இலங்கை பொலிஸுக்கான வெளிநாட்டுப் பயிற்சியை நிறுத்துமாறு சர்வதேச அழுத்தம்!

இலங்கை பொலிஸாருக்கான பயிற்சியை முழுமையாக நிறுத்துமாறு, ஸ்கொட்ரலாந்திற்கு நீண்டகாலமாக அறிவுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இடைநிறுத்தப்பட்ட பயிற்சியின் விபரங்களை வெளியிடுமாறு சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் குழு அழைப்பு விடுத்துள்ளது.

அண்மைய கைதுகளின் போதான மரணங்கள், சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்படுவதாக வெளியாகும் செய்திகளுக்கு மத்தியில் மே மாதம் ஸ்கொட்லாந்து பொலிஸ் இலங்கை பொலிஸுக்கான யிற்சியை இடைறுத்த தீர்மானித்துள்ளது.

2007ஆம் ஆண்டு முதல் இலங்கையில் பொலிஸ் பயிற்சியை இடைநிறுத்திய பிரித்தானியா இந்த திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கு முன்னர் விபரங்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்து பொலிஸாரால் தொடர்ச்சியாக நடத்தப்படும் பயிற்சி, இலங்கை பொலிஸாரின் மனித உரிமை மீறல்களை அனுமதிக்கும் அபாயங்கள் காணப்படுவதாக, ஸ்கொட்லாந்து நீதி அமைச்சர் கீத் பிரவுனுக்கு எழுதிய கடிதத்தில், நான்கு மனித உரிமைக் குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் இலங்கை பொலிஸாரின் மனித உரிமை செயற்பாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை” என மனித உரிமைகள் கண்காணிப்பகம், சித்திரவதையில் இருந்து விடுதலை, அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை பிரச்சாரம் மற்றும் பெக்ஸ் கிரிஸ்டி ஸ்கொட்லேண்ட் ஆகிய அமைப்புகள் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளன.

“இலங்கை மற்றும் பிற இடங்களில் எங்களது அனுபவம் என்னவென்றால், பொலிஸாரின் ஊழல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான விருப்பம் அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியில் இல்லாத நிலையில் எவ்வளவு ‘பயிற்சி’ அளித்தாலும் அது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையாது. அதற்குப் பதிலாக என்ன நடக்குமென்றால், தொடர்ந்து பயிற்சி அளிப்பது ஊழல் நிறைந்த பொலிஸுக்கு ஒப்புதல் அளிக்கும்”

இலங்கை அரசாங்கமும் பொலிஸும் “மறுசீரமைப்பில் உண்மையான ஆர்வம் காட்டும் வரை” தற்போதைய பயிற்சியை நிறுத்துவதோடு, தற்போதைய பயிற்சி மீளாய்வு மற்றும் பகுப்பாய்வு விபரங்களை வெளியிடுமாறு குறித்த நான்கு அமைப்புகளும் கோரியுள்ளன.

ஸ்கொட்லாந்மு பொலிஸ் இலங்கை பொலிஸுக்கு பயிற்சி அளிக்க பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு நிதியுதவி அளிக்கின்றது.

சட்டத்தரணி யாஸ்மின் சூக்கா தலைமையிலான உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் (ITJP) கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், பிரித்தானியா இலங்கை பொலிஸுக்கான பயிற்சியை இரத்து செய்ய வேண்டுமெனக் கோரியது.

சித்திரவதைக்குப் பொறுப்பேற்பதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பிரிவுகளுக்கு பொறுப்பாக இருந்த குறைந்தபட்சம் மூன்று இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு பிரித்தானியா பயிற்சி அளித்ததாக, ரெட்ரஸ் (Redress) மற்றும் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் இணைந்து 2019 இல் ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுத்து மூலம் அறிவித்தது.

எனினும், 2012 ஆம் ஆண்டு முதல், 90 தடவைகள், பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகள் அல்லது பொலிஸ் ஊழியர்கள் பயிற்சிக்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஸ்கொட்லாந்து பயிற்சி இடைநிறுத்தப்பட்டமை குறித்து இலங்கை பொலிஸோ அல்லது அரசாங்கமோ இதுவரை எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையின் முழு விபரம்

‘எதிர்காலத்தில் நாடு முழுமையாக முடக்கப்படுமானால் மக்கள் அதனை எதிர்கொள்ள தயாராக வேண்டுமெனவும்‘ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு இன்றைய தினம் (20) ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
குறித்த உரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது ”கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தடுப்பூசி ஏற்றுவதேயாகும் என்று, உலக சுகாதார ஸ்தாபனம், வைத்திய நிபுணர்கள் மற்றும் உலகத் தரம்வாய்ந்த வேலைத்திட்டத்தினூடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதனால் தான், இலங்கைக்குத் தடுப்பூசிகளைக் கொண்டுவருவதற்காக, கடந்த காலங்களில் நான் விசேட ஆர்வம் காட்டியிருந்தேன். சீனா, இந்தியா போன்ற நாடுகளின் தலைவர்களுடன், இது தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் உரையாடினேன். மேலும் பல நாடுகளின் அரச தலைவர்களுக்கு, நான் தனிப்பட்ட ரீதியில் கடிதங்களை அனுப்பினேன்.
தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் நாடுகளுடன், நமது நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாகவும் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஊடாகவும் கலந்துரையாடினோம். தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களை, எமது அதிகாரிகள் நேரடியாகத் தொடர்புகொண்டனர்.

