COVID செலவுகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் கடன்

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நாட்டில் முன்னெடுக்கப்படும் COVID தடுப்பூசி ஏற்றும் திட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செலவுகளுக்காக இந்த கடன் பெறப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்தார்.

இதனடிப்படையில், ஆசிய அபிவிருத்தி வங்கியும் (ADB) நிதி அமைச்சும் கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் நேற்று கைச்சாத்திட்டுள்ளன.

Posted in Uncategorized

சுதந்திரக் கட்சி மொட்டை கைவிடுகிறது

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பிரதான பங்காளிகளின் ஒன்றான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் கலந்தாலோசித்து வருகிறதென தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனைய பங்காளிகளில், அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினருக்கும் இடையில் கடுமையான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

இந்நிலையில், அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஓரங்கட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக, சுதந்திரக் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனிடையே, இளம் உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் வகையில், முழுமையான அமைச்சரவை மாற்றமொன்றை விரைவில் மேற்கொள்வதற்கு அரசாங்கம் கலந்தாலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த மாற்றத்தின் போது, தாமரை மொட்டுவைச் சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதிக்கத்தை அமைச்சரவைக்குள் அதிகரித்துக் கொள்ளும் வகையிலேயே மாற்றங்கள் செய்யப்படும் எனவும், கையை சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் ஓரங்கட்டப்படக் கூடுமெனவும் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அவ்வாறு ஓரம் கட்டப்படுவதற்கு முன்னர், தாங்களாகவே அரசாங்கத்திலிருந்து விலகிக்கொள்வதே உசித்தமானதாக இருக்குமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் கதைகள் அடிபடுகின்றனவென அறியமுடிகின்றது.

அதனோர் அங்கமாகவே, கட்சியின் தலைமை தன்னை விலகுமாறு கேட்டால், கட்சியின் மத்தியக்குழு விலகவேண்டுமென தீர்மானித்தால், தன்னுடைய பதவியை எந்நேரத்தில் துறப்பதற்குத் தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவையும் ஆட்சியதிகாரத்துக்கு கொண்டுவருவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே பெரும்பாடுபட்டது என்பதை நினைவுப்படுத்திய தயாசிறி ஜயசேகர, பழையவற்றை மறந்துவிடக்கூடாது என்றார்.

இதனடிடையே, கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக்கூட்டம் நேற்று முன்தினம் (08) கட்சியின் தலைமையகத்தில் கூடியது.

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலைமைகளின் அடிப்படையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இருக்கவேண்டுமா என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அரசாங்கத்திலிருந்து விலக வேண்டுமென மத்தியக் குழு உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். எனினும், நெருக்கடியான நிலைமையில், தேர்தலொன்று இல்லாத சூழ்நிலையில், அரசாங்கத்திலிருந்து விலகவும் உசிதமானதல்ல என மற்றுமொரு பிரிவினர் எடுத்துரைத்துள்ளனர்.

எவ்வாறான நிலைமைகள் ஏற்படினும், கட்சியைப் பலப்படுத்தி, மக்களிடத்தில் செல்லவேண்டுமென சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

இதற்கிடையே, கடமைகளையும் பொறுப்புகளையும் முறையாக முன்னெடுக்காத அமைச்சர்களை, அவ்வமைச்சிலிருந்து நீக்கிவிட்டு புதிய முகங்களுக்கு அதுவும் இளம் உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது.

குறுகிய காலப்பகுதியில் திறமைகளை வெளிப்படுத்திய, முன்னேற்றத்தை காண்பித்த இராஜாங்க அல்லது பிரதியமைச்சர்களுக்கு இதன்போது முன்னுரிமை கொடுப்பது தொடர்பிலும் அரசாங்கம் ஆலோசித்துள்ளதாக அறியமுடிகின்றது.

