அமைச்சர் கம்மன்பிலவின் சிங்கப்பூர் வங்கிக் கணக்கு குறித்து விசாரணை

அமைச்சர் உதய கம்மன்பிலவின் சிங்கப்பூர் வங்கிக் கணக்கு சம்பந்தமான விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர் நிறுவனத்தின் ஊடாக இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது.

இதன் மூலம் கிடைக்கும் பல மில்லியன் டொலர் தரகு பணம் சிங்கப்பூரில் உள்ள வங்கி ஒன்றில் வைப்புச் செய்யப்படுவதாகவும் அந்த நிறுவனத்தின் தேவைக்கு அமைய இலங்கையில் எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவல் ஒன்றை அடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த சிங்கப்பூர் நிறுவனம் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் இலங்கைக்கு எரிபொருளை விநியோகித்த பிரதான நிறுவனங்களில் ஒன்று.

எண்ணெயை உற்பத்தி செய்யும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அதனை நேரடியாக இறக்குமதி செய்யாது, சிங்கப்பூர் நிறுவனத்தின் ஊடாக ஏன் இறக்குமதி செய்யப்படுகிறது என்ற கேள்வி, பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

அத்துடன் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து பெரும் கஷ்டத்தை அனுபவித்து வரும் நிலைமையில் எந்த வகையிலும் எரிபொருளின் விலைகளை அதிகரிக்கக் கூடாது என்பது பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களது நிலைப்பாடாக உள்ளது.

அத்துடன் இதன் காரணமாக மக்கள் மத்தியில்அரசியலில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களின் கடும் அதிருப்திக்கு உள்ளாவார்கள் எனவும் அவர் கூறியுள்ளனர்.

மக்கள் மத்திக்கு சென்று அரசியலில் ஈடுபடாத அமைச்சர் உதய கம்மன்பில முழு அரசாங்கத்தையும் கஷ்டத்தில் தள்ளியுள்ளார் என்பது பொதுஜன பெரமுனவினரின் நிலைப்பாடாக உள்ளது.

Posted in Uncategorized

சத்தமில்லாத யுத்தம் மூலம் இலங்கையை ஆக்கிரமிக்கும் சீனா

சீனாவின் ஆக்கிரமிப்பு வலையத்தினுள் இலங்கை சிக்கி அதிலிருந்த மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றது. சத்தமில்லாத மிகப்பெரிய யுத்தம் ஒன்றின் மூலம் இலங்கையை சீனா முழுமையாகக் கைப்பற்றி எதிர்காலத்தில் எங்களுக்கு சொந்தமான நாடு சீனாவிடம் சிக்கி நாங்கள் இந்த உலகத்தில் ஏதிலிகளாகத் தவிக்கின்ற ஒரு நிலைமையே இங்கு ஏற்படப்போகின்றது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.இளங்கதிர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சீன செயற்திட்டங்கள் தொடர்பில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்னாசியாவில் தனது ஆதிக்கத்தை நிறுவிக்கொள்ள நினைக்கும் சீனா அதற்காக இலங்கையில் சத்தமில்லாத யுத்தம் ஒன்றை ஆரம்பித்து தற்போது தமிழர் தாயத்தையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது.

இதன் ஆரம்பமாக தென்னிலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு வடிவமாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் பணத்தைக் கொடுத்து இலங்கைக்கு சொந்தமான கடல் பரப்பைக் கைப்பற்றி தனது வல்லாதிக்க சக்தியை நிலை நாட்டி நிற்கிறது.

இதன் தொடர்ச்சியாக வடமாகணத்திலும் தீவகத்தை கைப்பற்ற பல வழிகளில் முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இடைநிறுத்தப்பட்ட போதும் தற்போது இரகசியமான முறையில் சீனாவுக்கு நாட்டின் வளம் மிக்க நிலப்பரப்புக்களை விற்று தற்போதைய இலங்கை ஆட்சியாளர்கள் ராஜபக்ஷ குடும்பம் தங்கள் குடும்ப அரசியல் இலாப நோக்கத்திற்காக தங்களது சொந்த நாட்டு மக்களையே ஏமாற்றி வருவதோடு, இலங்கையின் இறையாண்மையையே மதிக்காது செயற்ப்படுகின்றனர்.

