திட்டமிட்டபடி பாடசாலைகளை திறப்பதில் சாத்தியமில்லை – கல்வியமைச்சர்

முன்னர் திட்டமிட்டபடி செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

இதேவேளை தடுப்பூசி திட்டத்துடன் இணைந்து பாடசாலைகளை மீண்டும் திறக்க அரசுக்கு தெளிவான திட்டம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக ஆகஸ்ட் இறுதிக்குள் பாடசாலைகளில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசியின் இரண்டு அளவுகளும் வழங்கப்பட்டு, செப்டெம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீண்டும் திக்க முடியும் என்று கல்வியமைச்சு நம்பிக்கை கொண்டிருந்தது.

எனினும் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக, திட்டமிட்டபடி பாடசாலைகளை மீண்டும் திறக்க முடியாது என்று அமைச்சர் பீரிஸ் கூறினார்.

எனவே மாணவர்கள் பாடத்திட்டத்தை மேற்கொள்ள ஆன்லைன் கல்வி முறையை சார்ந்திருக்க வேண்டும். ஆன்லைன் கல்வி நடவடிக்கைகளில் இருந்து ஆசிரியர்கள் விலகுவது பழிவாங்கும் செயலாக கருதப்பட வேண்டும்.

அரசாங்கமும் நாடும் சுகாதார அவசர நிலையை எதிர்கொள்ளும் நேரத்தில் ஆசிரியர்கள் தங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Posted in Uncategorized

மர்ம மனிதர்களின் நடமாட்டத்தினால் அச்சத்தில் வாழும் வவுனியா மக்கள்

வவுனியா- மதவுவைத்தகுளம் பகுதியில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களாக அடையாளம் காண முடியாத வகையில், உடம்பு முழுவதுமாக நிறப்பூச்சுக்களை பூசிக்கொண்டு நிர்வாணமாக, பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை இலக்கு வைத்தும், குடும்பத்தலைவர் வீட்டில் இல்லாத நேரங்களில் வீடுகளில் புகுந்தும், வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்களிடம் தகாதமுறையில் நடந்துகாெள்ள முற்பட்டதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் நிம்மதியாக வாழ முடியாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதாக மதவுவைத்தகுளம் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக வன்னி பிரதி பொலிஸ்மா அதிபரிடம் கடந்த வியாழக்கிழமை முறைப்பாடு பதிவு செய்தும், அவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மர்மமனிதர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் குறித்த பிரதேச மக்கள் நிம்மதியாக இரவு நேரங்களில் இருக்க முடியாது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு

நேற்றைய தினம் (08) நாட்டில் மேலும் 94 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,205 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 331,922 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 295,518 ஆக அதிகரித்துள்ளது.

வவுனியா மாவட்ட முன்னாள் அரசியல் பொறுப்பாளர் உதயன்க்கு கண்ணீர் அஞ்சலிகள்

உதயன் முன்னாள் வவுனியா மாவட்ட அரசியல் பொறுப்பாளர் 1988 PLOT இயக்கத்தினால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

வவுனியா நொச்சிமோட்டை பிறப்பிடமாகக் கொண்டவர்.

அன்னையின் மடியில்: 1958.11 .19
மரணம். 1988.08.08

ஆரம்ப காலகட்டத்தில் ஈரோஸ் இயக்கம் மூலம் விடுதலைப் போராட்டதில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அரச படைகளால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காலத்தில் அங்கிருந்த ரெலோ தோழர்களுடன் ஏற்பட்ட நட்பு அவரை ரெலோ இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்ள தூண்டுதலாக அமைந்தது.

பின்னர் ஏற்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கு பின் அரசியல் கைதிகளின் விடுதலையில் இவரும் ஒருவராக விடுவிக்கப்பட்டு வன்னி மாவட்ட அரசியல் பொறுப்பாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

புளட் இயக்கத்தில் இருந்த சிலருக்கும், ரெலோ இயக்கத்தில் இருந்த
சிலருக்கும் ,சிறையில் இருந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான கருத்து முரண்பாடுகள் !!!!இவர்கள் விடுதலை ஆன பின்பும் வவுனியா மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்றது.

1988 காலப்பகுதிகளில் வவுனியா மாவட்டத்தில் பிளாட் இயக்கத்திற்கும், ரெலோ இயக்கத்திற்கும் இடையில் தவிர்க்க முடியாத சில ஆயுத மோதல்கள் ஏற்பட்டன.