அவ்வாறாதொரு நிலைமை ஏற்படுமாயின் அரசாங்கத்துடன் முட்டிமோடிதிக் கொண்டிருக்கும் பங்காளிகள், ஓரங்கட்டப்படக்கூடும் அல்லது பெயரளவில் ஏதாவது பொறுப்புகள் வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நிதியமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர், தன்னுடைய அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட பெசில் ராஜபக்‌ஷ, “கசப்பான தீர்மானங்களை எடுப்பேன்” என பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆகையால், அரசாங்கத்துக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளை களையும் வகையிலும் தீர்மானங்கள் எதிர்காலத்தில் எடுக்கப்படலாமென அறியமுடிகின்றது.

நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே நிதி அமைச்சர் பதவியிலிருந்து மகிந்த விலக இணங்கினார்

அடுத்த சில வாரங்களில் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கவனம் செலுத்தி வருகின்றார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடு முழுவதுமாக திறக்கப்படும்போது துரித அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் திறமை வாய்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதி விரும்புகின்றார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கான ஆதரவு குறைவடைந்துள்ளதையும் சில அமைச்சுகளின் செயற்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளதையும் ஜனாதிபதி கருத்தில் எடுத்துள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறப்பாக செயற்படாத சிரேஸ்ட அமைச்சர்களின் பதவிகள் பறிபோகலாம் அல்லது முக்கியத்துவமற்ற பதவிகள் வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திறமையான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாமல்ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையே அமைச்சரவை மாற்றம் என தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்ததை விட குறுகிய காலத்தில் இது இடம்பெறும் என தெரிவித்துள்ளன.

நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிக்கவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே பிரதமர் நிதிஅமைச்சர் பதவியிலிருந்து விலக இணங்கினார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் ஆட்கள் எனக் கூறி ரெலோ வலி கிழக்கு தவிசாளருக்கு அச்சுறுத்தல்

யாழ். நகரில் “அரசாங்கத்தின் ஆட்கள்” எனக் கூறி பிக்கப் வாகனத்தில் வந்தவர்கள் தம்மை அச்சுறுத்தியதுடன் தாக்கவும் முயற்சித்ததாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.20 மணிக்கு தவிசாளர் உத்தியோகபூர்வ வாகனத்தில் யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியின் பழைய தபால் கந்தோர் ஒழுங்கை ஊடாக பயணித்த போது, மத்திய மாகாண இலக்கத்தகடு கொண்ட செய்யப்பட்டுள்ள செகுசு பிக்கப் (CP PP – 0595) வாகனத்தில் ஒரு குழுவினர் எச்சரித்தவாறு தவிசாளரின் வாகனத்தை முந்திச் சென்றுள்ளனர்.

முந்திச் சென்றவர்கள் முன்னர் தனியார் நெடுந்தூர பேருந்து தரிப்பிடமாக பாவிக்கப்பட்ட வளாகத்திற்குள் தவிசாளரின் வாகனம் நிறுத்தப்பட்டதுடன் அவ் வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தவிசாளார் என்ன பிரச்சினை எனக்கேட்டபோது, அவர்கள் தூஷன வார்த்தைகளை உபயோகித்தவாறு தவிசாளரை நோக்கி வந்தனர்.

தவிசாளார் தொலைபேசியில் அவசர பொலிஸ் (119) இலக்கத்திற்கு முயற்சித்தபோது, தாம் அரசாங்கத்தின் ஆட்கள் எனக் கூறியவாறு தவிசாளரைத் தாக்குவதற்கு கட்டிட உடைவு கல் ஒன்றினை அக் குழுவில் வந்திருந்த ஒருவர் தூக்கி வீச எத்தனித்த போது அவ்விடத்தில் ஒருவரால் தடுக்கப்பட்டுள்ளார். மக்கள் ஒன்றுகூடியவுடன் தவிசாளார் அச்சுறுத்தியவர்களை படம் பிடித்தபோது தாழும் படம் பிடித்தவாறு விலகிச்சென்றனர்.