அந்த வகையில் இலங்கையின் மேற்கே துறைமுக நகரம் உட்பட மிக முக்கியமான பொருளாதார மையங்கள் என இலங்கையின் நிலப்பரப்புகளை ஆக்கிரமிப்புச் செய்தது மட்டுமல்லாமல் தற்போது வடக்கில் மிகப் பெரிய அளவிலான ஆக்கிரமிப்பினை ஆரம்பித்துள்ளது. அன்பான எமது மக்கள் மிகத் தெளிவாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

வடமாகாணத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு பல வடிவங்களில் வருகின்றது. தற்போது காங்கேசன்துறை பகுதியில் முன்னாள் ஜனாதியும், தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட சுற்றுலா விடுதிக்கான கட்டடத் தொகுதியைச் சீனாவிற்கு விற்கும் இரகசியத் திட்டம் போடப்பட்டுள்ளமை தொடர்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

தற்போது நாட்டில் ஏற்படடுள்ள கோவிட் என்ற கொடிய நோயின் காரணமாக நாடே முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்களோ, ஏனைய அரசியல் பிரதிநிதிகளோ பெரிய அளவில் வெளியில் இறங்கி வேலை செய்ய முடியாத சூழலைப் பயன்படுத்தி இந்த அரசாங்கம் இரகசியமாக தங்களது அரசியலை நகர்த்தி வருகின்றது.

மாகாண சபைகள் இல்லாமையினாலேயே இவ்வாறான செயற்பாடுகளில் அரசாங்கம் தன்னிச்சையாகச் செயற்பட முடிகின்றது. மாகாணசபை இருப்பின் அரசாங்கத்தால் நேரடியாக இவ்வாறான முடிவுகளை எடுத்துச் செயற்பட முடியாது.

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை இல்லாதொழித்து மாகாண சபைத் தேர்தலையும் நடத்தாது நாட்டின் ஜனநாயத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு நாட்டை ஒரு சர்வாதிகார ஆட்சி முறையில் நடாத்தி வருகின்றது.

இந்திய அரசாங்கத்தால் தமிழ் மக்களின் நன்மை கருதி கொண்டு வரப்பட்ட 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாணங்களை ஆட்சி செய்யும் அதிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதனையும் இல்லாமல் ஒழிப்பதற்கான செயற்திட்டங்களையும் இந்த அரசு தென்னிலங்கையில் வைத்துத் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றது.

எமது விடுதலைப் போராட்டத்தில் தலைவர்களின் அன்றைய தீர்க்கதரிசன வார்த்தைகள் இன்று நிரூபனமாகிக் கொண்டு வருகின்றன. எதிர்காலத்தில் சீன ஆதிக்கம் இலங்கையில் தோன்றும், அதுவே சிங்கள மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியைத் தோற்றுவிக்கும் என்று அவர்கள் அன்று கூறிய வார்த்தைகளை இன்று நாங்கள் நேரடியாகப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றன.

இன்று சிங்கள மக்கள் இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் கிளர்ந்தெழுந்துள்ளார்கள். அந்த மக்களின் எதிர்ப்புகளை முறியடிக்க முடியாமல் நாட்டை முடக்கி வைத்துள்ள சூழலைப் பயன்படுத்துகின்றது இந்த அரசு.

இந்த முடக்கம் மூலம் மக்களை அடக்கிக்கொண்டு தங்கள் அரசுக்கு எதிரான செயற்பாடுகள் இந்த நாட்டில் இல்லை என்பதை இந்த உலகத்திற்குக் காட்ட முற்படுகின்றனர். இது தொடர்பில் நாங்கள் எங்கள் தமிழ் மக்களுக்கு ஒன்றை மிகத் தெளிவாகச் சொல்லிக் கொள்ளுகின்றோம்.

