ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் எழுதப்பட்டுள்ள வாக்கியம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் எழுதப்பட்டுள்ள வாக்கியம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

‘என் சாவுக்கு காரணம்’ எனும் தமிழ் வாக்கியம் ஆங்கில எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சுவரில் எழுதப்பட்டுள்ள வாக்கியம் தொடர்பிலான நிழற்படம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி பயன்படுத்திய அறையில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் கையெழுத்து தொடர்பிலான விசேட நிபுணர்கள் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதனிடையே, உயிரிழந்த சிறுமி பாடசாலை காலத்தில் பயன்படுத்திய புத்தகங்களை, அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுவரில் எழுதப்பட்டுள்ள வாக்கியம், உயிரிழந்த சிறுமியினால் எழுதப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

என் தங்கைக்கு ஆங்கிலம் தெரியாது ; அண்ணன்

எனக்குத் தெரிந்த வரையில் என்னுடைய தங்கையான ஹிஷாலினிக்கு, ஆங்கிலம் எழுதுவதற்கான திறமை இல்லை என, மரணமடைந்த டயகம சிறுமியின் சகோதரன் தெரிவித்துள்ளார்.

தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்த ஹிஷாலினி ஜூட், அவிசாவளை புவக்பிட்டிய தமிழ் வித்தியாலயத்தில் 7ஆம் வகுப்பு வரையில் மட்டுமே கல்விப்பயின்றார்.

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டபோது, எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்த 16 வயதான சிறுமியின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், அவர் தங்கவைக்கப்பட்ட அறையில், ஆங்கிலத்தில், ‘எனது மரணத்துக்கு காரணம்” என எழுதப்பட்டுள்ளது, இதுதொடர்பில் கேட்டபோதே ஹிஷாலினியின் சகோதரன் திருபிரசாத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனக்குத் தெரிந்தவகையில், ஏதாவது ஒன்றை பார்த்துகொண்டு எழுதும் திறமை எனது தங்கையிடம் இருக்கிறது. ஆனால், ஆங்கில எழுத்துகளை ஒன்றோடு ஒன்று கோர்த்து வசனமாக்கி எழுதும் வகையில் எனது தங்கைக்கு ஆங்கில அறிவு இருக்கவில்லை.

யாழ். இந்திய துணை தூதுவராக ராகேஷ் நடராஜ் பதவியேற்பு

யாழ். இந்திய துணை தூதுவராக ராகேஷ் நடராஜ் இன்று (02) தனது அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

ராகேஷ் நடராஜ் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.

சில காலம் அவர் கண்டியில் இந்திய துணைத் தூதுவராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மீதான தீர்மானம் – ஐ.நா நிதி ஒதுக்கீடு

இலங்கை மீது ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கான நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளதாக ஐ.நா தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்களை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு அமைக்கப்படவுள்ள நிபுணர்கள் கொண்ட குழுவுக்கு 2.8 மில்லியன் டொலர்கள் தேவை என தெரிவிக்கப் பட்டிருந்தது. அதில் 2021 ஆம் ஆண்டுக்கான 0.74 மில்லியன் டொலர்களையும், 2022 ஆம் ஆண்டுக்கான 2.1 மில்லியன் டொலர்களையும் மனித உரிமைகள் ஆணைக்குழு பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை ஐ.நாவின் பொதுச்சபை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. இதன் மூலம் 13 அங்கத்தவர்களைக் கொண்ட தனியான செயலணி ஒன்று உருவாக்கப் படவுள்ளது. அனைத்துலக குற்றவியல் சட்டத்தில் அனுபவம் கொண்ட ஒருவர் இந்த குழுவிற்கு தலைவராக நியமிக்கப்பட உள்ளதுடன், சாட்சியங்களை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான நடவடிக்கைகளை அவர் ஒருங்கிணைப்பார் என தெரிவிக்கப் படுகின்றது. அவருக்கு உதவியாக மேலும் இரு சட்டவலுநர்கள் பணியாற்றுவார்கள்.

Posted in Uncategorized

அரசாங்கம் தற்போது பயணிப்பதைப் போன்று தொடர்ந்து பயணிக்குமானால்‘ ஐ.தே.கவின் நிலையே ஏற்படும்’

அரசாங்கம் தற்போது பயணிப்பதைப் போன்று தொடர்ந்து பயணிக்குமானால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட நிலையே அரசாங்கத்துக்கும் ஏற்படுமென தெரிவித்த தேசிய பாரம்பரியம் மற்றும் கிராமிய கலைகள் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, மக்கள் எப்போதும் பொறுமையுடன் இருக்கமாட்டார்கள். நேரம் வரும் போது மக்கள் தீர்மானங்களை எடுப்பர் என்றார்.