எமது நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி ஏற்ற வேண்டுமென்ற என்னுடைய தேவையின் காரணமாகவே, இந்த அனைத்துவித முயற்சிகளையும் மேற்கொண்டேன். இந்த முயற்சிகளின் பலனாகவே, தற்போது ஒவ்வொரு மாதமும், எமக்குத் தேவையான தடுப்பூசிகள், பாரியளவில் கிடைத்துக்கொண்டு இருக்கின்றன.
எமக்கு முதன் முதலாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசியே கிடைக்கப்பெற்றது. அதன் பின்னர், சீனா உற்பத்தி செய்த சினோஃபாம் தடுப்பூசி எமக்குக் கிடைக்கப்பெற்றாலும், அந்தத் தடுப்பூசிக்கு, தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) அனுமதி கிடைக்கப்பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பொதுமக்களுக்கு அந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்கும் பணி, சுமார் ஒரு மாதகாலம் தாமதமானது. எவ்வாறெனினும், இவ்வாண்டு மே மாதம் 8ஆம் திகதி முதல், சினோஃபாம் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன. தவிர, அமெரிக்காவிடம் இருந்து ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளும் ஜப்பானிலிருந்து அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசிகளும், ரஷ்யாவிலிருந்து ஸ்பூட்னிக் தடுப்பூசிகளும் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதால், தடுப்பூசி ஏற்றும் நாடுகளின் பட்டியலில், நாம் உயர்ந்த இடத்தில் இருக்கிறோம். இம்மாதம் 19ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், ஒரு கோடியே இருபது இலட்சத்து பத்தொன்பது ஆயிரத்து நூற்று தொண்ணூற்று மூன்று (12,019,193) பேருக்கு, முதலாவது அலகு தடுப்பூசியை வழங்கியுள்ளோம்.
அதேவேளை, ஐம்பத்து ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரத்து நூற்று எண்பத்தைந்து (5,124,185) பேருக்கு, இரண்டாம் அலகுத் தடுப்பூசியை வழங்கியுள்ளோம். தவிர, இரண்டாம் அலகுத் தடுப்பூசியை வழங்குவதற்காக, மேலும் சுமார் மூன்று மில்லியன் தடுப்பூசிகள், கைவசம் எம்மிடம் இருக்கின்றன. இன்னும் மேலதிகமாக மூன்று மில்லியன் தடுப்பூசிகள், இம்மாத இறுதியில் கிடைக்கவுள்ளன.
இது வரையில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 98 சதவீதமானோருக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதோடு, அவர்களில் 43 சதவீதமானோருக்கு இரண்டாம் அலகுத் தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 31ஆம் திகதிக்குள், 81 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு, இரண்டாம் அலகுத் தடுப்பூசியை வழங்குவதற்கான இயலுமையும் உள்ளது. செப்டெம்பர் 10ஆம் திகதிக்குள், 100 சதவீதமானோருக்கு இரண்டாம் அலகுத் தடுப்பூசியை வழங்க முடியும். அந்த நிலைமையுடன், தொற்றுக்குள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைவடையும். நாட்டிலுள்ள முன்வரிசைச் சுகாதார ஊழியர்கள், துறைமுகம் உள்ளிட்ட அத்தியாவசியச் சேவையாளர்கள், பாதுகாப்புத் தரப்பினர், தொழிற்சாலைகளின் ஊழியர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் நாம் தடுப்பூசி ஏற்றியுள்ளோம். 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கூட, முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஏற்றியுள்ளோம்.
இதற்கு மேலதிகமாக, 30 வயதுக்குக் குறைந்த சுமார் ஒரு மில்லியன் தொழிற்சாலை ஊழியர்களுக்கும் தடுப்பூசி பெற்றுக் கொடுத்திருக்கிறோம். நாடு முழுவதிலும் மகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல், கிராம சேவகர் பிரிவுகளைத் தனிமைப்படுத்தல், ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்தல், அரச சேவையில் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைத்தல், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளைத் தடுத்தல், சில வர்த்தக நடவடிக்கைகளை மூடிவிடல், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை நிறுத்துதல், மதஸ்தலங்களில் பொதுமக்கள் கூடுவதைத் தடுத்தல் போன்ற கட்டுப்பாட்டு முறைமைகளைத் தொடர்ந்தும் நாம் அமுல்படுத்தி வருகின்றோம். கொவிட் 19 தொற்றுப் பரவல் முதலாம் அலையின் போது நாம் முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாக, அதனை வெற்றிகரமாக முறியடிக்க எம்மால் முடிந்தது.

அப்போதைய சந்தர்ப்பத்தில், அது தவிர வேறு வழிகள் இருக்காத பட்சத்திலேயே, அவ்வாறான தீர்க்கமானதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டி ஏற்பட்டது. அதனால், நாட்டை சில மாதங்களுக்கு முழுமையாக மூட நேர்ந்தது. அவ்வாறான நடவடிக்கைகள் மூலம், முதலாவது அலையைக் கட்டுப்படுத்த முடிந்தது. நாட்டை நாம் அடிக்கடி மூட நடவடிக்கை எடுத்திருந்தாலும், அதனால் ஏற்பட்ட பக்க விளைவுகளையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். கொரோனா முதலாவது அலை ஏற்பட்ட காலப்பகுதியானது, இந்நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சியைக் காண்பித்த காலப்பகுதியாகும்.
விசேடமாக, இலங்கைக்கு சுமார் 5 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை வருமானமாக ஈட்டித்தந்த ஆடைத் தொழிற்றுறையானது, இதனால் மிகப்பெரிய நட்டத்தை எதிர்கொண்டது. அவர்களுக்கான ஏற்றுமதிக் கட்டளைகள் நிறுத்தப்பட்டன. இதனால், பலருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போனது. ஏற்றுமதி வருமானம் இழக்கப்பட்டது. 4.5 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை வருமானமாகக் கொண்டிருந்த சுமார் 3 மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுத்த சுற்றுலாத்துறையும் முழுமையாக ஸ்தம்பித்தது. இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் இதனால் இழக்கப்பட்டன. அடிக்கடி முன்னெடுக்கப்பட்ட நாட்டை முடக்கும் செயற்பாடுகள் காரணமாக, நிர்மாணத்துறைத் தொழிற்றுறைகளுக்கும் பாரிய அடி விழுந்தது.
அவர்களுக்குத் தேவையானளவில் ஊழியர்களை வரவழைத்து வேலைகளை முன்னெடுக்க முடியாமல் போனது. தேவையான சந்தர்ப்பத்தில், மூலப்பொருட்களைத் தருவித்துக்கொள்ள முடியாமல் போனது. இந்தத் துறைக்காக நாம் எதிர்பார்த்திருந்த தேசிய மற்றும் சர்வதேச முதலீடுகள் அனைத்தும், கடந்த சுமார் ஒன்றரை வருடக் காலப்பகுதியில் இழக்க நேரிட்டது. எமது தேசிய பொருளாதாரத்துக்கு மேலுமொரு உந்துசக்தியாக, சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகள் காணப்படுகின்றன. 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களும், இந்தக் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இந்த வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் தடைகள் ஏற்படுத்தப்பட்ட காரணத்தால், அந்த நிறுவனங்களுக்கான வருமானங்கள் இழக்கப்பட்டு, அவற்றை நடத்துவதற்காக எடுக்கப்பட்ட கடன்களையும் ஊழியர்களுக்கான ஊதியத்தையும் வழங்க முடியாமல், பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. லீஸிங் முறைமையில் வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்களால் அதனைச் செலுத்த முடியாமல் போனது. வீட்டுக் கடன் பெற்றவர்களால், அதனையும் திருப்பிச் செலுத்த முடியாமல் போனது. இவை தவிர, 4.5 மில்லியனுக்கும் அதிகமான சுய தொழில்கள் மற்றும் நாளாந்தம் வருமானத்தைப் பெறுவோரின் வருமான வழிகள் என்பன முழுமையாக இல்லாமல் போயின. இதனால், அவர்களது வாழ்க்கை நிர்க்கதி நிலைமைக்குத் தள்ளப்பட்டது.