எமது இனம், மொழி, கலை, கலாச்சாரம் என்ற ரீதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் எமது தாயகப் பகுதிகளில் சீனாவின் வருகை எதிர்காலத்தில் எங்களுக்குப் பாரிய ஆபத்தையே தோற்றுவிக்கும்.

ஏனெனில் எமது பாட்டன் பூட்டன் காலத்தில் இருந்து வரலாற்று ரீதியாக நாங்கள் இணைந்து எமது கலாச்சாரத்தின் அடிப்படையில் சேர்ந்து செயற்பட்ட தேசம் இந்தியா. எமது அயல் நாடான இந்தியாவிற்கு சவால் விடும் நோக்கமாகவே சீனா இலங்கையை ஆக்கிரமித்து வருகின்றது.

எனவே இந்தியாவின் உறவுமுறையை நாங்கள் பலப்படுத்திக்கொண்டு சீனாவினை எமது மண்ணில் இருந்து விரட்டும் மிகப் பெரிய வேலை எங்கள் கரங்களில் உள்ளன. அதனை நாங்கள் நிச்சயமாகச் செய்ய வேண்டும்.

எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக எங்களை நாங்களே ஆளக் கூடிய ஒரு சுயநிர்ணய உரிமையை நாங்கள் பெற்றெடுப்பதற்கு எமக்கு உதவக்கூடிய ஒரே ஒரு நாடு இந்தியா மாத்திரமே.

இந்தியாவிற்குச் சவால் விடக்கூடிய வகையில் சீன அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதற்கு இலங்கையும் சார்பாக நடந்து கொண்டிருக்கின்றது. சீனாவின் ஆக்கிரமிப்பு வலையத்தினுள் இலங்கையும் சிக்கி அதிலிருந்து மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றது.

இலங்கையின் மிக வளம் மிக்க பகுதியான துறைமுக நகரம் அமைந்துள்ள கடற்பரப்பினை சீனா முழுமையாகக் கைப்பற்றி ஆக்கிரமித்து தனது வல்லாதிக்க சக்தியை இங்கு திணித்துள்ளது. அதற்கு அடுத்த கட்டமாக எமது தீவகங்களைக்; கைப்பற்றும் மிகப் பெரிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு சீனா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

அதேபோல் காங்கேசன்துறை, சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்குரிய முயற்சிகளையும் தற்போது மேற்கொண்டு வருவதாக அறியக்கிடைத்துள்ளது.

உண்மையில் சத்தமில்லாத மிகப் பெரிய யுத்தம் ஒன்றின் மூலம் இலங்கையை சீனா முழுமையாகக் கைப்பற்றி எதிர்காலத்தில் எங்களுக்குச் சொந்தமான நாடு சீனாவிடம் சிக்கி நாங்கள் இந்த உலகத்தில் ஏதிலிகளாகத் தவிக்கின்ற ஒரு நிலைமை இங்கு ஏற்படும். இதனை எமது மக்கள் மிக தெளிவாகப் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கம்மன்பில மாத்திரமல்ல முழு அரசும் பதவி விலக வேண்டும்: சஜித் வலியுறுத்தல்

எரிபொருள் விலையை அதிகரித்து மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ள அரசாங்கம் அதன் பழியை தனிநபர் மீது சுமத்த முயற்சிப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். எவ்வாறிருப்பினும் தொடர்ந்தும் மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கம் நாட்டை சிறப்பாக நிர்வகிக்கக் கூடியவர்களிடம் அதனை ஒப்படைத்து விட்டு பதவி விலகுவதே சிறந்தது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

எரிபொருள் விலையேற்றத்திற்கான பொறுப்பினை ஏற்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதனை வலியுறுத்தியுள்ளார்.

அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

எரிபொருள் விலையை அதிகரித்து மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ள அரசாங்கம் அதன் பழியை தனிநபர் மீது சுமத்த முயற்சிப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். எவ்வாறிருப்பினும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கை அரசாங்கத்திற்குள் காணப்படும் பாரிய முரண்பாடுகளை வெளிக்கொணர்ந்துள்ளது.

