ஜெனிவா கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே கவனத்தில் கொள்ளப்படவுள்ள இலங்கை விவகாரம்..!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் முதல் நாளில் இலங்கை குறித்து கவனத்தில் கொள்ளப்பட உள்ளது. மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தர சிறப்புரிமைகள் கொண்ட அமைப்புகளுக்கு கருத்து தெரிவிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, பதிலளிப்பதற்கான சந்தர்ப்பம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 48 வது கூட்டத் தொடர் செப்டெம்பர் 13 திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது. அன்றைய நிகழ்சி நிரலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் அமர்வின் போது இலங்கை குறித்த வாய்மொழி அறிவிப்பை முன்வைக்க உள்ளார்.

இலங்கை கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறத் தவறியுள்ளதாக தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட், 30/1 தீர்மானத்திலிருந்து விலகியமை உள்ளிட்ட பல நடவடிக்கைகளினால் இலங்கை முழு அளவில் பொறுப்புக்கூறலுக்கான கதவுகளை அடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரது வழக்கு சீ.ஐ.டிக்கு மாறுகிறது

மட்டக்களப்பில் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரது வழக்கு விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றுவது தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார், மன்றுக்கு அறிவித்தனர்.

இந்த வழக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் இன்று (09) எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு வழக்கை சி.ஜ.டிக்கு மாற்றுவதற்கான அதிகாரம் இல்லாத காரணத்தால் பொலிஸ்மா அதிபருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்த பொலிஸார், அது தொடர்பான அறிக்கையை மன்றில் சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து குறித்த மெய்பாதுகாவலரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த அமர்வில் பொலிஸாரின் விசாரணையில் நம்பிக்கை இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டதரணிகள், நீதின்றில் விண்ணப்பித்திருந்தனர்.

அதனையடுத்து, குறித்த வழக்கினை மீளப்பெற்று வேறு தகுந்த நம்பகரமான விசாரணைப் பிரிவுக்கு வழங்குமாறு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டிருந்த நிலையிலேயே இன்றைய அமர்வில் மேற்குறித்த விடயம் அறிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் இல்லத்துக்கு முன்னால் வைத்து அவரது மெய்பாதுகாவலரால் பொதுமகனொருவர் கடந்த ஜன் 21ஆம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 4 சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 04 சந்தேகநபர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து வந்த 16 வயதான சிறுமியின் மரணம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரியவந்துள்ளது.

லண்டன் திமுக கிளையினரால் கலைஞர் கருணாநிதிக்கு நினைவேந்தல்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நேற்று மாலை லண்டன் திமுக கிளையினரால் ஈஸ்ட்காம் நகரத்தில்(Eastham) நடைபெற்றது.

திமுக லண்டன் கிளை ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு,திமுக பிரித்தானிய கிளையின் தலைவர் பைசல் தலைமை தாங்கினார்.

கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, பூத்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, கலைஞரின் இலக்கிய செழுமை, அரசியல் பயணம் உள்ளிட்ட விடயங்களை சிறப்புரைகளாக அரசியல் பிரமுகர்களும், கலை, இலக்கியவாதிகளும் மெய்நிகர் வாயிலாக உரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்விற்கு ரெலோ பிரித்தானிய கிளையின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதி தலைவருமாகிய சாம் சம்பந்தன் கலந்து கொண்டு முத்தமிழ் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி, கலைஞர் அவர்கள் ஈழத்தமிழ் மக்களிற்கும் ரெலோ விற்கும் செய்த உதவிகளை நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்தார்.

திமுக வின் மலேஷியா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் கிளைகளின் உறுப்பினர்கள்,மெய்நிகர் வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்கள், சென்னை திமுக தலைமை செயலகம் அறிவாலயத்தில் இருந்து பூச்சி முருகன்,ஈரோடு இறைவன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் கலை, இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

Posted in Uncategorized

சீருடை இல்லாத அரச படை தமிழர்களை கடத்தியதை சிங்கள தேசம் இனியும் புரிந்து கொள்ளுமா? ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

தற்போது தென்னிலங்கையில் நடக்கும் சிவில் பொலிசாரின் கைதினை கடத்தல் என்று கூப்பாடு போடும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிங்கள தேசமும் கடந்த காலத்தில் அப்பாவித் தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வலியை இனியாவது புரிந்து கொள்ளவார்களா? என வடக்குமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் கேள்வி?