எமது நாட்டின் பெரும்பான்மையான மக்கள் “ஒரே நாடு -ஒரே சட்டம்” என்பதுக்காகவே கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள் என தெரிவித்த அவர், ஆனால், இப்போது நாம் சிறிய சந்தேகத்தை உணர்கின்றோம். பிணைமுறி விவகார கொள்ளையர்களைப் பிடித்தார்களா? உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியைப்
பிடித்தார்களா? என வினவினார்.

போகம்பறை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை நேற்று முன்தினம் (31) மேற்கொண்டிருந்த அவர், அங்கிருந்து திரும்பியதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“சேதனைப் பசளை என்பது சிறந்த எண்ணக்கரு தான். ஆனால் துரதிஷ்வசமாக ஒரே நேரத்தில் அதனை செய்ய முடியாது. அதற்கென கால எல்லை அவசியம்.மண் மற்றும் கன்றுகள் உயிருள்ளவை. அதனால் தான் அதற்காக விசேட கவனம் செலுத்தப்படுகின்றது” என்றார்.

இலங்கையின் மண்ணும் கன்றுகளும் 40 வருடாக இரசாயன உரத்துக்கு பழகிவிட்டன எனத் தெரிவித்த அவர், எனவே, அது குறித்து சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை ஒரு இரவில் செய்து விடமுடியாது. அதை செய்வதற்கு முறையொன்று உள்ளது என்றார்.

ரிஷாட்டின் வீட்டில் மற்றுமொரு பெண் பாலியல் துஷ்பிரயோகம்!

ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய 29 வயதான மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ரிஷாட்டின் இல்லத்தில் பணிப் பெண்ணாக இருந்து தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் குழுவிடம், குறித்த 29 வயதான பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் கடந்த 2009 – 2010 காலப்பகுதியில் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

20 க்கு ஆதரவளித்த தௌபீக், தேசிய அமைப்பாளராக பதவி உயர்வு

20 க்கு ஆதரவளித்த எம்பிக்களை சாடிக்கொண்டு கட்சியின் உயர் பதவிகளில் ஒன்றான தேசிய அமைப்பாளரை குறிவைத்து காய் நகர்த்திய சகோ. தவம், சகோ. ஜெமீல், சகோ. ஆரிப் ஆகியோரின் முயற்சிகள் வீணாக்கப்பட்டு 20க்கு ஆதரவாக பலமாக கைகளை உயர்த்திய திருமலை மாவட்ட எம்.பியும் கட்சியின் முன்னாள் பிரதி தவிசாளருமான எம். எஸ். தௌஃபீக் அவர்களை தேசிய அமைப்பாளராக பதவியுயர்த்தி அரசியலில் சாணக்கியத்தன்மையும், அரசியல் முதிர்ச்சியும் கொண்ட ஒருவராக தன்னை இன்று வெளிக்காட்டியுள்ளார் மு.கா தலைவர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்கள்.
20க்கு ஆதரவளித்த பிரதித்தலைவர்களான ஹரீஸ், நஸீர் அஹமட், பொருளாளர் பைசால் காஸிம், பிரதி தவிசாளர் தௌஃபீக் ஆகியோரை கட்சி பதவிகளிலிருந்து நீக்க வேண்டும் என்று சகோ. தவம் போன்றோர்கள் போர்க்கொடி தூக்கிக்கொண்டு அலைந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் பிரதிதவிசாளராக இருந்த எம். எஸ்.தௌஃபீக் அவர்களை தேசிய அமைப்பாளராக பதவி உயர்த்தி 20க்கு கையுயர்த்தியவர்களை பலப்படுத்தும் பணியை வெற்றிகரமாக செய்து தேசிய அரசியலில் எம்.பிக்களின் தேவைகளை பற்றி மு.கா தலைமைத்துவம் சகோ. தவம் போன்றோருக்கு அரசியலின் அத்தியாயங்கள் சிலதை கற்பித்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

தேசிய அரசியலில் மக்கள் காங்கிரஸ் தலைவர் கடுமையான நெருக்குதல்களை அனுபவித்து வரும் இந்த காலகட்டத்தில் 20க்கு ஆதரவளித்து அரசுடன் நெருங்கிய உறவை கொண்டிருக்கும் தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு எதார்த்த அரசியலை செய்ய துணிந்திருக்கும் மு.கா தலைவரின் இந்த முயற்சி அரசியல் அரங்கிலும், மு.கா ஆதரவாளர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது எனலாம். 20கு கையுயர்த்திய இவர்களை பலப்படுத்தி சமூகத்தையும், கட்சியையும் பாதுகாக்கும் பணியை சிறப்பாக செய்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஹக்கீம் அவர்கள்.

