கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 67 பேர் பலி இதுவரை 1,910 பேர் மரணம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,910 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

நாடாளுமன்ற உறுப்பினராகின்றார் ஞானசார தேரர்

நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தனது பதவியை இராஜினாமா செய்த பின்னர் எங்கள் மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஞானசார தேரர் நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க மூன்று மாதங்கள் மட்டுமே கோரியதாகவும், இருப்பினும் 6 மாதங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் பின்னர் தனது பதவியை ஞானசார தேரரிடம் ஒப்படைக்க சம்மதித்தார் என்றும் அக்கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஞானசார தேரரின் கட்சி, மொத்தம் 67,758 வாக்குகளைப் பெற்று தேசியப்பட்டியல் ஆசனத்தை பெற்றுக்கொண்டது.

கடந்த ஆண்டு கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அதுரலிய ரத்தன தேரர், அக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜனவரி 5 ஆம் திகதி பதவியேற்றார்.

இந்நிலையில் அவர் பதவியேற்று எதிர்வரும் ஜூலை 5 அன்று 6 மாதங்கள் முடிவடையும் நிலையில், அவர் பதவி விலகியதும் ஞானசார தேரரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க கட்சி தயாராகி வருவதாக எங்கள் மக்கள் சக்தியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாம் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் போது எக்னலிகொடவின் மனைவி சந்தியாவை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து அச்சுறுத்தியமைக்காக ஞானசார தேரர் கைது செய்யப்பட்டார்.

இக்குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் செயற்பட்டார் என தெரிவித்து அவருக்கு 6 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 19 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் சுபீட்சத்திற்கான ஒத்துழைப்பை வழங்க நாம் என்றும் தயார்: இந்திய உயர்ஸ்தானிகர்

எமது கடற்பிராந்தியத்தைப் பாதுகாப்பதற்கு அவசியமான கட்டமைப்புக்களையும் ஒன்றிணைந்து உருவாக்குவதும் அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் இன்றியமையாததாகும்.

இதுவிடயத்தில் இலங்கையும் இந்தியாவும் மிகநெருங்கிச் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை அண்மையில் நியூ டயமன்ட் கப்பல் மற்றும் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட அனர்த்தம் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இலங்கை முதலீட்டுச்சபை, இலங்கை வர்த்தகப்பேரவை மற்றும் கொழும்புப் பங்குச்சந்தை ஆகியவற்றின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் திங்கட்கிழமை ஆரம்பமான இலங்கை முதலீட்டுப்பேரவை மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. இதில் நாடுகளுக்கு இடையிலான முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையானது அதன் பிரஜைகள் அனைவருக்கும் நல்வாழ்வையும் சுபீட்சத்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான உறுதிப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்பது இந்த மாநாட்டின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின் முதல்நாள் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஏனைய நாடுகள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு அவசியமான வசதிவாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதனூடாக இலங்கையினால் எதிர்பார்க்கப்படும் உற்பத்தி மற்றும் பொருளாதார இலக்குகளையும் அடைந்துகொள்ள முடியும்.

இலங்கையில் நீண்டகால, நெருங்கிய நட்புறவு நாடாக இந்தியா இருந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது முதலீட்டுப்பேரவை மாநாட்டில் ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றுக்கொள்வதற்கும் இலங்கையுடன் மேலும் நெருக்கமான ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கும் இந்தியா தயாராக இருக்கின்றது.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அனைத்து நாடுகளும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், இவ்வாறானதொரு நேர்மறையான முயற்சி இன்றியமையாததாகும். ஏனெனில் நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்டு பல்வேறு துறைகள் சார்ந்தும், வெவ்வேறு நாடுகளைப் பங்காளிகளாக ஒன்றிணைந்து இயங்குவதன் மூலம் முன்னேற்றமடைவது என்பது கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்காலத்தில் மிகவும் முக்கியமானதாகும்.

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட நெருக்கடியின்போதும் கூட, இரு நாடுகளுக்கும் இடையிலான வணிக வெளிப்பாய்ச்சல்கள் நிலைத்த மட்டத்தில் பேணப்பட்டமையானது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான வலுவான வணிகத்தொடர்புகளை எடுத்துக்காட்டுகின்றது. இலங்கையின் தேசிய வர்த்தகக்கொள்கையானது இரு நாடுகளுக்கும் இடையிலான வணிகத்தொடர்புகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அமையும் என்று நம்புகின்றோம் என்றார்.

மேலும், இலங்கையின் சுபீட்சத்திற்கான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கும் அதேவேளை, எமது பொதுவான கடற்பிராந்தியத்தைப் பாதுகாப்பதற்கு அவசியமான கட்டமைப்புக்களையும் ஒன்றிணைந்து உருவாக்குவது அவசியமாகும் என்றும் குறிப்பிட்டார்.

