கத்தோலிக்க திருவுருவச் சிலைகள் உடைப்பு- நடவடிக்கை எடுக்குமாறு ரெலோ தலைவர் செல்வம் எம்பி வலியுறுத்தல்

மாவட்டத்தில் தொடர்ச்சியாக கத்தோலிக்க திருவுருவச் சிலைகள் சேதப்படுத்தும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கத்தோலிக்க திருவுருவச் சிலைகள் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தும் சம்பவம் தொடர்பாக மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களுக்கு இன்றைய தினம் (16) வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார்

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மன்னார் மாவட்டத்தின் கத்தோலிக்கரின் வணக்கத்திற்குரிய திருவுருவ சிலைகளை இடிப்பது மற்றும் அடித்து நொறுக்குவதை நான் அவதானித்து வருகின்றேன். இத்தகைய செயல் கண்டிக்கத் தக்கது. மன்னார் மாவட்டத்தில் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் வாழும் கத்தோலிக்கர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே பகைமையை உருவாக்கும் செயல் இது இந்த செயற்பாடு அமைதி மற்றும் நல்லிணக்க இயக்கத்திற்கு எதிரான நபர்களின் செயல் என்பதை நான் நன்கு அறிவேன் எனவே காவல் துறையினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அத்துடன் விரைவாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் அத்தகைய நபர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் கொண்டு வந்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் தொடர அனுமதிக்கக் கூடாது என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

வடக்கு கிழக்கிற்கு விசேட கொவிட் தடுப்பூசி திட்டம்

வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை விரைவுபடுத்துவது தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி இவ்விசேட திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Posted in Uncategorized

சுதந்திரக் கட்சிக்கு அதன் இளைஞர் முன்னணி விடுத்துள்ள சவால்

பல்கலைக்கழக கட்டடைப்பை இராணுவமயமாக்க இடமளிக்க முடியாது, அதனால் அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டும்.

இல்லாவிட்டால் சட்டமூலத்துக்கு எதிராக சிறிலங்கா சுதந்திர கட்சி வாக்களிக்கவேண்டும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சி இளைஞர் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எரிக் வீரவர்த்தன தெரிவித்தார்.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் நிலைப்பாட்டை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பு மருதானையில் அமைந்திருக்கும் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் பிரதான பங்காளி கட்சியாக சிறிலங்கா சுதந்திர கட்சி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வின் செளபாக்கிய வேலைத்திட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது. என்றாலும் அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கும் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு நாங்கள் எந்தவகையிலும் ஆதரவளிக்க முடியாது. அது எமது எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் பாரிய அழிவாகும் என்றார்.

இலங்கை ஆட்சியாளர்கள் சீனசார்பு கட்சி அதிகாரத்தை நோக்கி இலங்கை அரசியலை நகர்த்துகிறார்களா? – பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!

இலங்கை அரசியலில் சீன கொம்யூனிசத்தின் செல்வாக்கு அதீதமாக வளர்வதாக புலமையாளர் தரப்பிலும் ஊடகவியலாளர் மத்தியிலும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உரையாடலிலும் வெளிப்படுத்தப்படுகின்றது. அத்தகைய விம்பம் இலங்கைக்கு பொருத்தப்பாடு உடையதா? என்பதையும், அவ்வாறெனில் சீன கொம்யூனிசப்பண்பாடு தற்போது அடைந்துள்ள உண்மையான வடிவமும் புரிந்து கொள்ளுதல் வேண்டும். அத்தகைய புரிதலை தரும் நோக்கிலேயே இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சீனா மாவோ சேதுங் தலைமையில் கார்ள் மாக்ஸின் சிந்தனைகளை ஆசியமயப்படுத்துவதில் வெற்றி கண்டது. ஆனால் அத்தகைய சோசலிச மரபு படிப்படியாக கொம்யூனிச சர்வதிகாரத்தை மாவோ சேதுங்-இன் கலாசாரப்புரட்சியோடு அடைந்தது. ஆனால் டெங் சியாவொப்பிங் அத்தகைய சோசலிச சர்வதிகார கட்டமைப்பை பொருளாதார நலன்கருதி சந்தை சோசலிச கட்டமைப்பாக வடிவமாக்கினார். அது ஒரு வகையில் மேற்கு முதலாளித்தவத்திற்கு வெற்றிகரமான அம்சமாக காணப்பட்டது. இதனால் மேற்கின் சந்தையும் சீனாவின் சோசலிச சந்தையும் போட்டிபோடும் நிலையொன்று உலகளாவியரீதியில் வளர்ச்சியடைந்தது. அதுவே உலகளாவிய அரசியல் பொருளாதார கட்டமைப்பையும் உருவாக்கியது. இத்தகைய சீனா சோசலிச சர்வதிகார சந்தை கட்டமைப்புடனேயே இலங்கையின் ஆட்சித்தறை நெருக்கமான உறவை வைத்தள்ளது.

