நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கியதாக படையினர் மீது குற்றச்சாட்டு!

பொன்னாலை மேற்கில், மக்களின் வீடுகளுக்குள் புகுந்து படையினர் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதல் மற்றும் மக்களை அச்சுறுத்தியமை தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இன்று (17) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நள்ளிரவு 12 மணியளவில் பொன்னாலை மேற்கு பிரதேசத்திற்குள் பட்டா வாகனம் மற்றும் யுஹ12525 இலக்க மோட்டார் சைக்கிள் என்பவற்றில் நுழைந்த படையினர் வீதியில் ஒளிர்ந்துகொண்டிருந்த மின்குமிழ்களை அணைத்துவிட்டு மக்களை மோசமாக அச்சுறுத்தினர். வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் நடத்தினர். இளைஞர்களை துரத்தி துரத்தி தாக்கினர்.

படையினரின் மூர்க்கத்தனமான செயற்பாட்டால் அச்சமடைந்த இளைஞர்கள் ஊரை விட்டு தப்பியோடினர். பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வயல்களுக்குள் தஞ்சமடைந்தனர். சில மணிநேரம் அங்கு பதட்டமான சூழல் நிலவியது.

இந்நிலையில், வலி.மேற்கு பிரதேச சபையின் பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசாவுக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதை அடுத்து உடனடியாகவே சம்பவ இடத்திற்கு சென்ற அவர் படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

நள்ளிரவு நேரம் மக்களை தாக்கிய படையினரின் செயற்பாடு குறித்து படையினருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட அவர் பொலிஸாருக்கு அழைப்பு எடுத்து அவர்களை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்திருந்தார்.

பொலிஸார் வந்தால் சிக்கல் நிலை உருவாகும் என உணர்ந்த படையினர் உடனடியாகவே அங்கிருந்து வெளியேறினர். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயம் வரை ஓடிச்சென்ற படையினர் அங்கு தயாராக நின்ற வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றனர்.

படையினர் தம்மைத் தாக்கியமை தொடர்பாக நள்ளிரவு 11.55 மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்திருந்த போதிலும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை எனவும் பின்னர் 119 இற்கு அறிவித்தமையால் அதிகாலை 2.00 மணிக்கு வந்து விசாரணை நடத்தினர் எனவும் மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, சம்பவ தினம் பிற்பகல் வேளை பொன்னாலை சவாரித்திடலில் இடம்பெற்ற மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் பொன்னாலை மற்றும் கோட்டைக்காடு இளைஞர்கள் சிலர் காயமடைந்தனர் எனவும் இச்சம்பவத்தின் தொடர்ச்சியாகவே படையினர் மக்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு சந்தை சுகாதார விதிமுறைகளின் திறக்க ஏற்பாடு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சந்தையில் கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் சந்தை முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.

இன்னிலையில் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு அமைய வெத்திலை கடை நடத்தும் இருவர் மற்றும் சீட்டு பிடிக்கும் ஒருவர் உள்ளிட்ட மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இன்னிலையில் சந்தையினை மீள திறப்பதற்கு வணிகர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் நிலமைகள் தொடர்பான ஒரு கலந்துரையாடல் இன்று பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது இதன்போது படைத்தரப்பு,சுகாதாரதுறையினர் பொலீஸ் அதிகாரி,பிரதேச செலயல அதிகாரிகள் வணிகர்கள் சார்பானவர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.

இன்னிலையில் நாளை செவ்வாய்கிழமை சந்தையினை சுகாதார விதிமுறைகளுக்கு அமைய திறப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Posted in Uncategorized

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 6000-ஐ கடந்தது

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 6000-ஐ கடந்துள்ளது.

மேலும் 161 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டதையடுத்து, எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6096 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நேற்று (15) 3,435 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் இதுவரை 3,54,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, 2,387 கொரோனா நோயாளர்கள் நேற்று குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,09,732 ஆக அதிகரித்துள்ளது.

இரவில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கான காரணம்

இன்று (16) முதல் ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்துவதன் காரணமாக குறித்த காலப்பகுதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அத தெரண பிக் போகஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: சுகாதார அமைச்சராக ஹெகலிய, கல்வி அமைச்சராக தினேஸ்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இன்று திங்கட்கிழமை(16.08.2021) அமைச்சரவை அமைச்சுப் பொறுப்புக்களில் திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய, கல்வி அமைச்சராகப் பதவி வகித்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த தினேஸ் குணவர்தன கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த பவித்ரா வன்னியாரச்சி போக்குவரத்து அமைச்சராகவும், ஊடகத்துறை அமைச்சராகப் பதவி வகித்த கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாமல் ராஜபக்ச இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்களுக்கு மேலதிகமாக அபிவிருத்தி இணைப்புப் பணிகள் கண்காணிப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

காமினி லொக்குகே, மின்சக்தி அமைச்சராகவும், டளஸ் அலகப்பெரும ஊடகத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஏழு அமைச்சர்களும் இன்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஒருநாள் மாத்திரம் இவ்வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வு

இவ்வாரத்தில் பாராளுமன்றத்தை நாளையதினம் மாத்திரம் கூட்டுவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம்

நிலவும் கொவிட் சூழலைக் கருத்தில் கொண்டு இவ்வாரத்தில் பாராளுமன்றத்தை நாளையதினம் (17) மாத்திரம் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (16) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

இதற்கமைய நாளை (17) காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகவிருப்பதுடன், முற்பகல் 10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை வைரஸ் தொற்று (கொவிட்-19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம், உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான 03 கட்டளைகள் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான (அதியாயம் 235) தீர்மானங்கள் என்பவற்றை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

மாலை 4.30 மணி முதல் 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பிற்பகல் 4.50 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதமும் நடைபெறவுள்ளது.

அத்துடன், பல்வேறு காரணங்களால் இதுவரை கேட்கப்படாதுள்ள வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக செப்டெம்பர் மாதம் 06ஆம் திகதி திங்கட்கிழமையை ஒதுக்குவதற்கு இதற்கு முன்னர் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய அன்றையதினத்தில் பாராளுமன்றத்தை அடுத்ததாகக் கூட்டுவதற்கும் இங்கு முடிவானது.

Posted in Uncategorized

மாற்றத்தை எண்ணி மனதை தேற்றிய பவித்ரா

இவ்வாறானதொரு மாற்றம் ஏற்படும் என்று, தான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, வாழ்க்கையில் நடப்பவை எல்லாம் நன்மைக்கே என மனதை தேற்றிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இன்று (16) அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், சுகாதார அமைச்சிலுள்ள அதிகாரிகளிடம் உரையாடிய போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

எதிர்பாராத தருணத்தில் தனக்கு இந்த அமைச்சு மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தான் குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லும் வரை தனது அமைச்சுப் பதவியில் மாற்றம் வரும் என தான் அறிந்திருக்கவில்லை என்றார்.

எது எப்படியாயினும் வாழ்க்கையில் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

Posted in Uncategorized

இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கிறது பிரித்தானியா: வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப்

இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் சூழல் தொடர்பில் தொடர்ச்சியாக கரிசனை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான இணை அணுசரணை நாடுகளினால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் உன்னிப்பான கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையில் நிகழ்ந்ததாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான சாட்சியங்களை சேகரித்தல், பாதுகாத்தல் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினுடைய செயற்பாட்டிற்கான நிதி தடையின்றி கிடைப்பதையும் 2022ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் மேலதிகமாக ஒதுக்கப்படுவதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானிய கொன்சவேர்ட்டிக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவருமான எலியட் கோல்பர்ன் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள், போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் சாட்சியங்களை திரட்டுதல் மற்றும் பாதுகாத்தல் செயற்பாட்டுக்காக 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியும், அச்செயற்பாட்டிற்கான நிதியை கூடுதலாக அளிப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பிரித்தானியாவின் வெளிவிவகார, பொதுநலாவாய அபிவிருத்தி இராஜாங்க அலுவலகத்திற்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

அக்கடிதத்திற்கு அளித்துள்ள பதிலிலேயே பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்ப்பட்ட 46/1 தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான நிதி விடயம் சார்ந்து தாங்கள் கடந்த ஜுன் 24ஆம் திகதி எனக்கு கிடைக்கப்பெற்றது. அதனை தமிழர்களின் சார்பில் எனது கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இலங்கையின் மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் சூழல் தொடர்பில் தொடர்ச்சியாக கரிசனை செலுத்தி வருகின்றேன். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பிலான 46/1 தீர்மானத்தினை நிறைவேற்றியதன் பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆழ்ந்த கரிசனைகளை செலுத்தி வந்து கொண்டிருக்கின்றேன். அத்துடன் அவ்விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை முழுமையாக ஊக்குவிப்பதோடு ஆதரித்தும் வந்திருக்கின்றேன்.

மிக அண்மையில் அதாவது மே 10ஆம் திகதி இலங்கையில் உள்ள பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகருடனும் ஜுன் 17ஆம் திகதி இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடனும் ஐ.நா.தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான எனது கரிசனையை மிகவும் ஆழமாக வெளிப்படுத்தியிருந்தேன்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்திற்கான நிதி பற்றிய விடயத்தினை எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். அதற்காக முதலில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். கடந்த ஜுன் ஆறாம் திகதி எனது அலுவலகர்கள் ஜெனிவாவிலும், நியூயோக்கிலும் இந்த விடயம் சம்பந்தமாக செயற்படுவதற்காக ஊக்குவிக்கப்பட்டிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் சுயாதீனமாக செயற்படும் வரவுசெலவுத்திட்ட கேள்விகள் மற்றும் நிருவாகத்திற்கான ஆலோசனைக் குழுவானது 2021ஆம் ஆண்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதித்தொகைக்கு தனது இணக்கத்தினை வெளியிட்டிருக்கின்றது. அத்துடன் ஆரம்பகட்டத்தில் குறிக்கப்பட்டிருந்த தொகையை விடவும் நிதி குறைக்கப்பட்டிருந்தமை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதாகின்றது. இருப்பினும், அதன்காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் ஆரம்பகட்டச் செயற்பாடுகளின் வினைத்திறனில் குறைவான நிலைமைகள் காணப்படவில்லை. அவை முன்னேற்றகரமாகவே முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகரத்திற்கான வரவு செலவுத்திட்டத்தொகையை அதிகரிப்பது தொடர்பில் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களைச் செய்வோம். மேலதிகமான நிதி மூலங்களிலிருந்து மேலும் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைளை முன்னெடுப்போம். அதுமட்டுமன்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணையை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறைகள் பற்றி தொடர்ச்சியாக கண்காணிப்புடன் இருக்கவுள்ளதோடு அதற்கான ஒத்துழைப்புக்களையும், ஊக்குவிப்பினையும் வழங்கவுள்ளோம் என்றுள்ளது.

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம்: பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின் முக்கிய அம்சங்கள்

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடியின் உரையில் இருந்து சில முக்கிய தகவல்கள்…

*“எதிர்காலத்தில் இந்தியாவின் சிறு விவசாயிகளின் ஒருங்கிணைந்த வலிமையை அதிகரிக்க வேண்டும். அவர்களுக்கு புதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். விசாயிகளுக்கு நன்மை பயக்கும் விதத்தில் கிசான் இரயில் இந்தியாவின் 70 வழித்தடங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

*ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் வென்று கொடுத்த விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகள்.

*இந்தியாவில் 54 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. உலகிலேயே இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் தான் மிகப் பெரியது. இந்தியர்கள் கொரோனாவை மிக பொறுமையாக எதிர்கொண்டு வருகிறார்கள். பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியிலும் நாம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.

*இந்தியா தடுப்பூசிக்காக யாரையும் சாராமல் இருக்கிறோம். அது நம் தொழில்துறையினர், விஞ்ஞானிகளின் ஒருங்கிணைந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

*ஓகஸ்ட் 14ஆம் திகதியை பிரிவினை கோரங்களை நினைவு கோரும் நாளாக அனுசரிக்க முடிவு செய்திருக்கிறோம்.

*நம் இலக்குகளை அடைய அனைவரின் முயற்சியும் அவசியம்.இந்தியா தன் 100ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது நாம் நம் இலக்குகளை அடைந்திருக்க வேண்டும்.

*உலகத் தரம் வாய்ந்த அடிப்படை கட்டமைப்புகளோடு, குறைந்த அரசு தலையீட்டோடு, அதிக நிர்வாகம் நிறுவப்படுவது தான் நம் இலட்சியம்.

*இந்தியாவின் கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை நிரப்ப வேண்டும். இந்தியாவின் முன்னேற்றம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். வட கிழக்கு பகுதி, ஜம்மு காஷ்மீர், லடாக், நம் கடலோரப் பகுதிகள், மலைப்பகுதிகள் என அனைத்து தரப்பு மக்களும் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்தில் இருக்க வேண்டும்.

*ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை நடத்தத் தேவையன பணிகள் நடந்து வருகின்றன. அப்பகுதியின் முன்னேற்றத்தை கண்கூடாக பார்க்க முடிகிறது. லடாக்கில் நவீன கட்டுமானங்கள் வரவிருக்கின்றன. அதோடு இண்டஸ் மத்திய பல்கலைக்கழகம் நிறுவப்பட உள்ளது.

*இன்று இந்திய கிராமங்களில் ஆப்டிக் ஃபைபர் தொழில்நுட்பம் மூலம் இணைய வசதிகள் சென்றடைந்து கொண்டிருக்கின்றன். கிராமபுறங்களிலும் டிஜிட்டல் தொழில்முனைவோர்கள் உருவாகி வருகிறார்கள்.

*எதிர்காலத்தில் இந்தியாவின் சிறு விவசாயிகளின் ஒருங்கிணைந்த வலிமையை அதிகரிக்க வேண்டும். அவர்களுக்கு புதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். விசாயிகளுக்கு நன்மை பயக்கும் விதத்தில் கிசான் ரயில் இந்தியாவின் 70 வழித்தடங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

*ஒரு காலத்தில் செல்ஃபோன்களை இறக்குமதி செய்து கொண்டிருந்த இந்தியா தற்போது செல்ஃபோன்களை ஏற்றுமதி செய்யும் நாடாக உருவெடுத்திருக்கிறது.