இந்நிலையில் இவ்விடத்தில் இருந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் சென்ற வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷ் அச்சுறுத்தியவர்களுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாட்டினைப் பதிவுசெய்துளளார். முறைப்பாட்டில் (CP PP – 0595) இலக்க வாகனத்தில் வந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றிவர சி.சி.டிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடமென்றில் இவ் அச்சுறுத்தல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசுக்குள் பிளவு? – அளும் கட்சியிலிருந்து விலக தயாராகும் எம்.பி

அரசாங்க கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அடுத்த சில வாரங்களில் ஒரு சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக எதிர்க்கட்சியில் அமர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான வாய்ப்பு உள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் விரிசல் தொடர்ந்து விரிவடைந்து வருவதை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.

பசில் ராஜபக்r நாடாளுமன்றத்தில் பிரவேசித்தமைக்கும் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன.

அத்துடன் எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஏனைய விடயங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை பிளவு ஏற்படுவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கொழும்பின் ஊடகம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

இலங்கைக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கும் பிரிட்டன்

இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் கடந்த 2020 ஆம் ஆண்டில் பெரிதும் மோசமடைந்திருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் பிரிட்டன், போரின் பின்னரான காலத்தில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டிருந்த நடவடிக்கைகளிலும் பாரிய பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதாக அளித்த வாக்குறுதியையும்மீறி, 2020 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அச்சட்டத்தைப் பயன்படுத்தி வந்திருப்பதாகவும் பிரிட்டன் குற்றஞ்சாட்டியுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவக்கூடிய செயற்திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் சிவில் சமூகக்குழுக்களின் வகிபாகங்களை வலுப்படுத்துவதற்கும் போரின் பின்னரான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்துவதற்கும் தயாராக இருப்பதாகவும் பிரிட்டன் உறுதியளித்துள்ளது.

பிரிட்டனின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தினால் உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் நிலைவரம் தொடர்பில் வருடாந்தம் அறிக்கை வெளியிடப்படும். அந்தவகையில் குறித்த அலுவலகத்தினால் நேற்று வெளியிடப்பட்ட 2020 ஆம் ஆண்டிற்கான அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இலங்கையின் மனித உரிமை நிலைவரங்களைப் பொறுத்தவரையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் அது ஒட்டுமொத்தமாக மிகவும் மோசமடைந்திருந்தது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் இலங்கை அரசாங்கம் சுதந்திரமானதும் அமைதியானதுமான முறையில் பாராளுமன்றத்தேர்தலை நடத்தியதுடன், சர்வதேச நாடுகளில் பதிவான கொவிட் – 19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவானதாகவே காணப்பட்டது.

எதுஎவ்வாறெனினும் சிவில் சமூக அமைப்புக்களின் மீதான தொடர்ச்சியான கண்காணிப்பும் அடக்குமுறையும் காணப்பட்டது.

அதுமாத்திரமன்றி சில சமூகத்தினர் அவர்களது மதநம்பிக்கையின்படி உயிரிழந்த சடலங்களை அடக்கம் செய்வதற்கான உரிமைக்குத் தடைவிதிக்கப்பட்டதுடன் குற்றச்சாட்டுக்களின்றி நீண்டகாலம் தடுத்துவைக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்தன.

மேலும் போரின் பின்னரான காலத்தில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டிருந்த நடவடிக்கைகளிலும் பின்னடைவு ஏற்பட்டது.

அடுத்ததாக கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின்போது போரின் பின்னரான நிலைமாறுகால நீதிப்பொறிமுறை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகிவற்றை உறுதிசெய்வது தொடர்பில் ஏற்கனவே இலங்கையினால் இணையனுசரனை வழங்கப்பட்டிருந்த 30/1, 34/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகிக்கொண்டது. அதுமாத்திரமன்றி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்கு உள்ளகப்பொறிமுறையைக் கையாள்வதாக அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்த போதிலும், தற்போதுவரை அதில் எவ்வித முன்னேற்றங்களும் இல்லை.

எனினும் 2020 பெப்ரவரி, ஜுன் மற்றும் செப்டெம்பரில் ஆகிய மாதங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்வைத்த நாடுகளின் சார்பில் பிரிட்டனால் (எம்மால்) வெளியிடப்பட்ட அறிக்கைகளில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான எமது நிலைப்பாட்டைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம்.