இந்த அனைத்துவிதத் தடைகளுக்கு மத்தியிலும், மக்களை வாழ வைப்பதற்கான பொறுப்பு எமக்கு இருந்தது. அந்தப் பொறுப்பை நாம் தட்டிக்கழிக்கவில்லை. கொரோனா காரணமாக நாட்டை முடக்கிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நாளாந்த வருமானத்தை இழந்து நிர்க்கதிக்கு ஆளான மக்களுக்கு, 5,000 ரூபாய் கொடுப்பனவொன்றை வழங்குவதற்காக, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 30 பில்லியன் ரூபாயைச் செலவிட்டிருக்கிறோம். இதுவரையில், பல தடவைகள் இந்தச் செலவை அரசாங்கம் எதிர்கொண்டிருக்கிறது. அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களின் செலவுகளுக்கு மேலதிகமாக, தத்ததமது வீடுகளில் தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்கு, இரண்டு வாரக் காலத்துக்குத் தேவையான சுமார் 10,000 ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொதிகளை வழங்கி வருகிறோம்.
இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், 1.4 மில்லியனாகக் காணப்படும் அரச ஊழியர்களுக்கான ஊதியத்தைக் குறைக்கவோ கொடுப்பனவுகளைக் கழிக்கவோ இல்லை. எமக்கான அந்நியச் செலாவணி வருமானம் குறைந்த போதிலும், கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்த அரசாங்கம் தவறவில்லை. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் எடுக்கப்பட்டிருந்த கடன்கள் காரணமாக, வருடமொன்றுக்கு நாம், 4 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடன் தவணையாகச் செலுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். அவற்றை, உரிய காலத்தில் செலுத்தியும் வருகின்றோம். நாட்டை மீண்டும் ஒரு முறை முற்றாக முடக்கினால், இந்நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும்.
அது, இந்த நாடு பொறுத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை அல்ல. விசேடமாக, ஏற்றுமதித் தொழிற்றுறையில் ஈடுபட்டிருக்கும் ஆடைத் தொழிற்றுறைக்கு, பாரியளவு ஏற்றுமதிக் கட்டளைகள் கிடைத்துள்ளன. அந்தக் கட்டளைகளை உரிய நேர காலத்துக்கு வழங்க முடியாது போனால், பாரியளவு அந்நியச் செலாவணியை நாம் இழங்க வேண்டிய ஏற்படும். அதேபோன்று, வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையைக் கட்டியெழுப்பவும் நாம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இப்போதைய நிலைமையில், நாளாந்தம் சுமார் 200 சுற்றுலாப் பயணிகள், நாட்டுக்கு வருகை தரும் நிலைமை உருவாகியுள்ளது.
நாட்டை முடக்கினால், சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதை, மீண்டும் முதலில் இருந்தே ஆரம்பிக்க வேண்டி ஏற்படும். அதேபோன்று, நாளாந்த வருமானம் பெறுவோர், சிறு மற்றும் மத்தியதர வர்த்தக நடவடிக்கைகள், நிறுவனங்கள் போன்றவற்றுக்கு, நாட்டை மூடுவதால் வழங்க வேண்டிய நிவாரணங்களை வழங்குவதிலும், நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலை காரணமாகச் சிக்கல் ஏற்படும். இந்த நாட்டை முழுமையாக மூடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பில் பொதுமக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இன்று இந்த உலகில் காணப்படும் ஒரு சில நாடுகளைத் தவிர்ந்த, பொருளாதார ரீதியாக வல்லரசுகளாக இருக்கும் நாடுகள் கூட, நாட்டைத் திறந்தே வைத்திருக்கின்றன. உலகின் சுற்றுலாத்துறை, படிப்படையாக வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. நாடுகளைத் திறந்து வைத்திருக்கும் அரசாங்கங்கள், இந்தச் சந்தர்ப்பத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன.
சிறிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் எமது நாடும், இந்தச் சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதை விடுத்து, மீண்டும் இந்த நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாகச் சரிவடையச் செய்யும் நிலைமைக்குச் செல்ல முடியாது. இது, மாற்றுக் கருத்தாளர்கள், தொழிற்சங்கங்கள், வைத்தியர்கள், ஏனைய சுகாதார ஊழியர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இடம்பெறும் போட்டியோ மோதலோ அல்ல. நாம் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இது, இந்த முழு உலகமும் எதிர்கொண்டுள்ள தீவிரமான பிரச்சினையாகும். இன்று ஒவ்வொரு நாடும், புதிய பொதுமைப்படுத்தல் முறைமையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. அரசாங்கம் என்ற ரீதியில் நாம் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் சரியாக எடுத்துக்கொண்டிருக்கிறோம்.
ஒட்சிசன் விநியோகம், இடைநிலை சிகிச்சை நிலையங்களை உருவாக்கல் மற்றும் தடுப்பூசி ஏற்றல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் செய்கின்ற போதிலும், நோயாளிகளை நிர்வகிப்பதென்பது, மருத்துவர்களின் பொறுப்பில் இருக்கின்றது. அதேபோன்று, இதுவரை காலமும் தமது உயிர்களைப் பணயம் வைத்துச் செயற்பட்டு வரும் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரச் சேவை ஊழியர்களதும் சேவையை, நான் மனதாரப் பாராட்டுகின்றேன். அத்துடன், தங்களுடைய உயிர்களைத் தியாகம் செய்துள்ள சுகாதாரத் துறையின் அனைத்துத் தரநிலை அதிகாரிகளுக்கும், நான் எனது மரியாதையைச் செலுத்துகின்றேன். இது, வேலைநிறுத்தம், போராட்டங்களுக்கான காலம் அல்லவென்பது தெளிவாகிறது. நாட்டை அராஜக நிலைமைக்குக் கொண்டுவரத் தயாராகாதீர்கள். சுகாதாரத் துறையானது இப்பிரச்சினையை ஒரு கோணத்தில் மாத்திரம் பார்க்கின்ற போதிலும், அரசாங்கம் என்ற ரீதியில் நாம், வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தல், ஊதியம் வழங்கல், நிவாரணங்களைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை ஒரு குறையும் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும்.