*விரைவில் பிரதமர் கதிசக்தி தேசிய திட்டங்கள் தொடங்கப்படும். இது இந்தியாவை உருமாற்றும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றார் பிரதமர்.

*இந்தியாவில் எல்லா மூலை முடுக்குகளையும் 75 வந்தே பாரத் இரயில்கள் இணைக்கும்.

*பெரிய அளவிலான சீர்திருத்தங்களை செய்ய அரசியல் விருப்பங்கள் அவசியம். சிறந்த ஆளுகை இருந்தால்தான் நல்லாட்சியை வழங்க முடியும். அந்த வகையில் இந்தியா எழுதும் புதிய அத்தியாயத்துக்கு உலகம் சாட்சியாக உள்ளது.

*இந்திய அரசு நிர்வாகத்தின் புதிய அத்தியாயம் இது. எளிய மக்களின் வாழ்கையில் அரசின் தேவை இல்லாத தலையீடுகளைக் நீக்குவது அவசியம். அதன் அடிப்படையில் பல்வேறு தேவையில்லாத சட்டங்களை நீக்கி இருக்கிறோம்.

*இராணுவ பள்ளிகள் அனைத்தும் பெண்களுக்கு திறந்துவிடப்படும். கல்வி, விளையாட்டு, ஒலிம்பிக் என எல்லா துறைளிலும் இந்தியாவின் பெண்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

*100ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு முன், எரிசக்தித் துறையில் யாரையும் சாராத நாடாக இந்தியா இருக்க வேண்டும் என நாம் உறுதி ஏற்க வேண்டும். 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா நிகர கார்பன் உமிழ்வு நாடாக வேண்டும் என்கிற நோக்கில் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

*இந்தியாவை பசுமை ஹைட்ரஜன் ஏற்றுமதி ஹப்பாக மாற்ற வேண்டும். பசுமை எரிசக்தி, வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்”

திட்டமிட்ட சித்திரவதைகளை முன்னெடுத்துவரும் இலங்கை பொலிஸாருக்கான பயிற்சியை நிறுத்துங்கள்: யஸ்மின் சூக்கா கோரிக்கை

திட்டமிட்ட சித்திரவதைகளை முன்னெடுத்து வரும் இலங்கை பொலிஸாருக்கான பயிற்சிகளை வழங்குவதை பிரித்தானிய அரசாங்கமும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா கோரியுள்ளார்.

ஸ்கொட்லாந்து இலங்கை பொலிஸாருக்கு வழங்கும் பயிற்சிகளை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக விடுத்துள்ள அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்தும், பிரித்தானிய அரசாங்கத்திடம் அதையொத்த தீர்மானத்தினை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கும் வகையிலும் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2016ஆம் ஆண்டு முதல் இலங்கையின் பொலிஸ் பிரிவுகளுக்கு பயிற்சிகளை வழங்குவதை நிறுத்துமாறு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

அத்துடன், இலங்கையின் பொலிஸ் பிரிவுகள் பல்வேறு சமயங்களில் நிகழ்த்திய சித்திரவதைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளையும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கானசெயற்திட்டம் தயாரித்துள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் இலங்கை பொலிஸ் பிரிவுகளின் சித்திரவதைகள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பிலான விடயங்கள் பற்றிய ஆதாரங்களுடன் சமர்ப்பணங்களும் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு பிரித்தானியா பயிற்சிகளை வழங்குவதை அடிப்படையாக வைத்து தம்மீதான குற்றங்களை இலங்கை பொலிஸ் பிரிவுகள் வெள்ளையடிப்புச் செய்வதற்கு முயற்சிக்கின்றன. ஐ.நா.வில் அவ்விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மேலும், பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளின் பெயரில் அழைத்துச் செல்பவர்களை சித்திரவதைக்குட்படுத்தியமை தொடர்பிலான ஆதராங்களை சேகரித்து வைத்துள்ளது.

அதில் குற்றவாளிகளின் பெயர்களும் உள்ளடக்கமாக உள்ளன. பொலிஸாரின் மற்றொரு பிரிவாக இருக்கும் விசேட அதிரடிப்படையானது போரின் போதும், அதற்குப் பின்னரும் தமிழர்களை கடத்துதல், விசாரணைக்கு அழைத்துச் செல்லுதல், தடுத்து வைத்தல், அக்காலப்பகுதியில் சித்திரவதைக்கு உட்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. விசேட அதிரடிப்படையின் அவ்விதமான செயற்பாடுகளுக்குரிய சாட்சியங்களும் பதிவாகியுள்ளன.

ஆகவே, இவ்விதமான குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் இலங்கையின் பொலிஸ் பிரிவுகள் பொறுப்புக்கூறும் வரையில் அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதை பிரித்தானியா நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என்றுள்ளது.

Posted in Uncategorized