இதில் இரண்டு பகுதிகளும் சிலர் கொல்லப்பட்டார்கள்.

இந்த கசப்பான ”’அனுபவங்கள் எம்மை காயப்படுத்தினாலும் ,”காலத்தின் சூழ்நிலைக்கேற்ப எம்மை மாற்றிக்கொள்ள வேண்டியதேவை.

ஆயுத மோதல்களில் இடுபட்ட முக்கியமானவர்கள் காலப்போக்கில் இரண்டு இயக்கங்களையும் விட்டு வெளியேறிவிட்டார்கள், அதில் ஒரு சிலர் மரணித்தும் விட்டார்கள்.

இன்றைய PLOT அமைப்பின் தலைவர்
தர்மலிங்கம் சித்தார்த்தர். மற்றும் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இந்த கசப்பான அனுபவங்களை மறந்துவிட்டு மக்களின் விடுதலைக்காக கைகோர்த்து வேலை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

குரோத எண்ணங்கள், பழிவாங்கும் படலங்கள் எம்மக்களின் உரிமைப் போராட்டத்தை சிதைத்துவிடும்.

மரணத்தின் வலி என்பது எப்போதும் மறக்க முடியாத ஒன்றுதான்.

நாம் சிந்தித்து செயலாற்றி இருந்தால் இன்று பல மரணங்களை தவிர்த்து எமது விடுதலையை வென்று இருக்கலாம்.

நன்றி

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சுவிஸ் கிளை.

Posted in Uncategorized

ஜெனிவா கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே கவனத்தில் கொள்ளப்படவுள்ள இலங்கை விவகாரம்..!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் முதல் நாளில் இலங்கை குறித்து கவனத்தில் கொள்ளப்பட உள்ளது. மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தர சிறப்புரிமைகள் கொண்ட அமைப்புகளுக்கு கருத்து தெரிவிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, பதிலளிப்பதற்கான சந்தர்ப்பம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 48 வது கூட்டத் தொடர் செப்டெம்பர் 13 திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது. அன்றைய நிகழ்சி நிரலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் அமர்வின் போது இலங்கை குறித்த வாய்மொழி அறிவிப்பை முன்வைக்க உள்ளார்.

இலங்கை கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறத் தவறியுள்ளதாக தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட், 30/1 தீர்மானத்திலிருந்து விலகியமை உள்ளிட்ட பல நடவடிக்கைகளினால் இலங்கை முழு அளவில் பொறுப்புக்கூறலுக்கான கதவுகளை அடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரது வழக்கு சீ.ஐ.டிக்கு மாறுகிறது

மட்டக்களப்பில் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரது வழக்கு விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றுவது தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார், மன்றுக்கு அறிவித்தனர்.

இந்த வழக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் இன்று (09) எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு வழக்கை சி.ஜ.டிக்கு மாற்றுவதற்கான அதிகாரம் இல்லாத காரணத்தால் பொலிஸ்மா அதிபருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்த பொலிஸார், அது தொடர்பான அறிக்கையை மன்றில் சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து குறித்த மெய்பாதுகாவலரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த அமர்வில் பொலிஸாரின் விசாரணையில் நம்பிக்கை இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டதரணிகள், நீதின்றில் விண்ணப்பித்திருந்தனர்.

அதனையடுத்து, குறித்த வழக்கினை மீளப்பெற்று வேறு தகுந்த நம்பகரமான விசாரணைப் பிரிவுக்கு வழங்குமாறு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டிருந்த நிலையிலேயே இன்றைய அமர்வில் மேற்குறித்த விடயம் அறிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் இல்லத்துக்கு முன்னால் வைத்து அவரது மெய்பாதுகாவலரால் பொதுமகனொருவர் கடந்த ஜன் 21ஆம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 4 சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 04 சந்தேகநபர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து வந்த 16 வயதான சிறுமியின் மரணம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரியவந்துள்ளது.

Posted in Uncategorized

லண்டன் திமுக கிளையினரால் கலைஞர் கருணாநிதிக்கு நினைவேந்தல்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நேற்று மாலை லண்டன் திமுக கிளையினரால் ஈஸ்ட்காம் நகரத்தில்(Eastham) நடைபெற்றது.

திமுக லண்டன் கிளை ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு,திமுக பிரித்தானிய கிளையின் தலைவர் பைசல் தலைமை தாங்கினார்.

கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, பூத்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, கலைஞரின் இலக்கிய செழுமை, அரசியல் பயணம் உள்ளிட்ட விடயங்களை சிறப்புரைகளாக அரசியல் பிரமுகர்களும், கலை, இலக்கியவாதிகளும் மெய்நிகர் வாயிலாக உரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்விற்கு ரெலோ பிரித்தானிய கிளையின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதி தலைவருமாகிய சாம் சம்பந்தன் கலந்து கொண்டு முத்தமிழ் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி, கலைஞர் அவர்கள் ஈழத்தமிழ் மக்களிற்கும் ரெலோ விற்கும் செய்த உதவிகளை நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்தார்.

திமுக வின் மலேஷியா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் கிளைகளின் உறுப்பினர்கள்,மெய்நிகர் வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்கள், சென்னை திமுக தலைமை செயலகம் அறிவாலயத்தில் இருந்து பூச்சி முருகன்,ஈரோடு இறைவன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் கலை, இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

சீருடை இல்லாத அரச படை தமிழர்களை கடத்தியதை சிங்கள தேசம் இனியும் புரிந்து கொள்ளுமா? ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

தற்போது தென்னிலங்கையில் நடக்கும் சிவில் பொலிசாரின் கைதினை கடத்தல் என்று கூப்பாடு போடும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிங்கள தேசமும் கடந்த காலத்தில் அப்பாவித் தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வலியை இனியாவது புரிந்து கொள்ளவார்களா? என வடக்குமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் கேள்வி?

1979 ஆண்டில் இருந்து சிங்கள இனவாத அரசாங்கங்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தை கையில் எடுத்து கேட்டுக் கேள்விகள் இன்றி பல ஆயிரக்கணக்கில் தமிழர்களை கடத்தி பலரை தெருநாய்களாக சித்திரவதை செய்து வீதிகளில் சுட்டு பிணங்களாக போட்டதையும், இருபதாயிரத்திற்கு அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டத்தையும், நூற்றுக் கணக்கானோர்அரசியல் கைதிகளாக பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டதையும் அதன் வலியையும் அவலத்தையும் தற்போது சிங்கள தேசம் உணருமா? அவ்வாறு உணர ஆரம்பித்தால் சகோதர இனமான தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ன மனிதநேயக் குரல் தென்னிலங்கையில் சிங்கள தேசத்தில் ஒலிக்குமா? காலம் தான் விடை தரவேண்டும்.

தற்போதைய ஆட்சியாளர்கள் கடந்த தங்களது ஆட்சியில் தமிழர்கள் மீது பாரிய இனப்படுகொலையை நடாத்தி முடித்தனர் அப்பொழுது சிங்கள, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழின அழிப்புக்கு ஆதரவு வழங்கினார்கள். பாரிய அழிவு தமிழர்களுக்கு நடந்து முடிந்த பின்னர் கூட ஆதரவு வழங்கிய தரப்புக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இனியாவது நீதியை வழங்குங்கள் என்று உள் நாட்டிலும் சர்வதேச சமவாயங்களிலும் குரல் கொடுக்க முன்வரவில்லை இந்த வலி தமிழர்களின் ஆழ் மனதை கிழித்துக் கொண்டு இருந்தாலும் சிங்கள முஸ்லிம் தரப்பின் பாதிப்புக்கு அவ்வப்போது தமிழர் தரப்பு குரல் கொடுக்க தவறியதில்லை. இந்த உண்மையை வரலாறு மறக்காது.

கோட்டாய ஆட்சியின் ஆரம்பத்தில் ரிசாட் பதியூதின் அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது இந்த நாட்டில் ஒரு இனம் 30 ஆண்டுகள் போரை நடாத்தியதால் தான் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைந்தது என்று பாதிக்கப்பட்ட தமிழர்களை ஏறி மிதித்துப் பேசினார். இதே ரிசாட் கடந்தகாலங்களில் பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் கைகளை உயர்த்தினார். இன்று தன்மீது சட்டம் பாய்ந்ததும் எப்படி பாராளுமன்றத்தில் அலறுகிறார். தமிழருக்கு எதிராக இவ்வளவு செயலை ரிசாட் புரிந்தாலும் ரிசாட்டை விடுதலை செய்யக் கோரும் மனுவில் தமிழ்த் தேசிய பாராளுமன்ற உறுப்பினரான கஐேந்திரகுமார் உள்ளிட்டோர் கையொப்பம் இட்டுள்ளனர் இதனை முஸ்லிம் சமுதாயம் புரிந்து கொள்ளுமா?

