மட்டக்களப்பில் நாளை முதல் வர்த்தக நிலையங்களை மூடத் தீர்மானம்

மட்டக்களப்பில் நாளை முதல் (20) எதிர் வரும் 30ஆம் திகதிவரை பலசரக்குக் கடைகள், மருந்தகங்கள், பேக்கரி, சாப்பாட்டு கடை தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் எம்.செல்வராசா தெரிவித்துள்ளார்.

நேற்று (18) நடைபெற்ற வர்த்தக சங்கக் கூட்டத்தின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தீவிரமடைந்து வரும் கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப் படுத்தும் முகமாகவும், இம் மாவட்டத்தின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டும் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அனைத்து வர்த்தகர்களும் பூரண ஒத்துழைப்பைத் தருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இக் கூட்டத்தில் வர்த்தக சங்கத்தின் செயலாளர் தியாகராசா உட்பட அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சியில் மிக இரகசியமாக காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் திறப்பு

குறித்த அலுவலகம் கடந்த 12.08.2021 அன்று காலை அலுவலக அதிகாரிகளின் பங்குபற்றலுடன் மிகவும் இரகசியமாக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிப்புறத்தில் எவ்வித பெயர் பலகையும் பொருத்தாது அலுவலகத்தின் உள்ளே காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் என கடதாசியில் பிரதி எடுக்கப்பட்டு ஒட்டப்பட்டு அலுவலக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருக்கில் மாவட்டச் செயலக பயிற்சி நிலையம் அமைந்துள்ள காணியில் உள்ள பெண் தலைமைதாங்கும், மற்றும் கணவனை இழந்த பெண்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிலைய அலுவலகத்தின் ஒரு பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான குறித்த (OMP) அலுவலகம் இயங்கி வருகிறது.

இவ்வலுவலகத்தில் சுமார் நான்கு உத்தியோகத்தர்கள் பணியாற்றுவதாகவும், கடமைகளுக்காக இருவர் சுழற்சி முறையில் வந்து செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வலுவலகம் திறந்தவிடயம் தொடர்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பின் செயலாளர் ஆ. லீலாதேவியுடன் தொடர்பு கொண்டு வினவிய போது இது பற்றிய எவ்வித தகவல்களுக்கும் தமக்கு தெரியாது என்றும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கே தெரியாது என்ன நோக்கத்திற்காக கிளிநொச்சியில் OMP அலுவலகம் திறக்கபட்டது என தமக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரனிடம் வினவிய போது, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தலைமை காரியாலயம் மாவட்டச் செயலகத்திடம் தங்களுடைய அலுவலகத்தின் செயற்பாடுகளை கிளிநொச்சி ஆரம்பிப்பதற்கு இடம் ஒன்றை கோரியிருந்தார்கள் அதற்கமைவாக மேற்படி இடத்தை நாம் வழங்கினோம். அங்கு அவர்கள் தங்களுடைய செயற்பாடுகளை ஆரம்பித்திருகின்றார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மங்கள இறந்துவிட்டார் என்ற செய்தியில் எதுவித உண்மையும் இல்லை!

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி உண்மையில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மங்கள சமரவீர தற்போது கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Posted in Uncategorized

நாட்டை முழுமையாக முடக்காது பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஜனாதிபதி தீர்மானம்

நாட்டை முழுமையாக முடக்காது, பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு முடக்கப்பட்டால், பொருளாதாரத்தை நிலைநிறுத்த முடியாது என்றும், அன்றாடம் வாழ்க்கை நடத்துபவர்கள் கடுமையான நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் என்றும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரையிலான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஊரடங்கு உத்தரவை, வார இறுதி நாட்களில் முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் நாடு முடக்கப்படுமென்றும் நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் தொகுதிப் பொதுமக்களிடம் பிரதேச சபை உறுப்பினர் ரெலோ மதுசுதன் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது. குறிப்பாக கோண்டாவில், திருநெல்வேலி, பாற்பண்ணை, கொக்குவில் போன்ற பகுதிகளில் அதிகளவில் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினருமான கு.மதுசுதன் அரசு பொறுப்பற்ற வகையில் நாட்டை முடக்காமலிருந்தாலும் நீங்கள் பொறுப்பு வாய்ந்தவர்களாக உங்களினதும், உங்கள் அன்புக்குரியவர்களினதும் பெறுமதியான உயிர்களைப் பாதுகாக்கும் வகையில் அவசியமான விடயங்களுக்கு மாத்திரம் வீடுகளுக்கு வெளியே செல்லுங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் எத்தனையோ பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். எத்தனையோ பேர் கொரோனாத் தொற்றால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எத்தனையோ பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் குடும்பங்களைப் பிரிந்திருக்கின்றார்கள். எத்தனையோ பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் குடும்பங்களைப் பிரிந்திருக்கின்றார்கள்.

கொரோனாவால் குடும்பங்களைப் பிரிந்திருந்து இறந்தவர்களுக்கு கிரியைகள் செய்ய முடியாத நிலையில் பலரும் மனரீதியாகப் பாதிக்கப்படுவதுடன் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் பலரும் தவித்து வருகின்றார்கள்.

