மாகாண சபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்துவது கடினம் – ரொஷான் ரணசிங்க

மாகாண சபை தேர்தல் முறைமை குறித்து இம்மாத காலத்திற்குள் உறுதியான தீர்வை எடுக்க எதிர்பார்த்துள்ளோம். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் மாகாண சபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்துவது கடினமாகும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை எதிர்க் கொள்வது தற்போதைய சூழ்நிலையில் சவால்மிக்கதாக காணப்படுகிறது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மாகாண சபை தேர்தல் குறித்து மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் அமைச்சரையில் சமர்ப்பித்துள்ள யோசனை குறித்து எவ்வித தீர்மானங்களும் இதுவரையில் எடுக்கப்படாத நிலை காணப்படுகிறது. யோசனையின் ஒரு சில உள்ளடக்கங்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

மாகாண சபை தேர்தலை நடத்துவதில் பல்வேறுப்பட்ட சிக்கல் நிலை காணப்படுகிறது. மாகாண சபை தேர்தல் முறைமையை அவற்றில் பிரதானமானவையாக குறிப்பிட வேண்டும். தேர்தல் முறைமை குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் யோசனைகளும் கோரப்பட்டன. அந்த யோசனைகள் ஒவ்வொன்றும் முரண்பட்டதாக காணப்படுகிறது. ஆகவே மாகாண சபைதேர்தல் முறைமை தொடர்பில் இம்மாத காலத்திற்குள் ஒரு உறுதியான தீர்வை எடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

மாகாண சபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்துவதற்கான சாத்தியம் அரிதாகவே காணப்படுகிறது. கடந்த காலங்களை காட்டிலும் கொவிட்-19 வைரஸ் தாக்கம் தற்போது சடுதியாக அதிகரித்துள்ளது. இச்சவாலை எதிர்க் கொள்ள அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. சுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்களை நாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு அரசியல் இலாபம் தேடுவதை எதிர் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எதிர் தரப்பின் ஒரு சில செயற்பாடுகள் வெறுக்கத்தக்கதாக உள்ளது என்றார்.

அரசியல் போர்நிறுத்தத்தை எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்தார்

எதிர்க்கட்சித் தலைவர் எம்.பி. சஜித் பிரேமதாச நாட்டில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு அரசியல் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.

தனது அறிவிப்பை வெளியிட்ட சஜித் பிறேமதாச இலங்கையர்களை தொற்றுநோயிலிருந்து காப்பாற்ற அரசு மற்றும் பிற கட்சிகளை தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாடு ஸ்தம்பித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய எம்.பி. பிரேமதாசா, இதன் விளைவாக, நாட்டின் 20 மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதற்காக நாங்கள் ஓர் அரசியல் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளோம்

இந்த நெருக்கடியின் போது அனைத்து அரசியல்வாதிகளும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களைக் காப்பாற்றுவதற்காக பணியாற்ற வேண்டும் .

தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் புறக்கணித்து, அதன் பொறுப்பை தேசத்துக்கும் அதன் குடிமக்களுக்கும் நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செவ்வாயன்று பிரதமரை சந்திக்கும் ஆளுந்தரப்பின் பங்காளி கட்சிகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளை செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் இடம் பெறவுள்ளது.

இம்முறை இடம் பெறவுள்ள கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துக் கொள்ள அனைத்து பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தலைமையில் இடம்பெறும் அரசியல் கட்சி கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் முறைமை, ஆளும் கட்சிக்கும், பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான கருத்து வேறுப்பாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை உள்ளிட்ட பலதரப்பட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கடந்த மாதம் 19 ஆம் திகதி இடம் பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பிரதான 10 பங்காளி கட்சி தலைவர்களான உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளிட்ட பிரதான தரப்பினர் பிரதமருடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள்.

அரசியல் கட்சி கூட்டத்தில் அரசாங்கத்தின் தலைவர் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், கட்சியின் செயலாளர்கள் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட அரசியல் உறுப்பினர்கள் கலந்துக் கொள்வார்கள்.

ஆனால் கடந்த மாதம் 19 ஆம் திகதி இடம் பெற்ற பிரதமர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்சி தலைவர் கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் மாவட்ட உறுப்பினர்கள் உட்பட பல புதிய முகங்கள் பங்குப்பற்றியிருந்தன.

இதன் காரணமாக அன்று இடம்பெற்ற அரசியல் கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் முறைமை குறித்து மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனை தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

மாகாணசபைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு சில விடயங்களுக்கு 11 பங்காளி கட்சி தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பில் கட்சி தலைவர் மட்டத்தில் ஒரு தீர்மானத்தை எடுக்குமாறு பிரதமர்மஹிந்த ராஜபக்ஷ அரசியல் கட்சி தலைவர்களிடம் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கு எவ்வித சாத்தியமும் கிடையாது.

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு நடைமுறையில் காணப்பட்ட நெருக்கடிகளை காட்டிலும் தற்போது கொவிட்-19 வைரஸ் தாக்கம் பாரதூரமானதாக காணப்படுகிறது. ஆகவே இவ்வாறான சூழ்நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்தவது சாத்தியமற்றது என தெரிவிக்கப்படுகிறது.

ஆளும் கட்சிக்கும் கூட்டணியின் பங்காளி கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு தீர்வை வெகுவிரைவில் பெற்றுக்கொள்வது அவசியமாகும். முரண்பாடுகளினால் அரசாங்கம் பலவீனமடைய கூடாது.

பிரதமர் தலைமையில் இடம் பெறும் பேச்சுவார்த்தை தீர்மானமிக்கதாக அiமையும் என எதிர்பார்க்கிறோம் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

Posted in Uncategorized

அடுத்த மாதம் இலங்கை வருகை தரும் சீன வெளிவிவகார அமைச்சர்!

சீன வெளிவிவகார அமைச்சர் வெங் ஈ (Wang Yi), அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

வெளிவிகார அமைச்சு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, குறுகிய காலத்திற்குள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும்,

இரண்டாவது சீன உயர்மட்ட பிரமுகர் இவராவார்.

கடந்த வாரம், சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து, அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம், நாளை மறுதினம் நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த விவாதம் மீதான வாக்கெடுப்பு, அன்றைய தினம் இரவு 8 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை நடைபெறவில்லை – ரெலோ செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் பா. உ

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுகும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகள் எதுவும் இடம்பெறவில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நேற்று (01) அறிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நடைபெற்ற ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாதகமாக பரிசீலிப்பதாக கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் கூறினார்.

மட்டக்களப்பில் இன்று நடைபேற்ற ஊடக சந்திப்பில் (02-05-20) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு ரீதியாக நாங்கள் எந்த விதமான பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை சிலவேளைகளில் தமிழ் அரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் அவர்களும் சாணக்கியன் அவர்களும் பேசியிருக்கலாம்,அது அவர்களுடைய தனிப்பட்ட பேச்சுவார்த்தை அல்லது விருப்பமே தவிர அது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையாக கருதமுடியாது என்பது என்னுடைய ஆணித்தரமான கருத்து.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஆக இருக்கும் நிசாம் காரியப்பர் முதலிலே அவருடைய கட்சியின் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களிற்கு எதிராக செயற்படுவதை நிறுத்துவதற்கு அவர் முயற்சி செய்ய வேண்டும், கடந்த காலங்களில் 20வது திருத்த சட்டத்திற்கு அவர்களை வாக்களிப்பதற்கு தூண்டிவிட்டு புதினம் பார்ப்பவர்களாக இருக்க கூடாது, கட்சியின் முடிவுகளுக்கு மாறாக அவர்களது உறுப்பினர்கள் நடந்தது கொண்டால் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை கட்டுபடுத்த வேண்டும்.

தமிழ் பேசும் மக்கள் இணைந்து ஒரு ஆட்சியை ஏற்படுத்த கூடிய நிலை வந்தால் அதனுடைய முதல் முதலமைச்சர் ஆக தமிழர் ஒருவர் வரவேண்டும் என்பதுதான் எமது விருப்பமும் எண்ணமும் ஏன் என்றால் நாங்கள் முன்பு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்து இருந்தோம், அந்த நல்லெண்ண அடிப்படையில் எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தமிழர் ஒருவர் முதலமைச்சர் ஆக வருவதற்கு முஸ்லிம்கள் விட்டு கொடுக்க வேண்டும்.

