துறைமுக நகர் சட்டமூல வாக்களிப்பில் கலந்துகொள்ளாதது ஏன்: முஸ்லிம் காங்கிரஸ் விளக்கம்

துறைமுக நகர் சட்டமூலத்தில் சாதகமும் பாதகமும் காணப்படுவதால், நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லையென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூல வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 5 உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று அவர்கள் இருந்த போதிலும், வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

எந்த முடிவினை எடுத்தாலும் 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு ஒரே முடிவினை எடுக்க வேண்டும் என நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

அதன் பின்னரே பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடி, வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லை என்ற முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

துறைமுக நகர சட்டமூலத்தில் சாதகங்களும் பாதகங்களும் காணப்படுவதனால் நடுநிலை வகிக்க வேண்டும் என கட்சி எடுத்த தீர்மானத்திற்கு ஏற்ப வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லையென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான பைஸல் காசிம் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்களும் நேற்றைய வாக்கெடுப்பில் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.

கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன், முஷாரப் முதுநபீன் ஆகியோர் துறைமுக நகர சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்த போதிலும், அந்த அணியை சேர்ந்த அலிஷப்ரி ரஹீம் மற்றும் இஷாக் ரஹ்மான் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அண்மையில் நடைபெற்ற பிரதமரின் இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில், நசீர் அஹமட், எச்.எம்.எம்.ஹாரிஸ், அலி ஷப்ரி ரஹீம், எம்.எஸ். தௌபிக், இஷாக் ரஹ்மான், பைஸல் காசிம் ஆகியோர் துறைமுக நகர சட்டமூல வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இவர்கள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கும் ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆடைத்தொழில்சாலைகளை தற்காலிகமாக இடை நிறுத்தி மக்களை பாதுகாக்ககோரிக்கை- ரெலோ விஜிந்தன்!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான க.விஜிந்தன் ஊடக சந்திப்பு ஒன்றினை 21.05.21 அன்று நடத்தியுள்ளார். இதன்போது அவர் தெரிவிக்கையில்..

முல்லைத்தீவு பகுதி கொரோனா கொத்தணியாக மாறிவருகின்றது முல்லைத்தீவு பகுதி இவ்வாறு மாறியதற்கு முழுபொறுப்பும் புதுக்குடியிருப்பில் இயங்கிவருகின்ற ஆடைத்தொழில்சாலைதான் பொறுப்பு சொல்லவேண்டிய கடைப்பாடு இருக்கின்றது.

கடந்த காலங்களில் ஆடைத்தொழில்சாலையில் கொரோனா தொற்று ஏற்பட்ட போது அதனை மூடுவதற்கு அதன் நிர்வாகம் சரியான முடிவினை எடுக்கவில்லை அரசாங்கமும் அதற்கான சரியான அழுத்தத்தினை கொடுக்கவில்லை

கடந்த காலங்களில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வினை தடுக்கின்ற நோக்கோடு கொரோனா தொற்றுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்று பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு நீதிமன்றம் வரை சென்று தடைசெய்த அரசாங்கம் ஆடைத்தொழில்சாலைகளின் இவ்வாறான செயற்பாட்டினை இடைநிறுத்துவதற்கான முயற்சி குறைவாக காணப்படுகின்றது.

உயர் அரச அதிகாரிகளின் அசமந்த போக்கும் காரணம்.கிளிநொச்சி,வவுனியா ஆடைத்தொழில்சாலைகள் இன்றும் இயங்கிவருகின்றது பல நூற்றுக்கணக்கான பெண்கள் அங்கு வேலை செய்கின்றார்கள் ஆடைத்தொழில்சாலைகளை மூடி மக்களை பாதுகாக்கின்ற முயற்சி போதாதாக காணப்படுகின்றது.

இவ்வாறு செல்லுமாக இருந்தால் இந்த பகுதி பல இலட்சக்கணக்கான கொரோனா தொற்றாளர்களை சுமக்கவேண்டிய நிலையும்,பல ஆயிரக்கணக்கானவர்களை இழக்கவேண்டிய நிலையும் உருவாகும்.அரசாங்கத்திடமும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடமும் நாம் கேட்டுக்கொள்வது இந்த ஆடைத்தொழில்சாலை தற்காலிகமாக இடைநிறுத்தி பெறுமதி மிக்க உயிர்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதேவளையில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளது,கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது மக்களின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது எனவே தனிமைப்படுத்தப்படுகின்ற முடக்கப்படுகின்றகாலங்களில் அரசாங்கம் உடனடியாக அவர்களுக்கு வறுமையினை குறைக்கின்ற வகையில் உணவு பொதிகளை வழங்குகின்ற சரியான பொறிமுறையினை அரசாங்கம் கடைப்பிடிக்கவேண்டும்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தலோ அல்லது முடக்கமோ ஏற்படுகின்றபோது மக்களுக்கான குடிதண்ணிர் போன்ற சேவைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் கிராமசேவகரிடம் அல்லது வட்டார மக்கள் பிரதிநிதி உப அலுவலக பொறுப்பதிகாரிகளுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் பிரதே சபையினால் மேற்கொள்ளக்கூடிய சகல வசதிகளையும் இலவசமாக மேற்கொள்ளவேண்டும் என அனைத்து பொறுப்பதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதிக்கு தடை விதிக்கக்கோரி பிரித்தானிய பாராளுமன்றில் பிரேரணை : பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் வலியுறுத்து

இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு தடைவிதிக்கக் கோரியும், இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் பிரித்தானியா தனது உறுதிப்பாட்டை முன்னிறுத்துமாறும் வலியுறுத்தி பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மக்லோக்லின் ஆனின் (McLaughlin Anne) முன்மொழிவில் கொண்டுவரப்பட்ட இந்த முன்பிரேரணையில் அனைத்துக்கட்சிகளைச் சேர்ந்த 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

அப்பிரேரணையில், தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து இன்னும் விசாரணைசெய்யப்படவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். தமிழருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களில் கண்மூடித்தனமான குண்டுவீச்சு, சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டமை, சித்திரவதை, பாலியல் வன்கொடுமை மற்றும் ஆட்கடத்தல் ஆகியனவும் அடங்கும்.

இந்நிலையில், யுத்தக் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய பல்வேறு சர்வதேச தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டதுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு விசாரணை ஆணைக்குழுவும் அமைக்கப்பட்டது.

அதில் மிகக் குறைந்த விசாரணைகள் மட்டுமே நடைபெற்றது மட்டுமல்லாது, விசாரணைகளை எதிர்கொண்டவர்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் சிலர் இன்றும் இலங்கையில் சக்திவாய்ந்த பதவிகளை வகிக்கிறார்கள்.

அத்துடன் அண்மைக்கால இலங்கை அரசியலமைப்பின் சீர்திருத்தங்களால் நீதித்துறையின் சுதந்திரம் குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளதுடன் மேலும் விசாரணைகள் இடம்பெறாது என்ற நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மனித உரிமை பேரவையில் இலங்கை பற்றிய முக்கிய குழுவின் தலைவராக பங்குவகித்திருக்கும் இங்கிலாந்து இந்த விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல் குற்றச்சாட்டுகள் இருப்பதால், அவர் இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயமும் ஏனைய ஐரோப்பிய பங்காளிகளும் தமது கரிசனையை வெளிப்படுத்தியதுடன் ஜெனிவாவிலுள்ள மனித உரிமைகள் பேரவையிலும் இது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

அதேநேரம், இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தின் இளையோர் அமைப்பு மேற்படி முன்பிரேரணையை கொண்டுவருவதற்கான வலியுறுத்தல்களை பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை இராணுவத்தளபதி சவேந்திரசில்வா தொடர்பிலான 50 பக்க குற்றப்பத்திரிகை ஒன்றை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்ட அமைப்பு பிரித்தானிய அரிசின் வெளிவிவகார அமைச்சிடம் சமர்ப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஆட்சியாளர்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடும் போது கொல்லப்பட்ட மக்களின் நினைவேந்தலிற்கு ஏன் தடை? ஜனநாயக மீறல் என யாழ் மாநகர பிரதி முதல்வர் குற்றச்சாட்டு

யாழ் மாநகர சபையின் மாதாந்தப் பொதுக்கூட்டம் இன்று 20.05.2021 சபையில் இடம்பெற்றது. இதன்போது முள்ளிவாய்க்காலின் கொல்லப்பட்ட எம்மவர்களினை நினைவேந்தல் இடம்பெறுவதற்கு கோரப்பட்டது.