யுத்தக் காலப் பகுதியை விடக் கொடிய சூழலில் வாழுகின்ற உணர்வை கொரோனாப் பெருந் தொற்று தற்போது ஏற்படுத்தியுள்ளது. இந்த இடரை நாங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு, முறியடிப்பதற்கு நாங்கள் அனைவரும் பொறுப்புள்ளவர்களாகச் செயற்பட வேண்டும் எனவும் அவர் வேண்டிக் கேட்டுக் கொண்டார்.

Posted in Uncategorized

மேலும் 170 கொரோனா மரணங்கள் உறுதி

170 கொரோனா மரணங்கள் நேற்று (17) உறுதி செய்யப்பட்டுள்ளன.

அதன்பிரகாரம், நாட்டில் இதுவரை 6,604 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 365,683 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 316,528 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியீடு – இன்று முதல் மூடப்படும் இடங்கள்!

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

இது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 வரை அமலில் இருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி,

* ஒருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற முடியும். ஆனால் வேலைக்காக அல்லது சுகாதார வசதியை பெற்றுக் கொள்வதற்காக வெளியே செல்லும் போது இது பொருந்தாது.

* இன்று (18) முதல் வணிக வளாகங்கள் முழுமையாக மூடப்படும்.

* பல்பொருள் அங்காடியினுள் ஒரே நேரத்தில் அதன் மொத்த திறனில் 25 சதவீதமானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

* பகல்நேர பராமரிப்பு மையங்கள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும்.

* உடல் கட்டமைப்பு மையங்கள் மற்றும் உட்புற விளையாட்டரங்குகள் இன்று முதல் மூடப்படும்.

* சிறுவர் பூங்காக்கள், திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள், விருந்துகள் மற்றும் கடற்கரைகளில் ஒன்று கூடுதல் இன்றிலிருந்து தடைசெய்யப்படும்.

* நீச்சல் குளங்கள் மற்றும் ஸ்பாக்கள் இன்று முதல் மூடப்படுகின்றன.

* ஹோட்டல்கள் மற்றும் விடுமுறை விடுதிகள் அவற்றின் மொத்த திறனில் 25 சதவீதமானவர்களுக்கு மட்டுமே திறந்திருக்க முடியும்.

Posted in Uncategorized

கிளிநொச்சி நகர வர்த்தக நடவடிக்கைகளை முடக்கத் தீர்மானம்

கிளிநொச்சி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு கொரோனாப் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த நடவடிக்கை நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) 20.08.2021 தொடக்கம் 28.08.2021 வரை கிளிநொச்சி வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை கிளிநொச்சி சேவைச் சந்தையும் இன்று முதல் கரைச்சி பிரதேச சபையினால் மூடப்பட்ட நிலையில் வர்த்தக நடவடிக்கைகள் பொது இடங்களில் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகப் பின்பற்றப்பட்டு முன்னெடுக்கப்பட்டிருந்தன.

நாட்டில் நேற்று வரையில் 35 நகரங்களின் வர்த்தக நடவடிக்கைகளை முடக்கி வர்த்தகர்கள் கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ரூபாய் குறித்து மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கை!

உடனடியாகச் செயற்படும் விதத்தில் இலங்கை ரூபாவை மதிப்புக் குறைக்குமாறு உரிமம்பெற்ற வங்கிகளிம் கோரவில்லை என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.

உடனடியாகச் செயற்படும் விதத்தில் இலங்கை ரூபாவை மதிப்புக் குறைக்குமாறு உரிமம்பெற்ற வங்கிகள் உத்தியோகபூர்வமாக கோரப்பட்டுள்ளன என்ற செய்திகள் பரப்பப்பட்டுவருவதனை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளது.

அத்தகைய செய்திகள் எவ்விதத்திலேனும் அடிப்படையற்றவை என பொதுமக்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுவதுடன் செலாவணி வீதத்தினை நிர்ணயிப்பதன் மீதான இலங்கை மத்திய வங்கியின் நிலைக்கு அல்லது தொழிற்பாட்டு ரீதியான ஏற்பாடுகளுக்கு இலங்கை மத்திய வங்கி எந்தவித மாற்றத்தினையும் மேற்கொள்ளவில்லை.

சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் வழமையான ஊடகங்கள் ஊடாகவும் பரப்பப்பட்டு வருகின்ற தவறானதும் தவறாக வழிநடத்துகின்றதுமான தகவல்களை நம்பவேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி விடுக்கும் ஏதேனும் உத்தியோகபூர்வ அறிக்கை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், துணை ஆளுநர் அல்லது பெயர் மற்றும் பதவி மூலம் அடையாளப்படுத்தப்படுகின்ற இலங்கை மத்திய வங்கியின் எவரேனும் வேறு அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் மூலமே வழங்கப்படும்.

மூன்று வகையான டெல்டா வைரஸ் திரிபுகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன

டெல்டா கொரோனா பிறழ்வின் மூன்று வகையான திரிபுகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் மேலும் சில கொரோனா வைரஸ் பிறழ்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறினார்.

SA 222V, SA 701S மற்றும் SA 1078S ஆகிய புதிய டெல்டா திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பகிர்தல்: