௌரவ. அலி சப்றி றஹீம் மற்றும் கௌரவ. முஷாரப் முதுநபீன் ஆகிய நால்வரும் வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என, நேற்று (2021.11.21) நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

குறித்த தீர்மானம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி, வட்ஸ்அப், கடிதம் மூலமாகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கட்சியின் தலைவர் தவிர்ந்த ஏனைய மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் தீர்மானத்திற்கெதிராக இன்று (2021.11.22) வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவாக்களித்திருந்தனர். இது தொடர்பில் நேற்று ஒத்திவைக்கப்பட்ட கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டம் இன்று கூடியபோது ஆராயப்பட்டது.

இதன்போது, கட்சியின் யாப்பில் அரசியல் அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களின் அடிப்படையில், கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ. இஷ்ஹாக் றஹ்மான், கௌரவ. அலி சப்ரி ரஹீம், கௌரவ. முஷாரப் முதுநபீன் ஆகியோரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துவதெனவும், அவர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக் கைகளை மேற்கொள்வதெனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ. இஷ்ஹாக் றஹ்மான், கௌரவ. அலி சப்ரி ரஹீம், கௌரவ. முஷாரப் முதுநபீன் ஆகியோர் இன்றைய தினம் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்படுகின்றனர். அத்துடன் அவர்களுக்கெதிரான ஒழுக்காற்று நடவடிக்கை கட்சியினால் மேற்கொள்ளப்படும். என செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார்.

டொலர்களுக்காக காணிகளை விற்க அரசு முயற்சி

டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் நாட்டில் உள்ள 50ற்கும் மேற்பட்ட உயர் பெறுமதிமிக்க காணிகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குக் குத்தகைக்கு வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

இவற்றில் சில காணிகள் கடந்த காலங்களில் குத்தகைக்கு தயார்ப்படுத்தப்பட்டபோதிலும், கொள்வனவு செய்பவர்கள் முன்வரவில்லை என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த காணிகள் அரச மற்றும் தனியார் கூட்டு முயற்சிகள் அல்லது கூட்டு முயற்சிகளுக்குக் கையளிக்கப்படும் எனவும், அதில் 51 வீதமானவை அரசாங்கத்தின் வசம் இருக்கும் எனவும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிறினிமல் பெரேரா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

தலைநகர் மற்றும் அதற்கு அப்பால் உள்ள நிலங்களிலிருந்து 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

முன்னதாக, ஓமானில் உள்ள ஷுமுக் முதலீட்டு மற்றும் சேவை நிறுவனம், கொழும்பு சார்மர்ஸ் களஞ்சியம் மற்றும் விமானப்படைத் தலைமையகம் அமைந்துள்ள ஒன்பது ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த எதிர்பார்த்தது, ஆனால் அது நிறைவேறவில்லை.

எவ்வாறாயினும், அந்த காணிகளுக்கு மேலதிகமாக குத்தகைக்கு புதிய காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கொழும்புத் தகவல்களுக்கு அமைய, சொகுசு அடுக்குமாடி குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்ட கொழும்பு 5இல் அமைந்துள்ள 10 ஏக்கர் நிலம், வொக்ஸ்ஹால் வீதி மற்றும் டி.ஆர். விஜேவர்தன மாவத்தை ஆறு ஏக்கர், கொள்ளுப்பிட்டி மற்றும் , நுகேகொடை பொதுச் சந்தைகளில் ஆறு ஏக்கர், நான்கு ஏக்கர் கொண்ட புறக்கோட்டை உலக சந்தை, இராஜகிரிய, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை மற்றும் பத்தரமுல்லை ஆகிய இடங்களில் தலா மூன்று ஏக்கர், நுவரெலியா மற்றும் கண்டியில் காணிகள் மற்றும் ஏகலையில் ஐம்பத்தைந்து ஏக்கர் காணி என்பன இந்த குத்தகை காணி பட்டியலில் உள்ள சொத்துக்களில் அடங்கும்.

வெலிக்கடை சிறைச்சாலை சொத்துக்களுக்காக கொரிய முதலீட்டாளர் ஒருவர் முன்வந்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்குப் பதிலாக, ஹொரணையில் புதிய சிறைச்சாலையொன்றை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கலப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், அடுக்குமாடி வளாகங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் ஓய்வு விடுதித் திட்டங்கள், பொருட்கள் கையாளும் மையங்கள் அல்லது பல மாடி வாகன நிறுத்துமிடங்களுக்கு நிலம் 33, 50 அல்லது 99 வருடங்களுக்கு குத்தகைக்கு விடப்படும். நகர அபிவிருத்தி அமைச்சு தொடர்புடைய திட்டங்களுக்குக் கடன் மற்றும் உதவிகளை வழங்கும்.

இருப்பினும், குத்தகை காலம் தொடங்கி இரண்டு வருடங்களுக்குத் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றால், நிலம் மீண்டும் கையகப்படுத்தப்படும். எவ்வாறெனினும் இந்த விடயத்தில் கொள்வனவாளர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரில், முதலீட்டுக்கான அனைத்து உட்கட்டமைப்புகளுடன் கூடிய இடங்கள் போட்டித் தன்மையுடன் வழங்கியமையும் இதற்கு ஒரு காரணமாகும். இதற்கிடையில், கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான சந்தை தற்போது நிரம்பி வழிகிறது.

எவ்வாறாயினும், நகர அபிவிருத்தி அதிகார சபை நவம்பர் 25 அன்று பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜில் (Waters Edge) “இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த” மற்றொரு முதலீட்டு மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

கலப்பு வளர்ச்சித் திட்டங்கள், அடுக்குமாடி அபிவிருத்தி, விருந்தோம்பல் மற்றும் ஓய்வு விடுதி அலுவலக வளாக அபிவிருத்தி, பொருட்களைக் கையாளும் மைய அபிவிருத்தி மற்றும் பல மாடி வாகன தரிப்பிட அபிவிருத்தி ஆகியவற்றுக்கான முன்னணி சொத்துக்கள் வர்த்தக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.

இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தபோது, வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கு தற்போதைய நிபந்தனைகள் தளர்த்தப்பட வேண்டுமா என்பது குறித்து அரசாங்கம் ஆராயும் எனத் தெரிவித்தார்.

ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகள் உள்ளூர் மற்றும் சர்வதேச மூலங்கள் மூலம் கலப்பு அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் பரிசீலிக்கப்பட வேண்டுமென அவர் பரிந்துரைத்தார்.

Posted in Uncategorized

13 ஆவது திருத்த சட்டத்தை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.

மாகாண சபைகளை எலும்புக்கூடுகளாக ஏற்றுக்கொள்ள நாம் தயாரில்லை. 13 ஆவது திருத்தத்திலுள்ள முழுமையான அதிகாரங்களுடன் மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை(19) இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்தியாவுடன் இலங்கையின் உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதனை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இங்கு அழகாக தெளிவு படுத்தினார்.

எனவே அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்தினால் இந்தியாவுடனான நட்புறவை மேலும் நெருக்கமாக்க முடியும். இந்தியாவின் முழுமையான ஆதரவும் இலங்கைக்கு கிடைக்கும்.

எனவே 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும்படி அரசாங்கத்தை கோருகின்றோம். அதேவேளை 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

மாகாணசபையை எலும்புக்கூடுகளாக நாம் ஒரு போதும் ஏற்க மாட்டோம். 13 ஆவது திருத்தத்திலுள்ள முழுமையான அதிகாரங்களுடன் மட்டுமே மாகாணசபையை நாம் ஏற்போம்.

மாகாண சபைகளுக்குள்ள அதிகாரங்களை அரசாங்கம் மீளப்பெற்றுவிட்டது.

எனவே அந்த அதிகாரங்களை அரசாங்கம் மீளவும் மாகாணசபைகளுக்கு வழங்க வேண்டும். அதனடிப்படையிலேயே தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்றார்.

Posted in Uncategorized

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சார்பில் இந்த மனுக்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.

முன்னர் கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் அமைந்துள்ள இராணுவத்தின் 512 பிரிகேட் தலைமையகத்துக்கு முன்பாகவும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சூழலிலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய எல்லையிலும் மாவீரர் நாளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், அந்த மனுவில் கூறப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 120 ஆவது பிரிவுக்கு அமையவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் படியும், இந்த நிகழ்வை நடத்துவது குற்றம் என்றும் இதனைத் தடை செய்யுமாறும் பொலிஸார்ர கோரியுள்ளனர்.