அதன் போது தமிழ் ஈழ விடுலை இயக்கத்தின்(ரெலோ) யாழ் மாவட்ட பிரதி தலைவரும்,  யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி மேயருமான து.ஈசன் உரையாற்றும் போது…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இருக்கின்ற நினைவுத் தூபியானது உடைக்கப்பட்டமையை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

ஏனெனில் நம் மக்களுடைய ஒட்டுமொத்தமான படுகொலையை எல்லோரும் நினைவுகூரும்
முகமாக அமைக்கப்பட்ட அந்த நினைவேந்தல் சின்னம் உடைக்கப்பட்டமை இந்த நாட்டில் பாதிக்கப்பட்ட, கொல்லப்பட்ட மக்களுடைய உறவுகள் அவர்களை நினைவு கூருவதற்கும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் இருக்கின்ற அந்த ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவ்வாறான நினைவுச் சின்னங்கள் உடைத்தழிக்கப் படுகின்றமை மிகவும் ஒரு கோரமான, சர்வாதிகாரத் தன்மையுடைய ஒரு இனத்தை அடக்கி அந்த இனத்தின் அபிலாசைகளை அழிக்கின்ற ஒரு ஆட்சித் தத்துவத்தை வெளிப்படுத்தி இருக்கின்றது.

ஆகவே இந்த ஆட்சியாளர்கள் அவ்வாறான ஒரு கோர முகத்தை வெளிக்காட்டி இருக்கிறார்கள். அரச இயந்திரத்தின் மூலமாகத்தான் அந்த நடுகல் உடைக்கப்பட்டிருக்கின்றது.

அது மாத்திரமல்ல அங்கு புதிதாக ஒரு நடுகல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவினால் கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டபோது அதுவும் இரவோடு இரவாக தூக்கிச் செல்லப்பட்டுள்ளது.

இது உண்மையில் ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறலாகத்தான் நாங்கள் அதைப் பார்க்கின்றோம். ஏனெனில் உலகில் மனித உரிமைகளைப் பேணுகின்ற அமைப்பாக இன்று இருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட சாசனங்களில் இறந்தோரை நினைவுகூருவதற்கும் போரில் கொல்லப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்தல்

செய்வதற்கும் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் உரிமையுண்டு என்ற தத்துவத்தை இலங்கை அரசாங்கம் மீறியிருக்கின்றது.

அது மாத்திரமில்லை, அந்த மக்களுடைய உறவுகளுடைய மன ஆறுதலை அவர்களுடைய பாதிப்புக்கான ஒரு நீதி கோரலை இந்த ஆட்சியாளர்கள் ஒரு போதும் செவிசாய்க்க மாட்டார்கள்
என்பது இந்த தூபி உடைப்பினூடாகக் கண்கூடாகத் தெரிகின்றது.

இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது அதே
யுத்தத்தில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுடைய உறவினர்கள் அந்த ஆத்மாக்களை நினைவேந்தல் செய்வதற்குத் தடை செய்தல் உண்மையிலேயே ஒரு அப்பட்டமான ஜனநாயக மீறல்.

இந்த நாட்டைப் பூர்வீகமாக கொண்ட இனம் தமிழினம். அந்த தமிழினத்தினுடைய தொன்மைகள் வரலாறுகள் சுயநிர்ணய உரிமை. மரபுவழி தாயகம் மற்றும் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட இனம்.

அப்படிப்பட்ட ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மாபெரும் இனப்படுகொலை நடந்த மாதம் என்று சொன்னால் அது 2009.05.18 மே மாதம் தான். 12 ஆண்டுகளாகியும் இன்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை, நீதி கிடைக்காத போதும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் இறந்த உறவுகளை வேண்டி நினைவேந்தல் செய்வதற்குக் கூட தற்போது இருக்கும் ஆட்சியாளர்கள் அதைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

உண்மையில் அவர்கள் யுத்த வெற்றியைத் தென்னிலங்கையில் அதுவும் மிகவும் ஆபத்தான கொவிட் – 19 தொற்று சூழ்நிலை இருக்கின்ற போதும் மிகவும் பெருந்தொகையானோருடன் சேர்ந்து கொண்டாடும் போது இங்கு பாதிக்கப்பட்ட மக்களின் உறவுகள் அந்த
இடத்தில் ஒன்றுகூடி தங்களுடைய மன ஆறுதலுக்கு அந்த நினைவேந்தலைச் செய்வதற்கு அவர்கள் இராணுவரத்தினரையும், பொலிஸாரையும் நிறுத்தி தடுத்திருக்கின்றார்கள்.