மேலும் கடந்த 2000 ஆம் ஆண்டில் மிருசுவில் என்ற இடத்தில் ஒரு சிறுவர் உள்ளடங்கலாக 8 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2015 ஆம் ஆண்டில் மரணதண்டனை வழங்கப்பட்ட முன்னாள் இராணுவ உறுப்பினர் சுனில் ரத்நாயக்க கடந்த 2020 மார்ச் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்டமையானது, இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை மேலும் கேள்விக்கு உட்படுத்தியது. அ

துமாத்திரமன்றி போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருந்த சர்ச்சைக்குரிய இராணுவ அதிகாரிகள் அரசநிர்வாகக் கட்டமைப்பின் முக்கிய பதவிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டதுடன் சிவில் நடவடிக்கைளை முன்னெடுக்கும் அரச சார்பற்ற கட்டமைப்புக்களின் செயலகங்கள் பலவும் பாதுகாப்பு அமைச்சின்கீழ்க் கொண்டுவரப்பட்டன.

அத்தோடு நீதிமன்றம் உள்ளிட்ட சுயாதீனக்கட்டமைப்புக்கள் பலவற்றுக்குமான உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை நிறைவேற்று அதிகாரத்தின்கீழக் கொண்டுவரும் வகையிலான திருத்தங்களுடன் அரசாங்கத்தினால் கடந்த அக்டோபர் மாதத்தில் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இது சில முக்கிய கட்டமைப்புக்களின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்தது.

பொதுத்தேர்தலை நடத்துவதற்காகக் ஜனாதிபதியினால் கடந்த மார்ச் மாதத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போதிலும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாகத் தேர்தல்கள் இருமுறை பிற்போடப்பட்டன. அமைதியான முறையிலும் ஜனநாயகத்தன்மையுடனும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பொதுத்தேர்தல்கள் நடத்தப்பட்டாலும், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் தேர்தல்களும் பிற்போடப்பட்ட மார்ச் தொடக்கம் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் பாராளுமன்றத்தின் மேற்பார்வைக்குட்பட வேண்டிய பல விடயங்கள் தவறவிடப்பட்டன.

குறிப்பாக அக்காலப்பகுதியில் கொவிட் – 19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, பாராளுமன்றத்தில் ஆராயப்படாமல் அரசாங்கத்தினால் சில விசேட ஜனாதிபதி செயலணிகள் அமைக்கப்பட்டன.

அதேவேளை உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களின்படி கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், தொற்றினால் உயிரிழக்கும் சடலங்கள் அனைத்தையும் கட்டாயமாகத் தகனம் செய்வது தொடர்பான தீர்மானத்தை 2020 மார்ச் மாதம் அரசாங்கம் வெளியிட்டது. இந்தப் பக்கச்சார்பான நடவடிக்கையானது முஸ்லிம் சமூகத்தையும் கத்தோலிக்க சமூகத்தைச் சேர்ந்த சிலரையும் வெகுவாகப் பாதிப்பது.

அரசாங்கத்தின் இத்தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கல் அனைத்தும் 2020 டிசம்பர் மாதத்தில் உயர்நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது. மேலும் முஸ்லிம்கள் கொவிட் – 19 பரவல் தடுப்பு வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றுவதில்லை என்றும் அவர்களே வைரஸ் காவிகளாகத் தொழிற்பட்டு அதனைப் பரவச்செய்கின்றார்கள் என்றும் வெளியான பொய்யான மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மூலம் இக்காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாடு வெகுவாக அதிகரித்தது.

அத்தோடு அரசாங்கத்தின் கொவிட் – 19 வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் குழப்பும் வகையில் கருத்துவெளியிடுபவர்களைக் கைதுசெய்வது தொடர்பில் ஏப்ரல் மாதத்தில் பொலிஸாரால் விடுக்கப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, இலங்கையில் கருத்துச்சுதந்திரத்தின் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக ஜுன் மாதமளவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் விசனம் வெளியிட்டார். நாடு முடக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் பாலியல் வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு உதவுவதற்கு பிரிட்டன் (நாம்) முன்வந்திருந்ததுடன் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் எதிர்கொண்டிருக்கும் சவால்களை வெளிப்படுத்துவதற்கு ஏற்றவகையில் ஊடகங்களின் இயலுமையை விரிவுபடுத்துவதற்கும் உதவினோம்.

