வீரமுனைப் படுகொலை – தமிழ் தேசியத்திற்காக கிழக்கில் விலைகள் ஏராளம் – வீரமுனையூரான்

வீரமுனைப் படுகொலை, இன அழிப்பு அரசின் துணையுடன் முஸ்லிம்கள் தென் தமிழீழத்தில் நடத்திய பல அப்பட்டமான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை களில் முக்கியமான தாகும். இந்த படுகொலைகளைச் சின்ன முள்ளிவாய்க்கால் படுகொலையாகவே நோக்கப் பட வேண்டியுள்ளது.

தமிழ் தேசியத்திற்காக கிழக்கில் விலைகள் ஏராளம்

தமிழ்த் தேசியப் போராட்டத்தில் கிழக்குத் தமிழர்கள் கொடுத்த விலைகள் ஏராளம். அவற்றில் ஒரு சிறுதுளியே இவ்வாறான படுகொலைகளாகும். இவ்வாறான படுகொலைகளைத் தமிழ் தேசியப் பரப்பில் பயணிப்போர் இன்று பேசுவது மிகவும் குறைவாகவே இருக்கின்றது.

இன்று காணாமல் போனவர்களைத் தேடியலையும் பெற்றோரின் தொகை கிழக்கிலேயே அதிகளவில் உள்ளது. தமது உறவுகளைத் தேடித்தேடி தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டவர்களே கிழக்கில் அதிகமாகக் காணப்படுகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே கிழக்கில் வீரமுனை என்னும் கிராமத்தில் நடைபெற்ற படுகொலையினை மீண்டும் ஒரு தடவை தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ளவர்களுக்கு ஞாபகமூட்ட வேண்டிய தேவையிருக்கின்றது.

 

வீரமுனைப் படுகொலை

வீரமுனை கிராமம் என்பது கிழக்கு மாகாணத்தின் நீண்ட வரலாற்றினைக் கொண்ட கிராமமாகும். கிழக்கில் தமிழர்கள் ஆண்ட காலப் பகுதியில் போர் வீரர்கள் தரித்து நின்ற பகுதியாக வீரர்முனை இருந்து, காலப்போக்கில் வீரமுனை என்ற பெயரைப் பெற்றது. சோழ இளவரசியான சீர்பாத தேவியைக் கண்டியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த வாலசிங்கன் என்னும் மன்னன் திருமணம் முடித்து வந்தபோது, திருகோணமலைக் கடலில் பிள்ளையார் சிலையொன்று தரைதட்டவே, கப்பல் நிற்கும் இடத்தில் ஆலயம் நிறுவுவதாகக் கூறி, இங்கு ஆலயம் ஒன்றினை அமைத்துள்ளதுடன், அதனைப் பராமரிப்பதற்காக ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகளையும் ஆலயத்திற்கு எழுதி வைத்தார்.

இவ்வாறு தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றினைக் கொண்ட இந்தக் கிராமத்தினை, இல்லாமல் செய்வதன் மூலம் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் விகிதாசாரத்தினைக் குறைப்பதற்கு சிங்களவர்களும் – முஸ்லிம்களும் இணைந்து முன்னெடுத்த திட்டங்களே அங்கு இடம்பெற்ற பல படுகொலைகளுக்குக் காரணமாக அமைந்தது.

குறிப்பாக வீரமுனையினைப் பொறுத்த வரையில், அது ஒரு தாய்க் கிராமமாகவும், அதிலிருந்து சென்றவர்களினால் வளர்த்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைத்தீவு, வீரச்சோலை போன்ற கிராமங்கள் உருவாக்கப்பட்டு, வீரமுனைக் கிராமத்தின் பலமாக அவை இருந்தது என்று கூறலாம். இந்தக் கிராமங்களை அகற்றி, அவற்றினைத் தங்களது குடியேற்றமாகவும், வீரமுனை ஆலயத்திற்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை அபகரிக்கவும் மேற்கொள்ளப்பட்ட திட்டமே வீரமுனை மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட படுகொலைத் திட்டங்களாகும்.