இந்த மனு இன்று யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் வி.ரி. சிவலிங்கம் முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நாளை மறுதினம் 21ஆம் திகதி தொடக்கம் வரும் 28 ஆம் திகதிவரை ஒரு வாரத்துக்கு நடத்த தடை உத்தரவு நீதிமன்றினால் நடத்தப்பட்டது.

Posted in Uncategorized

கொழும்பில் இந்திய தூதுவரின் வீட்டை வீடியோ பதிவு செய்த பாகிஸ்தானியர்கள்

இந்திய உயர்ஸ்தானிகரின் கொழும்பு தேஷ்டன் வீதியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை காணொளியாக பதிவு செய்த மூன்று பாகிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் கணனி பொறியியலாளர் ஒருவரும் இருப்பதாகவும் இவர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நாட்டில் இருந்து வெளியேற தடைவிதித்து கொழும்பு கோட்டை நீதவான் நேற்று உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இவர்கள் மூவரும் முச்சக்கர வண்டியில் சென்றுக்கொண்டிருந்த போது மேல் குறிப்பிட்ட இடத்தில் வண்டியை நிறுத்தி இந்திய உயர்ஸ்தானிகரின் இல்லத்தை காணொளியாக பதிவு செய்ததாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து கமராக்களில் அந்த காட்சிகள் இருந்தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Posted in Uncategorized

முஸ்லிம்களை பயமுறுத்தலாம் என்றா எதிர்பார்க்கின்றீர்கள்? – நாடாளுமன்றில் ரிஷாட் கேள்வி

இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாக வைத்துகொண்டு நீண்டகாலம் ஆட்சி செய்ய முடியாது எனவும், அரசுக்கு வாக்களித்த மக்கள் கூட இன்று வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இன்று (16) நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

இன்று நாட்டு மக்கள் பெரிதும் கஷ்டப்படுகின்றார்கள். நீங்கள் உங்கள் தொகுதிகளுக்கு சென்று அந்த மக்களுடன் உரையாடினீர்கள் என்றால் விவசாயிகள் படுகின்ற வேதனைகள் புரியும். அரசாங்கத்தை உருவாக்கிய விவசாயிகள் கூட தங்களது எதிர்காலம் பூச்சியமாகிவிடும் என்ற அச்சத்தில் காலம் கடத்துகின்றார்கள். அவர்களின் அன்றாடத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்றனர். இன்று பாதையில் நிற்கும் அத்தனை பேரும் அரசுக்கு எதிரானவர்கள் அல்ல. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர், எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அவர்களின் தேவைப்பாட்டை நிறைவேற்றக் கூடிய வகையில், உங்கள் உள்ளத்தில் மாற்றம் வர வேண்டும்.

இந்த வரவு செலவுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் பாதுகாப்பு விடயத்துக்காக நிதி அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு என்று கூறும் போது, வெறுமனே ஆயுத ரீதியானது மட்டுமின்றி ஒரு மனிதனின் உணவு, வறுமையை நீக்குதல், இருப்பிட வசதி, சுகாதார வசதி, கல்வி மற்றும் இன்னோரன்ன விடயங்களை வழங்குவதும் கூட பாதுகாப்புடன் தொடர்புபட்டதே. எனவே, அந்த விடயத்துக்கு இந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடுகள் போதாமையாக உள்ளது.