தமது கட்சியே இந்த நாட்டை ஆட்சி செய்கிறது என்று குறிப்பிடும் வகையில் அவரால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை அபாயம் மிக்கதாகவுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திடமும் பொதுஜன பெரமுனவிடமும் கேட்பதற்கு பல கேள்விகள் எழுந்துள்ளன.

அரசாங்கமும் அறியாத வகையில் எரிபொருள் விலையை திடீரென அதிகரிப்பதற்கு அமைச்சரொருவர் மாத்திரம் எவ்வாறு தன்னிச்சையாக தீர்மானித்தார் ? அவ்வாறு அவர் தனித்து தீர்மானமொன்றை எடுத்திருப்பாராயின் அமைச்சரவையின் ஒழுங்கு விதிகளை மீறி தனியொரு அமைச்சரால் இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படும் வரை அரசாங்கத்தின் பிரதானிகளான ஜனாதிபதியும் பிரதமரும் என்ன செய்து கொண்டிருந்தனர் ?

வழமையாக இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டால் அது அமைச்சரவையால் எடுக்கப்பட்ட தீர்மானமாகவே கருத்தப்படும். அவ்வாறிருக்கையில் எவ்வாறு குறிப்பிட்டவொரு அமைச்சர் மீது மாத்திரம் குற்றம் சுமத்தப்படுகிறது ?

மேலும், எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்தது உண்மைக்கு புறம்பாகவா? அவ்வாறெனில் அது கற்பனை கதையா? குறித்த அமைச்சர் இவர்களுக்கு அப்பால் செயற்படுகின்றாரா?

இந்த அரசாங்கத்தால் அண்மைக் காலங்களில் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் பல தீர்மானங்கள் மிகவும் இரகசியமாக சூட்சுமமான முறையில் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் திடீரென இந்த தீர்மானத்திற்கு மாத்திரம் பொதுஜன பெரமுன பகிரங்க அறிக்கையை வெளியிட்டுள்ளமையானது அரசாங்கத்திற்குள் காணப்படும் பாரிய முரண்பாடுகளை வெளிப்படுத்தவில்லையா?

இவ்வாறான அறிக்கைககள் ஊடாக அரசாங்கமானது தம்மீது தவறில்லை என்று நிரூபிக்க முற்படுகிறது. எனவே எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே தவிர இதிலிருந்து தப்பிப்பதற்கு முயற்சிக்க கூடாது. இந்த தீர்மானத்தில் மாற்றம் வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கான மக்கள் குரல் தோன்றிவிட்டது.

தற்போது அரசாங்கம் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை முழுமையாக இழந்துள்ளனர் என்றார்.

பெருந்தோட்ட மக்களின் சுமையை அதிகரித்துள்ள மண்ணெண்ணெய் விலையேற்றம்

மண்ணெண்ணெய் விலையேற்றத்தால் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் கவலை வெளியிட்டனர்.

2019 ஆம் ஆண்டு குடியிருப்பு தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் 24 வீடுகள் முற்றாக எரிந்ததுடன், அந்த வீடுகளில் இருந்தவர்கள் போர்டைஸ் பொது மைதானத்தில் கூடாரங்கள் அமைத்து தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இவ்வாறு வாழ்ந்து வரும் இவர்கள் உணவு சமைப்பதற்கு பெரும்பாலும் மண்ணெண்ணெய் மற்றும் விறகு அடுப்பையே பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதுடன் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்தது.

இந்த விலையேற்றம் விறகு அடுப்பு மற்றும் மண்ணெண்ணெய் விளக்குகளை பயன்படுத்தும் தம்மை பெரிதும் பாதித்துள்ளதென ஹட்டன் போர்டைஸ், 30 ஏக்கர் தோட்டத்தில் வாழும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

பயணத்தடைக்கு மத்தியில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தமக்கு மண்ணெண்ணெய்க்கு மேலும் 7 ரூபா அதிகமாகக் கொடுத்து வாங்கும் வசதி இல்லை எனவும் தெரிவித்தனர்.