1990 ஆம் ஆண்டு யூன் மாதம் தொடக்கம் ஆகஸ்ட் மாதம் வரையில், வீரமுனைக் கிராமத்தில் பல படுகொலைகள் நடைபெற்றன. இக்காலப் பகுதியில் இராணுவத்தினரும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் தொடர்ச்சியாக நடாத்திய அடாவடி காரணமாக வளர்த்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைத்தீவு, வீரச்சோலை ஆகிய பகுதிகளிலிருந்த தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வீரமுனையில் உள்ள சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயம், வீரமுனை இராமகிருஸ்ணமிசன் ஆகியவற்றில் அகதிகளாக இருந்த அதேநேரம், வீரமுனை மக்களும் இங்கு அகதிகளாக்கப்பட்டனர்.

1945ஆம் ஆண்டிலிருந்து 1991ஆம் ஆண்டுவரை சிங்கள இராணுவத்தினராலும், முஸ்லிம்களாலும் இக்கிராமங்கள் தொடர் தாக்குதலுக்குள்ளாகி, ஆக்கிரமித்து அழிக்கப்பட்டது. 1945ஆம் ஆண்டு முஸ்லிம் ஊர்காவல் படையினர் இவ்வழகிய கிராமத்தை இரத்தக் களறியாக்கினார்கள்.

கொண்டவெட்டுவான் இராணுவ முகாம்

வாள் வெட்டுக்கும், கத்தி வெட்டுக்கும் அஞ்சிய தமிழ்க் குடும்பங்கள், வீரச்சோலை, வளத்தாப்பிட்டி, மல்லிகைத்தீவு, மல்வத்தை போன்ற கிராமங்களில் வாழத் தலைப்பட்டனர். 1945ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஏறக்குறைய முப்பத்தியாறு ஆண்டுகள் வீரமுனைக்கு வருவதும் தப்பி ஓடுவதுமாய் துன்பத்தையே சுமந்தனர். கொண்டவெட்டுவான் இராணுவ முகாமும் இக்கிராமத்தைச் சூழ இருந்த முஸ்லிம் கிராமங்களும் தமிழர்களை இங்கிருந்து அகற்றிவிட வேண்டுமென்ற திடமான முடிவுடன் செயற்பட்டனர்.

1990ஆம் ஆண்டு யூன் மாதமும், யூலை மாதமும் இனி மேல் அங்கே தமிழ் மக்கள் வாழவோ, காலடி வைக்கவோ முடியாதென்ற நிலையை உருவாக்கியது. யூன் மாதம் 20ஆம் திகதி வீரமுனை வளத்தாப்பிட்டிய, வீரஞ்சோலைக் கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டன. கொண்டவெட்டுவான் இராணுவ முகாமிலிருந்து வந்த இராணுவத்தினரும், அவர்களோடு இணைந்து வந்த முஸ்லிம் ஊர்காவல் படையினரும் மக்கள் எல்லோரையும் வீரமுனைக் கோயிலடிக்கு செல்லுமாறு கட்டளை யிட்டனர். ஒருசில நாட்களின் முன் கல்முனையில் தமிழர்கள் கொல்லப்பட்டதை அறிந்த மக்கள் அச்சத்துடன் ஆலயத்தில் ஒன்று கூடினர்.

ஆலயத்தில் வைத்தே கொல்வதற்கு உரியவர்களைத் தெரிவு செய்தார்கள். தட்டிக்கேட்க யாருமில்லை. முதற்கட்டமாக ஐம்பத்தியாறு ஆண்கள் தெரிவு செய்து எடுக்கப்பட்டனர். கொண்டு செல்லப்பட்டார்கள்; காணாமல் ஆக்கப்பட்டார்கள். கட்டிய மனைவிமாரும், பெற்ற தாய்மாரும் கதறி அழுதார்கள். கையெடுத்துக் கும்பிட்டார்கள். தாலிப்பிச்சை கேட்டு, காலடியில் விழுந்தார்கள். கொலை வெறியோடு வந்தவர்கள் எக்காளமிட்டுச் சிரித்தார்கள். எங்கள் மக்களின் கண்ணீரும், வேண்டுதலும் அவர்களுக்கு கேளிக்கையாக மாறியது. கடத்திச் செல்லப்பட்டவர்கள் சம்மாந்துறை மலைக் காட்டிற்குள் தீவைத்து எரிக்கப்பட்டனர். முப்பத்தியேழு பேரையும் சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் தூக்கி வீசினார்கள். இராணுவத்தினரின் இச்செயலினைச் சுற்றிநின்ற முஸ்லிம் ஊர்காவல் படையினர் கைதட்டி மகிழ்ந்தார்கள்.