இதனால் “இலவு காத்த” கிளியாக பெரும் ஆசை கொண்டிருந்த சிலர் மு.கா தலைவருக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்க தயாராகி இப்போது விமர்சனத்தின் முதல் பகுதியை ஆரம்பிக்கின்றனர் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. இலங்கை அரசியலின் போக்கை சரியாக கணித்து காய் நகர்த்திய 20க்கு ஆதரவளித்தவர்களின் பின்னணி என்ன? தலைமைத்துவ ஆளுமை என்ன? மு.கா பயணிக்கும் பாதையின் திசை என்ன என்பதை மு.காவுக்கு புதியவர்களான சகோ. தவம் போன்றோர்களை விட அடிப்படை போராளிகள் நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள் என்பதே இன்றைய சம்பவத்தின் நிழல் காட்டுகிறது.

இனியென்ன அடுத்த அத்தியாயம் மு.கா தலைவர் ஹக்கீமை நோக்கி நகரும்.

கிழக்கு அரசியல் ஆய்வு மையம்
Source:Jaffnamuslim.com

Posted in Uncategorized

காணாமல் போன தமிழர்களுக்கு எதிராக அரசின் ‘செல்வம் மற்றும் அதிகாரம்’ பயன்படுத்தப்படுகிறது!

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களுக்காக நீதி கேட்டு போராடும் தமிழ் மக்களை செல்வமும் அதிகாரமும் கொண்டு அரசு ஒடுக்க முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டி வடக்கு,கிழக்கு முழுவதும் தொடர் போராட்டங்கள் இடம்பெறுகின்றன.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் ஜூலை 30 வெள்ளிக்கிழமை முதல் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின, இதன் போது காணாமல் போன தமது உறவினர்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்தியதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

மன்னாரில் போராட்டத்தின் போது காணாமல் போனவர்களின் குடும்பங்களின் உறுப்பினர்கள், போரின் போதும் போருக்குப் பிறகும் காணாமல் போன நூற்றுக்கணக்கானவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பெரியளவிலான பதாதைகளை காட்சிப்படுத்தி, மன்னாரில் நிறுவப்பட்ட காணாமல் போனோர் அலுவலகத்தின் அதிகாரிகள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கியதாக குற்றம் சாட்டினர்.

அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுமாறும் காணாமல் போனவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதாக குற்றம் சாட்டிய தமிழ் தாய்மார்கள், நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தாய்மார்கள், பதாதைகளை ஏந்தியவாறு, நீதிக்காக பல ஆண்டுகளாக போராடி வரும் தங்கள் மேல் அரச பாதுகாப்புப் படையினரின் தொல்லைகளை உடனடியாக நிறுத்தக் கோரினர்.

கடந்த மார்ச் மாதம், பலவந்தமாக காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க பல ஆண்டுகளாக போராடி வரும் தாய்மார்கள் குழு தங்களுக்கு எதிரான பொலிசாரின் அடக்குமுறை குறித்து மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் அளித்ததுள்ளனர்.

பலாத்காரமாக காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் தலைவி அமலாராஜ் அமலநாயகி மற்றும் பிற மகளிர் சங்கத்தின் தலைவர்கள் மட்டக்களப்பு மாமாங்கம் கணதேவி கோவில் முன்பு சர்வதேச போர்க்குற்ற தீர்ப்பாயத்தில் இலங்கையில் உள்ள அனைத்து போர்க்குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இந்த போராட்டத்தையும் பொலிசார் தலையிட்டு தடுக்க முயன்றதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

கடலில் மூழ்கி தற்கொலை!

கடந்த சில வருடங்களாக, அரசாங்க பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்களின் புகைப்படங்களை எடுத்து அவர்களின் வீடுகளுக்குச் செல்வதைப் பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள் என்று புகார் கூறினர்.