வவுனியாவில் தனிப் பல்கலைக்கழகம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்ற பெயர், எதிர்வரும் யூலை மாதம் 31 ஆம் திகதியுடன் நீக்கப்பட்டு, ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல், இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என்ற பெயர் அமுலாகும் என வர்த்தமானியில் குறிப்பிப்படப்பட்டுள்ளது.

உள்நாட்டு மூலவள அடிப்படையினுள் விழுமியத்தை உருவாக்குதல் பற்றி மாணவர்களுக்குக் கல்வி புகட்டுவதன்மீது, இந்தப் பல்கலைக்கழகம் கூடுதலான அழுத்தத்தைக் கொண்டிருத்தல் வேண்டும் என்று வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களை பரப்பினால் பிடியாணையின்றி கைது செய்யப்படுவர் – பொலிஸார் அறிவிப்பு

சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்கள், நிழற்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிட்டு, அவற்றைப் பரப்புவோரை பிடியாணையின்றி கைது செய்யும் அதிகாரம் உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அத்தகைய போலித் தகவல்களால் ஏற்படக்கூடிய குற்றங்கள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவது, இனங்களுக்கு இடையே அல்லது மதங்களுக்கு இடையே விரிசல் ஏற்படுத்துவது, சிறுவர்கள் அல்லது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், மத நம்பிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது, பல்வேறு மோசடிகளுக்கான சந்தர்ப்பத்தை உருவாக்குவது என்பன அந்த குற்றங்களாகும்.

அத்துடன், போலித் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மக்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு முரணாக செயற்பட தூண்டப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தண்டனை சட்டக்கோவையிலுள்ள சரத்துகள், சிவில் மற்றும் அரசியல் சமவாயத்திற்கான சட்டங்கள், கணினி குற்றங்கள் சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம், அவதூறு கருத்துக்கள் சட்டம் ஆகியவற்றுக்கு அமைய இந்த செயற்பாடுகள் தொடர்பில் பிடியாணை இன்றி சந்தேகநபர்களை கைது செய்ய முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி திட்டமிட்ட வகையில் அல்லது தனிப்பட்ட ரீதியில் பொய்த் தகவல்களை பரப்புதல் அல்லது அதற்கு உடந்தையாக செயற்படுதலை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட சில அரச நிறுவனங்களின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எனும் அமைப்பின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்டகே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது, நாளை பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தும் வரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Posted in Uncategorized

இலங்கையில் உச்சம் தொட்ட கொரோனா மரணங்கள்! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,844

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 54 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,844 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினத்தில் மாத்திரம் 2,637 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 210,516 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 2,214 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 178,259 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

அரசாங்கத்தின் மீது வெறுப்பு அதிகரிப்பு : நாட்டையும், மக்களையும் பாதுகாக்க கடவுளிடம் வேண்டுவதே சிறப்பு – முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

அரசாங்கம் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைவடையவில்லை.

நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க கடவுளிடம் வேண்டிக் கொள்வதே மிகுதியாகியுள்ளது.

அரசாங்கத்தின் மீது வெறுப்புணர்வற்றோரை காண்பது அரிதாகவுள்ளது என அபயராம விகாரையில் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அபயராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும்., பொது மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் முறையான கொள்கை திட்டங்களை வகுக்கவில்லை. சுகாதார அமைச்சின் பொறுப்பற்ற செயற்பாட்டை பலமுறை சுட்டிக்காட்டியும் எவ்வித மாற்றமும் இதுவரையில் ஏற்படவில்லை.

அரசியல் முரண்பாடுகளை துறந்து அனைத்து தரப்பினரது யோசனைகளையும் ஒன்றினைத்து சிறந்ததிட்டத்தை வகுக்குமாறு குறிப்பிட்டுள்ளோம்.

எமது கருத்திற்கு மதிப்பளிக்கப்படவில்லை. தேர்தல் காலத்தில் மாத்திரம் நாம் குறிப்பிட்ட கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டன. அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதே தவிர குறைவடையவில்லை . அரசாங்கத்தின் மீது வெறுப்புக் கொண்டிராத பொது மக்களை காண்பது தற்போது அரிதாகவே உள்ளது.

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை விமர்சித்து பொது மக்கள் முகப்பு புத்தகத்தில் விடயங்களை பதிவேற்றம் செய்கிறார்கள்.

பதிவில் எனது பெயரையும் ,புகைப்படத்தையும் இணைத்து ‘ மதகுருவே தற்போது மகிழ்ச்சியா ‘ என பதிவிடுகிறார்கள். பொது மக்களின் இவ்வாறான செயற்பாடுகள் அவர்கள் அடைந்துள்ள ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறது.