எமது மக்களின் வாழ்வும் வளமும் பற்றி எரிந்தது. வாய்விட்டுச் சொல்ல முடியாத எங்கள் உறவுகளுக்காகக் குரல் கொடுக்க யாரும் இருக்கவில்லை. காலையில் கைது செய்து சென்றவர்களை சுட்டுப் பொசுக்கிய போதும் இராணுவத்தினரின் கொலைப்பசி குறையவில்லை. ஒரு வாரம் கூட மறையவில்லை.

29ஆம் திகதி மீண்டும் கைது. எச்சஞ்சொச்சமாயிருந்த ஆண்களில் ஐம்பத்தியாறு பேரை துப்பாக்கி முனையில் தள்ளிச் சென்றார்கள். கொண்டைவெட்டுவானில் பெரு நெருப்பெரிந்தது. சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் எறியப்பட்டார்கள். சொல்லியழ வார்த்தைகளின்றி கையில் தூக்கிய பொருட்களோடு காரைத்தீவிற்குத் தப்பியோடினார்கள். காரைத்தீவுப் பாடசாலை அகதி முகாமாகியது. சொந்த மண்ணிலேயே எமது மக்கள் அகதிகளாக்கப் பட்டார்கள். அகதி வாழ்வோடு விட்டிருந்தால் கூடப் பரவாயில்லை. அகதி முகாமையும் கொலை முகாமாக சிங்கள இராணுவத்தினர் மாற்றினார்கள்.

தமிழ் மாணவர்களின் கல்விக்கூடம் கொலைக் கூடமாக்கப் பட்டது. ஆட்டுப் பண்ணைகளில் இறைச்சிக்குத் தெரிவாகிய கிடாவைப் போல அகதி முகாமில் வைத்துக் கொலை செய்வதற் குரிய ஆண்களை தெரிந் தெடுத்தார்கள். இம்முறை காரைத்தீவு விசேட அதிரடிப் படையினர் தங்கள் கைவரிசை யினைக் காட்டினார்கள். ஒரு மாதங்கூட மறைய வில்லை ஆடிமாதம் 4ஆம் திகதி காரைத்தீவு அகதி முகாமில் அழுகுரல் ஓங்கி ஒலித்தது. முதல் தெரிவில் பன்னிரெண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். ஓரிருநாள் கழித்து படை முகாமுக்குச் சென்ற தாய்மாருக்கு படையினர் கொடுத்த பதில் விசித்திரமானது. “உங்கட ஆட்கள நாங்க கொண்டு வரல்ல. ஆட்கள் இனம் தெரியாதவர்களால் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று பதிவு செய்துவிட்டு கச்சேரியில காசு எடுங்க” என்று கூறினார்கள்.

பாடசாலையிலிருந்த அகதி முகாமுக்குள் மீண்டும் 10ஆம் திகதி விசேட அதிரடிப் படையினர் புகுந்தனர். பதினொரு ஆண்கள் பிடிக்கப்பட்டனர். எஞ்சியிருந்த ஆண்கள் இவ்வளவுதான். எச்சசொச்சமின்றி எல்லோரையுமே கொண்டுபோய் சுட்டுவிட்டு எரித்தார்கள். வீரமுனைக் கிராமத்து மக்கள் எங்கிருந்தாலும் அவர்களைக் கொன்றொழித்து விடுவதென்று சிங்களப் படையினர் முடிவெடுத்து விட்டனர்.