Posted in Uncategorized

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும் திமுகவின் வெற்றிக்கும் வாழ்த்துக்கள்

நடந்து முடிந்த தமிழக மாநில அவை தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் முதலமைச்சராக பதவியேற்கும் தலைவர் கௌரவ ஸ்டாலின் அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

பலத்த போட்டிகளுக்கு மத்தியில் மாபெரும் வெற்றியீட்டி இருப்பது, தமிழக மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அபிமானத்தையும், எதிர்பார்ப்பினையும் எடுத்துக்காட்டுகிறது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கும் தாங்கள் தமிழக மக்களுக்கு மாத்திரமல்லாமல், உலகம் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் தலைவராக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

ஈழத் தமிழர்களாகிய நாங்கள் உங்களுடைய வெற்றியியை எமக்கான பலமாகவே கருதுகிறோம்.

முதலமைச்சராக உங்கள் மகத்தான பணி வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறோம்.

அன்புடன்
செல்வம் அடைக்கலநாதன் பா.உ
தலைவர் – தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized

தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி: முதல்வராகிறார் ஸ்டாலின்

தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான சட்டமன்றப் பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல்-06 ஆம் திகதி ஒரே கட்டமாக இடம்பெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்து 26 நாட்கள் ஆன நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரும்பான்மையான தொகுதிகளில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகளுடன் முன்னணியில் உள்ளனர்.

சற்றுமுன் நிலவரப்படி, திமுக கூட்டணி 160 இடங்களிலும், அதிமுக கூட்டணி 74 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.

தி.மு.க கூட்டணி வேட்பாளர்களின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவிருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். இதனால், மு.க.ஸ்டாலின் முதன்முறையாக முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார்.

பத்து ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையவுள்ளமையால் அக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரளத் தொடங்கியுள்ளது. அண்ணா அறிவாயத்தில் கூடிய அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் இனிப்புக்கள் பரிமாறியும், பட்டாசுகள் கொளுத்தியும், நடனமாடியும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை, முதன்முறையாக முதல்வர் இருக்கையில் அமரப் போகும் ஸ்டாலினுக்கு தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Posted in Uncategorized

கூட்டங்கள், விருந்துபசார நிகழ்வுகளை வீடுகளில் நடத்த தடை

தடை விதிக்கப்பட்டுள்ள கூட்டங்கள், விருந்துபசார நிகழ்வுகள் மற்றும் திருமண வைபவங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளை வீடுகளிலோ அல்லது வேறு இடங்களிலோ நடத்த முடியாது என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதனிடையே, கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை வேறு வீடுகளுக்கு செல்வதையும் உறவினர்களை சந்திப்பதையும் தற்காலிகமாக தவிர்க்குமாறு இராணுவத் தளபதி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

இன்றைய தினம் முடக்கப்பட்ட பிரதேசங்கள்

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று (02) தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதனடிப்படையில்,

திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உவர்மலை மற்றும் உப்புவௌி பொலிஸ் பிரவின் அன்புவழிபுரம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பொலிஸ் பிரிவின் நீலந்தஹின்ன கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது.

பிலியந்தலை பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இவைதவிர, களுத்துறை மாவட்டத்தின் வலானை வடக்கு, வேக்கட மேற்கு, கிரிபேரிய, பாலமுல்ல கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

அசாம் மற்றும் புதுச்சேரி பா.ஜ.க. வசமானது!

இந்தியாவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குகள் எண்ணும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதன்படி, தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், அசாம் மாநிலத்திலும் யூனீயன் பிரதேசமான புதுச்சேரியிலும் பா.ஜ.க.வுடனான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

இதன்படி, அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்குமான இறுதி முடிவுகளின்படி பா.ஜ.க. கூட்டணி 75 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களையும் ஏனைய கட்சிகள் இரு இடங்களையும் கைப்பற்றுகின்றன.

அத்துடன், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகளில் 25 தொகுதிகளுக்கான முடிவுகள் இதுவரை வெளியாகியுள்ள நிலையில், பா.ஜ.க. இணைந்த என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி 14 தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி ஆறு தொகுதிகளையும் ஏனைய கட்சிகள் ஐந்து தொகுதிகளையும் கைப்பற்றுகின்றன.

புதுச்சேரியில், அண்மையில் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமைக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் இடம்பெற்றுள்ளதுடன் தற்போது பா.ஜ.க. புதுச்சேரியின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.