1979 ஆண்டில் இருந்து சிங்கள இனவாத அரசாங்கங்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தை கையில் எடுத்து கேட்டுக் கேள்விகள் இன்றி பல ஆயிரக்கணக்கில் தமிழர்களை கடத்தி பலரை தெருநாய்களாக சித்திரவதை செய்து வீதிகளில் சுட்டு பிணங்களாக போட்டதையும், இருபதாயிரத்திற்கு அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டத்தையும், நூற்றுக் கணக்கானோர்அரசியல் கைதிகளாக பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டதையும் அதன் வலியையும் அவலத்தையும் தற்போது சிங்கள தேசம் உணருமா? அவ்வாறு உணர ஆரம்பித்தால் சகோதர இனமான தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ன மனிதநேயக் குரல் தென்னிலங்கையில் சிங்கள தேசத்தில் ஒலிக்குமா? காலம் தான் விடை தரவேண்டும்.

தற்போதைய ஆட்சியாளர்கள் கடந்த தங்களது ஆட்சியில் தமிழர்கள் மீது பாரிய இனப்படுகொலையை நடாத்தி முடித்தனர் அப்பொழுது சிங்கள, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழின அழிப்புக்கு ஆதரவு வழங்கினார்கள். பாரிய அழிவு தமிழர்களுக்கு நடந்து முடிந்த பின்னர் கூட ஆதரவு வழங்கிய தரப்புக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இனியாவது நீதியை வழங்குங்கள் என்று உள் நாட்டிலும் சர்வதேச சமவாயங்களிலும் குரல் கொடுக்க முன்வரவில்லை இந்த வலி தமிழர்களின் ஆழ் மனதை கிழித்துக் கொண்டு இருந்தாலும் சிங்கள முஸ்லிம் தரப்பின் பாதிப்புக்கு அவ்வப்போது தமிழர் தரப்பு குரல் கொடுக்க தவறியதில்லை. இந்த உண்மையை வரலாறு மறக்காது.

கோட்டாய ஆட்சியின் ஆரம்பத்தில் ரிசாட் பதியூதின் அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது இந்த நாட்டில் ஒரு இனம் 30 ஆண்டுகள் போரை நடாத்தியதால் தான் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைந்தது என்று பாதிக்கப்பட்ட தமிழர்களை ஏறி மிதித்துப் பேசினார். இதே ரிசாட் கடந்தகாலங்களில் பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் கைகளை உயர்த்தினார். இன்று தன்மீது சட்டம் பாய்ந்ததும் எப்படி பாராளுமன்றத்தில் அலறுகிறார். தமிழருக்கு எதிராக இவ்வளவு செயலை ரிசாட் புரிந்தாலும் ரிசாட்டை விடுதலை செய்யக் கோரும் மனுவில் தமிழ்த் தேசிய பாராளுமன்ற உறுப்பினரான கஐேந்திரகுமார் உள்ளிட்டோர் கையொப்பம் இட்டுள்ளனர் இதனை முஸ்லிம் சமுதாயம் புரிந்து கொள்ளுமா?

அண்மையில் சர்வதேச பல்கலைக்கழக செயற்பாட்டாளர் சிவில், சீருடைப் பொலிசாருடன் கைது செய்த விடையத்தை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் மன்றில் சுட்டிக் காட்டி கைது விடையம் ஐனநாயகத்திற்கு எதிரானது என தெரிவித்து பாதிக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளருக்கு நீதி கோரினார் இதனை சிங்கள தேசம் புரிந்து கொள்ளுமா?

ஆகவே சிங்கள இனவாத அரசாங்கம் தங்கள் ஆட்சிப் பதவிகளுக்காக தமிழர்களுக்கு எப்படி ஒரு அநீதியை இழைத்தார்களோ அதே செயற்பாட்டை தற்போது ஆரம்பமாக இலங்கையில் வாழும் ஏனைய சமூகங்களிடமும் திருப்பி உள்ளனர் இதனை அனைத்து சமூகங்களும் உணர்ந்து கொண்டு ஒருமித்த குரலில் நீதிக்கு குரல் கொடுக்குமா? அவ்வாறான குரல் ஒலிக்கும் போது தான் இலங்கைத் தீவில் நிரந்தர அமையும் நீதியும் நிலை நாட்டப்படும்.

Posted in Uncategorized

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாபெரும் இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக நாட்டில் நீண்ட நாட்களாக அனைத்து நிகழ்வுகளும் தடைப்பட்டிருந்த நிலையில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி நேற்றைய தினம் (07) மாலை மன்னாரில் இடம் பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட இரட்டை மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (07) மாலை 4 மணியளவில் மன்னார் முருங்கன் வாழ்க்கை பெற்றான் கண்டல் இரட்டை மாட்டு வண்டி சவாரி திடலில் இடம் பெற்றது. இதன்போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 40 ஜோடி காளைகள் குறித்த போட்டியில் பங்குபற்றியது.

குறித்த இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டியானது ´A, B, C, D, E´ ஆகிய 5 பிரிவுகளில் நடைபெற்றது.