பயங்கரவாதத்தடைச்சட்டம் மீளாய்வு செய்யப்படும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதியையும்மீறி, 2020 ஆம் ஆண்டில் அரசாங்கம் தொடர்ச்சியாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்திவந்தது. மனித உரிமைகள் சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா 2020 ஏப்ரல் மாதம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் இலங்கையின் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். அவர் எவ்வித குற்றச்சாட்டுக்களும் பதிவுசெய்யப்படாமல், நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படாமல் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

மனிதஉரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் இயங்கும் செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், காணாமல்போனோரின் குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் மீதான கண்காணிப்பு, அடக்குமுறைகள் மற்றும் இணையவழித் தாக்குதல்கள் என்பன இக்காலப்பகுதியில் அதிகரித்தமையினை சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் அவதானித்துள்ளன.

கொவிட் – 19 வைரஸ் பரவலை மையப்படுத்தி கடந்த 2020 நவம்பர் மாதத்தில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலால் 11 கைதிகள் உயிரிழந்ததுடன் 150 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அதுகுறித்து விசாரணை செய்வதற்கென நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையானது, துப்பாக்கிச்சூட்டின் காரணமாகவே குறித்த கைதிகள் உயிரிழந்ததாகப் பதிவுசெய்தது. மேலும் அதிகரித்துவரும் பொலிஸ் காவலின் கீழான மரணங்கள் தொடர்பில் நவம்பர் மாதத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது பொலிஸ்மா அதிபருக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தது.

மேலும் 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் மனித உரிமைகள், பாலின சமத்துவம் மற்றும் சிறுபான்மையினத்தவரின் சுதந்திரம் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான அழுத்தங்களை பிரிட்டன் தொடர்ந்தும் வழங்கிவந்தது.

இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவக்கூடிய செயற்திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் சிவில் சமூகக்குழுக்களின் வகிபாகங்களை வலுப்படுத்துவதற்கும் போரின் பின்னரான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்துவதற்கும் பிரிட்டன் தயாரக இருக்கின்றது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கதிர்காமம் ஆடிவேல் திருவிழா ஆரம்பம்

வரலாற்று பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா நாளை(சனிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

நாளைய தினம் முதலாவது பெரஹர மூலம் வீதி உலா நடைபெறும் என கதிர்காம கோயிலின் பஸ்நாயக்க நிலமே டிஷன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இறுதி நாள் பெரஹர 23ஆம் திகதி இரவு வீதி உலா வரவுள்ளதாகவும் பெரஹராவின் சம்பிரதாய சடங்குகள் அனைத்தும் முறையாக நடைபெறும் எனக் கூறிய அவர் இம்முறை உற்சவம் மக்கள் பங்களிப்பின்றி நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பெரஹராவில் யானைகள், நாட்டியங்கள் உள்ளிட்ட கலாசார அம்சங்கள் அனைத்தும் இடம்பெறும் எனவும் அவை சுகாதார நெறிமுறைகளுக்கு அமைய நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 24 ஆம் திகதி நீர் வெட்டுடன் உற்சவம் பூர்த்தி அடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராப்போசனத்துடன் மஹிந்த – ரணில் சந்திப்பு, சிரந்தியும் பங்கேற்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எம்.யுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கியமான சந்திப்பொன்று ​நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
இராப்போசனத்துடன் இடம்பெற்ற இந்த சந்திப்பில், பிரதமரின் பாரியாரும் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது பல முக்கியமான விடயங்கள் குறித்து, இருவரும் கலந்துரையாடினர் என அறியமுடிகின்றது.