அரசாங்கம் எந்த கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது என்பதை அறிய முடியவில்லை. நாட்டையும், நாட்டு மக்களையும் கடவுள் தான் பாதுகாக்க வேண்டும் என . இறுதியில் வேண்டியக் கொள்ளும் நிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது என்றார்.

வன்னியில் கால் நடை தீவனம் தொடர்பில் ரெலோ தலைவர் அடைக்கலநாதன் எம்.பி அவசர கடிதம்!

வன்னி மாவட்டத்தில் உள்ள கால் நடை வளர்ப்பாளர்கள் மற்றும் பண்ணையாளர்கள் தமது கால்நடைகளுக்கான தீவனத்தினை பெற்றுக்கொள்ள முடியாமல் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள்.

பசு மாடுகள் வளர்ப்பின் நலன் கருதி அவற்றிற்கான தீவனத்தினை பெற்றுக் கொடுக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி வன்னி மாவட்டத்தில் உள்ள அரசாங்க அதிபர்களுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று செவ்வாய்க்கிழமை மாலை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க அதிபர்களுக்கு குறித்த அவசர கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில் வீட்டில் கால் நடைகளை வளர்த்து வரும் கால் நடை பண்ணையாளர்கள் குறிப்பாக பால் தரும் நல் இன பசு மாடுகள் வளர்ப்பினை வாழ்வாதாரமாக கொண்டு அதனூடாக பெறப்படுகின்ற வருமானத்தினையே நம்பி அதிலே தங்கி தங்களது நாளாந்த வாழ்க்கையை நடாத்தி வருகின்ற மக்கள் இந்த பயணத்தடையின் மூலமாக இவ் கால் நடைகளுக்குரிய குறிப்பாக மாடுகளுக்குரிய தீவனத்தினை பெற முடியாமையால் சிரமத்தையும் பல விதமான கஸ்டங்களையும் எதிர் நோக்குகிறார்கள்.

தீவனக் கடைகள் பூட்டப்பட்டிருப்பதனால் இவர்களுடைய கால் நடைகளுக்குரிய குறிப்பாக மாடுகளுக்குரிய தீவனத்தினை பெற முடியாதுள்ளது.

இதனால் கால்நடை உயிரினங்களுக்கு உரிய உணவினை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உரிய தீவனத்தினை கால் நடைகளுக்கு வழங்க முடியாமையினால் உரிய பலனை பெற முடியாத நிலையில் கால்நடை வளர்ப்பாளர்கள் உள்ளனர்.

இதனால் அவர்களுக்கு இவ்வளவு காலமும் கிடைத்த வருமானம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதன் விளைவாக உரிமையாளர்கள் தங்களுடையதும் தங்களை சார்ந்து வாழ்பவர்களுடைய அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்த பயணாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதினால் அதனூடாக ஈட்டப்பட்டு வந்த வருமானம் அறவே இல்லாமல் போயுள்ளது.

ஆகவே இவ் தீவன விற்பனையாளர்கள் இதனை பயனாளிகளுக்கு கிடைக்கக் கூடிய வகையில் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யலாம் அல்லது மக்கள் அத்தியாவசிய தேவைப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டது போன்று இவ் தீவன நிலையங்களையும் திறந்து பொருட்களை விற்பனை செய்ய உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டால் சாலச்சிறந்ததாக அமையும் என குறித்த கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னாரில் வாழ்வாதாரத்தை இழந்து காணப்படும் குடும்பங்களுக்கு ரெலோ மன்னார் மாவட்ட அலுவலகத்தினால்உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை காரணமாக வாழ்வாதாரத்தினை இழந்த வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன.

அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் ஆகியவற்றுக்கு இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் பணிப்பிற்கு அமைய,தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோவின் மன்னார் மாவட்ட அலுவலகத்தினால் இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது முதல் கட்டமாக சவிரி குளம், வங்காலை, தலைமன்னார் பியர் போன்ற பகுதிகளில் வசிக்கும் 107 குடும்பங்களுக்கு 1500 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகளை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் டானியல் வசந்த் வழங்கி வைத்தார்.

Posted in Uncategorized

நயினாதீவு வருடாந்த ஆலய உற்சவம் பிற்போடப்பட்டது

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று சூழ்நிலை காரணமாக இந்த தீர்மாணம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 10 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்த ஆலய வருடாந்த மகோற்சவத்தினை மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் நடாத்துவதற்கு முன்னர் தீர்மாணம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை அவசரமாக கூடிய ஆலய அறங்காவலர் சபையினர் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.