அதற்காக, நமது நாட்டின் சிறு பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யவேண்டி ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிலும் பலர், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் ஆவர். அதேபோன்று, தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்களாகவும் காணப்படுகின்றனர். இவ்வாறான நாட்பட்ட நோய்களுக்கு ஆளாகியுள்ளவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவுடன், உரிய மருத்துவச் சிகிச்சைகளுக்கு உள்ளாக வேண்டும். அத்துடன், இவ்வாறான நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோரை, வாரத்துக்கு ஒரு முறையேனும் அன்டிஜன்ட் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதாரத் துறையினருக்கு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன். இனிவரும் நாட்களில், இந்நாட்டை நீண்ட காலத்துக்கு மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின், நாட்டிலுள்ள அனைவரும், மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்குத் தயாராக வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறான முக்கியமான தருணத்தில், நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரும், இந்தத் தீர்மானமிக்க நிலைமையைப் புரிந்துகொண்டு, திட்டமிட்ட முறையில் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும். அதனால், ஒரு குழுவாக, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தோற்கடிப்பதற்கு ஒன்றிணைந்துப் பணியாற்ற முன்வருமாறு, அனைவரிடமும் நான் கௌரவத்துடன் கேட்டுக்கொள்கிறேன். – என்றார்.

இன்று (20) இரவு 10 மணி முதல் 30 ஆம் திகதி வரை நாடு முடக்கப்படுகின்றது

இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 வரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் பரவல் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், விவாசாயத்துறை, ஆடை தொழிற்சாலைகள் மற்றும் மருந்தகங்கள் வழமை போன்று இயங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் வீடுகளுக்கு வந்து 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

யாழ்ப்பாணத்தில் உயிர் நீத்த இந்திய போர் வீரர்களுக்கு அஞ்சலி

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட “பவன்” நடவடிக்கை மற்றும் 1987 தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரையில் இந்திய அமைதி காக்கும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிரான ஏனைய நடவடிக்கைகளின் போது உயிர் நீத்த இந்திய போர் வீரர்களின் நினைவுத் தூபியில் இந்தியாவின் 75 வது சுதந்திரமான 15 ஓகஸ்ட் 2021 அன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு மற்றும் யாழ்ப்பாணத்திற்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராகேஷ் நட்ராஜ் ஆகியோர் ஒன்றிணைந்து, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய போர் வீரர்களின் நினைவுத் தூபியில் சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

வீரமுனைப் படுகொலை – தமிழ் தேசியத்திற்காக கிழக்கில் விலைகள் ஏராளம் – வீரமுனையூரான்

வீரமுனைப் படுகொலை, இன அழிப்பு அரசின் துணையுடன் முஸ்லிம்கள் தென் தமிழீழத்தில் நடத்திய பல அப்பட்டமான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை களில் முக்கியமான தாகும். இந்த படுகொலைகளைச் சின்ன முள்ளிவாய்க்கால் படுகொலையாகவே நோக்கப் பட வேண்டியுள்ளது.

தமிழ் தேசியத்திற்காக கிழக்கில் விலைகள் ஏராளம்

தமிழ்த் தேசியப் போராட்டத்தில் கிழக்குத் தமிழர்கள் கொடுத்த விலைகள் ஏராளம். அவற்றில் ஒரு சிறுதுளியே இவ்வாறான படுகொலைகளாகும். இவ்வாறான படுகொலைகளைத் தமிழ் தேசியப் பரப்பில் பயணிப்போர் இன்று பேசுவது மிகவும் குறைவாகவே இருக்கின்றது.

இன்று காணாமல் போனவர்களைத் தேடியலையும் பெற்றோரின் தொகை கிழக்கிலேயே அதிகளவில் உள்ளது. தமது உறவுகளைத் தேடித்தேடி தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டவர்களே கிழக்கில் அதிகமாகக் காணப்படுகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே கிழக்கில் வீரமுனை என்னும் கிராமத்தில் நடைபெற்ற படுகொலையினை மீண்டும் ஒரு தடவை தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ளவர்களுக்கு ஞாபகமூட்ட வேண்டிய தேவையிருக்கின்றது.

 

வீரமுனைப் படுகொலை

வீரமுனை கிராமம் என்பது கிழக்கு மாகாணத்தின் நீண்ட வரலாற்றினைக் கொண்ட கிராமமாகும். கிழக்கில் தமிழர்கள் ஆண்ட காலப் பகுதியில் போர் வீரர்கள் தரித்து நின்ற பகுதியாக வீரர்முனை இருந்து, காலப்போக்கில் வீரமுனை என்ற பெயரைப் பெற்றது. சோழ இளவரசியான சீர்பாத தேவியைக் கண்டியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த வாலசிங்கன் என்னும் மன்னன் திருமணம் முடித்து வந்தபோது, திருகோணமலைக் கடலில் பிள்ளையார் சிலையொன்று தரைதட்டவே, கப்பல் நிற்கும் இடத்தில் ஆலயம் நிறுவுவதாகக் கூறி, இங்கு ஆலயம் ஒன்றினை அமைத்துள்ளதுடன், அதனைப் பராமரிப்பதற்காக ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகளையும் ஆலயத்திற்கு எழுதி வைத்தார்.

இவ்வாறு தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றினைக் கொண்ட இந்தக் கிராமத்தினை, இல்லாமல் செய்வதன் மூலம் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் விகிதாசாரத்தினைக் குறைப்பதற்கு சிங்களவர்களும் – முஸ்லிம்களும் இணைந்து முன்னெடுத்த திட்டங்களே அங்கு இடம்பெற்ற பல படுகொலைகளுக்குக் காரணமாக அமைந்தது.