1990ஆம் ஆண்டு யூலை மாதம் கணவன் மாரைப் பறி கொடுத்த துயரோடு, காரைதீவு அகதி முகாமிலிருந்து வீரமுனை கிராமத்துக்கு திரும்பினார்கள். யாரைப் பறி கொடுக்கக் கூடா தென்று காரைத் தீவுக்கு ஓடினார்களோ அவர்களைக் காரைத்தீவில் பறி கொடுத்து விட்டதால் இனிமேல் எது நடந்தால் என்ன என்ற விரக்தியோடு திரும்பினார்கள். வரும் வழியில் மல்வத்தை இராணுவ முகாமிலிருந்த இராணுவத்தினர் தமது கொலைப் பசியையும் தீர்க்க விரும்பினர். நடந்து வந்தவர்களில் எட்டுப் பேரைப் பிடித்திழுத்துச் சென்றனர். பசிதீரும் வரை மாறி மாறி குதறினார்கள். கடைசி மூச்சு அடங்கும் வரை மிருகத்தனமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள். பிணமாகிப் போனதும் கிண்டிப் புதைத்தார்கள்.

26ஆம் திகதி கொண்டவெட்டுவான் இராணுவ முகாமிலிருந்து வந்த படையினர் மல்வத்தை, வீரமுனை, கலைதிபுரம், புதுநகர் கிராமங்களிலிருந்து எட்டுப்பேரைக் கைது செய்து சென்றார்கள். இன்றுவரை அவர்களின் கதையில்லை. மரண அத்தாட்சிக்கு இராணுவத்தினர் கிராம சேவகர்களுக்கு அனுமதி வழங்கிய போதுதான் முடிந்துபோன இவர்களின் கதையும் தெரியவந்தது. யூன் மாதம் ஆரம்பித்த இன அழிப்பு, யூலை மாதமும் தொடர்ந்து. ஓகஸ்ட் மாதத்தில் உச்சக் கட்டத்தை அடைந்தது.

ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி சிங்களப் படையினருடன் இணைந்து வந்த முஸ்லிம் ஊர்காவல் படையினரும் ஓடி ஒளிந்து வாழ்ந்த ஆண்களில் எட்டுப்பேரினைக் கைதுசெய்து கண்டதுண்டமாக வெட்டிக் கிணற்றில் போட்டார்கள். வீரமுனையிலோ, வளத்தாப்பிட்டியிலோ அல்லது மல்வத்தையிலோ இனிமேல் வாழமுடியாது எனக்கருதிய எமது மக்கள், மண்டூருக்குச் சென்று வாழவிரும்பி, கையில் தூக்கிய பொருட்களோடு நடந்தார்கள்.

11ஆம் திகதி சவளைக்கடை இராணுவ முகாமில் அவர்கள் தடுத்து நிறுத்தப் பட்டார்கள். வீதியில் முகாமுக்கு முன்னால் வைத்தே பதினெட்டுப்பேரை வெட்டிக் கொன்றார்கள். தப்பி ஓடிய மக்கள் மீண்டும் தங்கள் கிராமத்துக்கே வந்து சேர்ந்தனர்.

சவளைக்கடை இராணுவத்தினரும் தமிழர்களைக் கொல்வதில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர். அனாதைகளாய் ஆதரவின்றி ஓடிவந்த மக்களை கொண்டவெட்டுவான் படையினர் விட்டு வைக்கவில்லை. ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதியே இக் கிராமங்களுக்குள் புகுந்தார்கள். முஸ்லீம் ஊர்காவல் படையினரும் துணைக்கு வந்தனர். வீடுகள் தீயிடப்பட்டன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திலும்….

சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திலும், வீரமுனை இராமகிருஸ்ண மிசனிலும் இருந்த மக்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. உறவுகளாகப் பழகிய முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தியவாறு ஆலயத்தில் இருந்தவர்கள் மீதும், பாடசாலையில் இருந்தவர்கள் மீதும் தாக்குதல்களை நடாத்தினர். எரியும் நெருப்பில் உயிருடனேயே உறவுகள் தூக்கி வீசப்பட்டனர். தாயிடம் பால் அருந்திக் கொண்டிருந்த பிள்ளையின் காலைப்பிடித்து இழுத்து பாடசாலை சுவரில் அடித்துக் கொலை செய்தனர். ஆலயத்திற்குள் ஓடி ஒளிந்தவர்கள் மீது துப்பாக்கி சூடுகள் நடாத்தப்பட்டன. இந்த தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள் உட்பட34 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

காயங்களோடு அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 55பேரைக்கூட இராணுவத்தினர் விடவில்லை. வைத்தியசாலையைச் சுற்றி வளைத்து காயமுற்று படுக்கையிலிருந்த அத்தனை பேரையும் தூக்கி ஏற்றிச் சென்று கொன்றனர். நாட்கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் தொடர்ச்சியாக நடந்து முடிந்த வீரமுனைக் கிராம மக்களின் துயரக்கதையை இன்று எத்தனை பேர் அறிவீர்கள் ?

வீரமுனைப் படுகொலை இதுவரையில் ஆவணப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரையில் சரியான பதிவுகள் முன்னெடுக்கப் படவில்லை. இனிவரும் காலத்திலாவது வீரமுனைப் படுகொலை ஆவணப் படுத்தப்பட்டு, புத்தகமாக வெளியிட தமிழ் தேசிய பற்றாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Posted in Uncategorized

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வர்த்த நிலையங்களை பூட்ட தீர்மானம்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் வர்த்த நிலையங்கள் பூட்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்திய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்த நிலையங்களை எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை பூட்டி கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தக சங்க நிர்வாகத்தை கூட்டி தீர்மானம் எடுத்துள்ளதாவும் அதனடிப்படையில் எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் வெள்ளிக்கழமை அதிகாலை வரை புதுக்குடியிருப்பில் உள்ள வணிக நிலையங்களை பூட்டி சுய கட்டுப்பாட்டினை மேற்கொள்வதற்கான தீர்மானத்தினை வணிகர் சங்கம் எடுத்துள்ளது.

இன்று நாட்டில் பரவலாக கொரோனா தொற்று ஏற்பட்டு அனைத்து வைத்திய சங்கங்களும் வீதி ஓரங்களில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் மக்களும் வீடுகளில் இருந்து வெளியில் நடமாட்டத்தினை குறைத்துக்கொள்ளுங்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சரியான திட்டமிடல் கிடையாது வைத்திய வசதிகள் இல்லை வைத்திய அதிகாரிகள் குறைவு தொற்று வேகமாக ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது

இவ்வாறான சந்தர்பத்தில் வைத்தியசாலைகளில் இடம் இல்லை ஒட்சிசன் தட்டுப்பாடாக இருக்கின்றது. எனவே நாங்கள் இந்த கடைகளை பூட்டியதன் நோக்கம் மக்களின் தேவையற்ற விதமான நடமாட்டத்தினை கட்டுப்படுத்தவே.

மக்கள் இருந்தால் மட்டுமே வர்த்த நிறுவனங்களை திறந்து வியாபாரங்கள் செய்ய முடியும் மக்களாகிய நீங்கள் என்றும் எங்களுக்கு தேவை இதனை கருத்தில் கொண்டுதான் இந்த முடிவினை எடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு அரசாங்கத்தின் 10 பங்காளி கட்சிகள் கோரிக்கை

குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை மூடி வைக்குமாறு அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை மூடாவிட்டால், கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை வைத்தியசாலை கட்டமைப்பால் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு அதிகரிக்கும் என குறித்த 10 கட்சிகளும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் அத்துரலிய ரத்தன தேரருடன், ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணாயக்கார, லங்கா சம சமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவங்ச, பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, எக்சத் மஹஜன பெரமுனவின் தலைவர் டிரான் அலஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டொக்டர் ஜீ. வீரசிங்க, ஶ்ரீலங்கா மக்கள் கட்சியின் அசங்க நவரத்ன மற்றும் யுத்துகம தேசிய அமைப்பின் கெவிந்து குமாரதுங்க ஆகியோர் அந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை மூடிவைப்பதன் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையை குறைக்க முடியும் எனவும் அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.