யாழ்ப்பாணம் நாவலர் தெருவில் உள்ள அகதிகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தாய்மார்கள், பல வருடங்களாக நீதி கோரிய போதிலும், தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை இதனால் கடலில் மூழ்கி தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று தெரிவித்தனர்.

வவுனியா பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் போனவர்களின் உறவினர்கள், தங்களது உறவினர்களை கண்டுபிடிக்க சர்வதேச தலையீட்டை நாடிய போதிலும், நாட்டில் உள்ள சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அதற்கு இடையூறு விளைவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் போராட்டம் நடத்திய தமிழ் தாய்மார்கள் போரின் கடைசி நிமிடத்தில் தங்களால் அரசாங்க பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்த இளைஞர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும் அவர்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்தனர்.

1605 நாட்களுக்கு முன்பு முல்லைத்தீவில் தமிழ் தாய்மார்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க கோரி தொடங்கிய உண்ணாவிரதம் இன்னும் தொடர்கிறது.

 

​விதி தெரியாமல் இறுதி பயணத்தில்..?

வலுக்கட்டாயமாக காணாமல் போன தமது அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக வடக்கில் நீதிக்கான சர்வதேச போராட்டத்தில் இணைந்த கிட்டத்தட்ட 90 பெற்றோர்கள் இப்போது தங்கள் பிள்ளைகளின் தலைவிதியை அறியாமல் காலமானார்கள்.

மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு OMP அலுவலகம்

காணாமல் போனோர் அலுவலகம் (OMP) கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக இயங்கி வருகிறது ஆனால் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க போராடும் உறவினர்களின் நெருங்கிய உறவினர் ஒருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

முன்னாள் OMP தலைவரும் பிப்ரவரி 28, 2018 அன்று தனது தலைமையில் மைத்திரி-ரணில் அரசு அமைத்த அலுவலகம் மீது கோபமடைந்த உறவினர்கள் இருப்பதை ஒப்புக் கொண்டார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான குடும்ப உறுப்பினர்களை நாங்கள் சந்தித்தோம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலையைக் கண்டு ஆத்திரமும் வருத்தமும் அடைந்துள்ளனர், அவர்கள் காணாமல் போனவர்களை அரசாங்கம் கையாள்வதற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றனர், அரசு நிறுவனங்களில் நம்பிக்கை இல்லை மற்றும் சர்வதேசத்தில் இது தொடர்பாக தலையிட விரும்புபவர்களும் உள்ளனர், ”என்று ஓஎம்பி இரண்டு ஆண்டு நிறைவு விழாவின் போது ஜனாதிபதி சட்டத்தரனி சாலிய பீரிஸ் கூறினார்.

சத்தியாகிரக பிரச்சாரங்கள் பிப்ரவரி மற்றும் மார்ச் 2017 இல் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தொடங்கியது, போரின் கடைசி நாட்களில் காணாமல் போன மற்றும் பாதுகாப்புப் படையினரால் பிடிக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களின் தலைவிதியை வெளிப்படுத்துமாறு கோரி.48167 தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறை தண்டனைக்கு அடிப்படையல்ல என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் முன்னாள் OMP தலைவர் தனது அலுவலகத்தில் இருந்து இரண்டு ஆண்டு அறிவிப்பில் அரசாங்கத்திற்கு “சட்ட மற்றும் தார்மீக பொறுப்பு” இருப்பதாகக் கூறினார், உறவினர்களுக்கு கண்டுபிடிக்க முடியாத நெருக்கமானவர்களின் தலைவிதியை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

எனினும், போர்க்கால பாதுகாப்புப் படைகளின் பிதானியாக இருந்த தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, 2020 ல் இலங்கையில் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியான ஹன்னா சிங்கரிடம், தனது சகோதரர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது வடக்கில் போரின் போது காணாமல் போனவர்கள் இருப்பதாக கூறி இறந்தார்.

அவர் மேலும் கூறுகையில், “காணாமல் போனவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் அதிக எண்ணிக்கையில் கொல்லப்பட்டனர்” என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

சர்வதேச நீதி திரட்டும் நடவடிக்கை

ஜூன் 2021 இல், சர்வதேச மனித உரிமை அமைப்பு, போரின் போது முன்னாள் பொலிஸ்மா அதிபரை இலங்கை காணாமல் போனோர் பணியகத்திற்கு நியமித்தது முந்தைய அரசாங்கத்தின் கீழ் நிறுவப்பட்ட இடைக்கால நீதி பொறிமுறையை இராணுவமயமாக்கும் செயல்முறையின் நிறைவு என்று சுட்டிக்காட்டியது.