சு.க – ஐ.தே.க இணைவு : பெரமுன தவிசாளர் தோல்வி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து பிரதேச சபையின் தவிசாளர் நியமனத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நின்றவரை தோற்கடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பன்டுவஸ்நுவர பிரதேச சபை தவிசாளர் நியமனத்திலேயே இக்கூட்டு இடம்பெற்றுள்ளதுடன் தயாசிறி ஜயசேகரவின் ஆதரவுள்ள நபரே தெரிவாகியுள்ளார்.

பெரமுன தரப்பினால் முன் நிறுத்தப்பட்டவர் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ராஜபக்‌ஷர்களின் ஆட்சியில் திவாலாகும் நாடு – புருஜோத்தமன் தங்கமயில்

ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சி பீடமேறி, ஒன்றரை ஆண்டுகளுக்கு உள்ளேயே, நாடு திவாலாகும் கட்டத்தை அடைந்திருக்கின்றது.

ஏற்கெனவே பெறப்பட்ட கடன்களுக்கான வட்டிகளைச் செலுத்துவதற்கே, கடன்களைப் பெற வேண்டிய நிலை; உணவுப் பொருட்களின் இருப்பு அபாயக்கட்டத்தை அடைந்திருக்கின்றது; ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வழங்குமா என்ற சந்தேகம் நீடிக்கின்றது; உள்நாட்டு உற்பத்தி பாரிய வீழ்ச்சியைச் சந்தித்து இருக்கின்றது; விவசாயிகள் உரத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், கறுப்புச் சந்தை பெரியளவில் விரிந்திருக்கின்றது. அங்கு ஒரு சில பண முதலைகளுக்கான வசதி வாய்ப்புகள் தங்கு தடையின்றி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருகின்றன. மக்களின் வியர்வையை மெல்ல மெல்ல உறிஞ்சி முடித்து, இப்போது இரத்தத்தையும் உறிஞ்சும் வேலைகளை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

நாட்டின் தேசிய வீரர்களாக, பாதுகாவலர்களாக முன்னிறுத்தப்பட்டே ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்பட்டார்கள். அவர்களை ஆட்சியில் அமர்த்துவதற்காக, பௌத்த விகாரைகளுக்குள் இருந்து பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. தென் இலங்கையின் சமூகக் கட்டமைப்பின் ஆணி வேர், விகாரைகளுக்குள் இருக்கின்ற நிலையில், ராஜபக்‌ஷர்களின் மீள் வருகைக்கான கட்டியத்தை பௌத்த பிக்குகளே தலைமையேற்று மொழிந்தனர்.

ஆனால், அந்தப் பிக்குகளே ராஜபக்‌ஷர்கள் ஆட்சியில் அமர்ந்த குறுகிய காலத்துக்குள்ளேயே அவர்களுக்கு எதிராகத் திரும்பி இருக்கிறார்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்த வெற்றியைப் பொதுத் தேர்தலில் பெற்று, தங்களுக்கு வேண்டிய அனைத்துச் சட்டத் திருத்தங்களையும் ராஜபக்‌ஷர்கள் குறுகிய காலத்துக்குள்ளேயே செய்தார்கள்.

ஆனால், ஆட்சியை ஒருமைப்படுத்தி முன்நகர்த்துவதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்துவது குறித்துச் சிந்திக்க மறந்துவிட்டார்கள். அதனால், அரசாங்கத்தின் பங்காளிகள், அனுதாபிகள், திட்டம் வகுப்பாளர்கள் தொடங்கி அனைத்துத் தரப்பினரும் ராஜபக்‌ஷர்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.

ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக, தென் இலங்கை தற்போது வெளிப்படுத்தியுள்ள அதிருப்தியின் அளவை, எந்தக் காலத்திலும் வெளிப்படுத்தியது இல்லை. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தோற்கடிக்கப்பட்ட தருணத்திலும் கூட, தென் இலங்கை மக்கள் தற்போதுள்ள அதிருப்தியின் அளவை வெளிப்படுத்தி இருக்கவில்லை.