இந்த அரசாங்கம் மட்டுமின்றி, கடந்த காலங்களிலும் வரவு செலவு திட்டத்தை பார்க்கும் போது, தேர்தலை மையமாக வைத்துக்கொண்டோ, கட்சியை வளர்ப்பதற்காகவோ செயற்பட்டதனால்தான், 70 வருடங்களுக்கு முன்னர் நாம் சுதந்திரத்தைப் பெற்ற போதும், இன்னும் அதலபாதாளத்தில் இருக்கின்றோம். இதனால்தான் ஒவ்வொரு வருடமும் நமது நாட்டின் கடன் சுமை அதிகரித்துக்கொண்டே போகின்றது. பொருளாதாரம் சீரழிகின்றது. உலக வரைபடத்திலே வறுமையான நாடாக பதியப்பட்டுள்ளது. எனவேதான், இந்த நிலையை மாற்றுவார் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சுமார் 69 இலட்சம் மக்கள் வாக்களித்தனர். அந்த நம்பிக்கையில்தான் பாராளுமன்றத் தேர்தலிலே கிட்டத்தட்ட 142 ஆசனங்கள், அதாவது, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறக்கூடிய வகையில் அவரது அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தனர்.

நமது பாராளுமன்றத்திலே இருக்கின்ற மூத்த அரசியல்வாதிதான் மஹிந்த ராஜபக்ஷ. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடத்திலும் பாராளுமன்றத்திலும் இருந்த அதிகாரங்கள், இருபதாவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியிடம் கைமாறப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷ என்ற ஒரு நாமம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் பேசப்பட்ட ஒன்று. அவரது அரசாங்கத்தில் ஒன்பது வருடங்களாக நானும் இணைந்து பணியாற்றியிருக்கின்றேன். அவரது தேர்தல்களிலே அவருக்கு பக்கபலமாக இருந்தவன் என்ற வகையிலே அவரது அமைச்சரவையிலே சுமார் ஒன்பது வருடங்கள் பணியாற்றியவன் என்ற வகையில் அவரிடம் இருந்த தூர சிந்தனையை நாம் கண்டோம்.

நாட்டைப் பற்றிய கவலைகளை அவரிடம் கண்டோம். நாட்டின் பொருளாதாரம் பற்றிய திட்டங்களைக் கண்டோம். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற சிந்தனையைக் கண்டோம். ஆனால், இன்று மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒரமாக்கப்பட்டுவிட்டாரா? என்று கூட எண்ணத் தோன்றுகின்றது. அவரது கருத்துக்களுக்கு இடமில்லையா என்ற கேள்வியும் எமக்கு எழுகின்றது. ஏனெனில், இந்த இரு வருட கால ஆட்சியையும் மகிந்தவின் ஒன்பது வருட ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, மலையும் மடுவும் போல இருக்கின்றது. மிகவும் வித்தியாசமாக இருக்கின்றது. மக்களின் வெறுப்பை மிகவும் விரைவாக சம்பாதித்த அரசாக இது மாறியுள்ளது. எதை எடுத்தாலும் இனவாதம், மதவாதமாக பார்க்கின்ற ஒரு நிலை.

இதன் மூலம் தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற நிலையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலின் போது சமத்துவம் என்ற தொனிப்பொருளைக் கொண்டுவந்து, “ஒரே நாட்டு ஒரே சட்டம்” என்று கூறினார்கள். இந்த நாடு ஒரே நாடே. இரு நாடுகள் அல்ல. யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இது ஒரே நாடுதான். இந்த நாடு ஒரே நாடாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, நான் சார்ந்த முஸ்லிம் சமூகமும் சகோதரச் சமூகங்களான சிங்கள, தமிழ் சமூகங்களும் இணைந்தி சுதந்திரத்துக்காகப் போராடி, அதை பெற்றுக்கொண்டோம். இந்த ஒரே நாட்டிலே முஸ்லிம்களுக்கான தனியார் சட்டங்கள் அவர்களுடைய தனித்துவக் கலாச்சார விழுமியங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. அதுபோல, தேச வழமை மற்றும் கண்டியச் சட்டங்களும் நடைமுறையில் இருந்தன. இதனை அன்று தொடக்கம் எல்லோரும் அங்கீகரித்ததுடன் நீதிமன்றங்களிலும் அவை பிரயோகிக்கப்பட்டன.