அண்மையில் சர்வதேச பல்கலைக்கழக செயற்பாட்டாளர் சிவில், சீருடைப் பொலிசாருடன் கைது செய்த விடையத்தை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் மன்றில் சுட்டிக் காட்டி கைது விடையம் ஐனநாயகத்திற்கு எதிரானது என தெரிவித்து பாதிக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளருக்கு நீதி கோரினார் இதனை சிங்கள தேசம் புரிந்து கொள்ளுமா?

ஆகவே சிங்கள இனவாத அரசாங்கம் தங்கள் ஆட்சிப் பதவிகளுக்காக தமிழர்களுக்கு எப்படி ஒரு அநீதியை இழைத்தார்களோ அதே செயற்பாட்டை தற்போது ஆரம்பமாக இலங்கையில் வாழும் ஏனைய சமூகங்களிடமும் திருப்பி உள்ளனர் இதனை அனைத்து சமூகங்களும் உணர்ந்து கொண்டு ஒருமித்த குரலில் நீதிக்கு குரல் கொடுக்குமா? அவ்வாறான குரல் ஒலிக்கும் போது தான் இலங்கைத் தீவில் நிரந்தர அமையும் நீதியும் நிலை நாட்டப்படும்.

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாபெரும் இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக நாட்டில் நீண்ட நாட்களாக அனைத்து நிகழ்வுகளும் தடைப்பட்டிருந்த நிலையில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி நேற்றைய தினம் (07) மாலை மன்னாரில் இடம் பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட இரட்டை மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (07) மாலை 4 மணியளவில் மன்னார் முருங்கன் வாழ்க்கை பெற்றான் கண்டல் இரட்டை மாட்டு வண்டி சவாரி திடலில் இடம் பெற்றது. இதன்போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 40 ஜோடி காளைகள் குறித்த போட்டியில் பங்குபற்றியது.

குறித்த இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டியானது ´A, B, C, D, E´ ஆகிய 5 பிரிவுகளில் நடைபெற்றது.

இதன்போது ´ A ´பிரிவில் 1 ஆம் இடத்தை உயிலங்குளத்தை சேர்ந்த பிரின்சியன் ,2 ஆம் இடத்தை காத்தான் குளத்தைச் சேர்ந்த தங்கராசா,3 ஆம் இடத்தை வாழ்க்கை பெற்றான் கண்டலை சேர்ந்த சிந்தாத்துரை ஆகியோரது காளைகள் வெற்றி பெற்றுள்ளது.

´B´ பிரிவில் 1 ஆம் இடத்தை நொச்சிக்குளத்தை சேர்ந்த செல்வக்குமார்,2 ஆம் இடத்தை உயிலங்குளத்தைச் சேர்ந்த பிரின்சியன், 3 ஆம் இடத்தை சிறுகண்டலைச் சேர்ந்த கென்றிகா ஆகியோரது காளைகள் வெற்றி பெற்றுள்ளது.

´C´ பிரிவில் 1 ஆம் இடத்தை பூவரசன் குளத்தைச் சேர்ந்த நியாஸ், 2 ஆம் இடத்தை பிடாரி குளத்தைச் சேர்ந்த நியூரன்,3 ஆம் இடத்தை பிச்சை குளத்தைச் சேர்ந்த விஜயன் ஆகியோர்களின் காளைகள் வெற்றி பெற்றுள்ளது.

´D´ பிரிவில் 1 ஆம் இடத்தை சிறுகண்டலை சேர்ந்த கென்றிகா,2 ஆம் இடம் மணற் குளத்தைச் சேர்ந்த செபஸ்தியாம்பிள்ளை,3 ஆம் இடத்தை உயிர்த்தராசன் குளத்தை சேர்ந்த அஜந்தன் ஆகியோர்களின் காளைகள் வெற்றி பெற்றுள்ளது.

´E´ பிரிவில் 1 ஆம் இடத்தை நானாட்டானை சேர்ந்த குகன், 2 ஆம் இடத்தை பிச்சை குளத்தைச் சேர்ந்த ரூபராஜ்,3 ஆம் இடத்தை வட்டக்கண்டலைச் சேர்ந்த அஜித்குமார் ஆகியோரது காளைகளும் வெற்றி பெற்றுள்ளது.

வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இடம் பெறும் இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டிக்கு வட மாகாணத்தில் உள்ள ஏனைய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகளும் போட்டியில் பங்கு கொள்வது வழமை.

எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக ஏனைய மாவட்டங்களை சேர்ந்த போட்டியாளர்கள் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.