குறிப்பாக வீரமுனையினைப் பொறுத்த வரையில், அது ஒரு தாய்க் கிராமமாகவும், அதிலிருந்து சென்றவர்களினால் வளர்த்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைத்தீவு, வீரச்சோலை போன்ற கிராமங்கள் உருவாக்கப்பட்டு, வீரமுனைக் கிராமத்தின் பலமாக அவை இருந்தது என்று கூறலாம். இந்தக் கிராமங்களை அகற்றி, அவற்றினைத் தங்களது குடியேற்றமாகவும், வீரமுனை ஆலயத்திற்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை அபகரிக்கவும் மேற்கொள்ளப்பட்ட திட்டமே வீரமுனை மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட படுகொலைத் திட்டங்களாகும்.

1990 ஆம் ஆண்டு யூன் மாதம் தொடக்கம் ஆகஸ்ட் மாதம் வரையில், வீரமுனைக் கிராமத்தில் பல படுகொலைகள் நடைபெற்றன. இக்காலப் பகுதியில் இராணுவத்தினரும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் தொடர்ச்சியாக நடாத்திய அடாவடி காரணமாக வளர்த்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைத்தீவு, வீரச்சோலை ஆகிய பகுதிகளிலிருந்த தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வீரமுனையில் உள்ள சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயம், வீரமுனை இராமகிருஸ்ணமிசன் ஆகியவற்றில் அகதிகளாக இருந்த அதேநேரம், வீரமுனை மக்களும் இங்கு அகதிகளாக்கப்பட்டனர்.

1945ஆம் ஆண்டிலிருந்து 1991ஆம் ஆண்டுவரை சிங்கள இராணுவத்தினராலும், முஸ்லிம்களாலும் இக்கிராமங்கள் தொடர் தாக்குதலுக்குள்ளாகி, ஆக்கிரமித்து அழிக்கப்பட்டது. 1945ஆம் ஆண்டு முஸ்லிம் ஊர்காவல் படையினர் இவ்வழகிய கிராமத்தை இரத்தக் களறியாக்கினார்கள்.

கொண்டவெட்டுவான் இராணுவ முகாம்

வாள் வெட்டுக்கும், கத்தி வெட்டுக்கும் அஞ்சிய தமிழ்க் குடும்பங்கள், வீரச்சோலை, வளத்தாப்பிட்டி, மல்லிகைத்தீவு, மல்வத்தை போன்ற கிராமங்களில் வாழத் தலைப்பட்டனர். 1945ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஏறக்குறைய முப்பத்தியாறு ஆண்டுகள் வீரமுனைக்கு வருவதும் தப்பி ஓடுவதுமாய் துன்பத்தையே சுமந்தனர். கொண்டவெட்டுவான் இராணுவ முகாமும் இக்கிராமத்தைச் சூழ இருந்த முஸ்லிம் கிராமங்களும் தமிழர்களை இங்கிருந்து அகற்றிவிட வேண்டுமென்ற திடமான முடிவுடன் செயற்பட்டனர்.

1990ஆம் ஆண்டு யூன் மாதமும், யூலை மாதமும் இனி மேல் அங்கே தமிழ் மக்கள் வாழவோ, காலடி வைக்கவோ முடியாதென்ற நிலையை உருவாக்கியது. யூன் மாதம் 20ஆம் திகதி வீரமுனை வளத்தாப்பிட்டிய, வீரஞ்சோலைக் கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டன. கொண்டவெட்டுவான் இராணுவ முகாமிலிருந்து வந்த இராணுவத்தினரும், அவர்களோடு இணைந்து வந்த முஸ்லிம் ஊர்காவல் படையினரும் மக்கள் எல்லோரையும் வீரமுனைக் கோயிலடிக்கு செல்லுமாறு கட்டளை யிட்டனர். ஒருசில நாட்களின் முன் கல்முனையில் தமிழர்கள் கொல்லப்பட்டதை அறிந்த மக்கள் அச்சத்துடன் ஆலயத்தில் ஒன்று கூடினர்.

ஆலயத்தில் வைத்தே கொல்வதற்கு உரியவர்களைத் தெரிவு செய்தார்கள். தட்டிக்கேட்க யாருமில்லை. முதற்கட்டமாக ஐம்பத்தியாறு ஆண்கள் தெரிவு செய்து எடுக்கப்பட்டனர். கொண்டு செல்லப்பட்டார்கள்; காணாமல் ஆக்கப்பட்டார்கள். கட்டிய மனைவிமாரும், பெற்ற தாய்மாரும் கதறி அழுதார்கள். கையெடுத்துக் கும்பிட்டார்கள். தாலிப்பிச்சை கேட்டு, காலடியில் விழுந்தார்கள். கொலை வெறியோடு வந்தவர்கள் எக்காளமிட்டுச் சிரித்தார்கள். எங்கள் மக்களின் கண்ணீரும், வேண்டுதலும் அவர்களுக்கு கேளிக்கையாக மாறியது. கடத்திச் செல்லப்பட்டவர்கள் சம்மாந்துறை மலைக் காட்டிற்குள் தீவைத்து எரிக்கப்பட்டனர். முப்பத்தியேழு பேரையும் சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் தூக்கி வீசினார்கள். இராணுவத்தினரின் இச்செயலினைச் சுற்றிநின்ற முஸ்லிம் ஊர்காவல் படையினர் கைதட்டி மகிழ்ந்தார்கள்.

எமது மக்களின் வாழ்வும் வளமும் பற்றி எரிந்தது. வாய்விட்டுச் சொல்ல முடியாத எங்கள் உறவுகளுக்காகக் குரல் கொடுக்க யாரும் இருக்கவில்லை. காலையில் கைது செய்து சென்றவர்களை சுட்டுப் பொசுக்கிய போதும் இராணுவத்தினரின் கொலைப்பசி குறையவில்லை. ஒரு வாரம் கூட மறையவில்லை.