ஆனால், இன்றைக்கு ராஜபக்‌ஷர்களின் நிலை என்பது, அபாயத்துக்குரிய கட்டத்தை அடைந்திருக்கின்றது. குறைந்தது பத்து ஆண்டுகளுக்கான ஆட்சியில் இருக்க வேண்டும் என்கிற திட்டத்தோடு 2019இல் ஆட்சி பீடமேறிய ராஜபக்‌ஷர்களுக்கு முதல் ஐந்து ஆண்டுகளையே பிரச்சினைகள் இன்றிக் கடக்க முடியுமா என்ற சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது.

அண்மையில், எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்து ஆளுங்கட்சியின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுனவே கண்டன அறிக்கை வெளியிடும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, அந்தக் கட்சி முன்னிறுத்தி ஜனாதிபதியான கோட்டாய ராஜபக்‌ஷ, அந்தக் கட்சியின் கூட்டணியில் அங்கம் வகித்து மொட்டுச் சின்னத்திலேயே தேர்தலில் வென்ற உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் கூடிப்பேசி, முடிவெடுத்து அறிவித்த எரிபொருள் விலையேற்றத்தை, பொதுஜன பெரமுன அறிக்கை ஊடாகக் கண்டிக்கிறது. அதிலும், எரிபொருள் அமைச்சராக கம்மன்பிலவை பதவி விலகுமாறும் கோருகிறது என்றால், ஆளுங்கட்சிக்குள் காணப்படும் குழப்பங்களின் அளவைப் புரிந்து கொள்ள முடியும்.

பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ பதவி வகிக்கின்ற போதிலும், 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம், அவரின் அதிகாரங்கள் பிடுங்கப்பட்டுவிட்டன. அவ்வாறான நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினதும் அவரது இராணுவ செயலணியினதும் திட்டங்களின் படியே நாடு நிர்வகிக்கப்படுகிறது.

இங்கு, அமைச்சர்களாக இருந்தாலும் அவர்களின் அதிகாரம் செல்லாக்காசான நிலைதான். அப்படியான நிலையில், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்‌ஷவை மீண்டும் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து அமைச்சராகப் பதவியில் அமர்த்தினால், தங்களின் அதிகாரங்களை மீளப்பெற முடியும் என்று பொதுஜன பெரமுனவில் குறிப்பிட்டளவான அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள்.

அதன்போக்கில்தான், பசிலின் பாராளுமன்ற பிரவேசத்துக்கான துதிபாடல்களும் ஆராதனைகளும் செய்யப்படுகின்றன. ஆனால், பசில் மீண்டும் அமைச்சரவைக்குள் வந்தால், ஆட்சி அதிகார மையம் இரு துருவங்களாக மாறும்; அது, ஜனாதிபதிக்கு அவ்வளவு இனிப்பானதாக இருக்காது என்று அவரது சகாக்கள் அச்சப்படுகிறார்கள்.

அத்தோடு, ஆளுங்கட்சியின் பங்காளிக் கட்சிகளுக்கு பசில் மீதான பயம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஏனெனில், தங்களது கட்சிகளை இல்லாதொழித்து, ஒரே கட்சியாகப் பெரமுனவை, பசில் வளர்க்க நினைக்கிறார். அதன்மூலம், பங்காளிக் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னை நிலைப்படுத்தலாம் என்பது பசிலின் திட்டம்.

அதனால்தான், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பங்காளிக் கட்சிகளுக்கு எதிரான நிலையை, தன்னுடைய விசுவாசிகளைக் கொண்டு பசில் செய்கிறார். எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராக வெளியிடப்பட்ட அறிக்கை, உண்மையில் உதய கம்மன்பிலவை இலக்கு வைத்து வெளியிடப்பட்டது.

அண்மையில், விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழிருந்த அரச நிறுவனமொன்று, அவரிடமிருந்து மஹிந்த அமரவீரவின் அமைச்சுக்கு மாற்றப்பட்டது. அது தொடர்பில், அவருக்கு எந்தவித முன்னறிவிப்பும் விடுக்கவில்லை. அது குறித்து, விமல் வீரவன்ச ‘பேஸ்புக்’கில் புலம்பும் அளவுக்கு அரசாங்கத்தின் உள்குளறுபடிகள் இருக்கின்றன.