இத்தகைய சீனா இலங்கை நெருக்கத்தின் ஆரம்ப புள்ளி சண்முகதாசனின் தலைமையில் உருவாகிய சீன கொம்யூனிஸ்ட் கட்சியின் கட்டமைப்போடு இலங்கையில் செல்வாக்கையும் பரிமாணத்தையும் பெறத்தொடங்கியது. சண்முகதாசனின் சீன சார்பு கொள்கை என்பது சீனாவின் ஆசிய மாதிரி பற்றியது. இலங்கை 1935ஆம் ஆண்டிலிருந்து சோசலிச அரசியல் கட்சி மரபுக்குள் ஈர்க்கப்பட்டதும் சண்முகதாசனின் புரட்சிகரமான சிந்தனைக்கு முக்கிய வேராக அமைந்திருந்தது. சண்முகதாசனின் வழிநடத்தலில் தோன்றி புரட்சிகரமான அணுகுமுறையை பின்பற்றிய றோஹன விஜயவீர சீன கொம்யூனிச மரபின் இரண்டாவது பரம்பரையாக கருதப்பட்டார். அவர் 1971இலும், 1989இலும் முன்னெடுத்த ஆயுத புரட்சி தோல்வியில் முடிந்த போதும் அதுவொரு அரசியல் பொருளாதார புரட்சிகரமான மரபை தோற்றுவித்தது. இதன் மூன்றாவது பரம்பரையாகவும், மேற்கின் சந்தைக்கு நிகரான சர்வதிகார சோசலிச சந்தை பொறிமுறைக்குமான உறவாக காணப்பட்டது. அத்தகைய உறவின் தொடக்க புள்ளி முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாக்கா ஆவார். சண்முகதாசனும் றோஹண விஜயவீரவும் ஆயுதப்போராட்டத்தினூடாக சீன அறிமுகத்தை இலங்கையில் மேற்கொண்ட போதும் ஸ்ரீமாவோ அரசாங்கம் மிதவாத அரசியலூடாக புவிசார் அரசியலை தந்திரோபாயமாக கையாளும் விதத்தில் சீனா-இலங்கை உறவை கட்டமைத்தார். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவிற்கு முன்பே ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியிலிருக்கும் போது அரிசி-இறப்பர் உடன்படிக்கை சீன இலங்கை உறவை அடையாளப்படுத்தியது என்பதுவும் மறுக்க முடியாது.

ஆனால் சோவியத் யூனியனில் சோசலிசம் வீழ்ந்து புதிய உலக ஒழுங்கு மலர்ந்த போது வலுவான தேசங்கள் இலங்கை போன்ற சிறிய நாடுகளை கைவிடும் நிலை ஏற்பட்ட போது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் வாரிசான சந்திரிக்கா பண்டாரநாயக்க சீனா-இலங்கை உறவை இன்னொரு கட்டத்துக்கு எடுத்துச்சென்றார். இதுவும் முழுமையாக அரசியல் மற்றும் பொருளாதார நலனுடன் இசைவுபட்டதாக அமைந்திருந்தது. இதன் வளர்ச்சிப்போக்கை அதி தீவிரமாகவும் நான்காவது பரம்பரை எனவும் அடையாளப்படுத்தக்கூடிய அளவிற்கு சீனா-இலங்கை உறவின் பரிணாமத்தை மிதவாத அரசியலுக்குள்ளிலிருந்த எழுச்சி பெற்ற இன்றைய பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமாகிய மகிந்த ராஜபக்சா தோற்றுவித்தார். இத்தகைய சீனா-இலங்கை உறவு அரசியல் பொருளாதாரமாக மட்டுமன்றி இராணுவமாகவும், கட்சி சர்வதிகாரமாகவும் வரைமானம் எடுக்கின்ற ஒன்றாக விளங்குகிறது. இலங்கையினுடைய அரசியல் சூழலை தனிக்கட்சி அரசியலுக்குள்ளால் நகர்த்தவும், பொது நிர்வாக இயந்திரத்தின் மீது இராணுவ செல்வாக்கை பலப்படுத்தவும் திட்டமிடுகிறது. இத்தகைய திட்டமிடல், சீனா சார்பு அரசியல் பொருளாதார இராணுவ, கட்சி பரிணாமம் என நீண்டதொரு வளர்ச்சிப்போக்கை தொடக்கி உள்ளது. இதற்கு எதிராக எழுந்துள்ள அலைகள் பலவீனமாக அமைந்திருப்பதோடு உலகளாவிய சீனாவின் அதிகார சமநிலைக்கு முன்னால் அதிக நெருக்கடிக்கும் அத்தகைய அணிகள் தள்ளப்பட்டுள்ளன.