இந்த நாட்டிலே பயங்கரவாதம் உருவெடுத்த போதும், நாட்டிலுள்ள பெரும்பாலானவர்கள் அதனை எதிர்த்து ஒற்றுமையை பேணியதே கடந்தகால வரலாறு. இப்போது அவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற தூரநோக்கு இல்லாத ஒரு கொள்கையை அறிமுகப்படுத்தி, அதுவும், அல்லாஹ்வை மிக மோசமாக கேவலப்படுத்திய ஒருவரை அதன் தலைவராக ஆக்கியுள்ளீர்கள். உலகின் இரண்டு பில்லியன் முஸ்லிம்கள் வணங்கும் அல்லாஹ்வை, ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனக் கூறி, அவரை ஏசிய ஒருவரை இவ்வாறு தலைவராக ஆக்கியுள்ளீர்களே. அதுமட்டுமின்றி, நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டு, சிறையில் இருந்து பின்னர் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் மன்னிப்பளிக்கப்பட்ட ஒருவரையே, “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணியின் தலைவராக நியமித்துள்ளீர்கள். இதன் மூலம் நீங்கள் எதனை சாதிக்க நினைக்கின்றீர்கள்? இந்த நாட்டில் வாழும் இருபது இலட்சம் முஸ்லிம்களை பயமுறுத்தலாம் என்று நினைக்கின்றீர்களா? அல்லது பெரும்பான்மை மக்களை சந்தோஷப்படுத்தலாம் என்று நினைக்கின்றீர்களா? எதிர்மாறாக பெரும்பான்மை சிவில் சமூகம் கூட இதனை எதிர்க்கும் நிலை இன்று வந்துள்ளதே.

இந்த இருவருட காலத்தில் நீங்கள் மிகவும் சண்டித்தனமான ஆட்சியே நடத்துகின்றீர்கள். நான் சிறையில் இருந்து பாராளுமன்றத்துக்கு வந்து, எனது கருத்தைக் கூட கூற முடியாது தடுத்தீர்கள்.. ஒரு ஜனநாயகக் கட்சியின் தலைவனாக, ஜனநாயகவாதியாக மக்கள் தந்த ஆணையில் இங்கு வந்திருக்கும் நான், எனக்கு நடந்த அநியாயத்தை கூற விடாமல் மறுக்கின்ற விரோதப் போக்குடன் செயற்பட்டீர்கள். இவைகள் எல்லாம் நீண்ட காலத்துக்கு நிலைக்காது என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

கடந்த கால ஆட்சியாளர்கள் உங்களை சிறையில் அடைத்தார்கள் என்றீர்கள். இவ்வாறான சிறையடைப்புக்\கு நாங்களா காரணம்? நாங்கள் இருதரப்புடனும் பங்காளிகளாக இருந்திருக்கின்றோம். நியாயத்தின் பக்கம் நின்றிருக்கின்றோம். நாட்டின் அபிவிருத்திக்கு துணை செய்திருக்கின்றோம். நாட்டின் பாதுகாப்புக்கு பக்கபலமாக இருந்திருக்கின்றோம். அனைத்து நல்ல விடயங்களுக்=கும் ஆட்சியாளர்களுடன் கைகோர்த்திருக்கின்றோம்.

இந்த பட்ஜெட்டிலே சில விடயங்களை நீங்கள் மறைமுகமாகக் கொண்டு வந்து மக்களுக்கு சுமையை கொடுத்திருக்கின்றீர்கள். இந்த நாட்டிலே டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்னும் நான்கைந்து மாதங்களுக்குப் பின்னர் என்ன நடக்குமென்று தெரியாது.

எனவே, இவ்வாறான நிலையிலே இனவாதத்தை கிளறி, நாட்டைக் குட்டிச்சுவராக்காதீர்கள். சட்டத்தை எல்லோருக்கும் சமமாகப் பிரயோகியுங்கள். அப்போதுதான் நாடு முன்னேற்றமடையும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். கடந்த காலங்களில் மலேசியா, அபுதாபி போன்றவை பாரிய முதலீடுகளை செய்தனர். நான் அமைச்சராக இருந்த போது, கட்டார் ஒரு பில்லியன் முதலீடு செய்ய தயாரானது. ஓமான் மற்றும் பல இஸ்லாமிய நாடுகள் இவ்வாறு தயாராக இருந்தன. அந்த நாடுகளைப் பொறுத்தவரையில் இந்த நாட்டிலே வேறு எந்த எண்ணத்தையும் அதாவது, வளங்களை சூறையாட வேண்டும் என்ற கபட நோக்கம் இருந்ததில்லை. இந்த நாட்டில் சமாதானம், அபிவிருத்தி ஆகியவற்றை மட்டுமே சிந்திக்கின்ற இஸ்லாமிய நாடுகள் கூட, “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணியின் தலைவராக முஸ்லிம்களின் இறைவனை நிந்தித்த ஒருவரை ஏற்றுக்கொள்வார்களா? எனவே, இவற்றை எல்லாம் நீங்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும். இனவாதத்தை மூலதனமாகக் கொண்டு நீண்டகாலம் அரசியல் செய்ய முடியாது என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளுங்கள்.