கேகாலை – தெஹியோவிட்ட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாம்பேகம தோட்டத்தில் மக்கள் மின்சார வசதி இல்லாமல் விளக்கு வெளிச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

கூலித்தொழில் செய்பவர்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் பிள்ளைகளின் கல்வி பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.

கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 20 ஆயிரத்தை கடந்தது

நாட்டில் மேலும் 1,633 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய நாட்டில் இதுவரை 220,556 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 2,426 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 186,516 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,073 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

மடு மாதா அன்னையின் திருவிழாவில் கலந்து கொள்ள வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி இடம் பெற உள்ள நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக திருவிழாவிற்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வருகை தர அனுமதி இல்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

மன்னார் ஆயர் இல்லத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை (12) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், “மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி (02-07-2021) இடம் பெற உள்ளது. இவ்வருடம் எமக்கு சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகளுடன் ஆடி மாத திருவிழாவை நடாத்த வேண்டியுள்ளது.

எனவே இம் முறை யாத்திரிகர்கள் , பக்தர்கள் மருதமடு அன்னையின் ஆடி மாதம் 2 ஆம் திகதி இடம் பெற உள்ள திருவிழாவிற்கு மன்னார் மறைமாவட்டத்தை தவிர்ந்த ஏனைய வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வருகை தர அனுமதி இல்லை என்பதை அறியத்தருகின்றோம்” என்றார்.

Posted in Uncategorized

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் இலங்கைக்கு முன்கூட்டியே பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்திருந்தமை தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானிய உளவுப் பிரிவினர் இந்த தாக்குதல் முயற்சி தொடர்பில் முன்கூட்டியே இலங்கைக்கு தகவல் வழங்கியிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தொலைத்தொடர்பு வலையமைப்பினை ஒட்டுக் கேட்டதன் மூலம் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பாகிஸ்தான் இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தொடாபில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பேசிக் கொள்வதாக இலங்கை அதகாரிகளுக்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்திருந்தது என கூறப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்தியா தகவல்களை வழங்கியிருந்தது என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானும் தாக்குதல் குறித்து எச்சரித்திருந்தது என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலையேற்றம்: அமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டுமென SLPP வலியுறுத்தல்

எரிபொருள் விலையேற்றத்திற்கான பொறுப்பை ஏற்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டுமென ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய நிலைமை ஏற்படக்கூடுமென்பதை அறிந்து, உரிய தருணத்தில் தேவையான தீர்மானங்களை எடுக்க விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தவறியதன் காரணமாக அரசாங்கம் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்து உள்ளவர்களுக்கான இணையத்தளம்!

சீனி, பால்மா, சோளம் நெல் மற்றும் அரிசி போன்றவற்றை களஞ்சியப்படுத்தி வைத்துள்ள இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையின் www.caa.gov.lk என்ற இணையத்தளத்தில் பதிவு செய்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்தார்.

மேலும், தமது கையிருப்புக்களின் விபரங்களை குறித்த இணையத்தளத்தில் புதுப்பித்துக் கொள்ள முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

சீனி, பால்மா, சோளம், நெல் மற்றும் அரிசி போன்றவற்றை வைத்துள்ள நபர்கள் 7 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனி, பால்மா, நெல் மற்றும் அரிசி போன்றவற்றை வைத்துள்ள நபர்கள் 7 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

மறைத்து வைக்கப்பட்டுள்ள அரசி மற்றும் நெல்லை வௌியில் கொண்டு வருவதற்காக இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் விசேடமாக வௌியிடப்படவுள்ளதாக அமைச்சர் நேற்று தெரிவித்தார்.