அதுமட்டுமன்றி சீனாவை விமர்சிக்கும் அல்லது எதிர்க்கும் அணியினர்களில் பிரதானமானவர்கள் புரட்சிகர ரோஹன விஜயவீர-இன் பாசறையில் வளர்ந்த விஜயவீரா-இன் மரணத்திற்கு பின்னர் மிதவாத அரசியலை அடையாளப்படுத்திய ஜே.வி.பி-இனர். ஆயினும் அவர்களது எதிர்ப்புவாதம் முழுமையான வடிவத்தை கொண்டதா என்பது சந்தேகத்திற்குரியது. இலங்கையில் சீனாவின் காலணித்துவம் பற்றி விமர்சனம் செய்யும் ஜே.வி.பி-இனர் சீன கொம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் கொம்யூசிஸ்ட் கட்சியின் சாதனைகளை அங்கீகரித்தமை சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளது. அதேபோன்றே ஐக்கிய தேசிய கட்சியும் சீனா மீதான விமர்சனங்களை அதீதமாக கொண்டிருந்த போதிலும் 1952 றப்பர்-அரிசி உடன்படிக்கையில் தொடங்கி ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி தலைவராக இருக்கின்ற போது சீனாவிற்கு அழைத்து செல்லப்பட்ட போதும் நல்லாட்சி அரசாங்கம் பதவியில் இருக்கின்ற போது சீனா மேற்கொண்ட ஒரே சுற்று ஒரே பாதைக்கான ஆரம்ப விழாவில் கலந்து கொண்டமையும் அம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்பாட்டில் ஒப்பமிட்டதனூடாகவும் அதன் எதிர்ப்பு வாதத்தின் நம்பிக்கை பலவீனம் என்பது தெளிவாகிறது. தமிழ்த்தரப்பை பொறுத்தவரை அது தனது தனிப்பட்ட அரசியல் நலனுக்காகவும், இந்திய-அமெரிக்க நட்புக்காகவும் வடிவமைக்கப்பட்டதொன்றாக தெரிகிறது.