நாடு தொடர்ந்தும் திறந்திருந்தால், தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் நோயாளர்களின் அச்சத்தால் நாடு செயற்றிறனை இழக்கும் அபாயம் உள்ளதென ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நோயை கட்டுப்படுத்துவதன் மூலம், மக்களின் நம்பிக்கையை மேம்படுத்தி நாட்டின் பொருளாதார செயற்பாட்டையும் மேம்படுத்த முடியும் என அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகளும் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டை முடக்குமாறு அஸ்கிரி – மல்வத்து தேரர்கள் கோரிக்கை

கொரோனா பரவலை கட்டுப்பாடுத்துவதற்காக ஒருவார காலம் நாட்டை முடக்குமாறு அஸ்கிரி – மல்வத்து தேரர்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

தடுப்பூசி வழங்குவதன் மூலம் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிக்காக ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அவர்கள் பாராட்டியுள்ளனர்.

இருப்பினும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், ஒட்டுமொத்த மக்களும் இன்று பேரழிவை எதிர்கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த நேரத்தில் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக, சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் குறைந்தது ஒரு வார காலம் நாட்டை மூடி நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் மேலும் 2,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 372,079 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 318,714 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,604 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

இலங்கைக்கு சீனா கொடுத்த பல்லாயிரம் கோடி கடன் உதவியா? ஆதிக்கமா?

சீனாவிடமிருந்து இலங்கை கடந்த 17ஆம் தேதியன்று 61.5 பில்லியன் இலங்கை ரூபாய் (6150 கோடி இலங்கை ரூபாய்) மதிப்பிலான கடனுதவியை உடன்படிக்கையொன்றின் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், பதிவொன்றின் ஊடாக இந்த தகவலை வெளியிட்டிருந்தது. இலங்கையின் கோரிக்கைக்கு அமையவே இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடனால் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ள அதே வேளையில், வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தவே கடன் வாங்கப்பட்டுள்ளது என்று இலங்கை அரசு தெரிவிக்கிறது.

கோவிட் ஒழிப்பு நடவடிக்கைகள், பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துதல் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இலங்கையில் கோவிட் தொற்று பரவ ஆரம்பித்த காலம் முதல், நாடு பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக ஆளும் தரப்பு அனைத்து சந்தர்ப்பங்களிலும் தெரிவித்து வருகின்றது.

இலங்கையின் பிரதான வருமான வழியான சுற்றுலாத்துறை, 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முழுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய வருமான வழிகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்நிய செலாவணி வருமானங்களும் குறைவடைந்துள்ளன.

இதனால், இலங்கை அரசாங்கம் பாரிய பொருளாதார வீழ்ச்சிகளை சந்தித்து வருவதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்ற நிலையிலேயே, இந்த கடன் தொகை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

சீனாவிடமிருந்து அரசாங்கம் அவசரமாக இந்த கடனை பெற்றுக்கொண்டமை குறித்து, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீட பேராசிரியர் சங்கரன் விஜயச்சந்திரனிடம் பிபிசி தமிழ் வினவியது.

நாடொன்றிற்கு குறைந்தது மூன்று மாத காலத்திற்கு தேவையான அந்நிய செலாவணி இருப்பு இருக்க வேண்டும் எனவும், ஆனால் இலங்கை வசம் தற்போது அந்நிய செலாவணி இருப்பு கிடையாது. இதனால், கடனொன்றை பெற்றுக்கொள்ளும் போது, அந்நிய செலாவணி இருப்பு அதிகரிக்கும் என கூறிய அவர், அதனூடாக ரூபாயின்பெறுமதி வீழ்ச்சியை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.