மேலும், தமது அறுவடைகளை சேமித்து வைத்துள்ள விவசாயிகளுக்கு இந்த வர்த்தமானி அறிவித்தலின் விதிகள் பொருந்தாது என அமைச்சர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஜீ.எஸ்.பி. யை இலங்கை இழந்தமைக்கான காரணத்தை வெளிப்படுத்தினார் ஹர்ஷ டி சில்வா

அரசாங்கத்தின் ஜனநாயகத்திற்குப் புறம்பான செயற்பாடுகள், நாட்டு மக்களின் உரிமைகளைப் புறக்கணித்தமை, தொடர்ச்சியான இராணுவமயமாக்கம் உள்ளிட்ட மோசமான பல செயற்பாடுகளின் விளைவாகவே இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுவந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இல்லாதுபோயுள்ளது.

இதன் விளைவாக எமது பொருளாதாரம் மேலும் நெருடிக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலையேற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தினால் நாட்டிற்கு எத்தகைய பாதிப்புக்கள் ஏற்படும் என்று வினவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,

ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்த எமது நாடு, நேற்று முன்தினம் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினால் மேலும் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ளவுள்ளது. இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கான அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருக்கும் அதேவேளை எதிராக வெறுமனே 15 வாக்குகள் மாத்திரமே கிடைத்திருக்கின்றன. ஏற்கனவே கடந்த 2010 – 2016 வரையான காலப்பகுதியில் எமது நாட்டிற்கு அந்த வரிச்சலுகை கிடைக்கப்பெறவில்லை. தரவுகளின் அடிப்படையில் நோக்குகையில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டிருக்காத 2011 – 2016 வரையான காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதியானது, வெறுமனே 6 சதவீதமாகவே காணப்பட்டது. எனினும் அவ்வரிச்சலுகை வழங்கப்பட்டதன் பின்னர் 2016 – 2019 வரையான காலப்பகுதியில் ஏற்றுமதிகள் 28 சதவீதமாக வளர்ச்சிபெற்றது.

எமது நாட்டிற்கு வழங்கப்படாமல் இருந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகையை மீளப்பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு நானே புருசேல்ஸிற்கு சென்றிருந்தேன். ஏனெனில் அப்போதைய காலக்கட்டத்தில் பொருளாதார ரீதியான இராஜதந்திரப்பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் பொறுப்பை மங்கள சமரவீர என்னிடம் கையளித்திருந்தார். அங்குசென்று பேச்சுவார்த்தைகளை நடத்தியதன் பின்னர், இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதன்போது எமக்கு ஆதரவாக 636 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் பதிவாகின. மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுவோம் என்றே அப்போது நாம் வாக்களித்தோம். அதன்படி அக்காலத்தில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் நிலைநாட்டுவதற்கான நல்லாட்சி அரசாங்கம் என்ற அடிப்படையில் நாம் புதிய சட்டங்களையும் கட்டமைப்புக்களையும் உருவாக்கினோம். காணாமல்போனோர் பற்றிய அலுவலக சட்டத்தையும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தையும் உருவாக்கினோம்.

ஆனால் 2019 ஆம் ஆண்டின் பின்னர் என்ன நடந்தது? தற்போதைய அரசாங்கம் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றி ஜனநாயகத்தை முழுமையாகப் புறக்கணித்தது. நாடு படிப்படியாக இராணுவமயமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வனைத்து விடயங்கள் தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் பேசப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் ஊடாக அரசாங்கம் தமது எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனின், மக்களின் உரிமைகளைப் புறக்கணிப்பதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும். பிரஜைகளின் சுதந்திரத்தில் தலையீடு செய்வதை நிறுத்தவேண்டும். அதிகாரங்களை ஓரிடத்தில் குவித்து, படிப்படியாக இராணுவமயமாக்குவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் எந்தவொரு சலுகைகளும் வாய்ப்புக்களும் இல்லாமல்போனாலும் பிரச்சினையில்லை. எனினும் எமது கைகளிலேயே அதிகாரம் இருக்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. மக்களின் உரிமைகளை நிறைவேற்றும் பட்சத்தில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தானாகவே எமக்குக் கிடைக்கும். அந்தச் சலுகை இருப்பதென்பது தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீட்சிபெறுவதற்குப் பெரிதும் உதவும் என்றார்.