இதன்போது ´ A ´பிரிவில் 1 ஆம் இடத்தை உயிலங்குளத்தை சேர்ந்த பிரின்சியன் ,2 ஆம் இடத்தை காத்தான் குளத்தைச் சேர்ந்த தங்கராசா,3 ஆம் இடத்தை வாழ்க்கை பெற்றான் கண்டலை சேர்ந்த சிந்தாத்துரை ஆகியோரது காளைகள் வெற்றி பெற்றுள்ளது.

´B´ பிரிவில் 1 ஆம் இடத்தை நொச்சிக்குளத்தை சேர்ந்த செல்வக்குமார்,2 ஆம் இடத்தை உயிலங்குளத்தைச் சேர்ந்த பிரின்சியன், 3 ஆம் இடத்தை சிறுகண்டலைச் சேர்ந்த கென்றிகா ஆகியோரது காளைகள் வெற்றி பெற்றுள்ளது.

´C´ பிரிவில் 1 ஆம் இடத்தை பூவரசன் குளத்தைச் சேர்ந்த நியாஸ், 2 ஆம் இடத்தை பிடாரி குளத்தைச் சேர்ந்த நியூரன்,3 ஆம் இடத்தை பிச்சை குளத்தைச் சேர்ந்த விஜயன் ஆகியோர்களின் காளைகள் வெற்றி பெற்றுள்ளது.

´D´ பிரிவில் 1 ஆம் இடத்தை சிறுகண்டலை சேர்ந்த கென்றிகா,2 ஆம் இடம் மணற் குளத்தைச் சேர்ந்த செபஸ்தியாம்பிள்ளை,3 ஆம் இடத்தை உயிர்த்தராசன் குளத்தை சேர்ந்த அஜந்தன் ஆகியோர்களின் காளைகள் வெற்றி பெற்றுள்ளது.

´E´ பிரிவில் 1 ஆம் இடத்தை நானாட்டானை சேர்ந்த குகன், 2 ஆம் இடத்தை பிச்சை குளத்தைச் சேர்ந்த ரூபராஜ்,3 ஆம் இடத்தை வட்டக்கண்டலைச் சேர்ந்த அஜித்குமார் ஆகியோரது காளைகளும் வெற்றி பெற்றுள்ளது.

வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இடம் பெறும் இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டிக்கு வட மாகாணத்தில் உள்ள ஏனைய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகளும் போட்டியில் பங்கு கொள்வது வழமை.

எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக ஏனைய மாவட்டங்களை சேர்ந்த போட்டியாளர்கள் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனது மகனுக்கு இல்லை – முன்னாள் ஜனாதிபதி

தனது மகன் அரசியலில் ஈடுபடவுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்ட அவர், இவ்வாறான தவறான செய்திகள் மூலம் மக்கள் ஏமாற்றமடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

அரசியலில் நுழைய விமுக்தி குமாரதுங்கவுக்கு ஆர்வமோ விருப்பமோ இல்லை என்றும் பண்டாரநாயக்கவின் தியாகங்களுக்கு உரிமை கோரும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும் சந்திரிக்கா குமாரதுங்க சுட்டிக்காட்டினார்.

இதேவேளை நாட்டுக்கு சேவை செய்யக்கூடிய அமைப்பு அரசியல் மட்டுமல்ல என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்னர் பிரிட்டன் தூதுவருடன் பேச்சு நடத்த இலங்கை அரசு முடிவு

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதியரசர் நவாஸ் தலைமையில் விசேட ஜனாதிபதி ஆணைக் குழுவின் இடைக்கால அறிக்கையின் காரணிகளை ஜெனிவாக் கூட்டத் தொடருக்கு முன்னர் பிரிட்டன் தூதுவருக்குத் தெளிவுபடுத்த அரசு தயாராகியுள்ளது என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவர்களின் சொந்தக் காணிகளை மீள வழங்குவது உள்ளிட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் முடிந்தளவு முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும், இவை தொடர்பில் சர்வதேச சமூகத்தைத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவர்களின் சொந்தக் காணிகளை மீள வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் முடிந்தளவு முன்னெடுக்கப் பட்டிருக்கின்றன எனவும், இவை தொடர்பில் சர்வதேச சமூகத்தைத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கும் அபிவிருத்திச் செயற்பாடுகள், காணி விடுவிப்புகள் மற்றும் இது தொடர்பில் கடந்த ஜெனிவா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கையின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்படி கூட்டத்தில் தெரிவித்தார்.