மே 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் ஒப்புதலைத் தொடர்ந்து, முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஹாபு ஆராச்சிகே ஜயந்த சாந்த குமார விக்ரமரத்ன என்ற ஜெயந்த விக்கிரமரத்னவை அந்த பதவிக்கு நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் (ITJP), யாஸ்மின் சூக்கா தலைமையிலான, இந்த நியமனம், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உண்மை மற்றும் நீதிக்கான எந்த வாய்ப்பையும் அழிக்கும் ஒரு நிகழ்வு என்று விவரித்தார்.

யுத்தத்தின் முடிவில் பாரியளவில் காணாமல் போனோர் தொடர்பான ஐ.நா விசாரணையால் பெயரிடப்பட்ட மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொறுப்பாளராக இருந்த நபரே அவர்.

Posted in Uncategorized

நல்லைக் கந்தனுக்கு 13 ஆம் திகதி கொடியேற்றம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், ”அலங்காரக் கந்தன்” என அடியவர்களால் போற்றி வழிபடப்படுகின்ற திருத்தலமுமான யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழா எதிர்வரும்-13 ஆம் திகதி முற்பகல்-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

தொடர்ச்சியாக இருபத்தைந்து தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலயப் பெருந் திருவிழாவில் எதிர்வரும்-22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்-04.45 மணியளவில் பத்தாம் திருவிழாவான மஞ்சத் திருவிழாவும், 28 ஆம் திகதி சனிக்கிழமை இரவு-07 மணியளவில் அருணகிரிநாதர் உற்சவமும், 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்-04.45 மணியளவில் கார்த்திகை உற்சவமும், 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-06.45 மணியளவில் சூர்யோற்சவமும், அடுத்தமாதம் 01 ஆம் திகதி புதன்கிழமை காலை-06.45 மணியளவில் சந்தானகோபாலர் உற்சவமும், அன்றைய தினம் மாலை-04.45 மணியளவில் கைலாசவாகன உற்சவமும், 02 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-06.45 மணியளவில் கஜவல்லி மஹாவல்லி உற்சவமும், 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-06.45 மணியளவில் தெண்டாயுதபாணி உற்சவமும், மாலை-04.45 மணியளவில் ஒருமுகத் திருவிழாவும், 04 ஆம் திகதி சனிக்கிழமை மாலை-04.45 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-06.15 மணியளவில் தேர்த் திருவிழாவும், 06 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-06.15 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் மாலை-05 மணியளவில் கொடியிறக்க உற்சவமும், 07 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை-04.45 மணியளவில் பூங்காவன உற்சவமும், மறுநாள் மாலை-04.45 மணியவில் வைரவர் உற்சவமும் நடைபெறும்.

இதேவேளை, தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனாத் தொற்றுப் பரவல் நிலைமையால் இவ்வாலயத்தின் இவ்வருட மஹோற்சவப் பெருந்திருவிழாவிலும் கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் ஐனநாயக அடக்குமுறையின் ஆயுதம் ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

இலங்கைத் தீவில் பயங்கரவாதச் தடைச் சட்டத்தினால் பாரிய அவலங்களை அனுபவிப்பவர்கள் தமிழர்கள் தான் இது உலகம் அறிந்த உண்மை ஆனால் இந்த பயங்கரவாதச் தடைச் சட்டம் அறிமுகமாகும் போது தமிழர் தரப்பு எதிர்க்காமல் சிங்கள அரசின் வார்த்தை யாலங்களை நம்பி மௌனமாக இருந்தனர் என்ற வலி தமிழ் மக்களிடம் ஆழ் மனதில் தீயாக உள்ளது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐெயவர்த்தன அரசாங்கம் 1979/07/19 ஆண்டு 48 ஆம் இலக்க சட்டமாக பாராளுமன்றத்தில் ஒரே நாளில் பயகரவாத தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டவரைபை அன்று சட்டமா அதிபராக இருந்த சிவா பசுபதி தயாரிக்க கல்குடாத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தேவநாயகம் நீதி அமைச்சராக பாராளுமன்றத்திற்கு கொண்டுவர அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணி 18 எம் பி மாரும் எதிர்க்காது வெளியேற நிறைவேற்றப்பட்டது.