இன்னொரு பக்கம், ராஜபக்‌ஷர்களின் பிரசார பீரங்கிகளாக இருந்த ஊடகங்கள் கூட, இன்றைக்கு எதிரான நிலையெடுத்து விமர்சிக்கத் தொடங்கிவிட்டன. ராஜபக்‌ஷர்களின் வருகை, நாட்டில் தேனையும் பாலையும் ஓட வைக்கும் என்று 24 மணி நேரமும் ஓதிக்கொண்டிருந்த சம்பந்தப்பட்ட ஊடகங்கள், அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தியைச் சமாளிக்க முடியாமல், அதனை மெல்ல மெல்ல வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டன.

கொரோனா பெருந்தொற்று, நாட்டு மக்களை அனைத்து விதத்திலும் பாதித்துவிட்டது. வருமானம் என்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. மக்கள் அடக்குக்கடைகளை நோக்கிச் செல்வது வாடிக்கையாகி விட்டது. நகை நட்டுகள் இல்லாத மக்களின் நிலை, இன்னும் மோசம்.

அப்படியான நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாகக் கூறிக் கொண்டு, பௌத்த விகாரையின் பின்னணியில், ஒரு மணித்தியாலத்துக்கு மேலாகக் கடந்த கால ஆட்சிகளைக் குறைகூறி, மக்களை எரிச்சலூட்டுகிறார் ஜனாதிபதி. நாடு மீளமுடியாத பொருளாதார அபாயத்தின் இருக்கும் போது, அது குறித்துச் சிந்திக்காமல், மீண்டும் மீண்டும் தங்களின் அனைத்துத் தோல்விகளையும் கடந்த கால ஆட்சியாளர்கள் மீது போட்டுவிட்டு நழுவிவிட முடியும் என்பது, எவ்வளவு அபத்தமானது.

அதிலும் நகைப்புக்குரியது என்னவென்றால், நல்லாட்சிக் காலம் என்கிற ஐந்து வருடங்களுக்கு முன்னாலுள்ள பத்து ஆண்டுகளையும் இதே ராஜபக்‌ஷர்கள்தான் ஆட்சி செலுத்தினார்கள். ஆனால், அதையெல்லாம் மறந்து நின்று, நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நல்லாட்சிக் காலம் மட்டுமே காரணம் எனும் தோரணை, ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற நிலைக்கு ஒப்பானது.

ராஜபக்‌ஷர்கள் தொடர்ச்சியாக, போர் வெற்றி வாதத்தைத் தங்களது பிரதான காப்புக் கருவியாக கையில் ஏந்தி இருக்கின்றார்கள். இப்போதும் அதையே தூக்கிக் கொண்டு வருகிறார்கள்.

ஆனால், மக்களின் வயிற்றின் பசி, நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் போது, போர் வெற்றி வாதம் ஒரு பொருட்டுக்கும் உதவாது என்பது ராஜபக்‌ஷர்களுக்கு விளங்கவில்லை. நாட்டின் எதிர்காலம் குறித்த எந்தக் கரிசனையும் இன்றி, தங்களின் குடும்பங்கள், எதிர்கால ஆட்சிக்கான திட்டங்களை மாத்திரமே வைத்துக் கொண்டு, ராஜபக்‌ஷர்கள் முன்நகர்த்து கொண்டிருக்கிறார்கள். மற்றப்படி, அரசாங்கத்துக்குள் நிகழும் குளறுபடிகளும் கூட ராஜபக்‌ஷர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியின் போக்கிலானவைதான்.

ஆனால், நாடும் நாட்டு மக்களும் இவ்வளவு அபாயங்களைச் சந்தித்து நிற்கும் போது, பிரதான எதிர்க்கட்சியோ எந்தவித பொறுப்பும் இன்றி, தூங்கியே காலத்தைக் கழித்து வருகின்றது. அடுத்த தேர்தல் வர, இன்னமும் காலம் இருக்கின்றது. அப்போது விழித்தால் போதும் என்பது அவர்களின் உத்தேசம். அப்படியான நிலையில், நாடு எப்படித் தப்பித்துக் கொள்ளும்?`