29ஆம் திகதி மீண்டும் கைது. எச்சஞ்சொச்சமாயிருந்த ஆண்களில் ஐம்பத்தியாறு பேரை துப்பாக்கி முனையில் தள்ளிச் சென்றார்கள். கொண்டைவெட்டுவானில் பெரு நெருப்பெரிந்தது. சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் எறியப்பட்டார்கள். சொல்லியழ வார்த்தைகளின்றி கையில் தூக்கிய பொருட்களோடு காரைத்தீவிற்குத் தப்பியோடினார்கள். காரைத்தீவுப் பாடசாலை அகதி முகாமாகியது. சொந்த மண்ணிலேயே எமது மக்கள் அகதிகளாக்கப் பட்டார்கள். அகதி வாழ்வோடு விட்டிருந்தால் கூடப் பரவாயில்லை. அகதி முகாமையும் கொலை முகாமாக சிங்கள இராணுவத்தினர் மாற்றினார்கள்.

தமிழ் மாணவர்களின் கல்விக்கூடம் கொலைக் கூடமாக்கப் பட்டது. ஆட்டுப் பண்ணைகளில் இறைச்சிக்குத் தெரிவாகிய கிடாவைப் போல அகதி முகாமில் வைத்துக் கொலை செய்வதற் குரிய ஆண்களை தெரிந் தெடுத்தார்கள். இம்முறை காரைத்தீவு விசேட அதிரடிப் படையினர் தங்கள் கைவரிசை யினைக் காட்டினார்கள். ஒரு மாதங்கூட மறைய வில்லை ஆடிமாதம் 4ஆம் திகதி காரைத்தீவு அகதி முகாமில் அழுகுரல் ஓங்கி ஒலித்தது. முதல் தெரிவில் பன்னிரெண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். ஓரிருநாள் கழித்து படை முகாமுக்குச் சென்ற தாய்மாருக்கு படையினர் கொடுத்த பதில் விசித்திரமானது. “உங்கட ஆட்கள நாங்க கொண்டு வரல்ல. ஆட்கள் இனம் தெரியாதவர்களால் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று பதிவு செய்துவிட்டு கச்சேரியில காசு எடுங்க” என்று கூறினார்கள்.

பாடசாலையிலிருந்த அகதி முகாமுக்குள் மீண்டும் 10ஆம் திகதி விசேட அதிரடிப் படையினர் புகுந்தனர். பதினொரு ஆண்கள் பிடிக்கப்பட்டனர். எஞ்சியிருந்த ஆண்கள் இவ்வளவுதான். எச்சசொச்சமின்றி எல்லோரையுமே கொண்டுபோய் சுட்டுவிட்டு எரித்தார்கள். வீரமுனைக் கிராமத்து மக்கள் எங்கிருந்தாலும் அவர்களைக் கொன்றொழித்து விடுவதென்று சிங்களப் படையினர் முடிவெடுத்து விட்டனர்.

1990ஆம் ஆண்டு யூலை மாதம் கணவன் மாரைப் பறி கொடுத்த துயரோடு, காரைதீவு அகதி முகாமிலிருந்து வீரமுனை கிராமத்துக்கு திரும்பினார்கள். யாரைப் பறி கொடுக்கக் கூடா தென்று காரைத் தீவுக்கு ஓடினார்களோ அவர்களைக் காரைத்தீவில் பறி கொடுத்து விட்டதால் இனிமேல் எது நடந்தால் என்ன என்ற விரக்தியோடு திரும்பினார்கள். வரும் வழியில் மல்வத்தை இராணுவ முகாமிலிருந்த இராணுவத்தினர் தமது கொலைப் பசியையும் தீர்க்க விரும்பினர். நடந்து வந்தவர்களில் எட்டுப் பேரைப் பிடித்திழுத்துச் சென்றனர். பசிதீரும் வரை மாறி மாறி குதறினார்கள். கடைசி மூச்சு அடங்கும் வரை மிருகத்தனமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள். பிணமாகிப் போனதும் கிண்டிப் புதைத்தார்கள்.

26ஆம் திகதி கொண்டவெட்டுவான் இராணுவ முகாமிலிருந்து வந்த படையினர் மல்வத்தை, வீரமுனை, கலைதிபுரம், புதுநகர் கிராமங்களிலிருந்து எட்டுப்பேரைக் கைது செய்து சென்றார்கள். இன்றுவரை அவர்களின் கதையில்லை. மரண அத்தாட்சிக்கு இராணுவத்தினர் கிராம சேவகர்களுக்கு அனுமதி வழங்கிய போதுதான் முடிந்துபோன இவர்களின் கதையும் தெரியவந்தது. யூன் மாதம் ஆரம்பித்த இன அழிப்பு, யூலை மாதமும் தொடர்ந்து. ஓகஸ்ட் மாதத்தில் உச்சக் கட்டத்தை அடைந்தது.

ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி சிங்களப் படையினருடன் இணைந்து வந்த முஸ்லிம் ஊர்காவல் படையினரும் ஓடி ஒளிந்து வாழ்ந்த ஆண்களில் எட்டுப்பேரினைக் கைதுசெய்து கண்டதுண்டமாக வெட்டிக் கிணற்றில் போட்டார்கள். வீரமுனையிலோ, வளத்தாப்பிட்டியிலோ அல்லது மல்வத்தையிலோ இனிமேல் வாழமுடியாது எனக்கருதிய எமது மக்கள், மண்டூருக்குச் சென்று வாழவிரும்பி, கையில் தூக்கிய பொருட்களோடு நடந்தார்கள்.

11ஆம் திகதி சவளைக்கடை இராணுவ முகாமில் அவர்கள் தடுத்து நிறுத்தப் பட்டார்கள். வீதியில் முகாமுக்கு முன்னால் வைத்தே பதினெட்டுப்பேரை வெட்டிக் கொன்றார்கள். தப்பி ஓடிய மக்கள் மீண்டும் தங்கள் கிராமத்துக்கே வந்து சேர்ந்தனர்.

சவளைக்கடை இராணுவத்தினரும் தமிழர்களைக் கொல்வதில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர். அனாதைகளாய் ஆதரவின்றி ஓடிவந்த மக்களை கொண்டவெட்டுவான் படையினர் விட்டு வைக்கவில்லை. ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதியே இக் கிராமங்களுக்குள் புகுந்தார்கள். முஸ்லீம் ஊர்காவல் படையினரும் துணைக்கு வந்தனர். வீடுகள் தீயிடப்பட்டன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திலும்….

சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திலும், வீரமுனை இராமகிருஸ்ண மிசனிலும் இருந்த மக்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. உறவுகளாகப் பழகிய முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தியவாறு ஆலயத்தில் இருந்தவர்கள் மீதும், பாடசாலையில் இருந்தவர்கள் மீதும் தாக்குதல்களை நடாத்தினர். எரியும் நெருப்பில் உயிருடனேயே உறவுகள் தூக்கி வீசப்பட்டனர். தாயிடம் பால் அருந்திக் கொண்டிருந்த பிள்ளையின் காலைப்பிடித்து இழுத்து பாடசாலை சுவரில் அடித்துக் கொலை செய்தனர். ஆலயத்திற்குள் ஓடி ஒளிந்தவர்கள் மீது துப்பாக்கி சூடுகள் நடாத்தப்பட்டன. இந்த தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள் உட்பட34 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

காயங்களோடு அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 55பேரைக்கூட இராணுவத்தினர் விடவில்லை. வைத்தியசாலையைச் சுற்றி வளைத்து காயமுற்று படுக்கையிலிருந்த அத்தனை பேரையும் தூக்கி ஏற்றிச் சென்று கொன்றனர். நாட்கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் தொடர்ச்சியாக நடந்து முடிந்த வீரமுனைக் கிராம மக்களின் துயரக்கதையை இன்று எத்தனை பேர் அறிவீர்கள் ?

வீரமுனைப் படுகொலை இதுவரையில் ஆவணப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரையில் சரியான பதிவுகள் முன்னெடுக்கப் படவில்லை. இனிவரும் காலத்திலாவது வீரமுனைப் படுகொலை ஆவணப் படுத்தப்பட்டு, புத்தகமாக வெளியிட தமிழ் தேசிய பற்றாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Posted in Uncategorized

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வர்த்த நிலையங்களை பூட்ட தீர்மானம்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் வர்த்த நிலையங்கள் பூட்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்திய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்த நிலையங்களை எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை பூட்டி கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தக சங்க நிர்வாகத்தை கூட்டி தீர்மானம் எடுத்துள்ளதாவும் அதனடிப்படையில் எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் வெள்ளிக்கழமை அதிகாலை வரை புதுக்குடியிருப்பில் உள்ள வணிக நிலையங்களை பூட்டி சுய கட்டுப்பாட்டினை மேற்கொள்வதற்கான தீர்மானத்தினை வணிகர் சங்கம் எடுத்துள்ளது.

இன்று நாட்டில் பரவலாக கொரோனா தொற்று ஏற்பட்டு அனைத்து வைத்திய சங்கங்களும் வீதி ஓரங்களில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் மக்களும் வீடுகளில் இருந்து வெளியில் நடமாட்டத்தினை குறைத்துக்கொள்ளுங்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சரியான திட்டமிடல் கிடையாது வைத்திய வசதிகள் இல்லை வைத்திய அதிகாரிகள் குறைவு தொற்று வேகமாக ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது

இவ்வாறான சந்தர்பத்தில் வைத்தியசாலைகளில் இடம் இல்லை ஒட்சிசன் தட்டுப்பாடாக இருக்கின்றது. எனவே நாங்கள் இந்த கடைகளை பூட்டியதன் நோக்கம் மக்களின் தேவையற்ற விதமான நடமாட்டத்தினை கட்டுப்படுத்தவே.

மக்கள் இருந்தால் மட்டுமே வர்த்த நிறுவனங்களை திறந்து வியாபாரங்கள் செய்ய முடியும் மக்களாகிய நீங்கள் என்றும் எங்களுக்கு தேவை இதனை கருத்தில் கொண்டுதான் இந்த முடிவினை எடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு அரசாங்கத்தின் 10 பங்காளி கட்சிகள் கோரிக்கை

குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை மூடி வைக்குமாறு அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை மூடாவிட்டால், கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை வைத்தியசாலை கட்டமைப்பால் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு அதிகரிக்கும் என குறித்த 10 கட்சிகளும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் அத்துரலிய ரத்தன தேரருடன், ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணாயக்கார, லங்கா சம சமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவங்ச, பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, எக்சத் மஹஜன பெரமுனவின் தலைவர் டிரான் அலஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டொக்டர் ஜீ. வீரசிங்க, ஶ்ரீலங்கா மக்கள் கட்சியின் அசங்க நவரத்ன மற்றும் யுத்துகம தேசிய அமைப்பின் கெவிந்து குமாரதுங்க ஆகியோர் அந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை மூடிவைப்பதன் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையை குறைக்க முடியும் எனவும் அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.

நாடு தொடர்ந்தும் திறந்திருந்தால், தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் நோயாளர்களின் அச்சத்தால் நாடு செயற்றிறனை இழக்கும் அபாயம் உள்ளதென ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நோயை கட்டுப்படுத்துவதன் மூலம், மக்களின் நம்பிக்கையை மேம்படுத்தி நாட்டின் பொருளாதார செயற்பாட்டையும் மேம்படுத்த முடியும் என அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகளும் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

நாட்டை முடக்குமாறு அஸ்கிரி – மல்வத்து தேரர்கள் கோரிக்கை

கொரோனா பரவலை கட்டுப்பாடுத்துவதற்காக ஒருவார காலம் நாட்டை முடக்குமாறு அஸ்கிரி – மல்வத்து தேரர்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

தடுப்பூசி வழங்குவதன் மூலம் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிக்காக ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அவர்கள் பாராட்டியுள்ளனர்.

இருப்பினும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், ஒட்டுமொத்த மக்களும் இன்று பேரழிவை எதிர்கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த நேரத்தில் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக, சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் குறைந்தது ஒரு வார காலம் நாட்டை மூடி நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Posted in Uncategorized

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் மேலும் 2,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 372,079 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 318,714 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,604 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சீனா கொடுத்த பல்லாயிரம் கோடி கடன் உதவியா? ஆதிக்கமா?

சீனாவிடமிருந்து இலங்கை கடந்த 17ஆம் தேதியன்று 61.5 பில்லியன் இலங்கை ரூபாய் (6150 கோடி இலங்கை ரூபாய்) மதிப்பிலான கடனுதவியை உடன்படிக்கையொன்றின் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், பதிவொன்றின் ஊடாக இந்த தகவலை வெளியிட்டிருந்தது. இலங்கையின் கோரிக்கைக்கு அமையவே இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடனால் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ள அதே வேளையில், வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தவே கடன் வாங்கப்பட்டுள்ளது என்று இலங்கை அரசு தெரிவிக்கிறது.

கோவிட் ஒழிப்பு நடவடிக்கைகள், பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துதல் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இலங்கையில் கோவிட் தொற்று பரவ ஆரம்பித்த காலம் முதல், நாடு பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக ஆளும் தரப்பு அனைத்து சந்தர்ப்பங்களிலும் தெரிவித்து வருகின்றது.

இலங்கையின் பிரதான வருமான வழியான சுற்றுலாத்துறை, 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முழுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய வருமான வழிகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்நிய செலாவணி வருமானங்களும் குறைவடைந்துள்ளன.

இதனால், இலங்கை அரசாங்கம் பாரிய பொருளாதார வீழ்ச்சிகளை சந்தித்து வருவதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்ற நிலையிலேயே, இந்த கடன் தொகை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

சீனாவிடமிருந்து அரசாங்கம் அவசரமாக இந்த கடனை பெற்றுக்கொண்டமை குறித்து, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீட பேராசிரியர் சங்கரன் விஜயச்சந்திரனிடம் பிபிசி தமிழ் வினவியது.

நாடொன்றிற்கு குறைந்தது மூன்று மாத காலத்திற்கு தேவையான அந்நிய செலாவணி இருப்பு இருக்க வேண்டும் எனவும், ஆனால் இலங்கை வசம் தற்போது அந்நிய செலாவணி இருப்பு கிடையாது. இதனால், கடனொன்றை பெற்றுக்கொள்ளும் போது, அந்நிய செலாவணி இருப்பு அதிகரிக்கும் என கூறிய அவர், அதனூடாக ரூபாயின்பெறுமதி வீழ்ச்சியை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.

தற்போது இலங்கை அரசாங்கத்திற்கு வரி வருமானங்கள் குறைவடைந்து, ஏற்றுமதி குறைவடைந்து, சம்பளத்தை கூட வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதேவேளை, அரசாங்கத்தினால் செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன்களின் அளவு அதிகரித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர், பெருமளவிலான கடன் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல் நடத்துவதற்கு தயாராகி வருகின்றமையினால், கீழ் மட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக பேராசிரியர் சங்கரன் விஜயச்சந்திரன் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் கோவிட் பரவல் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர எந்தவொரு தரப்பும் உதவிகளை செய்ய முன்வராத காரணத்தினால், இவ்வாறான கடன்களின் ஊடாக பங்களிப்புக்களை செய்ய முடியும் என அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

பொருளாதார உதவி மற்றும் கடனுக்காக இலங்கை பல வகைகளில் சீனாவைச் சார்ந்துள்ளது.

‘குறைந்த காலம்; அதிக வட்டி’

சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் தொகைக்கு வட்டி வீதம் அதிகம் எனவும், குறுகிய காலத்தில் இந்த கடனை செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.

அவ்வாறு குறுகிய காலத்தில் கடன் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில், நாட்டிலுள்ள சொத்துகளை சீனாவிற்கு எழுதி கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அவ்வாறு இல்லையென்றால், பல்வேறு தேவையற்ற ஒப்பந்தங்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் தெரிவிக்கின்றார்.

சர்வதேச செலாவணி நிதியம் அல்லது உலக வங்கி போன்ற நிறுவனங்களிடமிருந்து கடனை பெற்றுக்கொள்ளும் போது பிரச்னைகள் இருக்காது என கூறிய அவர், நாடொன்றிடமிருந்து கடன் வாங்கும் போது பிரச்னை காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சீனா, மானியங்களை வழங்காது. கடன்களையே வழங்கும்; சீனா, தமது வர்த்தக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே, இவ்வாறான கடன்களை வழங்குவதாகவும் பேராசிரியர் தெரிவிக்கின்றார்.

அதனால், சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் கடன் தொகையானது, இலங்கையை சீனாவின் ஆளுகைக்குள் வைக்கும் நிலைமையை ஏற்படுத்தும் என பேராசிரியர் சங்கரன் விஜயச்சந்திரன் குறிப்பிடுகின்றார்.

பொருளாதார ரீதியில் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளும் வகையிலேயே இந்த கடன் தொகை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சீனா

இலங்கை சீன அரசாங்கத்திடமிருந்து பல்வேறு கடன்கள், அபிவிருத்தி திட்டங்களுக்கான முதலீடுகள் என பெருந்தொகையான பணத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

அரசு என்ன கூறுகிறது?குறிப்பாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கான ஒப்பந்தமொன்றில் இலங்கை அரசாங்கமும், சீன அபிவிருத்தி வங்கியும் கைச்சாத்திட்டிருந்தன.இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகம், ஹம்பாந்தோட்டை விமான நிலையம், தெற்கு அதிவேக வீதி, கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகர் உள்ளிட்ட மேலும் பல திட்டங்களை சீன அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான நிலையில், இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகவே சீனாவிடமிருந்து கடன்களை பெற்று வருகின்றது.

குறிப்பாக சீனாவிடமிருந்து 10 பில்லியன் யுவானை (சுமார் 1.5 பில்லியன் டொலருக்கு நிகரான சீன பணம்) பெற்றுக்கொண்டுள்ளதாக மே மாத இலங்கை மத்திய வங்கியின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் வகையிலேயே தாம் வெளிநாடுகளிடமிருந்து கடன்களை பெற்றுக்கொள்வதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

குறிப்பாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையில் வருடாந்தம் சுமார் 8 பில்லியன் ரூபா வரை இடைவெளியொன்று காணப்படுகின்றமையினால், இந்த காலப் பகுதியில் அதனை ஈடு செய்துக்கொள்வதற்காக இறக்குமதி இயலுமான வரை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்;.சுற்றுலா துறை, வெளிநாடு பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளிலேயே அதனை இதுவரை காலமும் ஈடு செய்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.இந்த மூன்று விதமான வருமானங்களும், கொவிட் நிலைமைக்கு மத்தியில் இன்று பூஜ்ஜியமாகியுள்ளதெனவும் அவர் தெரிவிக்கின்றார்.இந்த இடைவெளியை நிரப்புவதற்காக இயலுமான வரை இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ள போதிலும், அதனையும் ஈடு செய்துக்கொள்ள முடியாதமையினாலேயே கடன் பெற வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.