உண்மையில் இது ஒரு அப்பட்டமான ஒரு ஜனநாயக மீறல். இந்த ஆட்சியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கொடுப்பார்களா என்பது இவ்வாறான இந்த நினைவேந்தல் அடக்கு முறைகளில் இருந்தே தெரிகின்றது. ஒரு பொழுதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தற்போதைய இலங்கை ஆட்சியாளர்கள் மூலம் தீர்வு கிடைப்பதற்கு, நியாயம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

ஆகவே இவ்வாறான சூழ்நிலையில் தொடர்ந்தும் நாங்கள் இந்த உள்நாட்டுக்குள் நீதி, நியாயம் கிடைக்கும் என்று இனியும் நம்பத் தயாராக இல்லை. அந்த வiயில் தமிழர் பிரதேசங்களில் இருக்கின்ற அனைத்த சக்திகளும் வட, கிழக்கு தமிழர் காயகத்தில் இருக்கின்ற அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து எதிர்வரும் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி
கிடைப்பதற்கு எல்லோரும் இணைந்து சர்வதேச நீதி பொறிமுறை ஊடாக எமது இனத்திற்கு ஏற்படுத்தப்பட்ட இந்த இனப்படுகொலைக்கான நீதியை வேண்டுவதற்கு அனைவரும் ஓரணியில் திரளவேண்டுமென்று நான் கோரிக்கை விடுகின்றேன்.

இன்று (21) இரவு 11 மணி முதல் 25 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடு

நாடளாவிய ரீதியில் இன்று (21) இரவு 11 மணி முதல் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

25 ஆம் திகதி அதிகாலை 04 மணிக்கு தளர்த்தப்படும் பயணக்கட்டுப்பாடு அன்றைய தினம் இரவு 11 மணி முதல் 28 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் தவிர்ந்த ஏனையோர் வீடுகளிலேயே இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் தற்போது COVID நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை கருதியே பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் காலப்பகுதியில் முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கு நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவுறுத்தினார்.

உடல்நிலை மிகவும் மோசமடைந்த பின்னரே அவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும்
இதனால் அவர்களின் உயிரை பாதுகாப்பதில் சிக்கலை எதிர்கொள்வதாகவும் வைத்தியர்கள் தெரிவித்ததாக அவர் கூறினார்.

இந்நிலையில், பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மருந்தகங்கள் திறந்திருக்கும் எனவும் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெறுமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் சுற்றுலாக்கள், யாத்திரைகள், உறவினர்கள் வீடுகளுக்கு செல்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைவாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

Posted in Uncategorized

அனைத்து விமான சேவைகளும் இரத்து; நாட்டிலிருந்து பயணிப்போருக்கு தடை இல்லை

இன்று (21) நள்ளிரவு முதல் 31 ஆம் திகதி நள்ளிரவு வரை அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாட்டில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு எவ்வித தடையுமில்லை.

மேலும் சரக்கு விமானங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

துறைமுக நகர் ஆணைக்குழுவிற்கு 13 ஆவது திருத்தத்தில் செக்! துடுப்பை இழந்த படகுப்போல அரசாங்கம் – ரணில் விக்கிரமசிங்க

உயர் நீதிமன்ற தீர்ப்பால் துறைமுக நகர் நிர்வாக ஆணைக்குமு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு கட்டுப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாகாண சபையின் அனுமதியின்றி துறைமுக நகரின் எந்தவொரு நிலப்பரப்பையும் சீனா மற்றும் எந்தவொரு நாட்டிற்கும் விற்க முடியாது போயுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் சுமைகளிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றுடன் அரசாங்கம் கலந்துரையாடியிருக்க வேண்டும். துடுப்பை இழந்த படகுப்போல அரசாங்கம் எவ்விதமான தூரநோக்கு சிந்தனையும் இல்லாது செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து நேற்று கலந்துரையாடி அவர். எதிர்கால திட்டங்கள் மற்றும் சமகால விடயங்கள் குறித்து பரந்தளவில் உரையாடினார்.

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு 200 மில்லியன் டொலர்களே இலங்கைக்கு தேவைப்படுகின்றது. இந்த தொகையை செலவிட்டு நாம் வலியுறுத்திய காலப்பகுதியில் தடுப்பூசிகளை கொள்வனவு செய்திருந்தால் பொருளாதாரம் இந்தளவு பாதித்து இருக்காது.

வர்த்தக நிலையங்களை மூடவேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்காது. ஆனால் அரசாங்கம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய முயற்சிக்க வில்லை. மறுப்புறம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய தரப்புகளுடன் கலந்துரையாடியிருந்தால் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கலாம்.

சர்வதேச கடன்களை செலுத்த முடியாத நாடுகளின் மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் இறுதியில் பரிஸ் நகரில் இடம்பெறவுள்ளது. இதனை பரிஸ் கழகம் (Paris Club) என அழைப்பார்கள். இலங்கை போன்ற நாடுகளுக்கு இந்த மாநாட்டின் ஊடாக கடன்நிவாரணங்களை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அந்த அமைப்பில் சீனா இல்லை. ஜீ-7 மாநாட்டில் சீனா உறுப்புரிமையை கொண்டுள்ளது. இங்கு கடன்கள் குறித்து பேசமுடியும். ஆனால் இலங்கையின் துரதிஷ்டம் யாதெனில் அந்த அமைப்பிலும் இலங்கை இல்லை.