“உயர்நீதிமன்ற நீதியரசர் நவாஸ் தலைமையில் விசேட ஜனாதிபதி ஆணைக் குழுவொன்று அமைக்கப்பட்டு அதன் ஊடாக சாட்சிகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதன் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதில் அவசியமான காரணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதே காரணிகளை ஜெனிவாக் கூட்டத் தொடருக்கு முன்னர் இலங்கையிலுள்ள பிரிட்டன் தூதுவருக்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் கூறினார்

ஸ்ரீசபாரத்தினத்தினை விடுதலைப்புலிகளே கொன்றனர் வடுக்கள் எமது மனங்களில் இருந்தாலும், தேசத்தின் விடுதலைக்காக இணைந்து பணியாற்றினோம்

எமது ரெலோ அமைப்பின் தலைவர் சிறிசபாரத்தினம் அவர்களை விடுதலைப் புலிகளே கொன்றார்கள். வடுக்கள் மனதில் இருந்தாலும் கூட தேசத்தின் விடுதலைக்காக இணைந்து பணியாற்றினோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (07) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர் ஒருவர், ரெலோ அமைப்பின் தலைவரை கொன்றது யார் என்பதை வெளிபடுத்த முடியுமா என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் ஏற்கனவே பகிரங்கமாகவே சொல்லி வந்திருக்கின்றோம். அது ஒரு சகோதரப் படுகொலை. விடுதலைப் புலிகள் தான் எமது ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறி சபாரத்தினம் அவர்களை கொலை செய்தார்கள்.

இது உலகறிந்த உண்மை. இதில் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் அவர்களுக்கு புதிதாக சொல்ல வேண்டிய தேவை ஒன்றுமில்லை. நாங்கள் ஏற்கனவே அதனை சொல்லியிருக்கின்றோம். விடுதலைப் புலிகள் இருக்கின்ற போது கூட நாங்கள் வெளிப்படையாக சொல்லியிருக்கின்றோம். உண்மையை நாம் மறக்க முடியாது.

இதனை நாம் வெட்ட வெளிச்சமாக சொல்லிக் கொள்கின்றோம். அப்படி இருந்தும், வடுக்கள் எமது மனங்களில் இருந்தாலும் கூட இந்த தேசத்தின் விடுதலைக்காக நாங்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றியும் இருந்தோம் எனத் தெரிவித்தார்.

முன்னால் போராளிகளே சரியான பாதைநோக்கி பயணியுங்கள் யாழில் அறிவுரை கூறினார் இராணுவத்தளபதி!

சரியான பாதை நோக்கி நல்வழியில் பயணியுங்கள் என முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தளபதிசவேந்திர சில்வா யாழில் அறிவுரை வழங்கியுள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் முன்னாள் போராளிகளுக்கு உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின் முன்னாள் போராளிகளை சந்தித்து கலந்துரையாடும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அண்மையில் அரசாங்கத்தினால் பொது மன்னிப்பின் அடிப்படையில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்
அவர்கள் இன்று சமூகத்தில் நல்லவர்களாக இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால்தான் சிறையில் இருக்கும் ஏனையோரையும் விடுவிக்க கூடியதாக இருக்கும் உங்கள் விடுதலையைப் பற்றி பார்க்கிறார்கள், அவதானிக்கிறார்கள்

எனவே நீங்கள் சமூகத்தில் நல்ல பிரஜையாக செயற்பட வேண்டும் அதாவது முன்னரைப் போல பிழையான வழிகளில் செல்லாது சரியான பாதை நோக்கி செல்லுங்கள் நல்லதை சிந்தியுங்கள். அவார பிழையான பாதையில் சென்றால் உங்கள் எதிர்காலம் பூச்சியயமாகி விடும் எனவே நல்ல விஷயங்கள் பற்றி சிந்தித்து சமூகத்தில் உள்ளவர்கள் உங்களைப் பற்றி நல்லதாக சொல்லும் அளவுக்கு உங்களது வாழ்க்கையை கொண்டு செல்லுங்கள்.

ராணுவம் என்ற ரீதியில் நாங்கள் முன்னாள் போராளிகளாகிய உங்களுக்கு எங்களாலான உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றோம் அதாவது வீடு கட்டித் தருவது என்றாலும் சரி வேறு ஏதாவது உதவி என்றாலும் நாங்கள் அதை செய்யத் தயாராக உள்ளோம் ஏனென்றால் அது எமது கடமையாகும்

குறிப்பாக நீங்கள் முன்னாள் போராளிகள் நீங்கள் எமக்கு எதிராகத்தான் சண்டையிட்டீர்கள் நாங்கள் அதையெல்லாம் மறந்து ராணுவத்தினர் ஆகிய நாம் உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கின்றோம்

அதாவது உங்களை எமது சகோதரர்களாக பார்க்கின்றோம் எனவே நீங்களும் அதேபோல் நேரான பாதையில் பயணியுங்கள் உங்களது விடுதலை அனைவராலும் பார்க்கப்படுகின்ற விடயம் ஆகும் எனவே நீங்கள் சமூகத்தில் நல்ல பிரஜையாக இருந்து செயற்படுவதன் மூலம் ஏனைய உங்களைப் போன்றவர்களையும் விடுவிப்பதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகும் எனவும் தெரிவித்தார்.