தென்னிலங்கை புத்திஜீவிகளும் பெருமளவு ஊடகப்பரப்பில் செயற்படுவோரும் சீன-இலங்கை உறவை வளர்ச்சிக்குரியதொன்றாகவே கருதுகிறார்கள். குறிப்பாக அத்தகைய உறவை புவிசார் அரசியலாகவும் பூகோள அரசியலாகவும் புவிசார் பொருளதாரமாகவும் கணிப்பிட்டு செயற்படுகின்றனர். இவை அனைத்தும் இலங்கைக்குரிய ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுமென கருதுகின்றனர். அதேநேரம் ஒரு சில ஆய்வாளர்களும் ஊடகப்பரப்பினரும் நீண்ட கால நோக்கில் சீன-இலங்கை உறவு ஆபத்தானதாக அமைந்துவிடுமா? என சந்தேகிக்கின்றார்கள். அனால் யதார்த்தமாக நோக்கினால் இலங்கையின் ஆட்சியாளர்கள் சீன – இலங்கை உறவை நீண்ட பரிமாணமிக்கதொன்றாக உருவாக்க திட்டமிடுகிறார்கள். அதுவே இலங்கையின் இறைமையையும் பொருளாதார செழிப்பையும் உலகளாவிய நெருக்கடியிலிருந்து மீள உதவுமென கருதுகின்றனர். இத்தகைய ஆட்சியாளர்கள் மேற்குலகத்தையும் இந்தியாவையும் கையாளும் பொறிமுறையே சீனாவின் உறவு வெற்றிகரமான முகமென கருதுகிறது. அமெரிக்காவையும் இந்தியாவையும் கையாளும் விதத்திலேயே திருகோணமலை துறைமுகத்தையும் மேற்கு முனையத்தையும் வடக்கு கிழக்கில் இந்தியாவின் பிரசன்னத்தையும் முகாமை செய்து வருகிறது. சீனாவுடன் 99 ஆண்டு கால குத்தகைக்கு உடன்பட்ட இலங்கை ஆட்சியாளர்கள் அமெரிக்காவோடு 5 வருட குத்தகைக்கு மட்டுமே உடன்பட்டுள்ளார்கள். தென்னிலங்கை ஆட்சியார்களின் கணிப்பு சரியாக அமையுமாயின் ஏறக்குறைய 5-10 ஆண்டுகளுக்குள் இலங்கை மீதான அமெரிக்க இந்தியாவின் செல்வாக்கு முற்றாக நீங்கிவிடுமென கருதுகின்றது. காரணம் சீனாவும் – இலங்கையும் நிரந்தரமான நட்பு நாட எனும் விம்பம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இலங்கையில் சீன சார்பு வளர்ச்சி நிலை என்பது ஆட்சியில் உள்ள மிதவாத அரசியல் தலைமைகளிடம் இராணுவரீதியிலான கட்டமைப்பையும் சர்வதிகார ரீதியிலான கட்சி கட்டமைப்பையும் விஸ்தரிப்பதற்கான முனைப்போடு அணுகப்பட்டு வருகிறது. பொருளாதாரம் அல்லது சந்தை பொருளாதாரம் அத்தகைய விம்பத்துக்கு ஒத்துழைப்பை கொடுக்கும் அங்கமாகவே பார்க்கப்படுகிறது. இது இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருத்தப்பாடுடைய நிலையாகும். சீனா இலங்கைக்குள் பொருளாதார ஒத்தழைப்பை முதன்மைப்படுத்த இலங்கை சீனாவுக்குள் கட்சி அரசியலையும் பொருளாதாரத்தையும் இராணுவ பரிமாணத்தையும் தேடுகின்றது.

-அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

Posted in Uncategorized

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் வீட்டில் காயமடைந்த சிறுமி மரணம்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினின் வீட்டில் பணியாற்றும் போது தீக்காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிந்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று காலை குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் கொழும்பு பதில் நீதவான் ரஜீந்ரா ஜயசூரிய இன்று தெரியப்படுத்தியுள்ளார்.

அதற்கமைய கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 73வது வோட்டில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்த சிறுமியின் உடலை பார்வையிடுவதற்காக கொழும்பு பதில் நீதவான் சென்றுள்ளார்.

பின்னர் சிறுமி தீக்காயங்களுக்குள்ளான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினின், கொழும்பு7 பௌத்தாலோக மாவத்தையிலுள்ள வீட்டையும் நீதவான் பார்வையிட்டுள்ளார்.

சிறுமியின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள வேண்டும் என பொரளை பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுமியின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு நீதிமன்றத்தில் தகவல் வெளியிடுமாறு நீதவான் நீதிமன்ற சட்ட வைத்தியரிடம் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 3ஆம் திகதி உடலில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் குறித்த சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமி டயகம பிரதேசத்தை சேர்ந்த இஷாலினி ஜுட் குமார் என்ற 16 வயதுடைய சிறுமி என குறிப்பிடப்படுகின்றது.

Posted in Uncategorized

அமெரிக்கத் தூதுவரை சந்தித்தது கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தூதுக்குழுவினர், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தலைமையிலான குழுவினரை இன்று (15) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதன் போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட பரந்துப்பட்ட விடயங்கள் பேசப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

நிபந்தனைகளுடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வர அனுமதி

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது.

இதற்கமைய, நாட்டிற்குள் வந்த பின்னர் முதலாவது தினத்தில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியாகவில்லையாயின் அவர்கள் இலங்கையின் எந்த பாகத்திற்கும் சுற்றுலா செல்ல அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதேநேரம், சுற்றுலா மேற்கொண்டுள்ள 7ஆவது தினத்தில், சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை நிலையத்தில் அவர்கள் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்து சுற்றுலாப் பயணிகளும் இலங்கை வருவதற்காக விமானத்தில் பயணிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதியாகவில்லை என்பதற்கான ஆவணத்தையும் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

நிதியமைச்சர் பஷிலுக்கும் 7 நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களுக்கும் இடையில் இரு தரப்பு பேச்சு

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும், ஏழு நாடுகளின் தூதுவர்கள் மற்றும். உயர்ஸ்தானிகர்களுக்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை 14-07-21 இடம்பெற்றது.

அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஸ்யா, பிரித்தானியா, ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இராஜதந்திரிகள் இச்சந்திப்பில் கலந்துக் கொண்டார்கள்.

பிரித்தானியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உயர்ஸ்தானிகர்களும் இன்று நிதியமைச்சரை சந்தித்தனர்.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் பசுமைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் அமைச்சர் பசில் ராஜபக்ஸ அதீத கவனம் செலுத்தியதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், மீள்புதுப்பிக்கத்தக்க வலு சக்தியை ஊக்குவிப்பதற்கு ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு வர்த்தகத்தினை மிகுந்த ஒத்துழைப்புடன் முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிர்காலத்திலும் தடுப்பூசி வசதிகளை வழங்குவதாக சீன தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்மட்ட முதலீட்டாளர்களை ஹம்பாந்தோட்டை தொழில் பேட்டையில் தொடர்புபடுத்த தயாராகவுள்ளதாகவும் சீன தூதுவர் இதன்போது கூறியுள்ளார்.

LNG வலு சக்தி செயற்றிட்டத்திற்காக முதலீட்டாளர்களை ஈடுபடுத்துவதற்கு இருக்கும் இயலுமை தொடர்பாக ஆராய்வதாக அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

நான்காவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை

Online கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் முன்னெடுக்கப்படும் தெழிற்சங்க நடவடிக்கை நான்காவது நாளாக இன்றும் (15) தொடர்கின்றது.

கடந்த 12 ஆம் திகதி தொழிநற்சங்க நடவடிக்கையில் பங்கேற்றிருந்த தமது உறுப்பினர்களுக்கு நீதி மன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட நிலையிலும் சிலர் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டமை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

24 ஆண்டுகளாக காணப்படும் அதிபர், ஆசியர்களுக்காக சம்பளப் பிரச்சினை குறித்து அனைத்து அரசாங்கங்களுக்கும் தெரியப்படுத்தியதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் தமது பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்

மேலும் காலம் தாழ்த்தாது, தமது பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்கு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

45 இலட்சம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள் விலகியுள்ளமை தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித பதிலும் வழங்கவில்லை என கல்வி தொழிற்சங்கத்தின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர் கூறியுள்ளார்.

இதனால் இந்த தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை, தமது தொழிற்சங்கத்தினர் இசுருபாயவுக்கு செல்லவுள்ளதாகவும் உலப்பனே சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக Online முறையிலான கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை என்பதுடன் மாணவர்கள் கல்வி கற்பதற்காக இருந்த ஒரேயொரு சந்தர்ப்பமும் அற்றுப்போய் இன்றுடன் 4 நாட்கள் ஆகின்றன.

இதனால் நாடளாவிய ரீதியில் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

குறிப்பான தரம் 05 புலமைபரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விசேட பாராளுமன்றக் குழு முன்னிலையில் இன்று ஆஜராகும் பேப்ரல் அமைப்பு

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் மறுசீரமைப்புக் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இன்று (14) பேப்ரல் அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சபைமுதல்வரும் வெளிநாட்டு அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன அவர்களின் தலைமையிலான இந்த விசேட குழு இன்று முற்பகல் பாராளுமன்றத்தில் கூடவிருப்பதுடன், இதில் குழுவின் அழைப்பையேற்றுக் கலந்துகொள்ளவிருக்கும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பேப்ரல்) தமது முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவுள்ளது.

அதேநேரம், பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைப்பது தொடர்பில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன முன்வைத்த யோசனைக்கும் விசேட குழுவின் அனுமதி கிடைத்திருப்பதாக இக்குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான குஷானீ ரோஹனதீர தெரிவித்தார்.

அத்துடன், இக்குழுவின் சகல கூட்டங்களின்போதும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாட்டாளர்களை பங்கெடுக்கச் செய்யுமாறும் தலைவர் அறிவுறுத்தியிருப்பதாக ரோஹனதீர அவர்கள் குறிப்பிட்டார்.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் மறுசீரமைப்புக் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழுவுக்கு அரசியல் கட்சிகளின் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் பூர்த்தியடைகிறது.

Posted in Uncategorized