முஸ்லிம் காங்கிரஸுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை நடைபெறவில்லை – ரெலோ செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் பா. உ

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுகும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகள் எதுவும் இடம்பெறவில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நேற்று (01) அறிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நடைபெற்ற ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாதகமாக பரிசீலிப்பதாக கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் கூறினார்.

மட்டக்களப்பில் இன்று நடைபேற்ற ஊடக சந்திப்பில் (02-05-20) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு ரீதியாக நாங்கள் எந்த விதமான பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை சிலவேளைகளில் தமிழ் அரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் அவர்களும் சாணக்கியன் அவர்களும் பேசியிருக்கலாம்,அது அவர்களுடைய தனிப்பட்ட பேச்சுவார்த்தை அல்லது விருப்பமே தவிர அது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையாக கருதமுடியாது என்பது என்னுடைய ஆணித்தரமான கருத்து.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஆக இருக்கும் நிசாம் காரியப்பர் முதலிலே அவருடைய கட்சியின் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களிற்கு எதிராக செயற்படுவதை நிறுத்துவதற்கு அவர் முயற்சி செய்ய வேண்டும், கடந்த காலங்களில் 20வது திருத்த சட்டத்திற்கு அவர்களை வாக்களிப்பதற்கு தூண்டிவிட்டு புதினம் பார்ப்பவர்களாக இருக்க கூடாது, கட்சியின் முடிவுகளுக்கு மாறாக அவர்களது உறுப்பினர்கள் நடந்தது கொண்டால் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை கட்டுபடுத்த வேண்டும்.

தமிழ் பேசும் மக்கள் இணைந்து ஒரு ஆட்சியை ஏற்படுத்த கூடிய நிலை வந்தால் அதனுடைய முதல் முதலமைச்சர் ஆக தமிழர் ஒருவர் வரவேண்டும் என்பதுதான் எமது விருப்பமும் எண்ணமும் ஏன் என்றால் நாங்கள் முன்பு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்து இருந்தோம், அந்த நல்லெண்ண அடிப்படையில் எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தமிழர் ஒருவர் முதலமைச்சர் ஆக வருவதற்கு முஸ்லிம்கள் விட்டு கொடுக்க வேண்டும்.