தற்போது இலங்கை அரசாங்கத்திற்கு வரி வருமானங்கள் குறைவடைந்து, ஏற்றுமதி குறைவடைந்து, சம்பளத்தை கூட வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதேவேளை, அரசாங்கத்தினால் செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன்களின் அளவு அதிகரித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர், பெருமளவிலான கடன் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல் நடத்துவதற்கு தயாராகி வருகின்றமையினால், கீழ் மட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக பேராசிரியர் சங்கரன் விஜயச்சந்திரன் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் கோவிட் பரவல் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர எந்தவொரு தரப்பும் உதவிகளை செய்ய முன்வராத காரணத்தினால், இவ்வாறான கடன்களின் ஊடாக பங்களிப்புக்களை செய்ய முடியும் என அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

பொருளாதார உதவி மற்றும் கடனுக்காக இலங்கை பல வகைகளில் சீனாவைச் சார்ந்துள்ளது.

‘குறைந்த காலம்; அதிக வட்டி’

சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் தொகைக்கு வட்டி வீதம் அதிகம் எனவும், குறுகிய காலத்தில் இந்த கடனை செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.

அவ்வாறு குறுகிய காலத்தில் கடன் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில், நாட்டிலுள்ள சொத்துகளை சீனாவிற்கு எழுதி கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அவ்வாறு இல்லையென்றால், பல்வேறு தேவையற்ற ஒப்பந்தங்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் தெரிவிக்கின்றார்.

சர்வதேச செலாவணி நிதியம் அல்லது உலக வங்கி போன்ற நிறுவனங்களிடமிருந்து கடனை பெற்றுக்கொள்ளும் போது பிரச்னைகள் இருக்காது என கூறிய அவர், நாடொன்றிடமிருந்து கடன் வாங்கும் போது பிரச்னை காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சீனா, மானியங்களை வழங்காது. கடன்களையே வழங்கும்; சீனா, தமது வர்த்தக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே, இவ்வாறான கடன்களை வழங்குவதாகவும் பேராசிரியர் தெரிவிக்கின்றார்.

அதனால், சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் கடன் தொகையானது, இலங்கையை சீனாவின் ஆளுகைக்குள் வைக்கும் நிலைமையை ஏற்படுத்தும் என பேராசிரியர் சங்கரன் விஜயச்சந்திரன் குறிப்பிடுகின்றார்.

பொருளாதார ரீதியில் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளும் வகையிலேயே இந்த கடன் தொகை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சீனா

இலங்கை சீன அரசாங்கத்திடமிருந்து பல்வேறு கடன்கள், அபிவிருத்தி திட்டங்களுக்கான முதலீடுகள் என பெருந்தொகையான பணத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

அரசு என்ன கூறுகிறது?குறிப்பாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கான ஒப்பந்தமொன்றில் இலங்கை அரசாங்கமும், சீன அபிவிருத்தி வங்கியும் கைச்சாத்திட்டிருந்தன.இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகம், ஹம்பாந்தோட்டை விமான நிலையம், தெற்கு அதிவேக வீதி, கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகர் உள்ளிட்ட மேலும் பல திட்டங்களை சீன அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான நிலையில், இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகவே சீனாவிடமிருந்து கடன்களை பெற்று வருகின்றது.

குறிப்பாக சீனாவிடமிருந்து 10 பில்லியன் யுவானை (சுமார் 1.5 பில்லியன் டொலருக்கு நிகரான சீன பணம்) பெற்றுக்கொண்டுள்ளதாக மே மாத இலங்கை மத்திய வங்கியின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் வகையிலேயே தாம் வெளிநாடுகளிடமிருந்து கடன்களை பெற்றுக்கொள்வதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

குறிப்பாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையில் வருடாந்தம் சுமார் 8 பில்லியன் ரூபா வரை இடைவெளியொன்று காணப்படுகின்றமையினால், இந்த காலப் பகுதியில் அதனை ஈடு செய்துக்கொள்வதற்காக இறக்குமதி இயலுமான வரை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்;.சுற்றுலா துறை, வெளிநாடு பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளிலேயே அதனை இதுவரை காலமும் ஈடு செய்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.இந்த மூன்று விதமான வருமானங்களும், கொவிட் நிலைமைக்கு மத்தியில் இன்று பூஜ்ஜியமாகியுள்ளதெனவும் அவர் தெரிவிக்கின்றார்.இந்த இடைவெளியை நிரப்புவதற்காக இயலுமான வரை இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ள போதிலும், அதனையும் ஈடு செய்துக்கொள்ள முடியாதமையினாலேயே கடன் பெற வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