இவ்வாறானதொரு நிலைமையில் எவ்விதமான தூரநோக்கு சிந்தனையும் இல்லாது துறைமுக நகர் விடயத்தில் அரசாங்கம் செயற்படுகிறது. அதனால் தான் உயர் நீதிமன்றம் கடுமையான தீர்ப்பை வழங்கியது. இது அரசாங்கத்தின் தோல்களின் முக்கியமானதொன்றாகும். ஏனெனில் தன்னிச்சையாக செயற்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நீதிமன்றம் தனது கடமையை செய்யும் என்பதை உணர்த்தியுள்ளது.

அதே போன்று துறைமுக நகர் ஆணைக்குழு நிர்வாக கட்டமைப்பு இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு உட்பட்டுள்ளதால் சீனாவிற்கு தேவையான வகையில் நிலப்பரப்பை விற்க முடியாது. அனைத்திற்கும் மாகாண சபைகளின் அனுமதி அவசியமாகின்றது.

எனவே ஆரம்பத்தில் சமர்பித்தது போன்று துறைமுக நகர் ஆணைக்குழு சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்தியாவின் முதலீடுகள் இங்கு வந்திருக்காது என தெரிவிக்கப்பட்டது.

Posted in Uncategorized

சர்வதேச அரங்குகளில் இலங்கை சார்பாகவே சீனா குரல் கொடுத்துள்ளது இதனாலேயே TNA சீனாவை எதிர்க்கின்றது – விமல் வீரவன்ச

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவை எதிர்ப்பது நியாயமானதே என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக நகர் தொடர்பில் உரையாற்றிய எதிர்க்கட்சியினர் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் விமர்சனம் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

சீனா ஒரு போதும் பிரிவினைவாதத்திற்கு ஆதரவளிக்கவில்லை எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அமெரிக்காவும், இந்தியாவும் ஆதரவளித்த போதிலும் சீனா ஆதரவளித்தது கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாகவே சீனா குரல் கொடுத்துள்ளது எனவும், இதனாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவை எதிர்க்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த துறைமுக நகரின் ஊடாக வெளிநாட்டு செலாவணி கிடைக்கும் எனவும், லட்சக் கணக்கான தொழில் வாய்ப்புக்கள் உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த துறைமுக நகர் தொடர்பில் புதிய கோணத்தில் பார்க்க வேண்டுமே தவிர அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் பார்க்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்

சீன காலணியாக துறைமுக நகர் உருவாகும் என்ற பிரச்சாரம் முற்று முழுதும் பிழையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தினேஸ் குணவர்த்தனவுடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் பேச்சு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை சந்திந்து தமிழ் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, அரசியல் கைதிகள் பற்றிய விபரங்களை தமிழ் தரப்பினர் அமைச்சரிடம் ஒப்படைத்தனர்.

அதன்படி, விசாரணை முடியாத கைதிகள், தண்டனை வழங்கப்பட்ட கைதிகள் என அரசியல் கைதிகள் குறித்த முழுமையான விபரத்தை கையளித்ததுடன், அவர்களை விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முடிவை அறிவிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,பிளட் தலைவர் த.சித்தார்த்தன், தமிழரசு கட்சியின் பிரதி தலைவர் எம்.ஏ.சுமந்திரன்,ரெலோ கட்சியின் செயலாளர் கோவிந்தம் கருணாகரம்,ரெலோ தலைமை குழு உறுப்பினர் வினோ நோகராதலிங்கம்,தமிழரசு கட்சியின் சார்பில் சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், த.கலையரசன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அதேநேரம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மனோ கணேசன், வே.இராதகிருஷ்ணன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அதேபோல அரசாங்கத் தரப்பில் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தமிழ் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அண்மையில் அனுப்பிய கடிதத்தை தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து தமிழக முதல்வர் ஜனாதிபதிக்கு கடிதம்

தமிழ்நாடு அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டுமென இந்திய குடியரசுத் தலைவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை குறிப்பிட்டும் தற்போது கொரோனா பரவும் சூழலை கருத்திற்கொண்டும் விடுதலைசெய்ய தீர்மானம் எடுக்குமாறு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தற்போது தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

அதன்படி அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது என்று குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No description available.

No description available.