இன்னுமொரு விடயத்தையும் நான் கூற வேண்டும். அண்மையில் நடந்த திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் சட்டமாணி நுழைவுப் பரீட்சையின் வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னரேயே வெளியாகின. இது தொடர்பில், நீதி அமைச்சரும் கல்வி அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், அண்மையில் புத்தளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். அவர்களின் நிவாரணக் கொடுப்பனவுகள் மற்றும் பாதிப்புக்களை சரிசெய்வது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் மாபெரும் பேரணி

ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் திட்டமிட்டவாறு கொழும்பில் இன்று (16) நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமானது.

சமையல் எரிவாயு, பால் மா, அரிசி, மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உர தட்டுப்பாட்டால் விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியும் அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொள்ளுப்பிட்டிசந்தி வரை பேரணியாக வந்தவர்கள் காலி முகத்திடல் நோக்கி பயணித்தனர்.

பின்னர் காலிமுகத்திடல் சுற்றுவட்டத்தில் ஒன்றுகூடினர்.

இதனிடையே வாகனங்களில் கொழும்பிற்கு வருகை தருவோரை மட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

கொழும்பு – களுத்துறை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பாணந்துறை வீதித்தடையில் கொழும்பு நோக்கி பயணித்த அனைத்து பஸ்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

ஹைலெவல் வீதியில் பயணித்த பஸ்கள் நுகேகொடை மேம்பாலத்திற்கு அருகில் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

அரலகங்கில பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் அணியினர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதேவேளை, பொலன்னறுவை, மணம்பிட்டி, கத்துறுவெல ஆகிய பிரதேசங்களிலும் மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

நாட்டில் பல பிரதேசங்களில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு கொழும்பிற்கு வரும் வாகனங்கள் பொலிஸாரால் பரிசோதிக்கப்பட்டன.

எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணியினை முன்னெடுப்பதற்கு பல இடங்களில் பொலிஸாரால் இடையூறு ஏற்பட்டது.

குருநாகல் – ஹிரிபிட்டிய, குருநாகல் – மாவத்தகம, வாரியபொல, பலாங்கொடை, ஹல்துமுல்ல மற்றும் நொச்சியாகம உள்ளிட்ட பகுதிகளில் இடையூறு ஏற்பட்டது.

கொழும்பிற்கு வருகை தர முடியாமற்போனோர், பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

பெந்தோட்டை பகுதியிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் அநுராதபுரத்தில் இருந்து வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தி குழுவினருக்கு அநுராதபுர எல்லையயை கடப்பதற்கு ராஜாங்கனை பொலிஸாரால் அனுமதி வழங்கப்படவில்லை.

ஊவா, சப்ரகமுவ மாகாண நுழைவாயிலில் ஹல்தமுல்ல, மரங்கஹவெல பிரதேசத்திலும் கொழும்பிற்கு வருகை தந்த வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கடற்பரப்பில் சீனக் கப்பல் பயணிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல – அரசாங்கம்

இலங்கைக் கடற்பரப்பில் சீனக் கப்பல் பயணிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல என அரசாங்கம் கூறியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

சீன கப்பலில் உரங்களை தவிர ஆயுதங்கள் ஏதும் இல்லாத காரணத்தினால் குறித்த கப்பல் கடற்பரப்பில் பயணிப்பதால் தேசிய பாதுகாப்பிற்கு பிரச்சினை இல்லை என கூறினார்.

இதேவேளை மாகாண சபைகளை முற்றாக இல்லாதொழிப்பது தொடர்பாக இதுவரை எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

Posted in Uncategorized