அன்று தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்த்தாலும் பயங்கரவாத தடைச் சட்டம் நிறைவேறி இருக்கும் காரணம் பாராளுமன்றத்தில் 6/5 பெரும்பாண்மையை ஐெ ஆர் அரசாங்கம் வைத்திருந்தமை ஆகும்.

பயங்கரவாதச் சட்டம் நிறைவேறி இன்று 42 வருடங்கள் கடந்து செல்கின்றது இதனால் பெரும் அவலத்தை அனுபவித்தவர்கள் இலங்கைத் தீவின் தேசிய இனமான தமிழர்கள் தான்.

தமிழரின் உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று சித்தரிக்க சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு பெரும் உதவியாக இருந்தது இருப்பது பயங்கரவாத தடைச் சட்டம் தான் என்ற கசப்பான உண்மையை யாரும் மறுக்க முடியாது.

தமிழரின் ஆயுத வழி விடுதலைப் போராட்ட இயக்கங்களை பங்கரவாத முத்திரையுடன் சிதைத்து அழித்த இனவாத சிங்கள அரசாங்கம் அகிம்சை வழியில் குரல் கொடுக்கும் தேசியவாதிளை சிறைப் பிடிக்க அச்சுறுத்த இந்த சட்டத்தை இன்றுவரை கையாளுகின்றனர்.

தமிழர்களின் உரிமைப் போராட்டம் ஐனநாயக ரீதியாக வெல்லப் படுவதற்கு தடையாக உள்ள இராணுவ மறை கரமாக விளங்குவதே பயங்கரவாத தடைச் சட்டம் தான். இதனை இல்லாது ஒழிப்பதே இலங்கைத் தீவின் ஐனநாயக மறுமலர்ச்சிக்கு வழி சமைக்கும்.

தமிழர்கள் தரப்பில் உள்ள அனைத்து தரப்புக்களும் ஒன்றினைந்து அரசியல் ரீதியாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கட்சி அரசியல் என்ற குறுகிய வட்டத்தில் இருந்து வெளியே வந்து வியூகங்களை வகுக்க வேண்டும் இதன் மூலமே எஞ்சிய தமிழர்களது இருப்பையும் பாதுகாக்க முடியும்.

உள்நாட்டு , சர்வதே அரசியல் சூழ்நிலைகள், சந்தர்ப்பங்கள் தொடர்ந்து தமிழர்களுக்கு சாதகமாக இருக்க மாட்டாது வருகின்ற இடைவெளிகளை தமிழர் தரப்புத் தான் கையாள வேண்டும் சர்வதேசம் தங்களின் பூகோள நலன்களை குறிவைத்த வண்ணமே இருப்பார்கள் அதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டதும் இலங்கைக்கான அழுத்தங்களை நீக்கி விடுவார்கள். ஆனால் தமிழர் பிரதிநிதிகளின் ஒற்றுமை இந்த நகர்வில் இல்லை என்ற கசப்பான உண்மையை மறைக்க முடியாது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் விழைவுகளாக காணாமல் ஆக்கப்பட்டோர் ,அரசியல் கைதிகள் ,அரசியல் படுகொலைகள், போன்ற வார்த்தைகளால் வடிக்க முடியாத அவலங்களை தமிழர்கள் அனுபவித்துக் கொண்டுள்ளனர். ஈழத் தமிழர்கள் வாழ்வில் புதிய மாற்றம் ஏற்பட ஐனநயக முறையில் மறுக்கப்பட்ட சுய நிர்ணய உரிமையை வென்றேடுக்க பயங்கவாத தடைச் சட்டத்தை இல்லாது ஒழிப்பதே அவசியம்.

அனைவரது கவனத்தையும் ஈர்த்த திருகோணமலை கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை- மடத்தடி சந்தியில் கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல சட்ட மூலத்திற்கு எதிராக ஒன்றிணைந்த மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை மடத்தடி சந்தியில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டப் பேரணி, வட கரை வீதியூடாக திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தை சென்றடைந்து, அங்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் நாட்டின் தலைவர்களது முகமுடிகளை அணிந்து, ஆடைகளைக் குறிக்கும் வகையில் வேடமிட்ட சிலர் பிரேதப் பெட்டி ஒன்றினை ஏந்தியவாறு குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

அரசானது குறித்த சட்டமூலத்தினை திருத்தி, இலவசக் கல்விக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய தீர்வினை பெற்றுத்தரவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர், அவர்கள் அவ்விடத்தினை விட்டு கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.