Posted in Uncategorized

மட்டக்களப்பில் நாளை முதல் வர்த்தக நிலையங்களை மூடத் தீர்மானம்

மட்டக்களப்பில் நாளை முதல் (20) எதிர் வரும் 30ஆம் திகதிவரை பலசரக்குக் கடைகள், மருந்தகங்கள், பேக்கரி, சாப்பாட்டு கடை தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் எம்.செல்வராசா தெரிவித்துள்ளார்.

நேற்று (18) நடைபெற்ற வர்த்தக சங்கக் கூட்டத்தின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தீவிரமடைந்து வரும் கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப் படுத்தும் முகமாகவும், இம் மாவட்டத்தின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டும் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அனைத்து வர்த்தகர்களும் பூரண ஒத்துழைப்பைத் தருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இக் கூட்டத்தில் வர்த்தக சங்கத்தின் செயலாளர் தியாகராசா உட்பட அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சியில் மிக இரகசியமாக காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் திறப்பு

குறித்த அலுவலகம் கடந்த 12.08.2021 அன்று காலை அலுவலக அதிகாரிகளின் பங்குபற்றலுடன் மிகவும் இரகசியமாக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிப்புறத்தில் எவ்வித பெயர் பலகையும் பொருத்தாது அலுவலகத்தின் உள்ளே காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் என கடதாசியில் பிரதி எடுக்கப்பட்டு ஒட்டப்பட்டு அலுவலக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருக்கில் மாவட்டச் செயலக பயிற்சி நிலையம் அமைந்துள்ள காணியில் உள்ள பெண் தலைமைதாங்கும், மற்றும் கணவனை இழந்த பெண்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிலைய அலுவலகத்தின் ஒரு பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான குறித்த (OMP) அலுவலகம் இயங்கி வருகிறது.

இவ்வலுவலகத்தில் சுமார் நான்கு உத்தியோகத்தர்கள் பணியாற்றுவதாகவும், கடமைகளுக்காக இருவர் சுழற்சி முறையில் வந்து செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வலுவலகம் திறந்தவிடயம் தொடர்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பின் செயலாளர் ஆ. லீலாதேவியுடன் தொடர்பு கொண்டு வினவிய போது இது பற்றிய எவ்வித தகவல்களுக்கும் தமக்கு தெரியாது என்றும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கே தெரியாது என்ன நோக்கத்திற்காக கிளிநொச்சியில் OMP அலுவலகம் திறக்கபட்டது என தமக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரனிடம் வினவிய போது, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தலைமை காரியாலயம் மாவட்டச் செயலகத்திடம் தங்களுடைய அலுவலகத்தின் செயற்பாடுகளை கிளிநொச்சி ஆரம்பிப்பதற்கு இடம் ஒன்றை கோரியிருந்தார்கள் அதற்கமைவாக மேற்படி இடத்தை நாம் வழங்கினோம். அங்கு அவர்கள் தங்களுடைய செயற்பாடுகளை ஆரம்பித்திருகின்றார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மங்கள இறந்துவிட்டார் என்ற செய்தியில் எதுவித உண்மையும் இல்லை!

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி உண்மையில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மங்கள சமரவீர தற்போது கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Posted in Uncategorized

நாட்டை முழுமையாக முடக்காது பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஜனாதிபதி தீர்மானம்

நாட்டை முழுமையாக முடக்காது, பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு முடக்கப்பட்டால், பொருளாதாரத்தை நிலைநிறுத்த முடியாது என்றும், அன்றாடம் வாழ்க்கை நடத்துபவர்கள் கடுமையான நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் என்றும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரையிலான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஊரடங்கு உத்தரவை, வார இறுதி நாட்களில் முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் நாடு முடக்கப்படுமென்றும் நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.